உரையாடும் கதைசொல்லி
மொழிபெயர்ப்பு
நூல்களை அதிகம் வாசிக்க வேண்டும்
என்னும் எண்ணம் மட்டும் என்னுள்
அநேக நேரங்களில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது.
இந்நிலையில் தான் கடந்த இருபத்தி
மூன்றாம் தேதி சேலம் பாலம்
புத்தக நிலையத்தில் ஒரு சிறப்பு விற்பனை
செய்திருந்தார்கள். அது இருபது சதவிகித
தள்ளுபடி என. கைவசம் இருநூறு
ரூபாய் தான் இருந்தது. அதில்
மொழிபெயர்ப்புகளாக வாங்கலாம் என்னும் முடிவில் சென்றேன்.
மூன்று மொழிபெயர்ப்புகளை வாங்கினேன். அவற்றில் ஒன்றைத் தான் இங்கே சொல்ல இருக்கிறேன்.
எஸ்.ராமகிருஷ்ணனின் கதை முகாம் சென்றதிலிருந்தே
எனக்கு மொழிபெயர்ப்புகள் மீது ஒரு ஆர்வம்
இருந்து வந்தது. அங்கே அவர்
குறிப்பிட்டிருந்த ஒரு எழுத்தாளரின் நூலே
இன்று எழுதவிருப்பது. அவர் வைக்கம் முகமது
பஷீர். அவரின் சிறுகதை ஒன்றையும்
என் இணையத்தில் சொல்லியிருந்தேன். அதிலேயே அவரின் நகைப்பூட்டும்
விதம் தெரிந்திருக்கும். அது அவர் எழுதியிருந்த
பிறந்தநாள் பற்றிய சிறுகதை. இன்று
அவரின் இரண்டு குறுநாவல்களைப் பற்றி
சொல்லலாம் என்றிருக்கிறேன்.
சப்தங்கள்
நூலிற்கு
பெயரும் இதையே வைத்துள்ளார். தி.ஜானகிராமனைக் கண்டு நான் வியக்கும்
விஷயங்களில் முதன்மையானது அவரது உரைநடைத் தன்மை.
நாவலையே உரைநடையில் இழுத்து செல்வார். அம்மா
வந்தாள் நாவலில் இதை நன்கு
உணர முடியும். இதை இங்கு குறிப்பிடுவதன்
காரணம் வைக்கம் முகமது பஷீர்
தி.ஜா வை விட
ஒரு படி மேலேறி இடையிடையில்
வரும் சிறு சிறு வர்ணனைகளையும்
தூக்கி எறிந்து உரைநடையிலேயே நாவலை
கொடுக்கிறார். சிறு இடத்திலும் பிசகவில்லை.
நாவலே
அறுபது பக்கங்கள் என்னும் அளவு தான்.
அதிலும் பன்னிரெண்டு அத்தியாயங்களை வைக்கிறார். பன்னிரெண்டும் வசனங்கள். அதிலும் அவரின் திறமை
எப்படியெனில் ஒரு விஷயத்தை பேசுகிறார்.
அதிலிருந்து ஒரு விஷயம் முளைக்கிறது.
புது வசன பரிமாற்றத்தினுள் வாசகனை
இழுத்து செல்கிறார். வாசகனின் மனோ லயத்திற்கொப்ப அவரும்
வசனங்களையும் அதனுள் ஊடாடும் கருவையும்
முன்னும் பின்னும் இழுத்து மாற்றி ஜாலம்
செய்கிறார்.
அதில்
அவர் சொல்லும் விஷயங்களும் சுவாரஸ்யமானதாய் இருக்கிறது. கதை எழுதுபவன் ஒருவனிடம்
ராணுவ வீரன் பேசுகிறான். அவனுக்கு
அவன் ஒரு ராணுவ வீரன்
என்று சொல்வதில் பெருமை ஏற்படவில்லை. அவன்
சொல்லும் காரணம் அதிகார வர்க்கத்தின்
பிரதிநிதியாய் நான் போர்வீரனாகிறேன். ஆனால்
அத்திடலைத் தாண்டி எத்தனையோ வக்கிரங்கள்
நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்கிறான். இந்த வக்கிரங்களை அவன்
பேச்சுவாக்கில் காதலாய் காமமாய் ஒவ்வொன்றாய்
அடுக்குகிறான். எல்லாம் அவன் கொண்ட அனுபவங்கள். அவன் அடுக்கும் விஷயங்கள்
எல்லாமும் நம்மை துன்பத்தால் புல்லரிப்பில்
ஆழ்த்துகின்றன.
வேசியைப்
பற்றி நிறைய விஷயங்கள் வருகின்றன.
எல்லாமுமே நம்மை அருவருப்பில் ஆழ்த்த
வேண்டியவை. மாறாக குளச்சல் மு.யூசுப்பின் அட்டகாசமான மொழிபெயர்ப்பில் அவ்வளவு அழகியலோடு நம்மை
வருடுகின்றன கதைகள். வேசி பெற்ற
மகவை அப்படியே விட்டுவிட்டு கஸ்டமர் ஒருவனுடன் கோயிலுக்குள்
செல்கிறாள் புணர்வதற்கு. எப்படியய்யா உங்களுக்கு இப்படி எழுத வருகிறது
பஷீர்.
காதலை
சொல்லும் போது அது ஒரு
புராதன சடங்கு தானே என்று
சலிப்புடன் சொல்லி செல்கிறார். விளக்கவும்
செய்கிறார். பால்வினை நோய்களைப் பற்றியும் ஆண்கள் வேசிகளாக இருப்பதை
பற்றியும் நிறைய எழுதிச் செல்கிறார்.
இதை வாசிக்கும் போது எழுதப்பட்ட காலம்
எனக்குள் மின்னல் போல மின்னி
மின்னி ஜி.நாகராஜன் தோற்றுவிடுவாரோ
என்னும் பயம் சிறிதாக எழுந்து
அழுந்தி செல்கிறது. நாவல் முடியும் போது
ஒரு மர்மத்தினுள் சென்ற உணர்வு நமக்கு
நிச்சயம் கிடைக்கும். ஆதியும் அந்தமுமும் முறையற்று
கிடப்பதே மர்மத்தின் உருவம். அதை நாவலின்
கடைசியில் மொழியால் செய்திருக்கிறார். இந்நாவல் அளவில் சிறியதாய் இருப்பதால்
நிறைய சொல்ல முடியவில்லை.
மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்
இந்நாவலில்
ஆரம்பமே எல்லோரையும் உள்ளிழுத்துவிடும். பாருங்கள்
“மூணுசீட்டு
விளையாட்டுக்காரனின் மகள் என்னும் இந்த
வரலாற்றுக் கதை போதிக்கும் நீதியை
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். ஆனால், பெண்களின் ஆரோக்கியத்திற்கு
இது ஒத்துவராத விஷயம் தான். குறிப்பாக
பெண் வாரிசுகள். . . அவர்கள் எந்த வயதினராக
இருந்தாலும் சரி. . . முடிந்தவரை
வேகமாக. . . அவர்களை
ஒன்றாக வைத்து தீர்த்து கட்டிவிடவும்!”
மிக
மிக சாதாரண குறுகிய கதை
இது. மூணுசீட்டுக்காரன். அவன் மகள். திருட்டு
தொழில் செய்பவன். இம்மூவருக்கும் இடையே நிகழும் சம்பவம்
தான். தன் மகளை நல்ல
இடத்தில் மணம் செய்ய எண்ணுகிறான்.
மகள் திருட்டுக்காரனுடன் காதல் வயப்படுகிறாள். எப்படி
சேருகிறார்கள் என்பதை கதை சொல்லல்
திறமை கொண்டு அசாத்தியமாக சொல்லிச்
செல்கிறார்.
நிகழும்
கதையை அப்படியே சொன்னாலும் வரலாற்றுக் கதையாக கற்பனை செய்து
கொள்ளுங்கள் என்று வசீகரமாக இதை
வரலாற்றுக் கதையாக்க கதையினுள்ளேயே முயற்சி செய்கிறார்.
பின்னட்டையில்
சுகுமாரன் சொல்லும் விஷயம் நூற்றுக்கு நூறு
உண்மையானது. முதல் குறுநாவல் இருண்மையினை
கண்டு அல்லலுறும் மனிதன் எனில் இரண்டாவது
ஒளியில் இருக்கும் களிப்பு. இது இரண்டையும் கதை
சொல்லல் முறையில் துய்ப்பாக கொடுத்திருக்கும் பஷீர் எனக்கு ரொம்பவே
பிடித்திருக்கிறார். குளச்சல் மு.யூசுப்பின் மொழிபெயர்ப்பு சிறிதும் சலைக்காமல் தமிழில் உருவான நாவலையொத்தே இருக்கிறது.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக