பஷீருடனான பயணம்
ரயில்
பயணங்களின் போதோ பேருந்து பயணங்களின்
போதோ வாசிக்கும் பழக்கம் எனக்கு கிஞ்சித்தும்
கிடையாது. பாடல் கேட்பதோடு சரி.
முக்கால்வாசி நேரங்களில் உறங்கிவிடுவேன். கடந்த சில மாத
காலமாக மட்டும் கோவை-சேலம்
பயணத்தின் போது குறுகிய பக்க
அளவு கொண்ட நாவலையோ அல்லது
சிறுகதைகளையோ சுவாரஸ்யமான கட்டுரைகளையோ வாசிக்கலாம் என்று முடிவெடுத்தேன். இம்முறை
ரயில் பயணம். அதுவும் ஜன்னலோர
இடம். சுற்றி பெண்கள். எல்லோர்
கையிலும் டச் போன்கள் விளையாடிக்
கொண்டிருந்தன. சேலம் ரயில் நிலையத்தில்
ரயில் வருவதற்கு அரை மணி நேரம்
முன்பே வந்ததால் என்ன செய்ய எனத்
தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் கைவசம்
இருந்த பஷீரின் நினைவு மேலோங்கியது.
(வாசிக்கும் போது என்னை பார்வையின்
ஓரம் கோரமாக பார்த்த மக்களின் குணம் இக்கட்டுரைக்கு
தேவையில்லை என்பதால் நீக்கி விடுகிறேன்)
வைக்கம்
முகம்மது பஷீரை என்னால் நெருக்கமாக
உணர முடிகிறது. அவரின் எளிமையான கதைசொல்லல்
திறனை எப்படி நினைத்தாலும் வேறு
ஒரு எழுத்தாளரின் எழுத்துகளில் கண்டறிய முடியவில்லை. எழுதுவது
சாதாரண கதைக்கருவாக இருப்பினும் அதை உலகளாவிய விஷயமாக
மாற்றுவது மொழியின் எளிமைதான் என்பதை ஊகித்தறிய முடிகிறது.
மீண்டும் அதே உணர்வை மேலோங்க
வைத்த படைப்பு “பால்யகால சகி”.
இந்த
நூலைப் பற்றி நண்பர்கள் கூறுகையில்
அழுக வைக்கற படைப்புபா என்றே
கூறியிருந்தனர். அழ வைக்கும் சித்ரவதையை
செய்யும் படைப்புகள் எனக்கு கிஞ்சித்தும் பிடிக்காது.
சிறந்த உதாரணம் சாகித்ய அகாதமி
வாங்கிய தூப்புக்காரி. உலகம் முழுக்க சோகங்களிலிருந்து
இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. வரலாற்றை பின்புலமாக கொண்ட எல்லா நூல்களிலுமே
இழத்தலின் சோகங்களையும் இன்னபிற சோகங்களையும் கூறியிருகின்றனர்.
அழ வைக்க வேண்டும் ஒரு
படைப்பு, ஆனால் அது உணர்வுகளின்
விளையாட்டாக இருக்க வேண்டுமே ஒழிய
நீ இப்பிரதிக்கு அழுதே ஆக வேண்டும்
எனும் அதிகாரமாக இருக்கக்கூடாது. இதற்கு ஒரு சிறந்த
உதாரணம் தாஸ்தாயெவ்ஸ்கி. அவரின் poor folk நாவலின் இறுதியை மிக
எளிமையாக சொல்லி முடிக்கிறார். அந்நாவலில்
வரும் கோர்ஷ்கோவ் என்னும் பாத்திரம் திருடன்
என்னும் பெயர் பெற்று வலம்
வருகிறது. இந்த பாத்திரத்திற்கும் பிரதான
கதைக்கும் சம்மந்தம் இல்லை. இருந்தாலும் தேவையில்லை
என்னும் உணர்வை தராமல் சோகத்தை
வலிய திணிக்காமல் அவனின் இறத்தலை மறக்கவியலா
படிமமாய் வாசகனிடம் விட்டு செல்கிறார். இது
தான் இலக்கியம் தர வேண்டிய சோகம்.
இந்த சோகத்தை அல்லது உணர்வுகளின்
இடமாற்றலை தான் பஷீரின் பால்யகால
சகி நாவலும் எனக்கு கொடுக்கிறார்.
நம்மை அழுதல் நோக்கி இந்நாவல்
கூட்டிச் செல்வதில்லை. மாறாக சோகத்தின் கலைத்துவத்திற்கு
ஒரு கதைக்கருவை எடுத்து கையாண்டிருக்கும் நுட்பமே
நமக்கு மீதமாய் கிடைக்கிறது.
பால்யகாலம்
தான் எல்லா மனிதனுள்ளும் ஆழமாக
வேரூன்றும் பருவமாக அமைகிறது. ஒன்று
அந்த பருவத்தில் எதுவுமே நிகழாமல் இருந்திருக்க
வேண்டும் அல்லது மறக்கவியலாத ஏதோ
ஒன்று நிகழ்ந்திருக்க வேண்டும். இரண்டுமே மனிதனின் பிற்காலங்களில் நினைவுகளாய் அமையும். இந்த பால்யகாலத்தில் இருந்த
கட்டற்ற தன்மையை நம்மால் பிற்காலங்களில்
கண்டறிய முடியாது. இந்த மூன்றையும் நாவலுக்குள்
வைத்திருக்கிறார். பால்யகாலம் பிற்காலம் பின் கட்டற்ற தன்மையை
எண்ணி தற்போது அப்படி இருக்க
இயலவில்லையே என்று ஏங்குவது என்று
முன்றையும் சொல்லி ஒரு முழுமையை
கொடுக்கிறார்.
சுகறா
மஜீத் இருவருமே பால்யகாலத்தில் நண்பர்களாய் இருக்கின்றனர். இருவரிடையே இருக்கும் குழந்தைத்தனங்கள் சிறு சிறு ஊடல்கள்
என மிக அழகாக விவரிக்கிறார்.
மஜீத் பணம் படைத்தவன். சுகறா
ஏழ்மை வாய்ந்தவள். இந்த இருவரிடையே இருக்கும்
கருத்துகள் அதன் மோதல்கள் என
நாவல் பாதி கட்டத்தை சின்ன
சின்ன சோகங்களுடன் செல்கிறது. மஜீத் வெளியூர் செல்கிறான்.
அங்கிருந்து திரும்பி வரும் போது சுகறாவிற்கு
திருமணம் நிகழ்ந்திருக்கிறது. இதற்கு பின் நிகழும்
எல்லா வினைகளையும் நாவல்களில் சொல்லியிருக்கிறார். சுகறாவிற்கு எப்படி இருந்திருக்கும், மஜீதிற்கு
எப்படி இருந்திருக்கும், இவர்களின் சந்திப்பைக் கண்டு ஊரார் என்ன
என்ன பேசுகின்றனர் என்று அழகாக நீள்கிறது
இந்த குறுநாவல்.
இந்த
நாவலை வாசிக்கும் போது ஒரு இடத்தில்
மட்டும் அமீர் கான் தயாரித்து
சில காட்சிகள் நடித்த தாரே ஜமீன்
பர் திரைப்படம் நினைவிற்கு வந்தது. அதில் வரும்
சிறுவன் இஷான் அவஸ்திக்கு கணக்கு
வராது. கணக்கின் பாடத்தேர்வின் போது வினாத்தாளில் 3*9 என்னும்
கேள்வி இருக்கும். இந்த கேள்விக்கேனும் பதிலை
எப்படியும் கண்டறிந்துவிட வேண்டும் என கனவு காண
ஆரம்பிப்பான். அக்கனவில் சூரியக் குடும்பம் வரும்.
விண்கலத்தில் அவன் அமர்ந்திருக்க மூன்றாம்
கிரகமான பூமியை இழுத்துக் கொண்டு
போய் ஒன்பதாம் கிரகமான ப்ளூட்டோவை இடிப்பான்.
ப்ளூட்டோ பூமியை விட சின்ன
கிரகம் ஆக கணம் தாளாமல்
வெடித்து சிதறிவிடும். உடனே மீதம் இருப்பது
பூமி, மூன்றாவது கிரகம் ஆதலின் மூன்று
என பதிலளிப்பான். இந்நாவலின் முன்னுரை 1944இல் எழுதியது. ஆக
அதற்கு முன்னர் தான் நாவல்
எழுதப்பட்டிருக்க வேண்டும் என்னும் யூகத்தில் இதே
போன்றதொரு காட்சி அங்கேயும் வருவது
ஆச்சர்யத்தை கொடுக்கிறது. இந்நாவலில் மஜீதிற்கு கணக்கு வராது. ஒன்றும்
ஒன்றும் சேர்ந்தால் என்ன வரும் எனும்
போது பெரிய ஒன்று எனக்
கூறும் எள்ளல் தனத்தை மிக
அழகாக கொடுத்திருக்கிறார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல் நாவலின் பல இடங்களில்
இதே வார்த்தைகளை வைத்து உணர்வுகளின் விளையாட்டை
பஷீர் செய்திருக்கிறார்.
இந்நாவலின்
தலைப்பில் இருக்கும் சகி என்னும் வார்த்தை
இன்னமும் என்னை ஈர்த்தே இருக்கிறது.
பால்யகால சகி என்னும் தலைப்பிலேயே
நாவலின் கதை நினைவுகள் பார்பட்டது,
எதிர்மறை முடிவுகளைக் கொண்டது என்பதை மிக
அழகாக சொல்கிறது. யதார்த்தவாத கதை எழுத விரும்பும்
நண்பர்களுக்கு பஷீரின் எழுத்துமுறை நிச்சயம்
பெரும் படிப்பினையாக இருக்கும் என்பதை ஒவ்வொன்றாக வாசிக்க
வாசிக்க தெரிகிறது. இன்னமும் பஷீரை வாசிக்க ஆசைப்படுகிறேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக