தீதே தர்மம்
ஒவ்வொரு
கலாச்சாரமும் பல்வேறு அறக் கோட்பாடுகளால் நிரம்பி இருக்கிறது. அந்த கோட்பாடுகளை மையமாக
வைத்தே மக்களின் வாழ்வியல் முறை நிர்ணயிக்கப்படுகிறது. இது போன்றதொரு சமூகத்தில் தான்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கோட்பாடுகளில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை அல்லது
அதைக் கடந்து சொல்லப்படும் விஷயத்தை நம் மனம் எப்போதுமே கொண்டாட்டமாய் கொள்கிறது.
காமம்
சார்ந்த எழுத்துகளை எல்லோரும் விரும்புகிறார்கள். முதன் முதலில் அதை ரசிப்பவர்கள் எத்தனை
வயதுடையவர்களாக இருப்பினும் அவர்களின் மனம் ஒரு கொண்டாட்டத்தினை அனுபவிக்கிறது. இதற்கான
காரணம் நமது கலாச்சாரத்தில் வெளிப்படையாக காமத்தை பேசுவது தவறு என்று சொல்லப்படுகிறது.
இது ஏட்டில் இல்லையெனினும் எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆதலால் இலக்கியங்களில் சொல்லப்பட்டாலும்
வேறு எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் நமக்குள் ஒர் ஈர்ப்பை அப்படைப்பு பெற்றுவிடுகிறது.
இந்த
கலாச்சாரம் அந்தந்த நிலத்தைப் பொருத்து தான். நாம் இதிகாசங்களென ஒன்றை வைத்து அவை சொல்லும்
தர்மங்களை நம் நாட்டின் தர்மமாய் கொண்டிருக்கிறோம். இந்த தர்மம் கிரேக்கத்திலோ ஃப்ரான்சிலோ
செல்லுபடியாகாது. ஆக தர்மம் நாட்டைப் பொருத்து மாறுபடக் கூடியது. அப்படியே கொண்டாலும்
இந்த எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய மாபெரும் உலகம் தனக்கென பொதுவான தர்மத்தை கொண்டிருக்க
வேண்டுமல்லவா ? அதை எல்லா மதத்தினரும் இயற்கை என்கின்றனர். உண்மையில் இந்த இயற்கை
என்பது என்ன ?
பல்வேறு
மதங்கள் இந்த இயற்கையையும் கடவுளின் பெயரினுள் இட்டு ஒரு அர்த்தத்தை கொடுக்க முனைகிறார்கள்.
இந்த இயற்கை எனும் தர்மத்தை மாற்றி ஒரு மாற்று கருத்தை ஒருவனை நம்ப வைக்க வேண்டுமெனில்
நான் என்ன செய்ய வேண்டும் ? மாற்றுக்கருத்து என்பதே சவலான ஒரு விஷயம். அதை நம்ப வைக்க,
குறிப்பாக இது போன்ற உலகம் தழுவிய கோட்பாட்டை மாற்றியமைக்க நான் உலகம் முழுக்கவும்
ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சொல்ல முனைபவனின் கைவசம் இருக்கும் உண்மைகளையும் தர்க்கங்களையும்
வைத்து கேட்பவனின் மனதில் கலாச்சாரத்தை மாற்ற
வேண்டும். இது கிட்டதட்ட உளவியல் கொலை.
இந்த
உளவியல் கொலையை பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியவாதி செய்திருக்கிறார். அவர் தான் மார்க்கி
தே ஸாத். இவரிடமிருந்து தான் சாடிஸம் என்னும் கோட்பாடு வந்திருக்கிறது. வதைகளை ரசிக்கும்
ஒரு பைத்தியக்காரத் தனம். அவர் இதை உலக கோட்பாடாக நிறுவுகிறார். அவர் தனது எழுத்தினாலேயே
நாடுகடத்தப்பட்டிருக்கிறார். சிறைவாசம் சென்றிருக்கிறார். கழிவுகளை அகற்ற உதவும் காகிதங்களில்
நாவலை எழுதி எழுதி வெளியே அனுப்பியிருக்கிறார். இன்னமும் இது போல நிறைய விஷயங்களை அவரின்
வாழ்க்கையில் அறிந்து கொள்ளலாம். சாரு நிவேதிதாவின் இலக்கிய கட்டுரைகள் சார்ந்த நூல்களில்
இவரை பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.
இவருடைய
நாவலை ஒன்றாவது வாங்க வேண்டும் என்னும் நீண்ட ஆசை கொண்டிருந்தேன். இவருடைய நூல்களும்
forbidden classics என்னும் தலைப்பின் கீழ்
தான் வெளிவருகிறது. இந்நிலையில் தான் இவருடைய ஜஸ்டின் என்னும் நாவலை தமிழில் கண்டேன்.
இது தான் ஸாத்தின் முதல் நாவல்.
உலக
இலக்கியங்களை எடுத்துக் கொண்டாலே எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இலக்கியங்கள் துன்பியல்
சார்ந்தே இருக்கின்றன. துய்ப்பை பேசும் நாவல்கள் வெகு குறைவே. அப்படியே பேசியிருந்தாலும்
அது ஏதோ ஒரு துன்பத்தை மறைக்க என்னும் வடிவிலேயே இருக்கும். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்
கூட இதைக் காண முடியும். இந்த நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதபட்ட ஜஸ்டின்
நாவலை யோசிக்க முடிகிறதா ?
இது
முழுக்க முழுக்க துன்பியல் இலக்கியம் தான். இந்த நாவலில் துய்ப்பு முழுமைக்கும் இருக்கிறது.
அதை என்னால் ரசிக்க முடியவில்லை. காரணம் நான் இயங்கிக் கொண்டிருக்கும் கலாச்சாரம் தான்.
பல மதங்களை உள்வாங்கிய இந்தியாவில் எல்லா மதத்தின் கருத்துகளையும் ஏதோ ஒரு விதத்தில்
அறிந்து கொண்டுதானிருக்கிறோம். அதில் ஒன்று கர்ம வினை. செய்யும் தீங்குகளுக்கு அடுத்த
பிறவியில் நல்ல வாழ்க்கை கிடைக்காது என்று. இதில் விலங்குகளை கொல்வதும் பாவம் என்று
சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மனிதனை துன்புறுத்துதலை சிந்திக்க முடிகிறதா ?
இந்த
நாவல் முழுக்க விரவி கிடப்பது இந்த துன்புறுத்துதலும் ரத்தமும் தான். நாம் இயற்கை என்று
சொல்வதே வதைகளால் நிறைந்தது தான் என்று இந்நாவல் சொல்கிறது. ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கின்மை
இருந்தது. அதை ஒழுங்குபடுத்த மதங்களும் அதன் மூலம் மக்களுக்கு நலம் பயக்கும் அறமும்
தோன்றியது என்று சொல்லலாம். அப்படியெனில் ஆரம்பத்தில் இருந்தது தானே இயற்கை ? அதை சீர்குலைத்து
அறம் என்னும் பெயரில் செய்தவை எல்லாம் மனிதனின் செயல் தானே ? இந்த ஒழுங்கின்மையை நாவல்
மையப்படுத்துகிறது.
மனிதன்
எப்போதும் ஒழுங்கின்மையில் சந்தோஷம் கொள்கிறான். அதற்கு நாவலில் சொல்லும் ஒரு எடுத்துக்காட்டையே
நானும் சொல்கிறேன். கணவனின் முன் மனைவியை ஒருவன் வன்புணர்ச்சி செய்கிறான் எனில் கணவனை
விட வன்புணர்சியாளனுக்கெ அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்று சொல்கிறார். இந்த ஒழுங்கின்மை
தன்னுள் கோடிக்கணக்கான சந்தோஷங்களை கொண்டிருக்கின்றன.
இந்த
சந்தோஷத்தை சொல்லும் இடங்களிலெல்லாம் தனிமனிதத்துவ கொள்கையை தேற்றமாய் சொல்லி செல்கிறார்.
உனக்கு சந்தோஷம் கிடைக்கிறதெனில் நீ எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நாவலில்
அடிக்கடி சொல்லவும் படுகிறது. அதற்கேற்ப நாவலும் இருக்கிறது.
ஒழுங்கின்மை
சார்ந்து நகரும் நாவல் முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பிக்கிறது. ஜூலியட் ஜஸ்டின் இருவரும்
சகோதரிகள். ஜஸ்டினுக்குள் இருக்கும் விஷயங்களெல்லாம் கடவுள் பக்தி கற்பொழுக்கம் அறநம்பிக்கைகள்
கர்ம வினைகளின் மீதிருக்கும் நம்பிக்கைகள் போன்றவை. ஜூலியட் சொல்வதோ விபச்சாரியாக வாழ்வதே
உசிதமானது என்று. காரணம் புலன் இன்பத்தை உண்மையான சந்தோஷத்தை நன்கு அனுபவிக்கலாம் என்று
சொல்கிறாள். இவர்கள் அநாதையாகின்றனர். அப்போது இருவரும் பிரிகின்றனர். இந்த இடத்திலிருந்து
நாவலும் ஜஸ்டினை மட்டுமே நோக்குகின்றது.
இதற்குபின்
ஜஸ்டின் செல்லும் இடங்களிலெல்லாம் வஞ்சகமும் காமமும் களியாட்டத்தை நிகழ்த்துகின்றன.
அவளை நோக்கி வரும் ஆண்களெல்லாம் அவளை துன்புறுத்ததி ரத்தத்தை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர்.
பெண்கள் எல்லாம் இவளை அப்படிப்பட்ட ஆண்களிடம் சேர்த்துவிடுகின்றனர். கடவுளை நோக்கி
சென்றாலும் அங்கும் இதே நிகழ்கிறது. கற்பு பலபேரால் சூரையாடப்படுகிறது. அப்போதும் அவளுக்குள்
இருந்து நம்பிக்கை தளராமல் இருக்கிறது. இந்த ஜஸ்டின் முடிவு எப்படி இருக்கிறது என்பதையே
நாவல் முடிவாய் கொண்டிருக்கிறது.
நாவல்
எளிதில் தொய்வினை அளிக்கும். அதற்கான காரணம் இந்நாவல் வதைகளினின்று ஒரு பெண் தப்பிக்கும்
நுட்பங்கள் எதையுமே கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஆண் வருவதும்
பெண்களின் சதைகளை கிழிப்பது வித்தியாசமான முறைகளில் துன்புறுத்துவது அதன் மூலம் அவன்
கொள்ளும் கிளர்ச்சியை கொண்டாடுவது மட்டுமே சொல்லப்படுகிறது. இந்த கொண்டாட்டம் அருவருப்பானதாக
இருப்பதாலேயே ஒரு கட்டத்திற்கு மேல் ஜீரணிக்க முடியாமல் சென்று விடுகிறது. மரணமே ஜஸ்டினுக்கு
முக்தி என்று எண்ண வைக்கும் அளவு இருக்கிறது.
நான்
மேலே சொன்னது போல நாம் நம் கலாச்சார சூழலினுள்ளிருந்தே இந்த எல்லாவற்றையையும் அனுபவிக்கிறோம்.
நாவலில் இருக்கும் துய்ப்பே இது தான். ஒவ்வொரு மனிதனுள் புதையுண்டிருக்கும் ஆணாதிக்க
தன்மையை தூண்டி வெளிக்கொணருகிறது இந்நாவல்.
மார்க்கி
தேசாத்தை எனக்கு பிடித்தே இருக்கிறது. அதற்கான காரணம் அவர் மேம்போக்காக சொல்லவில்லை.
இந்நாவலில் வரும் ஆண்கள் துன்பங்களை துயரங்களை பஞ்சத்தை கண்டு கொண்டாடுகிறார்கள் எனில்
அதற்கு உலகமே ஒத்துழைத்து தான் இருக்கிறது. அவ்வளவு ஆதாரங்களை சொல்கிறார். உலகம் முழுக்க
இருக்கும் ஆதாரங்களை காண்பிக்கிறார். கடவுளை தனி மனிதனின் விருப்பு என்பதையும் நிரூபித்து
கடவுள் மறுப்பும் தனி மனிதனின் விருப்பு என்று நிறுவுகிறார். இக்காலத்திற்கு இது பொருந்தாமல்
இருக்கலாம். இருந்தாலும் இவர் காட்டும் ஆணாதிக்க தன்மை எல்லோருள்ளும் ஒளிந்து தான்
இருக்கிறது. இந்நாவல் வாசிக்கும் போது அவர் சொல்லும் பதினெட்டாம் நூற்றாண்டை என்னால்
நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நாவல்
: ஜஸ்டின்
அசிரியர்
: மார்க்விஸ் தே சாட் (தமிழில் : உமர்)
வெளியீடு
: புலம்
2 கருத்திடுக. . .:
ஒழுங்கின்மையில் சந்தோஷம் கொள்கிறான் - உண்மை...
உன்னுடைய தேடல் பல சமயங்களில் என்ன கலவரப்படுத்துகிறது. நீ செயல் பட்டுக்கொண்டிருப்பதாக தெரியவில்லை. தயாராகிக் கொண்டிருக்கிறாய். ஆனால், எதற்கு.
Post a comment
கருத்திடுக