So it goes. . .
ஏகாதிபத்தியங்களால்
எல்லா நாடுகளுமே அவதிக்குள்ளாகியிருக்கின்றன. அவற்றை மீறியே சுதந்திரத்திறகான போராட்டங்கள்
நிகழ்ந்திருக்கின்றன. இந்த போராட்டங்களில் இழந்த உயிர்களும் அழிக்கப்பட்ட தொன்மைகளும்
கணக்கில் அடங்காதவை. இதை மட்டுமே எல்லா நாடுகளும் சந்திக்கவில்லை. அக்கம் பக்கத்து
நாடுகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்னும் எண்ணத்துடன் அவர்களுடன் இணைந்து உலகப் போர்களை
நிகழ்த்தி இருக்கிறது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நினைவிலும் நம்மால் கொணர முடியாதவை.
ஒரு பிணத்தையே ஏறெடுத்து பார்க்க இயலாத கண்கள் நம்முடையவை. இத்தனை உயிர்களை இழந்து
கிடைக்கப் போகும் விஷயம் என்ன ? அதிகாரம். இந்த அதிகாரத்தால் இழந்தைவை கணக்கில்லா உயிர்கள்.
போரிட்டவர்கள் மட்டுமின்றி அதை அறிந்து மட்டுமே இருந்தவர்களாக இருந்த மக்களும் அடங்குவர்.
இந்த போர்களை நேரில்
கண்ட மக்களின் மனநிலையை யாராலேனும் நினைத்துப் பார்க்க இயலுமா ? அவர்களின் செயல்களை
மட்டுமே நம்மால் காண முடியும். அதற்கு நாமாக ஒரு அர்த்தத்தை கொண்டு வர முடியும். போர்
ஏற்படுத்தும் வடுக்கள் மனத்திலேயே உருவாகின்றன. இந்த வடுக்களால் அவர்களின் சுயம் இழக்கப்பட்டு
விடுகிறது. நம் மொழியில் அதற்கு சிறந்த படைப்பு எனில் புயலிலே ஒரு தோணி நாவலை சொல்வேன்.
போரை காண சகியாமல் அப்போதிருந்த அவர் வாழ்ந்த கலாச்சாரத்தை பதிவாக்கி வெளியிட அலையோ
அலையென அலைந்திருக்கிறார். இந்த அலைதலின் சூட்சுமங்கள் என்ன ? வரலாறுகளும் உணர்ச்சிமிகு
வரலாற்று மற்றும் போர் சார்ந்த இலக்கியங்கள் எதற்காக ? இந்த கேள்விகள் தான் மானுடத்தை
ஆட்டி வைத்திருக்கின்றன. இதற்கு எங்குமே எந்த ஒரு இலக்கியத்திலுமே பதில் இல்லை என்கிறார்.
எந்த ஒரு இலக்கியமும் போர்களை சரியாக பதிவு செய்யவில்லை என்கிறார் கர்ட் வனேகட்.
போர்களை புத்தகங்கள்
மேம்படுத்துகின்றன என்கிறார். போர்முனையில் இருக்கும் தனியொருவன் கண்ட காட்சிகளை பதிவாக்குவதன்
மூலம் அவன் நாயகனாகிறானே ஒழிய எக்காலமும் போர் சார்ந்த விஷயங்களை சொல்வதில்லை. நாவலில்
அதை அவர் கூறும் விதம் போர்முனையில் குழந்தைகளைப் போல் இருந்தவர்களை நூல்கள் நாயகர்கள்
ஆக்குகின்றன என்னும் தொனியிலேயே இருக்கிறது. போர்களை எதிர்க்கும் விதமாக போர்களின்
அவலங்களை கையறுநிலைகளை சொல்லும் நூல்களை anti-war நூல்கள் என்று சொல்லுகிறார்கள். அப்படி
கர்ட் வனேகட் எழுதிய நூலே “slaughterhouse five or the children’s crusade A duty
Dance with Death”. இத்துடன் தலைப்பு முடிந்துவிடவில்லை. இதற்கு கீழே பெரிதாக கொடுக்கப்பட்டுள்ளது.
அது கதையின் சாரமா அல்லது தலைப்பா என்றே யூகிக்க முடியவில்லை. கொடுத்திருப்பதாவது
“ A FOURTH-GENERATION GERMAN-AMERICAN NOW LIVING IN EASY CIRCUMSTANCES ON CAPE
COD [AND SMOKING TOO MUCH] WHO, AS AN INFANTRY SCOUT HORS DE COMBAT, AS A
PRISONER OF WAR, WITNESSED THE FIRE-BOMBING OF DRESDEN, GERMANY, “THE FLORENCE
OF ELBE,” A LONG TIME AGO, AND SURVIVED TO TELL THE TALE. THIS IS A NOVEL
SOMEWHAT IN THE TELEGRAPHIC SCHIZOPHRENIC MANNER OF TALES OF THE PLANET
TRALFAMADORE, WHERE THE FLYING SAUCERS COME FROM. PEACE” இது ஒரு பின்நவீனத்துவ நாவல்
என்பது குறிப்பிடதக்கது. இத்தலைப்பிலேயே அதை நம்மால் உணர்ந்தும் கொள்ளமுடியும்!
கர்ட் வனேகட்டின்
நேரடி அனுபவமும் புனைவும் கலந்து இந்த நாவலை எழுத வைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்
போர் என்றாலே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது ஹிரோஷிமா மற்றும் நாகஸாகி மீது அமேரிக்கா தாக்கிய அணுகுண்டு வெடிகள் தான். ஆனால் இது நிகழ்வதற்கு சில மாதங்கள் முன் இதை விட
கொடூரமான விபத்து இரண்டாம் உலகப் போரால் நிகழ்ந்திருக்கிறது. ஜெர்மனியே உலகை வீழ்த்தி
காலடியில் வைக்க முனைந்த போது பெருவாரியான நாடுகள் ஜெர்மனிக்கு எதிராக போர்களை தொடுக்க
ஆரம்பித்தன. அப்போது ஜெர்மனியின் முக்கியமான பிரதேசங்களை அழித்து அவர்களின் கொட்டத்தை
அடக்க நினைத்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தான் ட்ரெஸ்டன். இது
ஜெர்மனியின் அக்காலத்திய பெரிய இடப்பகுதி. அழகியலிலும் தொன்மையிலும். அதுவரையில் குண்டுபடாத
பகுதியாகவும் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில் அந்த இடத்தில் ஆயிரம் ஆயிரம்
டன்களாக குண்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர். அதில் அந்நகரின் மையத்தின் தொண்ணூறுக்கும் மேற்பட்ட இடங்கள் தரைமட்டமாகிவிட்டன.
எத்தனை பேர் பிழைத்தனர் இறந்தனர் என்று கூட கணக்கிட முடியவில்லை. ஜெர்மனி நாடே தாமாக
ஒரு கணக்கை வெளியிட்டதாம். இந்த போரில் உயிர் பிழைத்த ஒருவன் எழுதும் நாவலே slaughterhouse five.
இந்நாவல் பிரதானமாக
கேள்வி ஒன்று எழுப்புகிறது. நாவலின் நாயகன் பில்லி போரில் கலந்து கொள்ளவே இஷ்டமில்லாமல்
இருக்கிறான். போர் அவனுக்கு பிடிக்கவில்லை. எங்குமே போரும் செய்யவில்லை. நண்பர்கள்
இறப்பதை அப்பாவி மக்கள் இறப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் உலகமே
அறியும் வகையில் ஒரு நாவலை அப்போர் சார்ந்து, உலகமே மறந்த போர் சார்ந்து எழுதுகிறான்.
அப்படியெனில் அவன் கோழையா வீரனா ? இதற்கு நாவல் அளிக்கும் ஒரே கேள்வி billy
pilgrim has come unstuck in time.
இந்நாவலை பின்நவீனத்துவ
நாவல் என்று சொல்லியிருந்தேன். இந்த தொனியே இந்நாவலின் புதுமையான உருவத்திற்கு காலத்திற்கும்
பிடித்து வைக்கும். பின்நவீனத்துவத்தில் கலைத்துப் போடப்பட்ட மையமில்லாத ஒரு உருவத்தை
ஒரு நாவல் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஒரு மையத்தை ஆழமாக தத்துவார்த்தமாக பகடி செய்ய
வேண்டும். இங்கு போர் சம்மந்தமான நாவல்களையே அவர் பகடி செய்கிறார். பின்னர் தான் அவர்
தன் நாவலுக்குள்ளேயே வருகிறார். வார்த்தைகளை தாண்டி நிற்கும் விஷயமாக அனுபவங்கள் இருக்கும்
போது பல ஆயிரம் மக்களின் மரணத்தை எப்படி நான் நாவலுக்குள் அடக்குவது ? உலகமே மறந்த
விஷயத்தை, ட்ரெஸ்டனின் போர் பிண்ணனியை நான் எப்படி நாவலாக்குவது என்று அவனுக்குள்ளேயே
தர்க்கம் செய்கிறான். இந்த அவன் பெயர் தெரியாத கதைசொல்லி. வனேகட்டாக கூட இருக்கலாம்.
வாசிக்கும் போது அப்படி தோன்றவும் செய்யும். அங்கிருந்து இந்நாவலின் அமைப்பு மெடா ஃபிக்ஷன்
என்னும் நிலைக்கு தள்ளப்படுகிறது. பெரும் பெரும் புத்தகங்களாக இரண்டாம் உலகப்போரின்
நூல்கள் வெளி வந்திருக்கின்றன என்று பல நூல்களை சான்றுகளுக்கு நாவலுக்குள்ளேயே தருகிறார்.
எதுவுமே ட்ரெஸ்டனின் போர்ச்செயலை பேசுவதில்லை. இதனால் நான் நாவல் எழுதுகிறேன் என்கிறான்.
இந்த முதல் அத்தியாயத்திற்கு பின் தான் நாவலே துவங்குகிறது.
நாவல் நான் லீனியர்
அமைப்பு கொண்டது. அத்தியாயங்களை மாற்றி போட ஏதேனும் ஒரு நுட்பம் இருக்க வேண்டும். அல்லது
அத்தியாயங்களுக்கு எண்கள் அல்லது தனித்தனி பெயர்கள் வைத்து இந்த நான் லீனியர் முறையை
கையாளலாம். இவர் அறிவியல் புனைவை அங்கே முன்னிறுத்துகிறார். பில்லி என்பவன் போர்முனையை,
பல ஆயிரம் மக்களின் அழிவுகளைக் கண்டு உயிர் பிழைத்து தாம்பத்ய வாழ்க்கையை மேற்கொள்ள யத்தனிக்கிறான்.
அவனுடைய வாழ்வை சொல்ல முற்படும் போது அவனுக்குள், அவனின் வாழ்க்கைக்குள் சம்பவம் ஒன்று
நிகழ்கிறது, விமான விபத்து. அதிலிருந்து காலத்தால் அவன் சிறைபடுத்தப்படுகிறான்.
நினைவுகளிலும்
காலங்களிலும் பயணித்தி ட்ரால்ஃபமடோர் என்னும் கிரஹத்திற்கு செல்கிறான். அங்கே இருக்கும்
மனிதர்களைக் காண்கிறான். தன்னையே மிருகமாக உருவகம் செய்கிறான். கூண்டுக்குள்ளே இருந்து
கொண்டு மனித இனத்தின் அபூர்வமான இருவரை அவர்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். அவனுடன் இணைந்து
ஒரு நீலப்பட நடிகையும் இருக்கிறாள். அந்த உலகம் அவனுக்கு சொல்லும் விஷயம் ஒன்றே ஒன்று
தான். துர்நினைவுகளை நினைக்காதே. இருக்கும் நிமிடத்தை மட்டுமே பார் என்கிறது. மரணம்
நிகழ்கிறது எனில் அது அவன் வாழ்வின் ஒரு தருணம். அத்தருணத்தில் அவன் சோகமாக அல்லது உடல்நலக்குறைவாக
இருக்கிறானே ஒழிய வாழ்வின் ஏனைய தருணங்களில் அவன் மகிழ்ச்சியாகவே இருந்திருக்கிறான்.
வாழ்வின் தருணங்கள் நிதர்சனமானவை. மரணம் நிகழ்வதாயின் அது ஒரு காட்சி மட்டுமே. அவன்
வாழ்ந்ததற்கான தருணங்களை அவன் எப்போது வேண்டுமென்றாலும் பார்த்துக் கொள்ளலாம். அனுபவிக்கலாம்
என்று அறிகிறான்.
இதை அறிந்தவுடன்
அவன் செய்யும் பயணங்கள் தான் சுவாரஸ்யமானவை. இந்த பயணம் மூலமாக ட்ரெஸ்டனின் அழிவையும்
மக்களின் அவலங்களையும் சொல்கிறார். அதே நேரம் அவனின் சிறு வயதிற்கு சென்று தான் ஆப்டோமெட்ரிஸ்டாக(கண்ணைப்
பரிசோதித்து கண்ணாடியை சிபாரிசு செய்தல்) இருந்த காலத்தை நினைவு கொள்கிறான். எதிர்காலத்திற்கு
சென்று தன் வாழ்வின் அபத்த தருணங்களை, இழிவு செய்யும் சூழ்நிலைகளை காண்கிறான். அவன்
தன் வேற்று கிரஹ பயணத்தை ரேடியோ மூலம் உலகிற்கு சொல்கிறான். அவனை அவன் மகள் திட்டுகிறாள்.
அவன் கவலை கொள்வதேயில்லை. மேலும் கடந்த காலத்தின் நிறைய விஷயங்கள் எதிர்காலத்திலும்
நிகழ்கின்றன. காலத்தின் பயணத்தில் அவனே குழம்பிப் போகிறான்.
போர் சார்ந்து
அவர் எழுதியிருக்கும் பக்கங்கள் யாவுமே நினைக்க முடியாத அளவிற்கு ரத்தத்தால் நிரம்பி
இருக்கின்றன. ஒரே பெட்டியில் அடைக்கப்பட்டு மலத்தை அவர்கள் அதிலிருந்து வெளியேற்றும்
விதத்தை நேரில் காணும் காட்சியைப் போல எழுதியிருக்கிறார். இது மட்டுமின்றி இன்னமும்
எண்ணற்ற விஷயங்களை. வாசிக்க வாசிக்க போர் வரலாற்று புத்தகத்தில் வாசிப்பதை விட உணர்ச்சி
ரீதியான பதிவுகளில் குரூரம் நிரம்பியதாகவே இருக்கிறது. மேலும் ட்ரெஸ்டன் சம்பவத்தை
வரலாற்றுப்பிழை என்பதை தன் எழுத்தில் நம்ப வைக்கிறார்.
நாவலில் நாவல்
சார்ந்தே நிறைய பேசுகிறார். ஒரு நாவல் தரக்கூடிய உச்சபட்ச அனுபவம் என்பவற்றைக் கூட
ட்ரால்ஃப்மடோர் உலகம் சார்ந்து அவர் சொல்வது சுவாரஸ்யமாய் இருக்கிறது. அவர் சொல்வது
ஒரு நாவலில் வாசகன் காணக்கூடியனவெல்லாம் அந்நாவலில் இருக்கும் கதாபாத்திரங்கள் கொள்ளும்
தருணங்களின் ஆழம் மட்டுமே. அதுவே அவனை ஈர்க்கின்றது. அனுபவமே எழுத்தை வெளிக்கொண்டு
வருகிறது. வேற்று கிரஹ எழுத்துகளை வசீகரிக்கும் அதே நேரம் பூமியில் இருக்கும் எழுத்துகளை
இவர் செய்யும் பகடி அதிசுவாரஸ்யமாய் இருக்கிறது. நாவல் முழுக்கவே பகடிகள் பக்கம் பக்கமாய்
வழிகின்றது. குறிப்பாக எழுத்தாளனாய் வரும் கில்கோர் ட்ரௌட்.
இவர் அறிவியல்
புனைகதைகள் எழுதுபவர். இவர் எழுத்தாளராக இருந்த போதிலும் தன்னை எழுத்தாளனாக யாரேனும்
மதிக்கமாட்டார்களா என்று கொள்ளும் உணர்விலும் அன்றாட வாழ்க்கைக்காக பேப்பர் போடும்
தொழிலை மேற்கொண்டும் அதில் சிறுவர்களை ஏய்த்து வாழ்வதும் அதிசுவாரஸ்யமாய் இருக்கிறது.
பில்லி அவரைக் காண செல்கிறான். அப்போது செய்தித் தாள் விநியோகிக்கும் சிறுவன் தான்
வரவில்லை என்று சொல்லி விலகிக் கொண்டான். தானே சென்று விநியோகிக்க வேண்டுமே என்று கவலை
கொள்ளும் தருணத்தில் வசனம் இப்படி வருகிறது,
“He did not
think himself as a writer for the simple reason that the world had never
allowed him to think of himself in this way.
‘the-the
writer ?’ said billy.
‘the what ?’
Billy was
certain that he had made a mistake. ‘There is a writer named Kilgore trout’
‘there
is?’trout looked foolish and dazed.
‘you never
heard of him ?’
Trout shook
his head. ‘nobody-nobody ever did’
இதில் இவர் எழுபதிற்கும்
மேற்பட்ட நாவல்கள் எழுதியிருப்பதாக வேறு சொல்கிறார்.
இந்நாவல் இதன்
அமைப்பியல் ரீதியாக இன்னமும் பல ஆண்டுகளுக்கு உலகின் சிறந்த நாவல்களில் நிமிர்ந்து
நிற்கும் என்பதில் ஐயம் இல்லை. இந்நாவலை என்னால் முழுதும் புரிந்து கொள்ள முடியாமல்
இருப்பதற்கும் இது தான் காரணம். இவர் அறிவியல் புனைவுத் தன்மை, பின்நவீனத்துவம், தன்னையே
உள்நுழைத்து வாசகனின் புரிதலை திக்குமுக்காட செய்யும் மெடாஃபிக்ஷன் என்று எல்லாவற்றையையும்
பயன் படுத்தி அமைப்பில் பயமுறுத்தவே செய்கிறார். எதை எடுத்தாலும் தத்துவமாக இருப்பினும்
வரலாறாக இருப்பினும், வேற்று கிரஹ வாசிகளாக இருப்பினும் அவர் அனுபவத்தை சொல்லும் போது
பிரயோகிகும் ஒரே வாக்கியம் so it goes. . . நூறு முறைக்கும் மேல் இந்த வரி நாவலில்
வருகின்றது. ஒரு போரில் நிகழக்கூடிய மரணங்களும் இதே அளவில் தான் இருக்கின்றன என்கிறார்.
ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார் போல இதன் அர்த்தம் மாறுபடுகின்றது. நாவலின் அமைப்பும் அதே
ரீதியில் இருப்பது ஆச்சர்யமே. ஏதேனும் ஒரு இடம் நாவலில் குழம்பினாலும் வாசகன் கவலை
கொள்ள தேவையில்லை. காரணம் நாவலே so it goes. . . அமைப்பில் தான் உள்ளது!!!
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக