அறியப்படாதவற்றின் சூட்சுமம்

ஜோஸே ஸரமாகோ போர்ச்சுகல் தேசத்து எழுத்தாளர். எஸ்.ராமகிருஷ்ணனின் தளம் மூலமாகவே இவருடைய எழுத்து சார்ந்து அறிந்து கொண்டேன். அவருடைய பேட்டி ஒன்றில் கூட சிறந்த நாவல்கள் என்னும் குறுபட்டியலில் இவருடைய இரண்டு நாவல்களை சேர்த்திருந்தார். அது மட்டுமல்லாமல் தமிழில் அவருடைய நாவல் ஒன்றும் வெளி வந்திருக்கிறது. அது சார்ந்தும் எழுதியிருக்கிறார். அதனாலேயே தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவருடைய “அறியப்படாத தீவின் கதை” என்னும் நாவலை வாசித்தேன்.மிகச்சிறிய நூல். அதிலும் இருபது பக்கங்களுக்கு முன்னுரை, பத்து பக்கங்களுக்கு வரைபடங்கள். நாவல் முப்பது பக்கங்கள் தான் வரும் என்பது என் யூகம். நீளமான முன்னுரையும் இந்நாவல் சார்ந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரையும் முக்கியமானது. இரண்டும் ஜோஸ் சரமாகோவின் எழுத்துலகையும் புனைவுலகையும் வேறுபடுத்தி அதனுள் இருக்கும் நுட்பங்களை திறனாய்கிறது. குறிப்பாக நாவலில் முன்னுரையாக எழுதியிருக்கும் பா.வெங்கடேசன். இந்த முன்னுரையில் எனக்கு முரணும் இருக்கிறது. சரமாகோவின் எல்லா நூல்களிலிருந்தும் அவரின் நுட்பங்களை குழப்பாமல் கொடுத்து பிரமிப்பூட்டும் அவர் இந்நாவலின் கதையையும் அதன் நுட்பத்தையும் கூட முன்னமே கொடுப்பது எனக்கு பிடிக்கவில்லை. தேவை தான். ஆனால் நூலின் முன்பக்கம் அல்ல!

அந்த முன்னுரையிலிருந்து அறிந்து கொண்ட விஷயம் சரமாகோ எழுத்தின் வளைவு சுழிவுகளை வைத்து தாம் கதையாக்க நினைக்கும் கற்பனைகளை புதிராக்குவது. இதை நாவலிலும் என்னால் அழகாக உணர முடிகிறது. நாவலின் மொழியில் நிறுத்தற்குறியீடுகளை தன் பகடைக் காயாக்குகிறார். இந்த அமைப்பை காணும் போது நகுலனின் நாய்கள் நாவலே என் நினைவிற்குள் வந்து செல்கிறது. வசனங்களை, கதாபாத்திரங்களை, கதைசொல்லியை, எழுத்தாளனை என யாரையுமே நாவலின் மொழி பிரித்துக் காட்டுவதில்லை. எல்லாமே ஒன்றென இணைந்து கலவையாக நாவலை உருவாக்குகிறது.

நாவலில் வசனங்களை பிரிப்பதற்கு ஒரு இடத்தை வாசகனுக்கு ஒதுக்குகிறார். அது அவர் பயன்படுத்தும் நிறுத்தற்குறியீடு(,). இந்த commaக்களை வைத்தே நம்மால் இது இந்த கதாபாத்திரம் பேசுவதாக இருக்கக்கூடும் என்று யூகிக்கமுடிகிறது. இந்த யூகமான வார்த்தைப் பிரயோகம் கூட எதற்காகவெனில் சில இடங்களில் பல கதாபாத்திரங்கள் இடம்பெறுகிறார்கள். அங்கு நிகழும் வசன பரிமாற்றங்களில் கூட இதே முறையை கையாள்கிறார். வாசகனின் புரிதலுடன் விளையாடுகிறார்.

அறியப்படாத தீவின் கதை நாவலை பொருத்தமட்டில் முழுக்க முழுக்க ஒரு புனைவு. அதில் அவர் செய்யும் பகடி எல்லா அரசாங்கத்தையும் செய்யும் பகடியாக இருக்கிறது. உதாரணத்திற்கு அரசியல்வாதிகள் சலுகைகள் பக்கமே சாய்வதும் மக்களின் கோரிக்கைகளுக்கு, விண்ணப்பங்களுக்கு செவி சாய்க்காமல் இருப்பதும் போன்ற விஷயங்களை புனைவில் பகடி செய்கிறார். சில இடங்களில் சரமாகோவே உள்நுழைந்து தன் கருத்துகளை பதிந்து செல்கிறார்.

அறியப்படாத தீவொன்றை தேடி செல்லப் போகிறேன் என்று அரசனிடம் படகு கேட்கிறான் நாயகன். அவனும் படகொன்றை தருகிறான். உடன் அரண்மனையில் சுத்தம் செய்யும் பெண்ணும் வருகிறாள். அந்த அறியப்படாத தீவை எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை. இதை மிக சுவாரஸ்யமாக கதையாக்கியிருக்கிறார். இந்த நாவல் சார்ந்து பா.வெங்கடேசனும் சரி எஸ்.ராவும் சரி வேதாகமம் மற்றும் அரேபிய இரவுகள் கதைகளுடன் ஒன்றிணைத்துப் பார்க்கிறார்கள். இந்நாவல் முழுமையான வாசிப்பிற்கு பின் பன்முகத் தன்மையை அடைந்துவிடுகிறது. நாம் கடந்து வந்த ஏனைய வாழ்க்கை சம்பவங்களுடன் கூட இதை ஒன்றிப் பார்த்துக்கொள்ளும் அளவு வாசகனின் சுயானுபவத்திற்கான இடத்தை அளிக்கிறார்.

நாவலில் இரண்டு வரிகள் என்னை முழுமையாக ஈர்த்துவிட்டன. இந்நாவல் சொல்ல வேண்டிய மையப்படிமத்தை அவரே வரிகளினூடே சொல்கிறார் என்றே எண்ண வைத்தார்.

விரும்புவது தான் அனேகமாக சொந்தம் கொண்டாடுவதின் சிறந்த முறை, சொந்தம் கொண்டாடுவது தான்  விரும்புவதின் மிக மோசமான வழி

நம்மிடமிருந்து நாம் விடுபடாவிட்டால் நம்மை நாம் காண முடியாது, அதாவது நம்மிடமிருந்து நாம் தப்பிச் சென்றாக வேண்டும் என்று சொல்கிறாய், இல்லை, இரண்டும் ஒன்றல்ல

இந்த இரண்டு விஷயங்களை நாவலில் அநேக இடங்களில் கதையாக்கியிருக்கிறார். இந்நாவல் பாதி முடிக்கும் போதெல்லாம் யாதொரு அர்த்தத்தையும் சிந்தனையையும் கொடுப்பதில்லை. மாறாக முழுமையை கடந்தவுடன் இவை கொடுக்கும் சிந்தனைகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

இலக்கணத்தில் இவர் செய்யும் லீலாவிநோதங்கள் ஆச்சர்யமாய் இருக்கிறது. முன்பே சொன்னது தான். அதற்கு ஒரு எடுத்துக்காட்டை பாருங்கள்,

தன்னுடைய அபிப்ராயம் கணக்கில் கொள்ளப்படுவதைப் பற்றிய அக்கறை இன்றி, இன்னும் அவள் வேலைக்கு அமர்த்தப்பட கூட இல்லை, ஆனால் முதலில் துறைமுகத் தலைவன் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம்.

நிறுத்தற்குறியீடுகளுக்கு முன்னால் அவர் வரியை முடிக்கும் அழகைப் பாருங்கள். அவர் ஒவ்வொரு அங்கங்களாக தாண்டிக்கொண்டே செல்கிறார். நாவல் முழுக்க இந்த முறை வசீகரமாக இருக்கிறது. குறுகிய படைப்பாக இருந்தாலும் தொய்வில்லாமல் அறியப்படாதவற்றின் பின் இருக்கும் சூட்சுமங்களை அடுக்கடுக்காக தத்துவங்களாக கதையாக சொல்லிச் செல்வது வசீகரமாய் இருக்கிறது.

இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல். ஆங்கிலத்தில் தெரிந்த நிறைய பகடிகள் தமிழ் மொழிபெயர்ப்பில் இல்லை என்று ஒப்பிட்டு எஸ்.ரா கூறியிருந்தார். ஆங்கிலத்தில் நான் வாசித்ததில்லை என்பதால் இந்த ஒப்புமையை என்னால் உணர முடியவில்லை. நாவலின் அமைப்பை பார்க்கும் போதே இதன் மொழிபெயர்ப்பு மிகக் கடினமானது என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது.

வேற்று மொழி நாவல்களை தமிழில் கொணரும்போது நான் உணரும் கடினங்கள் அதன் பெயர்கள். பெயர்களும் நிகழும் சம்பவங்களும் அந்நாட்டிற்கே உரியனவாக இருக்கும் என்று அந்நியனாகவே உணர்ந்திருக்கிறேன். இந்நாவலோ முழுக்க முழுக்க கற்பனைக் கதை. கதாபாத்திரங்களுக்கு பெயர்களும் இல்லை. மேலும் இப்பத்தியின் இடையில் சொன்னது போல இந்நாவலின் வளையும் தன்மையும் நம்மை அந்நியனாக்குவதில்லை. மொழி விளையாட்டுடன் கூடிய முழுக்க முழுக்க கற்பனைக் கதையை நுகரும் அனுபவமே எனக்கு கிடைத்தது. இந்நாவலை வாசிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் கிடைக்கும்.


பின் குறிப்பு : எஸ்.ராமகிருஷ்ணனின் அறியப்படாத தீவின் கதை நாவலுக்கான விமர்சனம் - http://www.sramakrishnan.com/?p=2952

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக