காரணமில்லாமல் கமழும் வெறுப்பு
இந்த விடுமுறையில்
நான் சிறுகதைகளை வாசிக்கவேயில்லை. அதற்கான காரணம் நிறைய நேரம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம்
நான் நாவல்களுக்கே அந்த நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் வீட்டிற்கு
சொந்தக்கரர்கள் வந்திருந்ததாலும் அவர்களோடு வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்ததாலும்
சிறுகதைகளை வாசிக்கலாம் என்னும் முடிவை எடுத்திருந்தேன். அது தான் சிறிய களம். அப்படி
எடுத்த நூலே எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்திய தொகுப்பான காந்தியோடு பேசுவேன்.
எஸ்.ராமகிருஷ்ணனின்
எழுத்துலகம் சார்ந்த நல்லதொரு அவதானிப்பை அவரே கதை முகாமில் சொல்லியிருந்தார். அதை
அறிந்தவுடன், அஃதாவது அவரது எழுத்தின் சூட்சுமத்தை அறிந்தவுடன் வாசித்தால் நன்றாக இருக்குமா
என்னும் சந்தேகம் என்னுள் இருந்தே வந்தது. ஆனாலும் எனக்கு ஒரு ஆச்சர்யத்தையே இந்த தொகுப்பு
அளித்தது.
அவர் சொன்ன சூட்சுமமானது
ஒரு சிறுகதையின் ஆரம்பம் வாசித்த உடனேயே முழுக்கதையையும் வாசிக்க வேண்டும் என்று வாசகனுக்கு
தோன்ற வேண்டும் என்று சொல்லியிருந்தார். இத்தொகுப்பில் இருக்கும் பதிமூன்று கதைகளுக்கும்
இதே நிலையை பார்க்கிறேன். எல்லா கதைகளுமே ஒரே கட்டமைப்பு. அந்த நிலையான கட்டமைப்பினுள்
விதவிதமான கதைகளை பொருத்தி கொடுத்திருக்கிறார். இந்த ஒற்றுமை மட்டுமின்றி எல்லா கதைகளுக்கும்
இன்னுமொரு ஒற்றுமையும் இருக்கிறது. முதன்மையிலேயே எல்லா கதைகளையும் சொல்கிறார். இப்படி
பல ஒற்றுமைகளைக் கண்டாலும் எல்லா கதைகளும் சில பெரும் பெரும் விஷயங்களை தனக்கே உரித்தாக கொண்டிருக்கிறது.
இந்த தொகுப்பின்
முதல் கதை காந்தியோடு பேசுவேன். இந்த கதையை வாசித்த உடனேயே நான் உலகளாவிய பிரமிப்பில்
மூழ்கிப் போனேன். ஒரு கருவை எடுத்தாள்வது என்பது எழுத்தாளனுக்கு இருக்கும் பெரிய சவால்.
அவன் மனதில் இருக்கும் கருவை உலகமயமாக்க வேண்டும். அது நியாயமாக இருப்பின் அக்கதை இலக்கியம்
என்னும் அங்கத்தை பெரும் என்று கதை முகாமில் சொல்லியிருந்தார். காந்தியோடு பேசுவேன்
இந்தியனாக இருக்கும் எல்லோரிடமும் இருக்கும் பலவீனத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் நிர்வாணமாக்குகிறது.
ஒரு பெரும் புகழை ஒருவர் நாடு தழுவி கொண்டிருக்கிறார் எனில் அவரை இகழ்ந்து பேச வேண்டும்
என்னும் வெறுப்பு எல்லோர் மனதிலும் கனன்று கொண்டே இருக்கிறது. இந்திய வெறுப்பிற்கான
காரணங்கள் எளிதில் நம்மிடம் சிக்கிக் கொள்கிறது. அவரை போற்றுவோரிடம் சாமான்ய காரணங்களை
சொல்லி அவரை புறந்தள்ள தயாராய் நிற்கிறோம். இந்த தன்மை அதிகமாக இருப்பது காந்தி சார்ந்து
தான். இந்த கதையில் இகழப்படும் மனங்களுக்கு
நானும் துணைக்கூலி தான். என்னையும் சேர்த்து என் கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவர்களிலேயே
காந்தியை கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டுபவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களின் காரணங்களை
ஆராயும் போது முக்கால்வாசி காரணங்கள் அவர் வன்முறையை வீரத்தை கையாளாமல் அஹிம்ஸையை கையாண்டு
போரிட்டிருக்கிறார் என்பதே. தமிழ்மரபில் ஊறிப்போன நமக்கு வீரமே பெரும் கொடையாய் மனதளவில்
இருக்கிறது. இக்கதையிலோ அதற்கு காரணம் எல்லோருள்ளும் இருக்கும் பெண்மையின் வீரியம்
தான் காந்தியினுள் பெரும் வேழமாய் மாறியிருக்கிறது என்று நியாயப்படுத்துகிறார். ஏற்றுக்
கொள்ளக் கூடிய வகையில் இந்த கதையை மிக அழகாக எழுதியிருக்கிறார். இச்சைக் கொண்டு தேடல்
மேற்கொள்ளும் மனிதர்களின் மனம் எப்படி இருக்கும் என்பதையும் அந்த அடிமை மனோபாவம் செவ்வியல்
தன்மை கொண்டது என்பதையும் வாசிப்போடு நிறுத்தாமல் உணரவும் வைக்கிறார். இந்த தொகுப்பின்
ஆகச்சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று. முதன்மையானதும் கூட.. முழுத்தொகுப்பையும் முடித்தால்
கூட இந்த கதையை மட்டும் என்னால் என்னை விட்டு நீக்க முடியவில்லை.
இத்தொகுப்பில்
நல்ல கதை என்று சிலவற்றை தான் சொல்ல முடிகிறது. நிறைய கதைகள் என்னை ஈர்க்கவில்லை. ஒருவேளை
ஈர்த்த கதையின் தாக்கங்கள் என்னை எங்கோ கொண்டு சென்றதால் கூட பிற கதைகளை ரசிக்க முடியாமல்
இருக்கலாம். இருந்தும் ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். சில கதைகள் ஆரம்பத்தில்
அலுப்பினை கொடுத்தாலும் கதையினுள்ளே அவர் வைக்கும் nuances நம்மை அப்படியே உள்ளிழுத்துவிடுகிறது.
எனக்கு பிடித்த
இன்னுமொரு கதை அஸ்தபோவில் இருவர். உலக இலக்கியவாதியான டால்ஸ்டாயே இந்த கதையின் நாயகன்.
உலகத்தையே தன் பக்கம் இழுத்து விட்டிருந்த டால்ஸ்டாய் தன்னை பெரிய மேதையாய் நினைத்துக்
கொண்டிருக்கிறார். உலகம் சார்ந்து எழுதியது போதும் என்னும் எண்ணம் கொள்கிறார். அவர்
அடிப்படையில் விவசாயி. விவசாயி என்னும் குணமும் எழுத்தாளன் என்னும் அகமும் எப்படி முரண்படுகிறது
எப்படி அவர் மனம் அவரிடமே தோற்கிறது என்பதை ஒரு விவசாயியுடன் பேசும் போது அறிகிறார்.
ஒவ்வொரு வசனமும் அவ்வளவு அழகானதாய் இருக்கிறது. எழுத்தாளன் தன்னை முதன்மைபடுத்துகிறான்.
தன்னிலிருந்து உலகை காண்கிறான். விவசாயிக்கு அந்நினைப்பு வந்தாலே அவன் மனதில் விவசாயி
இல்லை. விவசாயி பேசும் ஒவ்வொரு விஷயமும் அவரை பரிசீலனை செய்கிறது. எழுத்தாளன் என்னும்
பிம்பம் உடைகிறது. உண்மையில் எழுத்தாளன் சார்ந்து அவர் கொண்டிருக்கும் பிம்பம் நொருங்குவதை
என்னால் ரொம்பவே ரசிக்க முடிகிறது.
பாதியில் முடிந்த
படம் மற்றும் அருவிக்கு தெரியும் ஆகிய கதைகள் பெண்கள் மாயை தன்மை நிரம்பியவர்கள் என்பதை
மிக அழகாக சித்தரிக்கின்றன. பெண்கள் மாயையாக இருக்கவே ஆண்கள் விரும்புகிறார்கள். புதிர்
தன்மை நிறைந்தவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். புதிரை விடுவிக்க யாரும் விரும்புவதில்லை.
அதே நேரம் புதிர் விடுவிக்கப்படாமலே இருப்பின் எரிச்சலும் அடைகிறார்கள். இந்த தன்மையை
பிசகாமல் இரு கதைகளிலும் சொல்கிறார்.
ஒற்றை முள் என்றொரு
கதை. இறுக்கமான மனிதர்களுக்குள்ளே கனிவான அன்பு ததும்பும் ஒரு அறை இருக்கவே செய்கிறது.
அதை அவர்கள் வெளிக்காட்ட தெரியாமல் தடுமாறுகிறார்கள். இந்த தடுமாற்றத்தை எல்லோரும்
தவறாக எண்ணி இறுக்கமான மனிதர் சிரித்து பேசத் தெரியாதவர் என்று பட்டம் கட்டுடிவிடுகிறோம்.
உண்மையை அறியும் தருணத்தில் வாழ்க்கை வேறொரு தடத்தில் பயணிக்க தொடங்கிவிடுகிறது.
இத்தொகுப்பில்
முதல் எழு கதைகளும் கடைசி கதையும் என்னை ரொம்பவெ ஈர்த்தது. நடுவிலிருக்கும் கதைகள்
என்னை ஈர்க்கவேயில்லை. முன்னுரையில் அவரின் பழைய சிறுகதைகளையும் இதில் சேர்த்திருக்கிறார்
என்றார். ஒருவேளை நடுவிலிருக்கும் கதைகளாக இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன்
கலை சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் கொண்ட பல்வேறு பயணங்களை இத்தொகுப்பில் இருக்கும் கதைகளினூடாக கண்கூடாக காண முடிகிறது. இத்தொகுப்பிலுள்ள முதல் ஏழு கதைகளுக்காக நிச்சயம்
வாங்கலாம். அந்த ஏழுமே செவ்வியல் தன்மை மிகுந்த புனைவினூடான வாழ்வியல் பதிவுகள்.
பின் குறிப்பு : இவற்றில் சில கதைகள் அவருடைய இணையத்திலேயே வாசிக்க கிடைக்கிறது
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக