வல்லம் கொண்ட மனிதர்கள்

வண்ணநிலவனின் சிறந்த எழுத்தாக யார் பரிந்துரைத்தாலும் அது கடல்புரத்திலாகவே இருந்து வந்தது. ஃபேஸ்புக் நண்பர் ஒருவர் கூட கடல்புரத்தில் சார்ந்து எழுதுவீர்களா என்றே கேட்டு வந்தார். காலை முதல் மாலை வரை கல்லூரி சார்ந்து மென்பொருள் ஒன்று படித்து வருவதால் மாலையில் ஓய்வெடுத்து பின்னர் தான் வாசிக்கிறேன். இந்த நிலையில் சிறிய அளவிலான நூல்களையே தேர்ந்தெடுத்து வாசிக்கிறேன். அதனடிப்படையில் கடல்புரத்தில் என்னும் நாவலை வாசிக்க எடுத்தேன்.

வண்ணநிலவனின் நான்கு நாவல்களை இத்துடன் சேர்த்து வாசித்திருக்கிறேன். பெரும் களத்தை அவர் எடுத்துக் கொள்கிறார். அங்கு ஊடாடும் மனிதர்கள் சிலரை எடுக்கிறார். அவர்களில் இருக்கும் சின்ன மனதை மட்டும் படைப்பாக்குகிறார். பெரும் பாறையை காண்பித்து வர்ணிக்கப் போகிறார் என்று எண்ணும் தருணத்தில் அதில் செல்லும் சிற்றெறும்பின் அழகியலை வர்ணிப்பது போல கதை சொல்கிறார். இந்த கடல்புரத்தில் நாவலும் அப்படியொரு கதையம்சத்தையெ கொண்டிருக்கிறது.நாவலின் தலைப்பிலேயே நான் சொன்ன இந்த பெருவாறியான களத்திருந்திருலிருந்து சின்ன கூட்டத்தின் இருண்மையான மனதிற்கு வரும் பண்பை நன்கு கவனிக்க முடியும். கடல்புரத்தில் நிறைய குடும்பங்கள் இருக்கும். அதில் ஒரு குடும்பத்தை எடுக்கிறார். குரூஸின் குடும்பம். அதிலும் பெலோமி என்னும் கதாபாத்திரத்தை எடுத்து அவள் மூலம் கதையை நகர்த்துகிறார்.

அநேக இடங்களில் கதை குரூஸிடமிருந்து பயணிப்பது போல தோற்றமளிக்கும். ஆனால் குரூஸ் வாழும் வாழ்க்கையை பிலோமி எப்படி பார்க்கிறாள் என்பதை கதைசொல்லும் முறையில் நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. கடலை நம்பி இருக்கும் மனிதர்கள் அவர்கள். அவர்களிடையே வல்லம் ஒன்றை வைத்துக் கொண்டு தினம் மீன்பிடித்து வாழ்ந்து வருகிறார் குரூஸ். அவருடைய மகன் செபஸ்தி அந்த வல்லத்தை விற்றுவிட்டு அவனுடன் வந்து தங்க சொல்கிறான். மகள் பிலோமியின் திருமணத்திற்கும் வல்லத்தை விற்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். குரூஸிற்கு கோபம் வருகிறது. வல்லமே தன் உயிர் என்று இருக்கிறார். ஆனால் அங்கே வல்லத்தில் செல்பவர்கள் குறைவே. அப்படி செல்பவர்களுக்கும் குறைந்த அளவிலான மீன்களே கிடைக்கின்றன. அதைவிட அதிகமான வசதியுள்ள லாஞ்சியை உபயோகபடுத்துகிறார்கள் நிறைய பேர். இதுவும் குரூஸிற்கு கோபமூட்டக் கூடியது. இவையெல்லாம் சேர்ந்து என்னவாகிறது என்பதை நாவல் விரிவாக விளக்குகிறது.

நான்முழுக்க முழுக்க நகரமைய வாழ்க்கை வாழ்ந்து வருபவன். கிராமத்திய வாழ்க்கையை இலக்கியங்களின் மூலமும் சில மனிதர்களின் மூலமும் தான் அறிகிறேன். அவர்களில் பெருவாரியோனோர் சொத்துகளை இழக்க விருப்பமில்லாதவர்கள். நண்பனுடைய வீடு விவசாயத்தை நம்பியிருக்கும் வீடு. அவர்களுக்கு சொந்தமாக திண்டுக்கல்லுக்கு அருகில் நிலமிருக்கிறது. நீரில்லாத காரணத்தால் கோவையில் குத்தகைக்கு நிலமெடுத்து விவசாயம் பார்க்கின்றனர். லாபமும் கிட்டுகிறது. இருந்தாலும் அந்த நிலத்தை விற்க மனமில்லை.

இது போன்று நிறைய அம்சங்களும் கதைகளும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். நான் இதை குற்றமாக பார்க்கவில்லை. இவர்கள் சேகரிக்க நினைப்பது ஒரு வளத்தை. இது மாறி நவநாகரீக அம்சங்களின் ஊடுருவலினால் நம் பாரம்பரியத்தை இழந்து வருகிறோம். விவசாயத்தையும் நெய்தல் வாழ்க்கையையும் இப்படி தான் பார்க்கிறேன். அவர்களிடம் சந்தோஷம் துக்கம் எல்லாம் நிறைந்து இருக்கிறது. அதனூடே பாரம்பரியம் மிக்க வளங்கள் இருக்கின்றன.

அப்படியொரு வளமாக தான் குரூஸ் வைத்திருக்கும் வல்லத்தை எண்ணுகிறேன். அந்த வளம் மீது அவர்களுக்கு இருக்கும் உணர்வுகள் விவரிக்க முடியாதது. அது குடும்பத்துடன் இணைந்ததும் கூட. குடும்பத்திற்குள் நிகழும் நிகழ்வுகளில் அதற்கும் பங்குண்டு என்பது போலவே செய்வர். இதையெல்லாவற்றையும் அழகுற நாவலில் காட்டியிருக்கிறார்.

உறவுகளில் சிக்கல் எற்படும் போது இந்த பொருள் மீதான காதலும் உறவும் என்னாகிறது என்பதையும் இடம்பெயர்தலையும் காட்டி செல்கிறார். இதனூடே வரும் கடலோர காதல் கதைகளையும் அங்கு அவர்கள் உய்த்துணரும் ஏமாற்றங்களையும் அதனால் ஏற்படும் சோகங்களையும் அது புதிதல்ல எல்லாம் பாரம்பரியமாக கடத்தப்பட்டது தான் என்று எடுத்துக் கொள்ளும் தன்மையையும் ஆழமாக சொல்கிறார்.
நாவலில் வரும் வரிகளைப் பாருங்கள். இந்த வரிகளை விரிவாக விவரிப்பது தான் கடல்புரத்தில் நாவல்

அந்த கடல்புரத்தில் எந்த குழந்தை பிறந்தாலும், எத்தனை பெரிய வீட்டில் பிறந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையை சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத் தான் ஊற்றுகிறார்கள். அந்த தண்ணீரானது ஆண் பிள்ளையானால் அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தை கொடுக்கிறது

குரூஸின் குடும்பத்தை மட்டும் சொல்லாமல் அங்கு வல்லத்தை நம்பியே இருக்கும் சில மனிதர்களை குறிப்பிட்டு அவர்களின் மனதை வல்லம் எப்படியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்பதை மிக அழகாக சில இடங்களில் உக்கிரத்தோடும் சொல்லுகிறார்.

கடல்புரம் உணர்வுகளால் மட்டுமே பிண்ணபட்ட நெய்தல் இடம். அங்கே நிகழும் எல்லா உணர்வுச் சித்திரங்களையும் நாவல் செவ்வனே காட்டி வருடி செல்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக