பிரதிசேர்க்கும் மனிதர்கள்
சமகால தமிழ் இலக்கியத்தின்
முன்பு மிகப்பெரிய சவால் ஒன்று நின்று கொண்டே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ நான்
பிற நாட்டு இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியங்களிலும் மாஸ்டராக கருதப்படும் ஆசிரியர்களின்
புதினங்களை தேடி சென்று கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருந்த உன்னதமான, மரணத்திற்கு
நெருக்கமான அனுபவங்களின் தாக்கத்திலிருந்து குறைந்த அளவிலான மொழியிலேயே உன்னதத்தை கொடுத்திருக்கின்றனர்.
ஆம் குறைந்த அளவிலான மொழி தான். தருண் தேஜ்பால் எழுதிய the alchemy of desire நாவலில்
இருக்கும் கடினமான வார்த்தைகள் எல்லாமே விசேஷமான அர்த்தங்களை பொழிபவை. அவை அந்நாவல்
சொல்லக்கூடிய விஷயங்களை மெருகேற்றி கூறுகின்றது. தாஸ்தாயெவ்ஸ்கி நாவலில் இருக்கும்
மொழி எளிமையானது. நம் அகத்தோடு தர்க்கம் செய்யக் கூடியது. முன்னதில் இருக்கக் கூடிய
மொழி இத்துடன் சேர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால் தேவையில்லை.
காரணம் தாஸ்தாயெவ்ஸ்கியின் அனுபவம் மரணத்திற்கு நெருக்கமானது.
கதை முகாமில் எஸ்.ராமகிருஷ்ணன்
தாஸ்தாயெவ்ஸ்கி சார்ந்து சொன்னது நினைவிற்கு வருகிறது. போர்க்காரணத்தினால் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு மரண தண்டனை
என்று கூறினார்களாம். அவரிடம் தண்டனையை நிறைவேற்ற வரும் போது தடை செய்து திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
அடுத்த கணம் மரணம் என்னும் நிலையை எட்டிய ஒரு மனிதன் எழுதிய விஷயம் எப்படி சாதாரணமாக
இருந்திருக்க முடியும் ? அந்த கணத்தில் மட்டுமே அவன் உலகின் எல்லா அனுபவங்களையும் அனுபவித்திருப்பான்
தானே ? அந்த அனுபவங்களின் சிறு வடிவம் தான் நாம் காணும் தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள்.
இது தாஸ்தாயெவ்ஸ்கிக்கு
மட்டுமல்ல. இன்னமும் எத்தனையோ இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும். நம் தமிழிலும் அப்படி
அநேகம் பேர் இருக்கிறார்கள். அனுபவமே மொழியின் அழகியலை மேம்படுத்துகிறது. சமகாலத்தில்
எழுதி கொண்டிருக்கும் எனக்கு அனுபவங்கள் மிக மிக குறைவு. இன்னமும் சொல்ல ஆசைப்படுவது
எழுத முனையும் என்னைப் போன்றவர்களுக்கே அனுபவங்கள் குறைவாக தான் இருக்கின்றன. இது பிழையல்ல.
நம் முன்னிருக்கும் எல்லா மாஸ்டர்களையும் இலக்கியத்தின் மூலம் உடைக்க வேண்டுமெனில்
குறைந்த அனுபவமும் தீவிரமான எழுத்தும் இருத்தல் வேண்டும். இந்த தீவிரம் மிகுந்த அழகியல்
நிரம்பிய எழுத்திற்கான முயற்சியை தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். இது மிகப்பெரிய
சவாலாக என்முன்னே நின்று கொண்டிருக்கிறது.
அனுபவம் வேண்டி கோவையின் தெருக்களில் இரவினை பருகிக் கொண்டே அநேக நேரங்களில் சென்றிருக்கிறேன்.
அப்போது நான் கண்ட மனிதர்களும் என்னுள் இருந்த பயமும் வாழ்வின் தனி அத்தியாயங்கள்.
தேடி சென்று இடம் சார்ந்து கொள்ளும் அனுபவங்களை விட மனிதர்களை கண்டறிந்து அவர்களுடன்
பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் நேரங்கள் உன்னத சுயானுபவங்களாக இருக்கின்றன. அப்படி சில
மனிதர்களை கடந்த வார இடண்டு நாட்களில் கண்டறிந்தேன். கடந்த வாரம் சனி மற்றும் ஞாயிறன்று திருநெல்வேலியில்
டி.ஆர் நாகராஜ் கருத்தரங்கம் மற்றும் படைப்பாளர் அரங்கம் என்று லக்ஷ்மி மணிவண்ணனும்
அவரது நண்பர்களும் ஒருங்கிணைந்து நிகழ்த்திய அரங்கிற்கு சென்றிருந்தேன். அங்கே கண்டவர்களில்
பிரத்யேகமாக என்னைக் கவர்ந்தவர் கோணங்கி தான்.
இவரின் எழுத்து
எனக்கு கடினமானது. புரிதலும் மிகப்பெரிய சவால் சார்ந்த ஒன்று. பலமுறை தோற்றே இருக்கிறேன்.
இந்நிலையில் அவருடனான நேரடி சந்திப்பு பிரமிப்பையே கொடுத்தது. கலைக்காகவும் புனைவுகளுக்காகவும்
மட்டுமே வாழும் ஒரு மனிதனை காண முடிந்தது. நஷ்டத்தை கலையாக்குவதன் சூட்சுமத்தையே வாழ்க்கையாக
பார்க்கிறார். எல்லா கலைஞனுக்குள்ளும் இரு மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவன் சாமான்யன்.
இன்னொருவன் கலைஞன். கலைஞன் செய்யும் உன்மத்தமான விஷயத்தை சாமான்யன் கொண்டாட நினைக்கிறான்.
புறக்கணிக்கப்படும் போது சாமான்யன் அழுது புலம்புகிறான். தற்கொலை செய்து செய்து மறுபிறவி
கொள்கிறான். கோணங்கியினுள்ளோ புனைவாசிரியன் மட்டுமே உயிரோடு இருக்கிறான். சாமான்யனுக்கு
அவருள்ளே இடமில்லாமல் போய்விட்டது. இவரைப் போன்ற இன்னுமொருவரை என்னால் கற்பனை கூட செய்ய
முடியவில்லை.
ஓவியர் பிரசன்னா
இவரை இளங்கோ என்று மட்டுமே அறிந்த சில கலைஞர்களையும் சந்தித்தேன். அதில் ஒருவர் பிரசன்னா. இவர் சென்னையிலுள்ள ஓவியக்கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டு சினிமாவிலும் நாடகங்களிலும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். சிற்ப வேலை செய்யக் கூடியவர். ஓவியக் கல்லூரி சார்ந்து நான் சி.மோகனின் நாவல் மூலமாக மட்டுமே அறிந்திருக்கிறேன். அதில் வரும் எல்லாமே கலை சார்ந்த விஷயங்கள். நான் பொறியியல் மாணவனாக சிலவற்றையும் அவர்களுடைய ஓவிய வாழ்க்கையையும் கேட்டறிந்தேன். பிரமிப்பே வந்தது. நான் நாவல் எழுதுகிறேன் என்றவுடன் என்னிடம் பொறுமை அதிகமோ என்று நிறைய பேர் கேட்டனர். அவர்களுக்கு சின்னதொரு விஷயத்தை பகிர நினைக்கிறேன். பிரசன்னா ஓவியமா சிற்பமா என ஞாபகம் வரவில்லை வீட்டில் வெகு நேரம் செய்து கொண்டிருந்தாராம். சிறு பிழையொன்று நிகழ்ந்துவிட்டது. அவ்வளவு நேரம் செய்த எல்லா விஷயத்தையும் கிழித்துவிட்டு மீண்டும் ஆரம்பத்திலிருந்து செய்ய ஆரம்பித்தாராம். அவருடைய தங்கை ஆச்சர்யத்தில் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டிருக்கிறாள். அவருக்கோ இது சாதாரணம் என்னும் எண்ணமே மேலோங்கியிருந்ததாம். நாள் முழுக்க கல்லூரியில் ஓவியம் வரைந்தாலும் மனம் ஓவியம் வரைதலின் உன்னதத்தை அடைய நேரம் கிடைக்கவில்லையே என்று ஆற்றாமை கொண்டார். இந்த வார்த்தையே அவரின் உருவம் ஓவியனாக என்னுள் வியாபிக்க பெரும் காரணமாய் இருந்தது.
இந்த அரங்கத்தில்
சமகாலம் மறந்த கைலாஷ் சிவனிற்கு அங்கீகாரம் கொடுக்கும் வண்ணம் விருது ஒன்றை தர ஏற்பாடு
செய்திருந்தார்கள். அதற்கு ஓவியமொன்றை அப்படியே
விருதாக்கியிருந்தார் பிரசன்னா. இதை ஒருங்கிணைத்தவர்களே எதிர்பார்க்காத வண்ணம் அழகியலுடன்
தத்ரூபமாக இருந்தது. மேலும் புதிய படைப்பாளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இதை
தேர்வு செய்தவர் லக்ஷ்மி மணிவண்ணன். அவரின் வெளிப்படையான தன்மை என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது.
தன் கருத்தில் கிஞ்சித்தும் பிசகாமல் நிற்பதே எனக்கு லக்ஷ்மியிடம் பிடித்த விஷயமாகிறது.
விருதினை கூட பரிவட்டம் என்றே சொல்லி வழங்கினர். இளைய படைப்பாளிகளில் என்னுடைய எழுத்து
நன்றாக இருக்கிறது என்று கூறி பரிவட்டம் வழங்கினார். அதே நேரம் தனியாக பேசும் போது
அவர் சொன்ன வார்த்தை தான் என்னுள் ஆழமாக பதிந்திருக்கிறது. இது பிருஹன்னளை நாவலுக்காக
அல்ல மாறாக இனி எழுதப் போகும் உங்கள் எழுத்திற்காக என. பொறுப்புகளின் கணத்தை வார்த்தைகளில்
மிக எளிதாக சொல்லிக் கடந்து சென்றுவிட்டார்.
இவர்களை தவிர பிரத்யேகமாக தமிழச்சி தங்கபாண்டியனுடன் பேச கிடைத்த வாய்ப்பு, லீனா மணிமேகலையின் நெஞ்சைத் தொடும் white van stories என்னும் ஆவணப்படம், பின் அவரின் பேச்சு, உணவு இடைவேளையில் சந்தித்த சாம் நாதன், மௌனப் பார்வையாளராக மட்டுமே இருந்த ஶ்ரீநிவாசன் கோபாலன் என்று எல்லாமே(எல்லோருமே) என்னை புதிய உலகிற்குள் கூட்டி சென்றது(சென்றனர்). ஏனோ எல்லோரையும் மறக்கடிக்கும் வண்ணம் கோணங்கியே என்னுள் மேலோங்கி நின்று கொண்டிருக்கிறார்.
ஏரலில் அருண் வீட்டில்
தங்கியிருந்தேன். அவர் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் இலக்கிய வாசிப்பும்
உலக சினிமா அனுபவமும் கொண்டவர். என்னால் ஏரலை அந்நிய இடமாக பார்க்க முடியவில்லை. அதற்கு
காரணம் என்னுடன் பழகும் மனிதர்களாக கூட இருக்கலாம். என்னுள்ளே நான் ஒரு எழுத்தாளன்
என்னும் ego இருந்தாலும் அதை உடைக்கும் பாத்திரம் அருணின் சித்தப்பா. அவரின் அனுபவங்களின்
முன் நான் நிர்மூலமாகிறேன். இதை ஏரலுக்கு சில மாதங்களுக்கு முன் சென்ற பயணத்திலேயே
அறிந்து கொண்டேன். கோணங்கி மற்றும் இவர் போன்றோரிடம் தான் மணிக்கணக்கில் பேச நினைக்கிறேன்.
நினைக்கும் தருணங்களிலெல்லாம் எனக்கும் அவர்களுக்குமான தூரம் தான் பெரிதாய் தெரிகிறது.
எல்லோருமே எனக்கு
யாரோ ஒருவன் எழுதிய பிரதி மூலம் தான் அறியப்பட்டார்கள். இருந்தாலும் சந்தேகம் கொள்ளாமல்
காட்டப்படும் அன்பு, வரவேற்பு தரும் புன்னகை, புண்படுத்தாமல் பேசும் குணம், அரவணைத்து
செல்லும் தன்மை என்னை இன்னமும் மென்மையாக்குகிறது. Feeling the unbearable lightness
of being.
பி.கு 1 : ஆதவனின்
mob psychology பிரச்சினையை முன்வைத்து தான் என் முதல் நாவலை எழுதினேன். இருந்தாலும்
அதன் சாயல் என்னுள் நீங்காப் படிமமாய் இன்னமும் இருக்கிறது என்பதை இக்கூட்டத்தில் தான்
அறிந்து கொண்டேன். கிட்டதட்ட சுயபரிசோதனையாக இதை பார்த்தாலும் இனி எழுத்தாளர்களை தனிப்பட்ட
முறையில் சந்திப்பதே மனதுக்கு உகந்தது என்பதை அறிந்து கொண்டேன்.
பி.கு 2 : ஏரலுக்கு
முன்பே நண்பர் நிர்மல் மெரின்ஸோ வந்திருந்த பொழுது அவரை சந்திக்க சென்றிருந்தேன். அப்போது
தான் அருண் மற்றும் அவரின் குடும்பத்தாருடனான நேரடி பழக்கம். இம்முறை சென்ற பொழுது
நிர்மலின் இன்மையை என்னால் முழுமையாக உணர முடிந்தது.
பி.கு 3 : இணைய தொடர்பு சீராக கிடைக்காததால் காலதாமதமாக பதிவிடுகிறேன்.
பி.கு 3 : இணைய தொடர்பு சீராக கிடைக்காததால் காலதாமதமாக பதிவிடுகிறேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக