Home
Archive for
May 2014
வேண்டுமொரு சூதன்
சமகாலத்தின் முக்கிய விஷயத்தை கட்டுரையாக எழுத நினைத்தேன். அது தான் இந்த "வேண்டுமொரு சூதன்". அனுப்பும் போது பிழை திருத்தி அனுப்பியிருந்தேன். ஆனால் கட்டுரையின் சில வார்த்தைகளில் வடமொழி சொல்லை நீக்கி தமிழ் சொல்லை வைத்திருக்கின்றனர். சிலவற்றில் மட்டும் அப்படி நடந்திருக்கிறது(!). உதாரணம் செயமோகன், எஸ்.ராமகிருசுணன் என. ஏனென்று காரணம் தான் தெரியவில்லை.
இதையெடுத்து சொல்லவும் சூதனொருவன் வேண்டுமோ!!!!
http://siragu.com/?p=13987
Drishyam - 2013
கல்லூரியில் தேர்வுகள் ஆரம்பித்து நடந்து கொண்டிருக்கின்றன. தொடர்ந்து ஒரு ஒரு நாள் இடைவெளி விட்டு மூன்று தேர்வுகள். அடுத்த தேர்விற்கு இடையில் நான்கு நாட்கள் விடுமுறை இருக்கிறதே என்று படம் பார்க்கலாம் என்று முடிவு எடுத்தேன்.
பலமுறை சொல்லியிருந்தாலும் இன்னுமொரு முறை சொல்லிவிடுகிறேன். என் கல்லூரியில் நிறைய மலையாளிகள். சமீப காலத்தில் எல்லோரும் ஏகமனதாய் பாராட்டிய ஒரே படம் த்ருஷ்யம். இந்தப்படத்தை எப்படியும் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டேன். இணையத்தில் இதன் அலை வேறு பெரிதாய் இருந்தது. இப்போதே காண முடிந்தது. இப்படத்தை தமிழில் கமலஹாசன் நடிப்பதாய் செய்தியும் வந்தது. அது சார்ந்து பின் சொல்கிறேன்.
மலையாள கலை இலக்கியத்தினுள் நீண்டதொரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசையாய் இருக்கிறது. வாசித்த இரண்டு நாவல்கள் பழகும் மனிதர்கள் பார்த்திருக்கும் மூன்றே திரைப்படங்கள் எல்லாமே அழகியலின் அம்சமாய் இருக்கிறது. தி.ஜானகிராமனை அழகியலின் உச்சம் என்று கொண்டாடினேன். நிலவியலின் கதை நிகழும் சம்பவத்தை அழகாய் காண்பிக்கும் அவரது மொழித்திறன் அநாயாசமானது. மலையாளம் இதை ஒத்தே இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் நுண்மைகளை பெரிதாக்கி காட்டுகின்றனர். அப்படியொரு படமாக தான் த்ருஷ்யத்தைக் காண்கிறேன்.
த்ருஷ்யம் படத்தின் இடையில் ஒரு வசனம் வருகிறது. அது தான் படத்தையே முழுதாக ஓட்டுகிறது. கலை செய்ய வேண்டிய விஷயமும் அது தான். என்ன எனில் காட்சியை பார்வையாளனிடம் வைக்கிறோம் எனில் அக்காட்சி செய்ய வேண்டிய முதல் வேலை பார்வையாளனை நம்ப வைப்பது. இதையே கதையாக்கியிருக்கிறார் இயக்குனர்.
படம் மிக நீளமானது. அதில் முதல் ஒரு மணி நேரம் தேவையா என்பதே என்னுள் தோன்றிய முதல் கேள்வி. இரண்டே முக்கால் மணி நேர படத்தில் முதல் ஒரு மணி நேரம் கதை இல்லாமலே செல்கிறது. ஒரு மணி நேரம் கடந்த உடன் ஒரு பத்து நிமிடம் படத்தின் முக்கிய காட்சி. உடனே இடைவேளை. இடைவேளைக்கு பின் செல்வது நம் நாட்டின் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தான்.
நான்காம் வரை படித்த ஜார்ஜ் குட்டி. அவனுக்கு பத்தாம் வரை படித்த மனைவி. இரு குழந்தைகள். ஜார்ஜ் குட்டியின் பாத்திரம் படத்தினூடே பலவாறாக மாறுகிறது. இது அக்கதாபாத்திரத்தினை மட்டுமே மையப்படுத்தும் படமோ என்றும் அநேக நேரங்களில் தோன்றுகிறது. ஒரு நடுத்தர குடும்பஸ்தனின் குறியீடு இந்த ஜார்ஜ். அவனுடைய கஞ்சத்தனம், மனைவியின் மேல் இருக்கும் காதல், எல்லா நுண்ணுணர்வுகளும் மேலெழுந்தவாறு இருந்தும் பணியே முதன்மையானது என்று இருக்கும் நடுத்தர வர்க்கத் தன்மை, படிக்கவில்லையெனினும் ஏதேனும் ஒரு வகையில் தன்னை அறிவாளியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம், அனுபவமே அறிவாக இருக்கும் ஒரு குணம், சட்டத்தை எல்லா வகையிலும் பின்பற்ற வேண்டும் என்னும் கொள்கை என்று அசலான நடுத்தர குடும்பத்தை காட்சியாக்கியிருக்கிறார் இயக்குனர். இன்னமும் இவரைப் பற்றி முடியவில்லை. மீண்டும் இவரைப் பற்றி ஓரிரு பத்திகள் கடந்து வருகிறேன்.
நடுத்தர குடும்பத்து மனைவியின் எண்ணங்கள் எப்படி இருக்கும் ? இயல்பாகவே சமூகத்தின் மேல்தட்டு மனிதர்களிடம் தாங்களும் நிகரானவர் என்பதை தக்க வைத்துக் கொள்ள போராடும் ஒவ்வொரு நடுத்தர வர்க்கத்து மனைவியின் குணத்தை இக்கதாபாத்திரத்தில் காண முடிகிறது. குடும்பத் தலைவி என்னும் விதத்தில் சில முடிவுகளை எடுக்க நினைத்து அந்தஸ்தை நிலைக்க வைக்க போராடும் தன்மை என்று முதல் ஒரு மணி நேரம் குடும்பவியல் நாவலாக செல்கிறது.
இந்த ஒரு மணி நேரத்தில் அலுப்பூட்டக் கூடிய நிறைய விஷயங்களை இயக்குனர் செய்திருக்கிறார். உதாரணம் கேமிரா. ஒரு இடத்தை காண்பிக்கிறார். உதாரணம் படத்தில் விஸ்வரூபம் படத்தின் போஸ்டர் காண்பிக்கப்படுகிறது. அதிலிருந்து கேமிரா பின்னோக்கி நகர்ந்து காட்சி நிகழும் இடத்தில் சென்று நிற்கிறது. படத்தின் ஆரம்ப காட்சியை கேளுங்கள். பேருந்தில் நிலையாக கேமிரா நிற்கிறது. கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டே வருகிறார். முன் சீட்டில் அமர்ந்திருப்பவர் ஐந்து நிமிடங்களுக்கு பின் இறங்குகிறார். அவருடனேயே கேமிரா மேனும் இறங்கி செல்கிறார். இதே போல் முதல் ஒரு மணி நேரத்தில் ஏகப்பட்ட முறை வருகிறது. முதல் முறை பார்க்கும் போது இருக்கும் சுவாரஸ்யம் தொடர்ந்து காண்பிக்கும் போது அலுப்பாகிவிடுகிறது.
இதைத் தவிர முதல் ஒரு மணி நேரத்தில் வரும் வசனங்கள். ஒவ்வொரு உணர்வுகளுக்கும் விளக்கம் கொடுத்துக் கொண்டே செல்கிறார். அது மட்டுமின்றி முதல் ஒரு மணி நேரம் காட்சி ரீதியாக படம் மிக மிக மெதுவாக செல்கிறது. முழுக்க வசனங்களில் நகர்கிறது. மேலும் நடுத்தர வர்க்கம் தேவை எனக் கருதும் எல்லா ஆடம்பரங்களையும் முதல் ஒரு மணி நேரத்தில் சொற்பொழிவைப் போல வசனங்களாக மோகன்லால் பொழிகிறார்.
இதற்கு மேல் இரண்டாம் பகுதிக்கு வருவோம். மூத்த மகள் பல பள்ளி கல்லூரிகளிலிருந்து கலந்து கொள்ளும் மாநில கேம்ப் ஒன்றிற்கு செல்கிறாள். அங்கு ஐ.ஜியின் மகன் பெண்களிடம் முறைகேடாக நடந்து கொள்கிறான். அதை அங்கு இருக்கும் வாத்தியார்கள் கண்டிக்கிறார்கள். அப்போது ஜார்ஜின் மகள் குளிப்பதை வீடியோ செய்துவிடுகிறான். அதை வைத்து மிரட்டி காமுற நினைக்கிறான். அம்மா அதை பார்த்து அங்கே களேபரங்கள் நிகழ்கின்றன. விளைவு ஐ.ஜி மகன் இறக்கிறான். புதைத்துவிடுகிறார்கள்.
இந்த இரண்டாம்பாதி முழுக்க இரு குடும்பங்களின் அதிகார சண்டை. ஆம். ஐ.ஜி ஒரு பெண். அவள் தன் மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்திருக்கிறாள். தன் மகனை எப்படியேனும் அடைய வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். சில தடயங்களின் மூலம் ஜார்ஜினை சீக்கிரமே அடைகிறார்கள். ஜார்ஜிற்கு தன் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். இந்த இரண்டிற்கும் இடையில் இருப்பது போலீஸ் என்னும் அதிகாரம் தான். இந்த அதிகாரமும் படிப்பறிவில்லாத அனுபவ அறிவே கொண்ட சாமான்யனும் தத்தமது குடும்பங்களுக்காக இண்டலெக்சுவலாக மோதுகிறார்கள். எடுக்கப்பட்ட விதம் சிந்திக்க வைக்கும் அளவு இருக்கிறது.
எல்லா காட்சிகளையும் நம்மால் யூகிக்க முடியும். இருந்தும் ஒரு திகிலை இயக்கத்தில் கொடுத்திருக்கிறார். முதல் பாதியில் தெரியும் சலிப்பு இரண்டாம் பாதியில் கிஞ்சித்தும் இல்லை. இரண்டாம் பாதி முடியும் போதே முதல் ஒரு மணி நேரத்தின் அருமை அழகாக புரியும். இருந்தாலும் கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம் என்னும் ஏக்கம் இருக்கத் தான் செய்கிறது.
படத்தில் பிடித்த நடிகர்கள் எனில் மோகன்லாலும் ஐ.ஜி கீதா பிரபாகராக நடித்திருக்கும் ஆஷா சரத்தும் தான். மோகன்லால் முழுக்க ஒரு சினிமா பைத்தியம். முதல் பாதி முழுக்க அறிதலாகவும் இரண்டாம் பாதி முழுக்க அறிதலின் செயலாகவும் செய்திருப்பது பட கட்டமைப்பின் உச்சம். இரண்டாம் பாதியில் முழுக்க உணர்வுகளை கட்டுப்படுத்தி மோகன்லால் போடும் ப்ளான்கள் எல்லாமே திகிலூட்டும் அம்சத்தை கொஞ்சமும் பிசகாமல் கொடுக்கிறது திரைப்படம். ஆஷா சரத்தை பிடித்தமைக்கான காரணம் அம்மா போலீஸ் இரண்டும் இணைந்த வஞ்சத்தை ஒவ்வொரு காட்சியிலும் காட்டியிருப்பது ரசிக்கும் அளவு இருக்கிறது. மனித மனத்தில் இருக்கும் வஞ்சத்தின் ஆழம் எவ்வளவு என்பதை சஹாதேவன் என்னும் பாத்திரத்தில் காட்டியிருக்கிறார்.
இரண்டாம் பாதி முழுக்க பயத்தின் காட்சியமைப்புகள். பயமே நம் அகம் என்பதை நிறுவியிருக்கிறார். ஒரு முழுக்கதையை கண்ட ஆசுவாசத்தை நிச்சயம் இப்படம் கொடுக்கும். A damn good entertainer!!!
கமலஹாசன்
இதை கமலஹாசன் நடிக்கிறார் என்பதை கேட்டவுடன் முதலில் சந்தோஷமே கொண்டேன். மலையாளத்தில் வந்த ஒரு படம் இந்தியா முழுக்க பிரபாலமாகியிருக்கிறது எனில் கமலின் நடிப்பில் இன்னமும் நன்றாக இருக்கும் என்னும் குருட்டு நம்பிக்கை. இப்போது படம் முடிந்தவுடன் ஞானி ஓ பக்கங்களில் உன்னைப் போல் ஒருவன் படம் சார்ந்து எழுதியிருந்தது தான் நினைவிற்கு வருகிறது. நஸ்ருதீன் ஷா நடித்து கதையை மையப்படுத்திய படம் கமல் நடித்த ஒரே காரணத்தினால் கமல் கோட்பாட்டு மையப்படமாகிவிட்டது என சொல்லியிருந்தார். அதற்கு சரியான நடிகர் டெல்லி கணேஷ் என்றும் சொல்லியிருந்தார். நினைத்துப் பார்த்தால் அக்கதாபாத்திரத்திற்கு அதுவே எனக்கு சரியெனப் பட்டது. அதன்படியே இப்படம் கமலுக்கு ஏற்றது அல்ல என்றே தோன்றுகிறது.
சில கலைஞர்களின் ரிஷிமூலம்
சுஜாதா விருதுகளில் சிறந்த நாவலுக்கான விருதைப் பெற்ற சி.மோகனின் "விந்தைக் கலைஞனின் உருவச்சித்திரம்" நாவல் சார்ந்த "சில கலைஞர்களின் ரிஷிமூலம்" என்னும் கட்டுரை மலைகள் இதழில் வெளி வந்திருக்கிறது.
கட்டுரைக்கான லிங்க் : http://malaigal.com/?p=4899.
ஒரு பகுதி பல விகுதி
கடந்த
சில நாட்களாக நகுலனின் பித்தனாக இருக்கிறேன். கனவில் கூட வருகிறார். அங்கேயும் வார்த்தைகள்.
வார்த்தைகளைக் கொண்டாடி பயந்து புறத்தள்ளி புறந்தள்ளப்பட்ட ஒருவனால் அதன் துணை கொண்டே
சஞ்சரிக்க முடியுமெனில் நகுலன் எழுத்துலகில் தான். வார்த்தை ஒரு இசை. நம்மைப் போன்றவர்களால் சம்பாஷிக்க மட்டுமே முடியும்.
நகுலனின் புனைவெழுத்தில் தேடல் கொண்டு வாசித்தால் எதுவுமே கிடைக்காது. பித்தத்தை தெளிவாக்க
முயற்சிக்காமல் அதே பித்தத்தை கொண்டாடுகிறார்.
இந்த
கொண்டாட்டத்தை ஒரு கலையின் மூலம் வெளிக்காட்ட நினைக்கிறார். அதற்கு அவர் எடுத்துக்
கொள்ளும் களம் தான் நாவல். அதில் ஒன்று தான் அவருடைய ஆறாவது நாவல் நாய்கள்.
பொதுவாக
அவருடைய நாவலில் நாயகன் எழுதிய நாவலின் அனுபவங்களை நாவலாக்குவார். இந்த நாவலில் மாறாக
நாவல் எழுதுவதையே நாவலாக்குகிறார். ஒரு நாவல் எழுதுவது சாதாரண விஷயமல்ல. அதற்கான ஒரு
நிலை இருக்க வேண்டும். எழுத நினைக்கும் கருவில் பித்தனாய் இருக்க வேண்டும். அந்த பித்தனிலையிலிருந்து
வழுவக் கூடாது. அப்படி சென்ற பிறகும் எழுதலாம். என்ன நாவலில் உயிர் இருக்காது!
கிட்டதட்ட
இது தான் நாய்கள் நாவலின் கதை. நாய் என்பதை அவர் உருவகப்படுத்துகிறார். எடுத்தவுடனேயே
அதை செய்வதை விட சுய வாழ்க்கையின் பித்தனிலைகளை எடுத்து அதிலிருந்து நாய்களை உருவகம்
செய்கிறார். அது தான் இந்த பகுதி விகுதி சமாச்சாரம். பகுதி விகுதிகளை நான் பன்னிரெண்டாம்
வகுப்பு வரை படித்து வந்தேன். எல்லா வார்த்தைகளும் பகுதி விகுதிகளை கொண்டிருக்கிறது.
விகுதி நம்மிடம் ஒரு அர்த்தத்தை சேர்க்கிறது, எதன் அர்த்தத்தை எனில் அந்த பகுதி சொல்ல
வேண்டிய அர்த்தத்தை அல்லது கொண்டிருக்கும் அர்த்தத்தை. நகுலன்(நாயகனின் பெயர்களுள்
ஒன்று) என்ன சொல்கிறார் எனில் நான் இந்த விகுதியை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் என்று.
உதாரணமாக
ஒரு மனிதரைக் காண்கிறீர்கள். இது கூட நாவலில் வருகிறது. நாயகன் சுப்ரமணிய பாரதி என
நினைத்து தேரையிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அவன் கேள்வி ஏன் பாரதியாக இருக்கக் கூடாது
என்பது தான். பௌதிக உடல் என்பது ஒரு குறியீடு. அதற்கான பகுதி அவரவர்களிடம் உள்ளது.
பார்க்கும் போது நம்மிடமிருந்து என்ன தோன்றுகிறது என்பது விகுதி. இரண்டும் கலக்கும்
போது தான் எதிராளியின் சுயத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். பகுதியை விட்டுவிட்டால்
? அது நமக்கேயான அர்த்தமற்ற உலகம். (அர்த்தமில்லை என்பதும் ஒரு அர்த்தம் தான் - நகுலன்)
இப்படித்தான்
அவர் நாய்களை பார்க்கிறார். அவரின் வரிகளை அப்படியே தருகிறேன்
“அகஸ்மாத்தாக
அந்த படிகள் ஒன்றில் ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன் - கறுப்பும் சாம்பலும் விரவிய நிரம் – நல்ல மிருது
– சதையின் மினுமினுப்பு – பார்க்க மிருதுவாக அழகாக இருந்தது - அதன் வயிறு மூச்சுவிடுவதால் சிறிது சிறிதாக மேலும் கீழுமாக சலித்துக் கொண்டிருந்தது
- எனக்கு அது ஒரு நாயாகத் தோன்றவில்லை
- ஒரு வசீகரமான மானாகத் தான் தோன்றியது. அப்படியானால்
மானும் நாயும் ஒன்றேதானா ? – எந்த ஒரு வஸ்துவும் நமக்கு விகுதியாகத் தான் தோன்றுகிறது.
ஆனால் எந்த ஒன்றும் விகுதியென்றால் கூட அது விகுதியாக தனித்தியங்குவதில்லை – ஒவ்வொரு
விகுதியும் பகுதியின் அம்சம் என்று மாத்திரம் -
அப்படியானால் பகுதி என்பது தான் என்ன ?”
அந்த
உண்மையை அவர் அடைய விரும்புகிறார். அவரை தன்னையே நாயாக பாவிக்க நினைக்கிறார். மனிதம்
என்னும் விஷயம் அதற்கு தடையாய் இருக்கிறது. அதனால் தான் நாவல் முழுக்க நவீனனை ஏன் நாயென்று
சொல்லக் கூடாது என்று கேட்கிறார். எல்லா நாவல்களிலும் வருவதை போல கதைசொல்லியை நான்
நகுலன் நவீனன் யாராக வேண்டுமெனினும் எடுத்துக் கொள்ளலாம். அதிலும் ஒரு குறிப்பை அவர்
விட்டு செல்கிறார். நவீனன் ஒரு எழுத்தாளன். நகுலன் ஒரு மனிதனின் புனைபெயர்.
சரி
நாவலுக்கு வருவோம். ஒரு நாவலில் வார்த்தைகள் பத்திகள் அவை சரியாக பகுக்கப்பட்டு இருக்க
வேண்டும் என்றிருக்கிறது. நகுலனுக்கு அதில் தான் சந்தேகமே வருகிறது. நாய்களை பற்றி
எழுத நினைக்கும் நாயகன் நண்பர்களை சந்தித்து சரக்கடித்து அவ்வப்போது இலக்கியம் தத்துவம்
என்று பேசியதை நாவலாக எழுதுகிறான். எழுதி கொண்டிருக்கிறான். அதற்கு அவன் சொல்லும் காரணம்
எழுதாத எல்லாவற்றையும் எழுத ஆசைப்படுகிறேன் என்கிறான். முடிவில்லாத ஒரு நாவல் என்கிறான்.
மேலே
இருக்கும் பெரும்பத்தியில் இருக்கும் வாக்கிய அமைப்புகளை கவனியுங்கள். சிறுவயதில் ஆங்கில
பாடத்தில் நாம் படித்திருக்கும் hints development என்னும் பதத்தை ஒற்றி இதன் அமைப்பு
தெரியும். நகுலன் உருவாக்க முயல்வது ஒரு இடைவெளி. மௌனம். மனதினுள்ளே உருவாகும் பல அரவத்திலிருந்து
விடுபெற அவர் செய்யும் பிதற்றல்கள். எல்லாவற்றையும் கொட்டிவிட்டால் ஒரு மௌனம் கிடைக்கும்.
அந்த மௌனத்தில் பகுதியை அறியலாமல்லவா ?
அதனால்
அவன் எழுதும் நாவலில் நாயகன் ஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறான் இது முழுக்க முழுக்க வாசகர்களுக்காக
எழுதப்படும் நாவல். இதைத் தாண்டி எதையும் இந்நாவல் செய்யப் போவதில்லை. அதையும் சரியே
வாசகனுக்காக தான் என்பது போல முடிக்கவும் செய்கிறார்.
இந்நாவல்
நிறைய புரியா விஷயங்களை கொண்டிருக்கின்றன. அப்போது ஜான் துரைசாமி என்னும் பாத்திரம்
மூலம் ஒரு விளக்கத்தை கொடுக்கிறார். சில விஷயங்கள் புரிந்தாலும் புரியாமல் இருப்பதே
மேல் என்று தோன்றும் அவை தான் அநேக விஷயங்களுக்கும் தேவைப்படுகின்றன என்று சொல்கிறார்.
தத்துவம் தரிசனம் எல்லாம் ரகசியம். அந்த ரகசியத்தை நான் அலறல்களினூடே தேடுகிறேன் என்பதை
நாவலில் செயலாய் செய்திருக்கிறான் நாயகன்.
நாவல்
சார்ந்து நாவலின் ஆரம்ப பக்கங்களில் நாயகன் புரியும் தர்க்கங்கள் நாவலுக்கு வெளியேயும்
சென்று வருகின்றன. கதை ஒரு பொம்மலாட்டம் இல்லை என்கிறார். எல்லா கதாபாத்திரங்களுமே
அதற்கான உலகில் சஞ்சரிப்பவை. நம்மால் அதை கட்டுப்படுத்த முடியாது என்கிறார். அதே ஒரு
இடத்தில் பேசும் போது பேச்சின் வாக்கில் இப்படி சொல்கிறார் பாருங்கள்
“நாம்
இருவரும் யார் ?
பேனா
நுனியில் பிறந்து பேப்பர்மீது சலிக்கும் உருவங்கள்
அப்படியென்றால்
?
நாம்
ஒருவருமே இல்லை. நமக்கு உருவமோ, உயிரோ, உணர்ச்சிகளோ, உடலோ ஒன்றும் கிடையாது”
நாவல்
சார்ந்த தர்க்கங்களை நாயகன் எழுப்பும் அதே தருணத்தில் நாவல் ஒரு அனுபவம் சார்ந்த விஷயம்
என்பதை மறுப்பதில்லை. மீசையை முறுக்கினாலெல்லாம் நாவல் கைவந்துவிடாது என்று சொல்கிறார்.
தர்க்கங்களிடம் தானே தோற்றுதான் நாவலில் இருக்கும் அமைப்பில் நிறைய இடைவெளியை வைத்திருக்கிறாரோ
என்று சந்தேகம் வருகிறது.
நகுலன்
சார்ந்து எனக்கு ஒரு சந்தேகம் இருந்தே வந்தது. அவர் சுயம் சார்ந்து தனி மனிதனின் மனத்தில்
அகழ்வாரய்ச்சி செய்கிறாரே சமகால அரசியல் பிரக்ஞைகள் உண்டா என. அவருக்கு உண்டு என்பதை
நாவலில் காட்டியிருக்கிறார். அதுவும் எழுத்து மற்றும் சுயம் சார்ந்த பயமும் இணைந்து
அவருக்கு வேறு விதமான வாழ்வை அளித்திருக்கிறது. வேறு விதமான அரசியல் நிலைப்பாட்டை அளித்திருக்கிறது.
வாக்கியம்
பத்தி அமைப்பு எல்லாவற்றையும் உடைக்கிறார். அவை வார்த்தைகள் ஆகும் போது அதை கொண்டடுகிறார்.
உலாவுகிறார். நண்பா என்று தான் எப்போதும் நான் பிறரை விளிப்பது வழக்கம். சிலர் அதை
தவறாக எண்ணிக் என்னிடம் சண்டைக்கு வந்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய கெட்ட வார்த்தையா
அது ? வயது சார்ந்ததா அது ? எது எப்படி வேண்டுமென்றாலும் இருந்துவிட்டு போகட்டும் அப்படி
திட்டியவர்களை விட வயதான ஒருவன் என்னை நண்பா என்றழைக்கிறார். எனக்காக நாவல் எழுதியிருக்கிறார்.
எப்படி நான் அவரை வாசிக்காமல் இருப்பது.
நகுலனின்
எழுத்துகள் அர்த்தமற்ற கதையம்சம் அற்ற கட்டுச் சுழல். சிக்கிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
Seduction by words. நகுலன் எனக்கான விகுதி. பகுதி எதுவாக இருந்தால் தான் என்ன!
மனதின் பைத்திய நிழல்
வாசிப்பில்
செய்யும் பெரும் சூழ்ச்சி இந்த நான் என்னும் பதம். இப்போது வாசிப்பதை போலவே ஓராண்டு
முன்பு எனக்கு கிடைத்த விடுமுறையில் தொடர்ந்து வாசித்தேன். அப்போது தான் இந்த நான்
என்னும் விஷயத்தில் ஈர்க்கப்பட்டேன். குறிப்பாக க.நா.சுப்ரமண்யம். இந்த தன்மையை அந்நாட்களுக்கு
பல நாள் பின்பு வாசிப்பில் அதிசயித்து போன எழுத்து நகுலனுடையது. கட்டற்ற எழுத்தின்
பிரவாகம் நகுலனுடையது. அவரின் எழுத்து புரிதலுக்கு அப்பால் இருக்கிறது. உண்மைதான்.
ஆனால் வசீகரமாய் இருக்கிறது. அவரை அவரே உடைத்து போட்டு எழுதுகிறார். அவர் எழுதிய முதல்
நாவலை இப்போது தான் வாசித்தேன். நகுலனின் முதல் நாவல் நிழல்கள்.
இது
மிகச்சிரிய நாவல். ஆனால் தத்துவார்த்த நாவல். நகுலனின் தன்மையை இந்நாவலின் முன்னுரையிலேயே
உணர்ந்து கொள்ள முடியும். இந்நாவலுக்கு சுந்தர ராமசாமியிடம் முன்னுரை கேட்டிருக்கிறார்
போலும். அதற்கு நகுலனின் முன்னுரையில் சொல்லும் வார்த்தைகளை பாருங்கள்
“மிகக்
குறைந்த பக்கங்களில் ஒரு நாவல்; அதற்கு ஒரு முன்னுரை; அந்த முன்னுரைக்கு ஒரு முன்னுரை
– ஏன் இந்த சேஷ்டை ?”
என்கிறார்.
எள்ளல் தன்மையை நன்கு உணர முடியும். இந்த எள்ளல் தன்மை ஒரு எக்ஸிஸ்டென்ஷியல் வாதியிடம்
இருக்க வேண்டும் என்பது உண்மை. தனிமனிதத்துவாதி வாழ்க்கையையே எள்ளலாக பார்ப்பவன். எந்த
நோக்குமற்ற நேரத்தில் எள்ளலை உணர முடியும். எந்த வேலையுமே இல்லாத நேரத்தில் தான் கடந்த
காலத்தில் செய்த சிறுபிள்ளைதனத்தை நினைத்து சிரிப்போம். அர்த்தமற்ற தருணங்கள். வன்மங்களினிடையே
கூட இந்த தன்மையை காண முடியும். ஒருவர் மீது அதிகாரம் கொண்டு அவரை அடிக்க கூடாது என்று
எண்ணுகிறேன். ஒருகட்டத்தில் என்னையும் மீறி வெறி கொண்டு ஒருவரை அடித்துவிடுகிறேன்.
வெறி தனிவதற்குள்ளேயே என் ஆழ்மனம் இந்த செயலை விமர்சனம் செய்யும். உள்ளுக்குள்ளே நமுட்டு
சிரிப்பு சிரித்துக் கொண்டிருப்பேன். இந்த தன்மை எனக்குமட்டுமானதல்ல. உலகமயமானதும்
கூட. இந்த எல்லாவித எள்ளலையும் தன்னுடைய நாவலில் வைத்திருக்கிறார் நகுலன்.
மௌனியின் மறக்க இயலா வரியான எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் என்பது ஒரு தரிசனம். பதில் தேட நினையாத
ஒரு கேள்வி. இந்த கேள்வியை அறிதலே ஒரு தரிசன நிலை. இதை அறியும் தருணத்தை கதையாக்க முனைந்திருக்கிறார்.
அந்த முயற்சி தான் நிழல்கள் நாவல்.
நினைவுப்பாதை நாவலைப் போல இதுவும் நாவல் சார்ந்த நாவலாக ஆரம்பிக்கிறது. நிழல்கள் என்னும் நாவலை எழுதுகிறான்
நாயகன். இழந்த சுசீலாவை நினைத்து எழுதுகிறான். அவளை நினைத்தே எல்லாவற்றையும் பார்க்கிறான்.
எல்லாமே அதன் சாசுவதத்தை இழந்து வேறொன்றாய் தெரிகிறது. அதை நினைத்து ஆச்சர்யமுறுகிறான்.
இது
முடிந்தவுடனே அந்த நூல் சார்ந்து விவாதங்கள் வருகிறது. அதில் அபிப்ராயம் சார்ந்து பேசுகிறார்.
அவர் சொல்வதாவது அவனளவில் சரியென்றால் சரி தான் என்கிறார். இதை இந்நாவலுக்குள்ளேயே
சொல்கிறார். அதை சொல்வதற்கு நகுலனின் எழுத்து பாணியை சொல்ல வேண்டும். நகுலன் உருவாக்கும்
கதையின் அமைப்பு முழு உருவத்தையும் காட்டிவிட்டு தான் செல்கிறது. ஒரு கதை உருவாகிறது.
அந்த கதையை அவரே கட்டுடைக்கிறார். பின் அந்த கதை ஒன்றுமேயில்லை என்றையும் அவர் சொல்லி
செல்கிறார். அதை சொல்லும் இடம் தான் நகுலன் எழுத்தின் உச்சம். An orgasmic feel.
எதுவுமே உண்மை இல்லடா நான் என்பதே உண்மை என்பதில் நின்றுவிடுவார். இதை நிறுவுவதற்கு தான்
அவர் செல்லும் பித்தனிலை பயணங்கள். அதற்குள்ளே தன்னாலான தத்துவங்களை சொல்லப் பார்க்கிறார்.
அப்படி
ஒன்று தான் நிழல்கள். நாவலில் நாயகனுக்கு வரும் சந்தேகம் எல்லோரும் ஏதோ ஒன்றின் நிழலாக
இருப்பார்களோ என்று. ஒரு நாவல் அந்த நாவல் சார்ந்த விமர்சனம் என்று செல்லும் போது நம்மையே
அறியாமல் தடம் மாறி கதைகளுக்குள் இழுத்து செல்கிறார். நாயகனின் கதையை. இந்த எல்லா கதைகளுமே
நோக்கற்ற ஒரு மனிதனின் பயணங்கள். அங்கு அவன் கொள்ளும் அவமானங்கள், யோசிக்காமல் செய்யும்
திருட்டுகள், செயல்கள், மீண்டும் அங்கிருந்து புறந்தள்ளுதல் என்று நீளும் போது அவனுக்கு
திருமணம் ஆகிறது.
சில
விஷயங்கள் மரபு வழியாக வருமல்லவா அப்படி கலாச்சாரம் சார்ந்த விஷயங்களும் விழுமியங்களும் நம்மை பின்
தொடர்ந்து கொண்டு தானிருக்கின்றன. அதே விஷயங்கள் அவனுள்ளும் நிகழும் போது பின் தொடர்ந்தது
தன்னுடைய நிழல் தான் என்பதை உணர்கிறான். அதுவே ஒரு தரிசனம். அத்தரிசனத்தை நாயகன் உணரும்
போது நாவலின் மொழியே மாறுகிறது.
இவ்வளவு
நேரம் பதிவில் நாயகன் நாயகன் என்று சொல்லியிருந்தேன். அங்கு தான் நகுலன் தன் சித்துவிளையாட்டையே
நிகழ்த்துகிறார். சாரதி, நான், நவீனன் எல்லமே நாயகன் தான். எப்படி கதைசொல்லியை மாற்றுகிறார்
என்னும் சூட்சுமத்தை யோசித்தால் கிஞ்சித்தும் அகப்படமாட்டேன் என்கிறது. நாவலுக்குள்ளேயே
ஒரு நாவல் செய்ய வேண்டியது என்ன என்பதையும் சொல்கிறார். குறுநாவல் என்பதால் எல்லாவற்றையும் சொல்ல மனம்
வரமாட்டேன் என்கிறது.
நாவலின்
ஆரம்பத்தில் சுசீலா என்னும் பெயரை கண்டவுடன் சின்னதொரு சிரிப்பு வந்தது. நாவலில் சுசீலாவை
யாரென நகுலனே சொல்கிறார்
“அடிக்கடி
சுசீலா என்று ஒருத்தியைப் பற்றி எழுதுகிறாயே அது யார் ?”
“என்
மனதின் பைத்திய நிழல்”
காரணமில்லாமல் கமழும் வெறுப்பு
இந்த விடுமுறையில்
நான் சிறுகதைகளை வாசிக்கவேயில்லை. அதற்கான காரணம் நிறைய நேரம் கிடைக்கும் தருணங்களிலெல்லாம்
நான் நாவல்களுக்கே அந்த நேரத்தை செலவு செய்து கொண்டிருக்கிறேன். இந்நிலையில் வீட்டிற்கு
சொந்தக்கரர்கள் வந்திருந்ததாலும் அவர்களோடு வெளியே செல்ல வேண்டிய வேலை இருந்ததாலும்
சிறுகதைகளை வாசிக்கலாம் என்னும் முடிவை எடுத்திருந்தேன். அது தான் சிறிய களம். அப்படி
எடுத்த நூலே எஸ்.ராமகிருஷ்ணனின் சமீபத்திய தொகுப்பான காந்தியோடு பேசுவேன்.
எஸ்.ராமகிருஷ்ணனின்
எழுத்துலகம் சார்ந்த நல்லதொரு அவதானிப்பை அவரே கதை முகாமில் சொல்லியிருந்தார். அதை
அறிந்தவுடன், அஃதாவது அவரது எழுத்தின் சூட்சுமத்தை அறிந்தவுடன் வாசித்தால் நன்றாக இருக்குமா
என்னும் சந்தேகம் என்னுள் இருந்தே வந்தது. ஆனாலும் எனக்கு ஒரு ஆச்சர்யத்தையே இந்த தொகுப்பு
அளித்தது.
அவர் சொன்ன சூட்சுமமானது
ஒரு சிறுகதையின் ஆரம்பம் வாசித்த உடனேயே முழுக்கதையையும் வாசிக்க வேண்டும் என்று வாசகனுக்கு
தோன்ற வேண்டும் என்று சொல்லியிருந்தார். இத்தொகுப்பில் இருக்கும் பதிமூன்று கதைகளுக்கும்
இதே நிலையை பார்க்கிறேன். எல்லா கதைகளுமே ஒரே கட்டமைப்பு. அந்த நிலையான கட்டமைப்பினுள்
விதவிதமான கதைகளை பொருத்தி கொடுத்திருக்கிறார். இந்த ஒற்றுமை மட்டுமின்றி எல்லா கதைகளுக்கும்
இன்னுமொரு ஒற்றுமையும் இருக்கிறது. முதன்மையிலேயே எல்லா கதைகளையும் சொல்கிறார். இப்படி
பல ஒற்றுமைகளைக் கண்டாலும் எல்லா கதைகளும் சில பெரும் பெரும் விஷயங்களை தனக்கே உரித்தாக கொண்டிருக்கிறது.
இந்த தொகுப்பின்
முதல் கதை காந்தியோடு பேசுவேன். இந்த கதையை வாசித்த உடனேயே நான் உலகளாவிய பிரமிப்பில்
மூழ்கிப் போனேன். ஒரு கருவை எடுத்தாள்வது என்பது எழுத்தாளனுக்கு இருக்கும் பெரிய சவால்.
அவன் மனதில் இருக்கும் கருவை உலகமயமாக்க வேண்டும். அது நியாயமாக இருப்பின் அக்கதை இலக்கியம்
என்னும் அங்கத்தை பெரும் என்று கதை முகாமில் சொல்லியிருந்தார். காந்தியோடு பேசுவேன்
இந்தியனாக இருக்கும் எல்லோரிடமும் இருக்கும் பலவீனத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் நிர்வாணமாக்குகிறது.
ஒரு பெரும் புகழை ஒருவர் நாடு தழுவி கொண்டிருக்கிறார் எனில் அவரை இகழ்ந்து பேச வேண்டும்
என்னும் வெறுப்பு எல்லோர் மனதிலும் கனன்று கொண்டே இருக்கிறது. இந்திய வெறுப்பிற்கான
காரணங்கள் எளிதில் நம்மிடம் சிக்கிக் கொள்கிறது. அவரை போற்றுவோரிடம் சாமான்ய காரணங்களை
சொல்லி அவரை புறந்தள்ள தயாராய் நிற்கிறோம். இந்த தன்மை அதிகமாக இருப்பது காந்தி சார்ந்து
தான். இந்த கதையில் இகழப்படும் மனங்களுக்கு
நானும் துணைக்கூலி தான். என்னையும் சேர்த்து என் கல்லூரியில் என்னுடன் படிக்கும் மாணவர்களிலேயே
காந்தியை கெட்ட வார்த்தைகளை சொல்லி திட்டுபவர்கள் அநேகம் பேர் உள்ளனர். அவர்களின் காரணங்களை
ஆராயும் போது முக்கால்வாசி காரணங்கள் அவர் வன்முறையை வீரத்தை கையாளாமல் அஹிம்ஸையை கையாண்டு
போரிட்டிருக்கிறார் என்பதே. தமிழ்மரபில் ஊறிப்போன நமக்கு வீரமே பெரும் கொடையாய் மனதளவில்
இருக்கிறது. இக்கதையிலோ அதற்கு காரணம் எல்லோருள்ளும் இருக்கும் பெண்மையின் வீரியம்
தான் காந்தியினுள் பெரும் வேழமாய் மாறியிருக்கிறது என்று நியாயப்படுத்துகிறார். ஏற்றுக்
கொள்ளக் கூடிய வகையில் இந்த கதையை மிக அழகாக எழுதியிருக்கிறார். இச்சைக் கொண்டு தேடல்
மேற்கொள்ளும் மனிதர்களின் மனம் எப்படி இருக்கும் என்பதையும் அந்த அடிமை மனோபாவம் செவ்வியல்
தன்மை கொண்டது என்பதையும் வாசிப்போடு நிறுத்தாமல் உணரவும் வைக்கிறார். இந்த தொகுப்பின்
ஆகச்சிறந்த கதைகளுள் இதுவும் ஒன்று. முதன்மையானதும் கூட.. முழுத்தொகுப்பையும் முடித்தால்
கூட இந்த கதையை மட்டும் என்னால் என்னை விட்டு நீக்க முடியவில்லை.
இத்தொகுப்பில்
நல்ல கதை என்று சிலவற்றை தான் சொல்ல முடிகிறது. நிறைய கதைகள் என்னை ஈர்க்கவில்லை. ஒருவேளை
ஈர்த்த கதையின் தாக்கங்கள் என்னை எங்கோ கொண்டு சென்றதால் கூட பிற கதைகளை ரசிக்க முடியாமல்
இருக்கலாம். இருந்தும் ஒரு விஷயத்தை நான் சொல்லியே ஆக வேண்டும். சில கதைகள் ஆரம்பத்தில்
அலுப்பினை கொடுத்தாலும் கதையினுள்ளே அவர் வைக்கும் nuances நம்மை அப்படியே உள்ளிழுத்துவிடுகிறது.
எனக்கு பிடித்த
இன்னுமொரு கதை அஸ்தபோவில் இருவர். உலக இலக்கியவாதியான டால்ஸ்டாயே இந்த கதையின் நாயகன்.
உலகத்தையே தன் பக்கம் இழுத்து விட்டிருந்த டால்ஸ்டாய் தன்னை பெரிய மேதையாய் நினைத்துக்
கொண்டிருக்கிறார். உலகம் சார்ந்து எழுதியது போதும் என்னும் எண்ணம் கொள்கிறார். அவர்
அடிப்படையில் விவசாயி. விவசாயி என்னும் குணமும் எழுத்தாளன் என்னும் அகமும் எப்படி முரண்படுகிறது
எப்படி அவர் மனம் அவரிடமே தோற்கிறது என்பதை ஒரு விவசாயியுடன் பேசும் போது அறிகிறார்.
ஒவ்வொரு வசனமும் அவ்வளவு அழகானதாய் இருக்கிறது. எழுத்தாளன் தன்னை முதன்மைபடுத்துகிறான்.
தன்னிலிருந்து உலகை காண்கிறான். விவசாயிக்கு அந்நினைப்பு வந்தாலே அவன் மனதில் விவசாயி
இல்லை. விவசாயி பேசும் ஒவ்வொரு விஷயமும் அவரை பரிசீலனை செய்கிறது. எழுத்தாளன் என்னும்
பிம்பம் உடைகிறது. உண்மையில் எழுத்தாளன் சார்ந்து அவர் கொண்டிருக்கும் பிம்பம் நொருங்குவதை
என்னால் ரொம்பவே ரசிக்க முடிகிறது.
பாதியில் முடிந்த
படம் மற்றும் அருவிக்கு தெரியும் ஆகிய கதைகள் பெண்கள் மாயை தன்மை நிரம்பியவர்கள் என்பதை
மிக அழகாக சித்தரிக்கின்றன. பெண்கள் மாயையாக இருக்கவே ஆண்கள் விரும்புகிறார்கள். புதிர்
தன்மை நிறைந்தவர்களாக பெண்கள் இருக்கிறார்கள். புதிரை விடுவிக்க யாரும் விரும்புவதில்லை.
அதே நேரம் புதிர் விடுவிக்கப்படாமலே இருப்பின் எரிச்சலும் அடைகிறார்கள். இந்த தன்மையை
பிசகாமல் இரு கதைகளிலும் சொல்கிறார்.
ஒற்றை முள் என்றொரு
கதை. இறுக்கமான மனிதர்களுக்குள்ளே கனிவான அன்பு ததும்பும் ஒரு அறை இருக்கவே செய்கிறது.
அதை அவர்கள் வெளிக்காட்ட தெரியாமல் தடுமாறுகிறார்கள். இந்த தடுமாற்றத்தை எல்லோரும்
தவறாக எண்ணி இறுக்கமான மனிதர் சிரித்து பேசத் தெரியாதவர் என்று பட்டம் கட்டுடிவிடுகிறோம்.
உண்மையை அறியும் தருணத்தில் வாழ்க்கை வேறொரு தடத்தில் பயணிக்க தொடங்கிவிடுகிறது.
இத்தொகுப்பில்
முதல் எழு கதைகளும் கடைசி கதையும் என்னை ரொம்பவெ ஈர்த்தது. நடுவிலிருக்கும் கதைகள்
என்னை ஈர்க்கவேயில்லை. முன்னுரையில் அவரின் பழைய சிறுகதைகளையும் இதில் சேர்த்திருக்கிறார்
என்றார். ஒருவேளை நடுவிலிருக்கும் கதைகளாக இருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன்
கலை சார்ந்தும் வாழ்வியல் சார்ந்தும் கொண்ட பல்வேறு பயணங்களை இத்தொகுப்பில் இருக்கும் கதைகளினூடாக கண்கூடாக காண முடிகிறது. இத்தொகுப்பிலுள்ள முதல் ஏழு கதைகளுக்காக நிச்சயம்
வாங்கலாம். அந்த ஏழுமே செவ்வியல் தன்மை மிகுந்த புனைவினூடான வாழ்வியல் பதிவுகள்.
பின் குறிப்பு : இவற்றில் சில கதைகள் அவருடைய இணையத்திலேயே வாசிக்க கிடைக்கிறது
அபத்தத்தின் அழகிய ஓவியங்கள்
கீரனூர்
ஜாகீர்ராஜாவின் நூல்களில் மூன்றை கடந்த சென்னை புத்தக திருவிழாவில் வாங்கினேன். அதில்
ஒன்று தான் வாசிக்க வேண்டி இருந்தது. அந்த நூல் தான் மீன்காரத் தெரு. இதன் இரண்டாம்
பாதியான மீன்குகைவாசிகளை முன்னமே வீம்பிற்கென வாசித்திருந்தேன். ஒவ்வொரு நாவலும் தனி
உலகம் என்று நம்புபவன் நான். ஹாரிபாட்டர் வெண்முரசு போன்ற தொடர் நாவல்ளை விட்டுவிடுங்கள்.
இது போல் வரும் போது எனக்கு நாவலுடன் செல்லச் சண்டையிடுவது பிடித்தமான ஒன்று. வாசித்த
பின்பே உணர்ந்தேன் அவர் இரண்டையும் இணைத்து ஒன்றாகவே எழுதியிருக்கலாம் என்று. இரண்டிற்குமான
பிணைப்பை நாவலில் நிலவியலாலும் கதாபாத்திரங்களாலும் நன்கு உணர முடியும். பிரித்து தனித்தனியாக
வெளியிட்டிருந்தாலும் இரண்டும் தனக்கே உண்டான சில அம்சங்களை கதையை கருவை கொண்டிருக்கின்றன.
இந்த
நாவல் ஒரு முக்கிய விஷயத்தை பதிவு செய்கிறது என்றே சொல்ல விழைகிறேன். ஜாதி சார்ந்து
சமீபத்தில் கூட ஒரு நண்பியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னதாவது சாதி இக்காலத்தில்
இருக்கிறதா என்று. சாதி பள்ளிப்பருவத்திலேயே அறியப்படுகிறது. சமகாலத்தில் அது பிள்ளைகளுக்கு
தெரியப்படுத்தாமல் இருந்தால் கூட பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் அது தெரியப்பட்டே வருகிறது.
கல்லூரிகளில் பிற சாதிகளை சார்ந்த முழு விபரங்களும் தெரியவும் செய்கின்றன. இதற்கு அரசாங்கம்
வழிவகுக்கும் ஊக்கத் தொகை ஒரு விதத்தில் காரணம்.
பல்கலைகழக
கலந்தாய்வில் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சான்றிதழ்களில் சாதி
மாறியவர்களையும் நான் நேரில் கண்டிருக்கிறேன். ஜாதி எல்லாமே ஒரு சொகுசான வாழ்க்கையை
அமைத்துக் கொள்ள என்று ஒருக்கணம் தோன்றினாலும் ஏதோ கனன்று கொண்டிருப்பதன் விளைவே என்று
சில நேரங்களில் எண்ண வைக்கிறது. இந்த நாவலில் சொல்லப்படும் பள்ளிக்காலங்களில் அறியப்படும்
சாதியை நான் தனிப்பட்ட முறையிலேயே உணர்ந்திருக்கிறேன்.
என்னுடைய
முதல் நாவலில் பிராமணர்களை எதிர்த்திருப்பதாக சிலர் கூறினர். என் மனதளவில் சொல்ல வேண்டுமெனில்
எனக்குள்ளே இருக்கும் சுயசாதி வெறுப்பை என் எழுத்துகளில் காட்ட முனைகிறேன். இதை சொல்வதன்
காரணம் பள்ளிகளில் நான் நன்றாக படிப்பவன். அப்படி படிக்கும் போது அநேகம் பேர் ஐயருல்ல
அதான் நல்ல படிக்கிறான் என்றனர். படிப்பில் கொஞ்சம் சோடையானேன். அதுவும் என் வீம்பு
தான். கல்லூரிகளில் நான் தமிழில் சரளமாக பேசுபவன் எழுதுபவன் என்று அறிந்து கொள்ளும்
போது ஐயருங்களுக்கே இந்த ஆர்வம் அதிகமாக இருக்கும் என்றனர். என் அடையாளத்தை இதனாலேயே
மறைக்க விரும்புகிறேன். கல்லூரிகளில் சேர்ந்தவுடன் பிற சாதிகளை பற்றி நிறைய தெரிந்து
கொள்ள முடிகிறது. பிணம் தூக்க வரும் போது கூட சாதி சண்டையும் தனி மனித துவேஷங்களும்
கிளம்புவதை முதன் முதலாய் கேட்கும் போது சிரிப்பு ஏற்பட்டாலும் யோசிக்கையில் மனித மனங்களைக்
கண்டு பரிதாபமாய் இருக்கிறது.
இந்த
விஷயங்களை சிறுவயதில், பள்ளிப்பருவத்தில் கேட்கும் போது கேட்கப்படும் நபர் வளரும் தருணத்தில்
இந்த சாதி ரீதியான பேதங்கள் எப்படி முளை விடுகிறது என்பதை மிக அழகாக எழுத்தில் சொல்கிறார்
கீரனூர் ஜாகீர் ராஜா.
இவருடைய
கதைப்பாணி எனக்கு எப்போதுமே புதிது தான். அதற்கான விசேஷ காரணம் இசுலாமிய மதங்களுக்குள்
இருக்கும் சாதிகளை சொல்கிறார். அவர்களுக்குள் சாதிகள் இருக்குமா என்னும் சந்தேகம் எனக்கு
எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் தக்கனி என்னும் வகையினரின் பெயரை
அறிந்திருக்கிறேனே ஒழிய முழுமையாக எதுவும் தெரியாது. தமிழில் இந்த சாதி ரீதியான விஷயங்கள்
பல வால்யூம் நூல்களாக கொண்டு வரலாம். அப்படி இருக்கையில் இசுலாமிய சாதிகளிலும் இதுவெல்லாம்
இருக்குமா என்பதை ஜாகீர்ராஜாவின் நாவல்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வருகின்றன. இதை எழுதும் போது என்ன உணர்வை நான் கொண்டிருக்கிறேனோ, அஃதாவது புதியதை அறியும் புத்துணர்ச்சி அதே
உணர்வை இந்நாவலின் மையத்தில் வைத்திருக்கிறார்.
மீன்காரத்
தெருவில் வசிப்பவர்கள் கீழ்சாதியைப் போல. அவர்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது,
அவர்கள் மேலக்குடி காரர்களை எப்படி பார்க்கிறார்கள், இங்குள்ளவர்களை வைப்பாட்டியாக
வைத்துக் கொள்வதை எப்படி பார்க்கிறார்கள், அந்த சூழலுக்கு பழக்கம் கொள்ளும் மனிதர்களின்
குணம் என்று நாவல் முழுதாய் விரிகிறது. இதை மட்டும் சொல்லாமல் மேலக் குடிகாரர்களிடையே
நிகழும் சாதி வேறுபாடுகளையும் கீழக்குடி காரர்கள் வியப்புடன் அறியும் வண்ணம் நாவலை
அமைத்திருக்கிறார்.
வைப்பாட்டியாக
செல்பவர்களின் மனமும் அவர்களின் ஆசையும் ஏக்கங்களும் எப்படி இருக்கின்றன என்பதை ஆமினா
என்னும் கதாபாத்திரம் கொண்டு எழுதியிருக்கிறார். ஆமினா கொள்ளும் காதலும் அவள் காணும்
புது உலகத்தையும் அங்கிருந்து யதார்த்தம் இருக்கும் தூரத்தையும் மிக அழகாக சொல்லுகிறார்.
அபத்தங்களும்
அங்கே சகஜமாகின்றன. அந்த அபத்தங்களை எப்படியெல்லாம் அணுகுகிறார்கள் என்பதையே மீன்காரத்
தெரு பேசுகிறது. எல்லாம் அந்த தெருவினுக்குளேயே நிகழ்கின்றன. தெருவுக்குள்ளிருந்து
வெளி செல்பவர்களின் வாழ்க்கையும் தெருவினுள் புதிதாய் நுழைபவரின் வாழ்க்கையும் எப்படியெல்லாம்
அனுமானிக்கப்படுகிறது என்று பேசுகிறது இந்நாவல்.
மீன்காரத்தெரு
மீனின் வாடையுடன் அந்த மீன்கள் சுமந்து செல்லும் கதைகளுடன் இனிமையாய் இருக்கிறது.
ஒரு கற்பனை கிராமம்
ஆண்
பெண் உறவுகளை பற்றி நம் இலக்கியங்களில் நிறைய பதிவுகள் காணக்கிடைக்கின்றன. அவை பெண்களின்
எழுத்துகளில் இருக்கின்றனவா என்னும் சந்தேகம் எனக்குள் இருந்தது. அதை கிருத்திகாவின்
வாஸவேச்வரம் நாவல் மனநிம்மதியுடன் பூர்த்தி செய்தது.
பைபிளில்
கனியை உண்டவுடன் ஆண் கடந்த காலத்தை சுமந்து சோகமாகவே இருப்பான் என்பது போல வாசகம் ஒன்று
வருகிறது. இதை வேறு விதமாக நாவலில் கிருத்திகா எழுதியுள்ளார். புனைவாக்கியிருக்கிறார்.
நாவலுக்கு முன்னுரையிலேயே பெருந்தேவி சொல்கிறார் இந்நாவலை வாசிக்கும் போது எழுதபட்ட
காலத்தை மனதில் வைத்துவாசியுங்கள் என்று. அந்த வாசகம் என்னமோ நூற்றுக்கு நூறு சதவிகிதம்
உண்மை தன். இந்நாவல் முழுக்க கோட்பாடுகளால் நிறைந்து இருக்கிறது.
எல்லா
ஆண்களுக்குள் இந்த புறவயத் தோற்ற ஆண்மையானது பெண் மெச்ச வேண்டும் என்னும் எண்ணத்திலேயே
இருக்கிறது. இது தோற்றத்திற்கு மட்டுமல்ல மூளை சம்மந்தமானதும் கூட. ஆண்கள் சின்னதொரு
வேலை செய்தாலும் அவர்களை பெண்கள் கொண்டாட வேண்டும் என்னும் எண்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
அப்படி கொண்டாடவில்லை எனில் மனதிற்குள் வருத்தம் இருக்கும். கடந்த காலத்தில் வருத்தம்
என்னும் பதத்துடன் அது நிற்கவில்லை. மாறாக தர்க்கப் போராக மாறியிருக்கிறது. இதை என்னுடைய
வீட்டிலேயே கண்டிருக்கிறேன். அப்பா வேலை முடித்து வந்து அலுவல்கள் சார்ந்து நிறைய பேசுவார்.
அவரின் தர்மத்தை நிலைநிறுத்த நிறைய சொல்லுவார். அம்மா எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு
விடுவதால் அமைதியாகிவிடுவார். நான் ஊரார் தர்மத்தை பேசுபவன் அதலின் என்னுடன் வாக்குவாதம்
நடைபெறும். அவரை நான் ஏற்றுக் கொண்டாக வேண்டும். அல்லது நான் விவரம் பத்தாதவன்!
இக்காலத்தில்
இந்த பிரச்சினையை காண முடியாது. கல்லூரிகளில்
சரிசமமாக பேசி பெண் என்பவளுக்கும் இந்த எல்லா உணர்வுகளும் இருக்கின்றன என்பதை நடைமுறையில்
அறிந்து கொள்ள முடிகிறது. ஒரு கருத்தை திணிக்க முயற்சிக்கும் போதே அக்கருத்தை கேலி
பேசியோ அல்லது புறந்தள்ளியோ போகும் உரிமையை பெண்கள் கொண்டாடுகிறார்கள். இந்த உரிமை
சற்று அச்சுறுத்தினாலும் இதிலிருக்கும் நியாயம் நமக்கு காலப்போக்கில் உணர்த்தப்படுகிறது.
என்னுடைய அம்மா காலத்திலெல்லாம் இந்த நிலை அல்ல. ஆண் சொல்வது எல்லாமே அறம். பெண் ஆணின்
பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவிக்காதவள். பாலியலிலும் இந்த அடிமைத்துவம் இருந்து வந்திருக்கிறது.
நம் திருமண முறையையே அப்படி தான் பார்க்கிறேன். பார்த்து மனம் ஒப்பியவுடன் மணம் என்பது.
இது இப்பதிவுக்கு ஒவ்வாதது என்பதால் விட்டுவிடுவோம்.
இந்த
நிலையில் பெண்களின் எண்ணமானது ஒரு இடத்தில் எல்லா காலங்களிலும் ஒன்றாக இருக்கிறது.
அது ஆண் தன்னை பார்க்க வேண்டும். வர்ணிக்க வெண்டும். காதல் வலையில் விழ வேண்டும் என்று.
தங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் வரமான அழகை ஆராதிக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள்.
அவர்களின் பலவீனம் அதை ஆண்களைப் போல திணிக்க தெரியாதது. ஆண்கள் தங்களிள் திறமைகளை பெண்கள்
ரசிக்க வேண்டும் என்று திணிக்கும் விஷயம் பெண்களிடம் இல்லாமல் போனது. காரணம் ஆண் பெண்ணின்
அழகை கண்டு முதலில் பயமே கொள்கிறான். தன்னை இந்த அழகு ஆள அரம்பித்துவிடுமோ என்று அஞ்சுகிறான்.
அதிகாரம்
செய்ய ஆசைப்படுவது எல்லா ஆணினுள் இருக்கும் குணம். பெண்களுக்கு கட்டுப்பட்டாக வேண்டும்
என்னும் எண்ணமே இல்லை. அது ஒரு சாய்ஸ். வேறு வழியின்றி ஒரு காலத்தில் எடுக்கப்பட்டது.
இப்போதும் அப்படி சில இடங்களில் இருக்கிறது. இதை 1930களில் நடப்பதாக எழுதியிருக்கிறார்
கிருத்திகா. கதைசொல்லல் திறமையிலும் கதையிலும் என்னை பிரமிக்கவே வைத்திருக்கிறார்.
வாஸவேச்வரம்
ஒரு கற்பனை கிராமம். அங்கு இருக்கும் குடும்பங்களில் சிலவற்றை பெருவாரியாக மையப்படுத்துகிறார்.
சந்திரசேகரய்யர் - ரோகிணி, பிச்சாண்டி, சுப்பையா குடும்பம் ஆகிய மூன்றையே நாவலில் மையபடுத்துகிறார்.
ரோகிணி பட்டணத்து பெண் விருப்பமில்லாமல் சந்திரசேகரய்யரை மணம் புரிந்து கிராமத்தில்
தங்குகிறாள். கணவர் தன்னை வர்ணிக்க வேண்டுமே என்று மேல் சொன்ன எல்லா ஆசைகளையும் கொண்டிருக்கிறாள்.
நிறைவேறுவதில்லை. கணவன் முழுக்க அதிகாரத் திணிப்பு. ஒருகட்டத்தில் மனதளவில் வெறுக்கவும்
செய்கிறாள்.
பிச்சாண்டி.
கிராமத்தில் தவறான மருத்துவத்தை செய்யும் சுந்தாவை எதிர்க்க அங்கு தேர்தலில் நிற்கிறான்.
சுந்தாவின் அக்கிரமங்களை மக்களிடம் சொல்கிறான். அவன் சார்பாக சந்திரசேகரய்யரை நிற்க
வைக்கிறான். சுந்தா. பிரச்சாரம் செய்கிறான். ரோகிணி மேலும் சிறு மையல் இருக்கிறது பிச்சாண்டிக்கு.
அதை அவளிடமே பூடகமாக சொல்கிறான். பிச்சாண்டியின் மூலம் அக்காலத்திய கம்யூனிஸ கொள்கை
ஆசையை மிக அழகாக கிருத்திகா சொல்லி செல்கிறார். நாவல் மூன்று பகுதியாக இருக்கிறது.
அதில் நடுப்பாகம் முழுக்கவே அரசியல் கதை தான். இந்த பகுதியில் பிச்சாண்டி சந்திரசேகரய்யரின்
நிலங்களை நாசம் செய்கிறான். நிறைய தீங்கு செய்கிறான். ஒரு இடத்தில் பிச்சாண்டி தலை
குனியும் அளவு சம்பவம் நிகழ்கிறது.
சுப்பையா
கதை என்ன எனில். அவனுக்கு மனைவியை இஷ்டப்படி கலவி கொள்ள வேண்டும். இஷ்டமில்லாமல் மெஷினைப்
போல இயங்குகிறாள். சண்டை நிகழ்கின்றன. அப்போது சுப்பையா ரோகிணி மாதிரி மனைவி இருக்க
வேண்டும் என்கிறான். மனைவி சந்திரசேகரய்யரை சொல்கிறாள். அவனுக்கு கோபம் வருகிறது. அதற்கு
பல கடந்த கால கோபங்கள் இருக்கின்றன. பித்தாகிறான். மனதிற்குள்ளேயே புழுங்குகிறான்.
நாவலின்
கடைசிபாகம் முழுக்க ஒரு கேள்வி தான். சந்திரசேகரய்யரை கொலை செய்தது யார் ?
கலவி
சார்ந்து நாவலில் நிறைய விஷயங்கள் வருகின்றன. அதில் ஒன்று புலனாகிறது. நம் சமகால சமுதாயம்
எல்லாம் சினிமாக்களில் காட்டப்படும் அங்கங்களை வைத்தே கிளர்ச்சியடைகிறார்கள் என்னும்
குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நாவலில் அம்மக்களுக்கு சிறந்த பொழுது போக்காய்
இருப்பது கதாகாலேக்ஷபம் தான். அதில் பெண்கள் சார்ந்து சொல்லப்படும் வர்ணனைகள் கலவி
சார்ந்த தன்மைகள் அந்த கிராமத்தையே கிளர்ந்தெழ செய்கிறது. அதை விரிவாக வர்ணிக்கிறார்.
கிருத்திகா நேரில் சென்று பார்த்த கிராமங்களை வைத்து தான் இந்த கிராமத்தை கற்பனையில்
உருவாக்கியதாக வருகிறது. ஆக இந்த தன்மை நம் கலாச்சாரத்தில் அழியாமல் இருப்பது எப்படி
என்பது என்னை சுவாரஸ்யத்தில் ஆழ்த்துகிறது. இதில் காட்டப்படும் கலவிகளெல்லாம் ஆண்களின்
அல்பத்தனத்தை காட்டிச் செல்கிறது. அதோடு பெண்களுக்குள் ஒடுங்கியே இருக்கும் வேட்கையையும்
பட்டவர்த்தனமாக்குகிறது. கலவி என்று சொன்னாலும் கூட அதை எழுதியிருக்கும் விதம் ரொம்பவே வித்தியாசமானதாக, கலவியே தெரியாத அளவு அழகாக இருக்கும்.
கதை
சொல்லல் முறையை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கதையின் ஆரம்பத்தை பாருங்கள். கதாகாலேக்ஷபத்தை
சொல்லுகிறார். அதை கவனிப்பவர்களின் செயல்களுக்கு செல்கிறது கதையோட்டம். அப்படியே அவர்களின்
பார்வை எதை காண்கிறதோ அத்துடன் கதை இணைகிறது. பின் காலேக்ஷபமும் அங்கு நிகழும் செயலும்
ஒப்புமை பார்க்கப்படுகிறது. இந்த விஷயங்கள் மட்டுமில்லாமல் நாவலின் முதல் பகுதியில் ஆசிரியர் ஒட்டு மொத்த கிராமத்தையே வலம் வருவது வாசிக்கவே அவ்வளவு இன்பமாய் இருக்கிறது.
சொல்லும் விஷயங்களிலெல்லாம் அங்கங்கு நகைச்சுவையை வைப்பது வாசிக்கும் போது அலாதியாக இருக்கிறது.
வாஸவேச்வரம்
கற்பனை கிராமம் என்று சொன்னது தான் ஆச்சர்யமாய் இருக்கிறது!
வல்லம் கொண்ட மனிதர்கள்
வண்ணநிலவனின் சிறந்த
எழுத்தாக யார் பரிந்துரைத்தாலும் அது கடல்புரத்திலாகவே இருந்து வந்தது. ஃபேஸ்புக் நண்பர்
ஒருவர் கூட கடல்புரத்தில் சார்ந்து எழுதுவீர்களா என்றே கேட்டு வந்தார். காலை முதல்
மாலை வரை கல்லூரி சார்ந்து மென்பொருள் ஒன்று படித்து வருவதால் மாலையில் ஓய்வெடுத்து
பின்னர் தான் வாசிக்கிறேன். இந்த நிலையில் சிறிய அளவிலான நூல்களையே தேர்ந்தெடுத்து
வாசிக்கிறேன். அதனடிப்படையில் கடல்புரத்தில் என்னும் நாவலை வாசிக்க எடுத்தேன்.
வண்ணநிலவனின் நான்கு
நாவல்களை இத்துடன் சேர்த்து வாசித்திருக்கிறேன். பெரும் களத்தை அவர் எடுத்துக் கொள்கிறார்.
அங்கு ஊடாடும் மனிதர்கள் சிலரை எடுக்கிறார். அவர்களில் இருக்கும் சின்ன மனதை மட்டும்
படைப்பாக்குகிறார். பெரும் பாறையை காண்பித்து வர்ணிக்கப் போகிறார் என்று எண்ணும் தருணத்தில்
அதில் செல்லும் சிற்றெறும்பின் அழகியலை வர்ணிப்பது போல கதை சொல்கிறார். இந்த கடல்புரத்தில்
நாவலும் அப்படியொரு கதையம்சத்தையெ கொண்டிருக்கிறது.
நாவலின் தலைப்பிலேயே
நான் சொன்ன இந்த பெருவாறியான களத்திருந்திருலிருந்து சின்ன கூட்டத்தின் இருண்மையான
மனதிற்கு வரும் பண்பை நன்கு கவனிக்க முடியும். கடல்புரத்தில் நிறைய குடும்பங்கள் இருக்கும்.
அதில் ஒரு குடும்பத்தை எடுக்கிறார். குரூஸின் குடும்பம். அதிலும் பெலோமி என்னும் கதாபாத்திரத்தை
எடுத்து அவள் மூலம் கதையை நகர்த்துகிறார்.
அநேக இடங்களில்
கதை குரூஸிடமிருந்து பயணிப்பது போல தோற்றமளிக்கும். ஆனால் குரூஸ் வாழும் வாழ்க்கையை
பிலோமி எப்படி பார்க்கிறாள் என்பதை கதைசொல்லும் முறையில் நன்றாக உணர்ந்து கொள்ள முடிகிறது. கடலை நம்பி இருக்கும்
மனிதர்கள் அவர்கள். அவர்களிடையே வல்லம் ஒன்றை வைத்துக் கொண்டு தினம் மீன்பிடித்து வாழ்ந்து
வருகிறார் குரூஸ். அவருடைய மகன் செபஸ்தி அந்த வல்லத்தை விற்றுவிட்டு அவனுடன் வந்து
தங்க சொல்கிறான். மகள் பிலோமியின் திருமணத்திற்கும் வல்லத்தை விற்க வேண்டும் என்று
முடிவு செய்கிறார்கள். குரூஸிற்கு கோபம் வருகிறது. வல்லமே தன் உயிர் என்று இருக்கிறார்.
ஆனால் அங்கே வல்லத்தில் செல்பவர்கள் குறைவே. அப்படி செல்பவர்களுக்கும் குறைந்த அளவிலான
மீன்களே கிடைக்கின்றன. அதைவிட அதிகமான வசதியுள்ள லாஞ்சியை உபயோகபடுத்துகிறார்கள் நிறைய பேர். இதுவும்
குரூஸிற்கு கோபமூட்டக் கூடியது. இவையெல்லாம் சேர்ந்து என்னவாகிறது என்பதை நாவல் விரிவாக
விளக்குகிறது.
நான்முழுக்க முழுக்க
நகரமைய வாழ்க்கை வாழ்ந்து வருபவன். கிராமத்திய வாழ்க்கையை இலக்கியங்களின் மூலமும் சில
மனிதர்களின் மூலமும் தான் அறிகிறேன். அவர்களில் பெருவாரியோனோர் சொத்துகளை இழக்க விருப்பமில்லாதவர்கள்.
நண்பனுடைய வீடு விவசாயத்தை நம்பியிருக்கும் வீடு. அவர்களுக்கு சொந்தமாக திண்டுக்கல்லுக்கு
அருகில் நிலமிருக்கிறது. நீரில்லாத காரணத்தால் கோவையில் குத்தகைக்கு நிலமெடுத்து விவசாயம்
பார்க்கின்றனர். லாபமும் கிட்டுகிறது. இருந்தாலும் அந்த நிலத்தை விற்க மனமில்லை.
இது போன்று நிறைய
அம்சங்களும் கதைகளும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும். நான் இதை குற்றமாக பார்க்கவில்லை.
இவர்கள் சேகரிக்க நினைப்பது ஒரு வளத்தை. இது மாறி நவநாகரீக அம்சங்களின் ஊடுருவலினால்
நம் பாரம்பரியத்தை இழந்து வருகிறோம். விவசாயத்தையும் நெய்தல் வாழ்க்கையையும் இப்படி தான் பார்க்கிறேன். அவர்களிடம் சந்தோஷம் துக்கம் எல்லாம் நிறைந்து இருக்கிறது. அதனூடே
பாரம்பரியம் மிக்க வளங்கள் இருக்கின்றன.
அப்படியொரு வளமாக
தான் குரூஸ் வைத்திருக்கும் வல்லத்தை எண்ணுகிறேன். அந்த வளம் மீது அவர்களுக்கு இருக்கும்
உணர்வுகள் விவரிக்க முடியாதது. அது குடும்பத்துடன் இணைந்ததும் கூட. குடும்பத்திற்குள்
நிகழும் நிகழ்வுகளில் அதற்கும் பங்குண்டு என்பது போலவே செய்வர். இதையெல்லாவற்றையும்
அழகுற நாவலில் காட்டியிருக்கிறார்.
உறவுகளில் சிக்கல்
எற்படும் போது இந்த பொருள் மீதான காதலும் உறவும் என்னாகிறது என்பதையும் இடம்பெயர்தலையும்
காட்டி செல்கிறார். இதனூடே வரும் கடலோர காதல் கதைகளையும் அங்கு அவர்கள் உய்த்துணரும்
ஏமாற்றங்களையும் அதனால் ஏற்படும் சோகங்களையும் அது புதிதல்ல எல்லாம் பாரம்பரியமாக கடத்தப்பட்டது
தான் என்று எடுத்துக் கொள்ளும் தன்மையையும் ஆழமாக சொல்கிறார்.
நாவலில் வரும்
வரிகளைப் பாருங்கள். இந்த வரிகளை விரிவாக விவரிப்பது தான் கடல்புரத்தில் நாவல்
“அந்த கடல்புரத்தில்
எந்த குழந்தை பிறந்தாலும், எத்தனை பெரிய வீட்டில் பிறந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய
முலையை சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்
தான் ஊற்றுகிறார்கள். அந்த தண்ணீரானது ஆண் பிள்ளையானால் அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும்
போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும்
துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தை கொடுக்கிறது”
குரூஸின் குடும்பத்தை
மட்டும் சொல்லாமல் அங்கு வல்லத்தை நம்பியே இருக்கும் சில மனிதர்களை குறிப்பிட்டு அவர்களின்
மனதை வல்லம் எப்படியெல்லாம் ஆக்கிரமித்திருக்கிறது என்பதை மிக அழகாக சில இடங்களில்
உக்கிரத்தோடும் சொல்லுகிறார்.
கடல்புரம் உணர்வுகளால்
மட்டுமே பிண்ணபட்ட நெய்தல் இடம். அங்கே நிகழும் எல்லா உணர்வுச் சித்திரங்களையும் நாவல்
செவ்வனே காட்டி வருடி செல்கிறது.
வீடு வஞ்சம் விலகல்
கல்லூரியில்
நிறைய மலையாள நண்பர்கள். அவர்கள் மலையாள இலக்கியத்தை கொஞ்சம் அறிந்தவர்களும் கூட. இதில்
ஒரு தோழி என்னிடம் அங்கிருக்கும் எழுத்தாளர்களை புகழ்ந்து சொல்லியிருக்கிறாள். அதில்
ஒருவர் தான் எம்.டி வாசுதேவன் நாயர். கேரளத்து பெயர்களே எனக்கு ஒரு வசீகரம் தான். அவர்கள்
பேசும் தமிழை நான் கல்லூரியில் அதிகம் ரசித்துள்ளேன்.
இவரின்
நூல் இன்னமும் அதிகமாக விற்றுக் கொண்டிருக்கிறது என்று நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
சமீபகாலமாக மொழிபெயர்ப்புகள் வாசிக்க வேண்டும் என்னும் ஆர்வம் எழும்பி வருவதால் அவருடைய
நாலுகட்டு என்னும் நாவலை வாங்கி இன்று வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு சந்தேகமே முதலில்
எழுந்தது. நான் வைக்கம் முகம்மது பஷீர் மற்றும் வாசுதேவன் நயகர் ஆகியோரின் தலா ஒரு
நாவலே வாசித்திருக்கிறேன். இரண்டு பேரும் எப்படி இவ்வளவு எளிதாக அழகான மொழி கொண்டு
இலக்கியத்தை மக்களுக்கு தருகிறார்கள் ? நாலுகட்டு முழுக்க முழுக்க யதார்த்தமான நாவல்.
அதை மொழிபெயர்த்திருக்கும் சி.ஏ பாலனின் மொழிபெயர்ப்பும் எளிமையாக அழகாக இருக்கிறது.
நாலுகட்டு
எனில் என்ன ? அது ஒரு பாரம்பரிய முறை. வீட்டின் அமைப்பை அப்படி குறிப்பிடுகிறார்கள்.
இதை நம் பழைய சினிமாக்களில் நிறைய காண முடியும். அந்த வீடுகளில் சுற்றிலும் அறைகள்
இருக்கும். அதற்கு மேலேயும் அறைகள் இருக்கும். வீட்டின் மையத்தில் காற்று வெளிச்சம்
வரும் அளவிற்கு பெரியதொரு வெளி இருக்கும். இது கேரளத்தில் கலாச்சாரத்தின் அடையாளமாக
திகழ்ந்திருக்கிறது என்பதை நாவலில் சொல்கிறார்.
இது
போன்றதொரு நாலுகட்டு வீட்டில் இருக்கும் பெரிதொரு குடும்பம். அதில் ஒரு பெண் தான் பாருக்குட்டி.
அவருக்கு கோந்துண்ணியின் மீது காதல் வந்துவிடுகிறது. வீட்டில் கல்யாணம் நிச்சயிக்கும்
போது கோதுண்ணி நாயருடன் சென்று விடுகிறாள். கோந்துண்ணி நாயரின் வீரம் நாவலில் சில பக்கங்கள்
நீளுமளவிற்கு வசீகரமாய் சொல்லப்படுகிறது. அவளை வீட்டில் இறந்ததாக எண்ணி தலை முழுகிவிடுகிறார்கள்.
அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கவிருக்கிறது. கோந்துண்ணி நாயர் செய்த பல நல்வினைகளின் பயனாய்
செய்தாலிக் குட்டி என்பவன் அவருக்கு மாமிசத்தில் விஷயம் வைத்து கொன்றுவிடுகிறான்.
பாருக்குட்டிக்கு
பிறக்கும் குழந்தை தான் அப்புண்ணி. நாலுகட்டு வீட்டில் சேர்ந்து வாழும் குடும்பம்,
பாருகுட்டியை தவிர்த்து சேர்ந்து வாழும் குடும்பம் ஏதோ தீவினை வரப் போகிறதோ என்றெண்ணி
சர்ப்பத் துள்ளல் நிகழ்த்த முடிவெடுக்கிறார்கள். அது ஒரு விழாப் போல. அதைப் பார்க்க
ஆசைப்படுகிறான் அப்புண்ணி. நாலுகட்டு வீட்டில் வாழ வேண்டியவள் நம்பூத்ரியின் வீட்டில்
ஏழை வேலைக்காரியைப் போல வாழ்கிறாள்.
அவளுக்கு
அப்போது உதவி செய்யக் கூடியவராக இருக்கும் ஒரே நபர் சங்கரன். சங்கரனுக்கு அவள் நாலுகட்டின்
வீட்டில் இருந்தது முதல் தெரியும். இவர்களை ஊரார் தவறாக பேசுவதை அப்புண்ணி அறிகிறான்.
அதே நேரம் அவனை நாலுகட்டு வீட்டில் அவமானப்படுத்தி வெளியனுப்புகிறார்கள். செய்தாலிக்குட்டியை
எப்படியாவது கொலை செய்ய வேண்டும் என்றிருந்த அவனுக்கு செய்தாலிக்குட்டியிடமிருந்தே
நாவல் முழுக்க நிறைய உதவிகள் அரங்கேறுகின்றன. அம்மாவின் நடவடிக்கை பிடிக்காமல் வீட்டிலிருந்தே
செல்கிறான். அப்புண்ணியின் பழி, நலுகட்டுவீடு, அவமானம் செய்த மனிதர்களின் முகம், அம்மா
என்று எல்லாமும் சேர்ந்து அவன் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதை மிக அழகியல் நிறைந்த
மொழியுடன் சொல்லியிருக்கிறார்.
இதுநாள்
வரையில் இவ்வளவு பெரிதாக நாவலின் கதைச்சுருக்கத்தை நான் சொன்னதில்லை. அதற்கான காரணம்
இந்நாவல் பெரும் கதையை கொண்டிருக்கிறது. சுழற்சி முறையில் எல்லா கதைகளும் ஒரு முடிவை
நோக்கி செல்லுமாயின் இக்கதை அடுக்கடுக்கான சம்பவங்களால் கட்டமைக்கப்படுகிறது. எல்லா
சம்பவங்களின் மையமாக அப்புண்ணியின் அகம் இருக்கிறது.
இக்கதை
முழுக்கவே அப்புண்ணியின் பார்வையில் சொல்லப்படுவது இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
குடும்பம் என்பது ஒரு கூட்டமான அமைப்பு. அந்த அமைப்பிடம் நிரந்தரமான அல்லது அசையாத
சொத்து ஒன்று இருந்தாலே அது என்றேனும் ஒரு நாள் பிரிக்கப்படும் என்பதை நயமாக நாவலில்
சொல்லி செல்கிறார். அதை அவர்கள் செய்யும் அபத்த நாடகங்களாக உருவாக்குகிறார்.
நாவலில்
இரண்டு உறவுகள் அவர்கள் கொள்ளும் இடைவெளியால் வாசிப்பின்பத்தை அளிக்கின்றன. ஒன்று
அப்புண்ணி பாருகுட்டியின் உறவு. அம்மா மகன் என்பதை மென்மையாக சொல்கிறார். அவர்கள் கொள்ளும்
சண்டைகள் பெரும் சண்டையாக மாறி மனக் கிலேசமாக உருவாகும் போதும் அம்மாவிற்கான மனம் எப்படி
நடந்து கொள்ளும் என்பதையும் மகன் சிறுவனாக எப்படி நடந்து கொள்வான் என்பதையும் புன்சிரிப்பை வரவைக்கும்
அளவு சொல்லியிருக்கிறார். அடுத்து அப்புண்ணி அம்மிணிக்குட்டி உறவு. அம்மிணிகுட்டி அப்புண்ணிக்கு
ஒரு மாயை. சர்ப்ப துள்ளல் நிகழ்ச்சியில் கண்டவன். அவளையே கண்ணில் வரித்தான். நேரில்
அதிகம் பேசினான். பயம் ஆசை இச்சை எல்லாம் கலந்து அவனுள் செய்யும் சேட்டைகளை அழகாக சொல்கிறார்.
கேரளத்தில்
இருக்கும் மரபு சார்ந்த விஷயங்களை அங்கங்கே விவரிக்கிறார். விவரிப்பான நாவல் எவ்வித
பிசிருமின்றி அங்கங்கே இப்படி புதிய விஷயங்களை சொல்லி செல்வதால் நாவலே கேரளத்தை புதுமையாக
அறியாத இடமாக காண்பிக்கிறது.
இதைத்
தவிர அப்புண்ணியின் பள்ளியில் அவன் சம்பாதிக்கும்
அவமானங்கள், தன்னுடைய தன்மானத்தை காக்க நினைத்து அவன் செய்யும் பிரயத்னங்கள், செய்தாலிகுட்டியைக்
காணும் போது அவன் மனம் கொள்ளும் உணர்வுகளேல்லாம் வாசிக்கவே அவ்வளவு இன்பமாய் இருக்கிறது.
அப்பக்கத்தில் தெரியும் வன்மங்களெல்லாம் அவன் வயதிற்குண்டானதாய் அடர்த்தியாய் இருக்கிறது.
மனிதன்
பலவீனமானவன். பலமாக ஒருவன் தென்பட்டால் கூட ஏதோ ஒரு பலவீனத்தை மறைக்கவே என்பது போல் தான்
நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அமையப்பெற்றிருக்கின்றன. அளவில் பெரியதாய் இருப்பினும்
ஒரு பக்கத்திலோ ஒரு வரியையோ கூட தேவையில்லை என்றோ சலிப்பு என்றோ எனக்கு சொல்லத் தெரியவில்லை.
அவ்வளவு இனிமையான நாவல் நாலுகட்டு
சித்தனின் நாவல்
யுவன்
சந்திரசேகரை சேலத்தில் ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது அங்கு வந்திருந்தவர்கள் அவரின் எழுத்தை
தீவிரமாக வாசித்திருந்தவர்கள். அவர்கள் எல்லோருமே அவருடைய எழுத்துகளை நான் லீனியர்
விஷயங்களில் தீவிரமாக செயல்படுபவர் என்று சொல்லியிருந்தார்கள். உடனே அவருடைய நூல்களில்
இரண்டை வாங்கினேன். ஒன்று நாவல் இன்னுமொன்று சிறுகதை தொகுதி(இன்னமும் வாசிக்கவில்லை).
வாங்கியதற்கு
வந்திருந்தவர்கள் பேசியது மட்டும் காரணம் என்று சொல்லிவிட முடியாது. மெடா ஃபிக்ஷன் என்னும்
இலக்கிய வகைகளை அறிவியல் அறிந்த ஒருவரால் அதிகமாக விளையாட முடியும். ஆம் அந்த வகை இலக்கியம்
ஒரு விளையாட்டு தான். ஏன் எனில் கதை என்ற ஒன்றை தேடி அலையும் வாசகனை முன்னும் பின்னும்
அலையவிட்டு கதையை கண்ணில் காட்டாமலேயே செல்லும் ஒரு மாய வித்தை. இதற்கும் அறிவியலுக்கும்
என்ன சம்மந்தம் என்று நினைக்கலாம்.
அறிவியலில்
இதுநாள் வரை கண்டுபிடிக்கப்பட்ட எல்லா விஷயங்களும் ஒரு மையப்புள்ளியை சென்றடைகிறது.
பௌதீகத்தை எடுத்துக் கொள்வோம். அதில் விஞ்ஞானிகளை கேட்டால் சிலர் புவியீர்ப்பு விசையே
எல்லா தேற்றங்களுக்கும் மையம் என்பார்கள். சிலர் ஒளியின் வேகமே மையம் என்பார்கள். சிலர்
விசை. சிலர் காலம். சிலர் இடம். ஆக எதையோ நம்பி எல்லா தேற்றங்களும் அலைந்து கொண்டிருக்கின்றன.
பௌதீகம் தன்னுள்ளே மாயத் தன்மையை கொண்டிருக்கிறது. உலகமே கொண்டாடும் கோட்பாடுகள் வேறொருவரால்
தகர்க்கப்பட்டால் உலகம் தகர்த்தவரை கொண்டாட ஆரம்பிக்கிறது. கோட்பாடுகளை கேட்பவனுக்கும்
நுகர்பவனுக்கும் எல்லாமே உண்மையாக இருக்கிறது. இது தான் மெடா ஃபிக்ஷன். வாசிக்கும்
எல்லாமே கதையாக இருக்கும். எது கதையென்பதை எழுத்தாளன் மர்மமாக வைத்திருக்கிறான். இந்த
தன்மையில் இயங்குபவர் என்று பலர் சொல்ல ஆசையில் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். அவர்
அன்று அறிவியல் சார்ந்து நிறைய பேசியதாலும் நூல் வாங்க ஆசை ஏற்பட்டது.
நாவல்
முழுமையாக என்னை ஈர்க்கவில்லையெனினும் எழுதபட்ட விதம் மிக அருமையாக இருக்கிறது. வாசித்த
நாவல் யுவன் சந்திரசேகரின் முதல் நாவலான குள்ளச் சித்தன் சரித்திரம்.
தமிழவன்
எழுதிய ஜி.கே எழுதிய மர்ம நாவல் என்னும் நாவலின் அதே கட்டமைப்பை தான் இந்நாவலும் கொண்டிருக்கிறது.
அதில் அவர் செய்திருந்த பிழையை இதில் இவர் செய்யாமலிருப்பதே நாவலின் நல்விஷயங்களுள்
ஒன்று. அதை பிறகு சொல்கிறேன். கதை சார்ந்து கொஞ்சம் பார்ப்போம்.
இந்தியாவில்
மாயா யதார்த்தமாகவே புராணங்கள் நிரம்பி வழிகின்றன. இதனாலேயே நாம் சிறுவயதிலிருந்து
மகாபாரதம் இராமாயணங்கள் சார்ந்து ஈர்க்கப்பட்டிருகிறோம். தமிழக வரலாறுகள் மாயத் தன்மைகள்
குறைந்து வீரத் தன்மைகளால் நிறைந்து இருக்கிறது. அரசர்களின் வழியில் சொல்வதை விட தனியாக
பார்த்தால் மாயத் தன்மைகளுக்காகவே நிறைய அம்சங்கள் தமிழகத்தில் இருக்கின்றன. அவற்றில்
ஒன்று தான் சித்த மரபுகள்.
மருத்துவம்
செய்வதே ஒரு மேஜிக் தான். இந்த மேஜிக்கை தமிழகத்தில் இயற்கையாகவே செய்தவர்கள் சித்தர்கள்.
உலகத்தில் alchemist என்று சொல்லப்பட்டு உலோகங்களை மாற்றியவர்கள் தமிழகத்தில் நிறைய
பேர் இருக்கிறார்கள். இப்போது சித்தர்களை காண்பதரிது என்றே சொல்வேன். அப்படியே கண்டாலும்
உண்மையாகவே சித்தர்களா என்று சந்தேகமே முதலில் எழுகிறது. தமிழகத்தின் முக்கியமான சித்தர்
ஆண்மை குறைவை மட்டுமே செய்வதால் சித்தர் வரும் காலத்தில் வாய்மொழி சொல்லாகவே அமையக்
கூடும்.
நம்
சமூகம் நிறைய மூடநம்பிக்கைகளால் சூழப்பட்டே வளர்ந்து வந்திருக்கிறது. வாக்கு, குறி,
பூம் பூம் மாடு, குடுகுடுப்பைக் காரன் என்று இன்னமும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
எல்லோர் வீடுகளிலும் வெளியில் செல்லும் போது யாரும் தன்னைப் பார்த்து எங்கு செல்கிறாய்
என்றோ பூனை குறுக்க செல்லக் கூடாது என்றோ நினைப்பவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். இதை
நாம் இப்போது மூடநம்பிக்கை என்று சொல்லி புறந்தள்ளினாலும் இதன் பலாபலன்களை அனுபவித்தவர்களும்
எல்லா வீட்டிலும் இருக்கத் தான் செய்கிறார்கள்.
என்னுடைய
அப்பாவே ஜோஸியம் பார்க்கக் கூடியவர். அது எப்படி கணிக்கிறார் என்பதை சொன்னாலும் அது
ஒரு கற்பிதமாக ஆகுமே தவிர உண்மையாகாது. ஆனால் அப்பாவிடம் கேட்க வருகிறவர்கள் எல்லோருமே
நீங்க சொன்னதெல்லாமே பலிச்சிருக்கிறது சார் என்றே சொல்லுகிறார்கள். இப்போது விஷயத்திற்கு
வருவோம். சித்தர்கள் ஜோசியம் குறி எல்லாமே ஆதியும் அந்தமும் இல்லாத உண்மையை நோக்கி
செல்லும் மர்மம். இந்த மர்மத்தை எங்கிருந்தோ கொணருகிறார்கள்.
சூன்யத்திலிருந்து
ஒன்று முளைக்கும் என்று வேதாகமத்தில் நோவா சொல்வதற்கும் இதற்கும் எனக்கு வித்தியாசம்
தெரிவதில்லை.
நாவலில்
கூட ஒரு இடத்தில் சொல்லுகிறார் சித்தர்கள் உண்மையின் வழியில் செல்பவர்கள் என்று. எல்லா
சித்தர்களின் உள்ளேயும் இடம் காலம் போன்ற எல்லாமே வளையக் கூடியது. ஐன்ஸ்டைன் சொல்லுவது
போல. இதுவும் நாவலில் வருகிறது, சுவாரஸ்யமாய். இந்த ஸ்தம்பித்த பொழுது உலகத்தை உய்த்துணரும்
சக்தியை அல்லது பயணத்தை சித்தர்கள் அவர்களுக்குள் மேற்கொள்கிறார்கள். இந்த பொதுப்படைக்
கொள்கையை மனத்தாறக் கொண்டு உருவாக்கப்படும் கதாபாத்திரம் தான் குள்ளச் சித்தன் என்னும்
முத்துச்சாமி. இவரின் லீலா விநோதங்களை நாவல் விரிவாய் சொல்கிறது.
இப்போது
கட்டமைப்பையும் நாவலின் வெற்றியையும் சொல்கிறேன். நாவலில் இரண்டு கதை. ஒரு கதை ஹாலாஸ்யம்
என்னும் மனிதனைப் பற்றியது. இவர் குள்ளச் சித்தன் சரித்திரம் என்னும் நாவலை எழுத நினைக்கிறார்.
அதற்கு எப்படியெல்லாம் கச்சாப் பொருட்களை தயார் செய்கிறார் என்று நாவல் செல்கிறது. இரண்டாவது
கதை பழனியப்பன் செகப்பி என்னும் தம்பதியரின் கதை. இக்கதை அவர்களுக்கு குழந்தையில்லாத
கதையையும் அதற்காக அவர்கள் செய்யும் வேண்டுதல்களையும் பேசுகிறது.
கிறிஸ்தோபர்
நோலன் இயற்றிய மெமெண்டோ படத்தைப் போலவே இந்நாவலின் முதல் கதை நான் லீனியர் வகையிலும்
இரண்டாவது கதை லீனியராகவும் செல்கிறது. ஜி.கே நாவலை எங்கு மிஞ்சுகிறது எனில் அந்நாவலில்
மையக்கதையாக வாசகன் மனதில் ஆசிரியர் ஓட்டவைக்கும் கதையை கட்டுடைக்கும் இடங்களை மிக
மெலிதாக வைத்திருப்பார். டக்கென கடந்து போய்விடுவதால் அந்த அத்தியாயங்களை புறக்கணித்து
வாசகன் சராசரி கதையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இந்நாவலில் கட்டமைத்தலும் கட்டுடைத்தலும்
சமமான அளவில் மிக அழகாக இருக்கிறது.
பழனியப்பன்
குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை வாசிக்கும் போது நாவல் வீரியம் மிகுந்ததாகவே தெரிகிறது.
நாவலுக்காக அந்த ஆசிரியர் செய்யும் பயணங்கள் முன்னுரை நாவல் என்று குழப்பும் பகுதிகளை
விரிவாக செய்திருக்கிறார். அதே நேரம் குழப்பம் அதிகமாக தெரிவதில்லை. அத்தியாயங்கள்
முன்னும் பின்னும் முரணாக இருப்பினும் எளிதில் அடையாளப் படுத்திக் கொள்ளக் கூடியதாய்
இருக்கிறது.
முழுமையாக
ஈர்க்காததன் காரணம் ஒட்டுமொத்த நாவலில் நான் லீனியர் தளத்தில் ஆட்டு வைக்கும் கதை ஹாலாஸ்யத்தின்
கதை. அப்படியிருக்கும் பகுதி முடிவில்லாமல் முடிந்துவிடுவதே அதிருப்தியை கொடுக்கிறது.
அதுவே கூட இந்நாவலின் தேவையாக இருக்கலாம். சராசரி வாசகனாக எனக்கு ஒரு அதிருப்தியையே அப்பகுதி
கொடுக்கிறது.
தீதே தர்மம்
ஒவ்வொரு
கலாச்சாரமும் பல்வேறு அறக் கோட்பாடுகளால் நிரம்பி இருக்கிறது. அந்த கோட்பாடுகளை மையமாக
வைத்தே மக்களின் வாழ்வியல் முறை நிர்ணயிக்கப்படுகிறது. இது போன்றதொரு சமூகத்தில் தான்
நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த கோட்பாடுகளில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை அல்லது
அதைக் கடந்து சொல்லப்படும் விஷயத்தை நம் மனம் எப்போதுமே கொண்டாட்டமாய் கொள்கிறது.
காமம்
சார்ந்த எழுத்துகளை எல்லோரும் விரும்புகிறார்கள். முதன் முதலில் அதை ரசிப்பவர்கள் எத்தனை
வயதுடையவர்களாக இருப்பினும் அவர்களின் மனம் ஒரு கொண்டாட்டத்தினை அனுபவிக்கிறது. இதற்கான
காரணம் நமது கலாச்சாரத்தில் வெளிப்படையாக காமத்தை பேசுவது தவறு என்று சொல்லப்படுகிறது.
இது ஏட்டில் இல்லையெனினும் எல்லோர் மனதிலும் இருக்கிறது. ஆதலால் இலக்கியங்களில் சொல்லப்பட்டாலும்
வேறு எந்த வடிவில் சொல்லப்பட்டாலும் நமக்குள் ஒர் ஈர்ப்பை அப்படைப்பு பெற்றுவிடுகிறது.
இந்த
கலாச்சாரம் அந்தந்த நிலத்தைப் பொருத்து தான். நாம் இதிகாசங்களென ஒன்றை வைத்து அவை சொல்லும்
தர்மங்களை நம் நாட்டின் தர்மமாய் கொண்டிருக்கிறோம். இந்த தர்மம் கிரேக்கத்திலோ ஃப்ரான்சிலோ
செல்லுபடியாகாது. ஆக தர்மம் நாட்டைப் பொருத்து மாறுபடக் கூடியது. அப்படியே கொண்டாலும்
இந்த எல்லா நாடுகளையும் உள்ளடக்கிய மாபெரும் உலகம் தனக்கென பொதுவான தர்மத்தை கொண்டிருக்க
வேண்டுமல்லவா ? அதை எல்லா மதத்தினரும் இயற்கை என்கின்றனர். உண்மையில் இந்த இயற்கை
என்பது என்ன ?
பல்வேறு
மதங்கள் இந்த இயற்கையையும் கடவுளின் பெயரினுள் இட்டு ஒரு அர்த்தத்தை கொடுக்க முனைகிறார்கள்.
இந்த இயற்கை எனும் தர்மத்தை மாற்றி ஒரு மாற்று கருத்தை ஒருவனை நம்ப வைக்க வேண்டுமெனில்
நான் என்ன செய்ய வேண்டும் ? மாற்றுக்கருத்து என்பதே சவலான ஒரு விஷயம். அதை நம்ப வைக்க,
குறிப்பாக இது போன்ற உலகம் தழுவிய கோட்பாட்டை மாற்றியமைக்க நான் உலகம் முழுக்கவும்
ஆதாரங்களை சேகரிக்க வேண்டும். சொல்ல முனைபவனின் கைவசம் இருக்கும் உண்மைகளையும் தர்க்கங்களையும்
வைத்து கேட்பவனின் மனதில் கலாச்சாரத்தை மாற்ற
வேண்டும். இது கிட்டதட்ட உளவியல் கொலை.
இந்த
உளவியல் கொலையை பதினெட்டாம் நூற்றாண்டு இலக்கியவாதி செய்திருக்கிறார். அவர் தான் மார்க்கி
தே ஸாத். இவரிடமிருந்து தான் சாடிஸம் என்னும் கோட்பாடு வந்திருக்கிறது. வதைகளை ரசிக்கும்
ஒரு பைத்தியக்காரத் தனம். அவர் இதை உலக கோட்பாடாக நிறுவுகிறார். அவர் தனது எழுத்தினாலேயே
நாடுகடத்தப்பட்டிருக்கிறார். சிறைவாசம் சென்றிருக்கிறார். கழிவுகளை அகற்ற உதவும் காகிதங்களில்
நாவலை எழுதி எழுதி வெளியே அனுப்பியிருக்கிறார். இன்னமும் இது போல நிறைய விஷயங்களை அவரின்
வாழ்க்கையில் அறிந்து கொள்ளலாம். சாரு நிவேதிதாவின் இலக்கிய கட்டுரைகள் சார்ந்த நூல்களில்
இவரை பற்றி நிறைய அறிந்து கொள்ள முடியும்.
இவருடைய
நாவலை ஒன்றாவது வாங்க வேண்டும் என்னும் நீண்ட ஆசை கொண்டிருந்தேன். இவருடைய நூல்களும்
forbidden classics என்னும் தலைப்பின் கீழ்
தான் வெளிவருகிறது. இந்நிலையில் தான் இவருடைய ஜஸ்டின் என்னும் நாவலை தமிழில் கண்டேன்.
இது தான் ஸாத்தின் முதல் நாவல்.
உலக
இலக்கியங்களை எடுத்துக் கொண்டாலே எண்பது சதவிகிதத்திற்கும் மேற்பட்ட இலக்கியங்கள் துன்பியல்
சார்ந்தே இருக்கின்றன. துய்ப்பை பேசும் நாவல்கள் வெகு குறைவே. அப்படியே பேசியிருந்தாலும்
அது ஏதோ ஒரு துன்பத்தை மறைக்க என்னும் வடிவிலேயே இருக்கும். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில்
கூட இதைக் காண முடியும். இந்த நிலையில் பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதபட்ட ஜஸ்டின்
நாவலை யோசிக்க முடிகிறதா ?
இது
முழுக்க முழுக்க துன்பியல் இலக்கியம் தான். இந்த நாவலில் துய்ப்பு முழுமைக்கும் இருக்கிறது.
அதை என்னால் ரசிக்க முடியவில்லை. காரணம் நான் இயங்கிக் கொண்டிருக்கும் கலாச்சாரம் தான்.
பல மதங்களை உள்வாங்கிய இந்தியாவில் எல்லா மதத்தின் கருத்துகளையும் ஏதோ ஒரு விதத்தில்
அறிந்து கொண்டுதானிருக்கிறோம். அதில் ஒன்று கர்ம வினை. செய்யும் தீங்குகளுக்கு அடுத்த
பிறவியில் நல்ல வாழ்க்கை கிடைக்காது என்று. இதில் விலங்குகளை கொல்வதும் பாவம் என்று
சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மனிதனை துன்புறுத்துதலை சிந்திக்க முடிகிறதா ?
இந்த
நாவல் முழுக்க விரவி கிடப்பது இந்த துன்புறுத்துதலும் ரத்தமும் தான். நாம் இயற்கை என்று
சொல்வதே வதைகளால் நிறைந்தது தான் என்று இந்நாவல் சொல்கிறது. ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கின்மை
இருந்தது. அதை ஒழுங்குபடுத்த மதங்களும் அதன் மூலம் மக்களுக்கு நலம் பயக்கும் அறமும்
தோன்றியது என்று சொல்லலாம். அப்படியெனில் ஆரம்பத்தில் இருந்தது தானே இயற்கை ? அதை சீர்குலைத்து
அறம் என்னும் பெயரில் செய்தவை எல்லாம் மனிதனின் செயல் தானே ? இந்த ஒழுங்கின்மையை நாவல்
மையப்படுத்துகிறது.
மனிதன்
எப்போதும் ஒழுங்கின்மையில் சந்தோஷம் கொள்கிறான். அதற்கு நாவலில் சொல்லும் ஒரு எடுத்துக்காட்டையே
நானும் சொல்கிறேன். கணவனின் முன் மனைவியை ஒருவன் வன்புணர்ச்சி செய்கிறான் எனில் கணவனை
விட வன்புணர்சியாளனுக்கெ அதிக சந்தோஷம் கிடைக்கிறது என்று சொல்கிறார். இந்த ஒழுங்கின்மை
தன்னுள் கோடிக்கணக்கான சந்தோஷங்களை கொண்டிருக்கின்றன.
இந்த
சந்தோஷத்தை சொல்லும் இடங்களிலெல்லாம் தனிமனிதத்துவ கொள்கையை தேற்றமாய் சொல்லி செல்கிறார்.
உனக்கு சந்தோஷம் கிடைக்கிறதெனில் நீ எதை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நாவலில்
அடிக்கடி சொல்லவும் படுகிறது. அதற்கேற்ப நாவலும் இருக்கிறது.
ஒழுங்கின்மை
சார்ந்து நகரும் நாவல் முதல் அத்தியாயத்திலேயே ஆரம்பிக்கிறது. ஜூலியட் ஜஸ்டின் இருவரும்
சகோதரிகள். ஜஸ்டினுக்குள் இருக்கும் விஷயங்களெல்லாம் கடவுள் பக்தி கற்பொழுக்கம் அறநம்பிக்கைகள்
கர்ம வினைகளின் மீதிருக்கும் நம்பிக்கைகள் போன்றவை. ஜூலியட் சொல்வதோ விபச்சாரியாக வாழ்வதே
உசிதமானது என்று. காரணம் புலன் இன்பத்தை உண்மையான சந்தோஷத்தை நன்கு அனுபவிக்கலாம் என்று
சொல்கிறாள். இவர்கள் அநாதையாகின்றனர். அப்போது இருவரும் பிரிகின்றனர். இந்த இடத்திலிருந்து
நாவலும் ஜஸ்டினை மட்டுமே நோக்குகின்றது.
இதற்குபின்
ஜஸ்டின் செல்லும் இடங்களிலெல்லாம் வஞ்சகமும் காமமும் களியாட்டத்தை நிகழ்த்துகின்றன.
அவளை நோக்கி வரும் ஆண்களெல்லாம் அவளை துன்புறுத்ததி ரத்தத்தை கண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர்.
பெண்கள் எல்லாம் இவளை அப்படிப்பட்ட ஆண்களிடம் சேர்த்துவிடுகின்றனர். கடவுளை நோக்கி
சென்றாலும் அங்கும் இதே நிகழ்கிறது. கற்பு பலபேரால் சூரையாடப்படுகிறது. அப்போதும் அவளுக்குள்
இருந்து நம்பிக்கை தளராமல் இருக்கிறது. இந்த ஜஸ்டின் முடிவு எப்படி இருக்கிறது என்பதையே
நாவல் முடிவாய் கொண்டிருக்கிறது.
நாவல்
எளிதில் தொய்வினை அளிக்கும். அதற்கான காரணம் இந்நாவல் வதைகளினின்று ஒரு பெண் தப்பிக்கும்
நுட்பங்கள் எதையுமே கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு ஆண் வருவதும்
பெண்களின் சதைகளை கிழிப்பது வித்தியாசமான முறைகளில் துன்புறுத்துவது அதன் மூலம் அவன்
கொள்ளும் கிளர்ச்சியை கொண்டாடுவது மட்டுமே சொல்லப்படுகிறது. இந்த கொண்டாட்டம் அருவருப்பானதாக
இருப்பதாலேயே ஒரு கட்டத்திற்கு மேல் ஜீரணிக்க முடியாமல் சென்று விடுகிறது. மரணமே ஜஸ்டினுக்கு
முக்தி என்று எண்ண வைக்கும் அளவு இருக்கிறது.
நான்
மேலே சொன்னது போல நாம் நம் கலாச்சார சூழலினுள்ளிருந்தே இந்த எல்லாவற்றையையும் அனுபவிக்கிறோம்.
நாவலில் இருக்கும் துய்ப்பே இது தான். ஒவ்வொரு மனிதனுள் புதையுண்டிருக்கும் ஆணாதிக்க
தன்மையை தூண்டி வெளிக்கொணருகிறது இந்நாவல்.
மார்க்கி
தேசாத்தை எனக்கு பிடித்தே இருக்கிறது. அதற்கான காரணம் அவர் மேம்போக்காக சொல்லவில்லை.
இந்நாவலில் வரும் ஆண்கள் துன்பங்களை துயரங்களை பஞ்சத்தை கண்டு கொண்டாடுகிறார்கள் எனில்
அதற்கு உலகமே ஒத்துழைத்து தான் இருக்கிறது. அவ்வளவு ஆதாரங்களை சொல்கிறார். உலகம் முழுக்க
இருக்கும் ஆதாரங்களை காண்பிக்கிறார். கடவுளை தனி மனிதனின் விருப்பு என்பதையும் நிரூபித்து
கடவுள் மறுப்பும் தனி மனிதனின் விருப்பு என்று நிறுவுகிறார். இக்காலத்திற்கு இது பொருந்தாமல்
இருக்கலாம். இருந்தாலும் இவர் காட்டும் ஆணாதிக்க தன்மை எல்லோருள்ளும் ஒளிந்து தான்
இருக்கிறது. இந்நாவல் வாசிக்கும் போது அவர் சொல்லும் பதினெட்டாம் நூற்றாண்டை என்னால்
நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
நாவல்
: ஜஸ்டின்
அசிரியர்
: மார்க்விஸ் தே சாட் (தமிழில் : உமர்)
வெளியீடு
: புலம்
இதிகாசமா ? புனைவா ?
சேலத்தில்
இருக்கும் பாலம் புத்தக நிலையத்தில்
முருகன் என்பவருடன் சமீபமாக பேசினேன். அதில் ஒன்று ஜெயமோகனின்
முதற்கனல் பற்றி இருந்தது. ஜெயமோகன்
அரசியல் நிலைப்பாட்டில் இந்துத்துவா என்பதால் இந்த முதற்கனல் அல்லது
வெண்முரசின் பகுதி அதற்கு கொடுக்கும்
நூதன ஆதரவு என்று சொல்லிக்
கொண்டிருந்தார். இந்த விஷயத்துடன் எனக்கு
உடன்பாடே கிடையாது.
வெண்முரசு
நாவலை தொடர்ந்து வாசித்து வருகிறேன். இரவானால் கண்ணியமாக வெளியிடும் நண்பர்களின் உழைப்பிற்கு சிரம் தாழ்த்தவே வேண்டும்.
அது மட்டுமில்லாமல் ஷண்முகவேல் என்பவரின் ஓவியங்கள். ஒவ்வொரு ஓவியமும் அந்த அத்தியாயங்களில் சொல்லப்படும்
எல்லா விஷயங்களையும் தெள்ளத் தெளிவாக சொல்பவை. நுண்மையாக நேர்த்தியாக வரையப்பட்டவை.
முதற்கனல்
என்னும் வெண்முரசின் முதல் பாகத்தை தொடர்ந்து
மழைப்பாடல் என்னும் இரண்டாம் பாகத்தையும் ஆரம்பித்துவிட்டார். நான் முதற்கனல் சார்ந்து
என் இணையத்தில் எழுதவேயில்லை. பார்க்கும் போதெல்லாம் என் நண்பனிடம் வெண்முரசு
சார்ந்து பேசிக் கொண்டே இருப்பேன்.
இந்த நிலையில் தான் ஏன் அதைப்
பற்றி எழுதாமல் இருக்கிறாய் என்னும் கேள்வி அவனிடம் எழுந்தது.
சில ஆங்கில நூல்களை நான்
அடிலெய்ட் இணைய நூலகத்திலிருந்து ஈபுக்காக
எடுத்து வாசித்து எழுதுகிறேன். அப்படி இந்த நாவலை
என்னால் எழுத முடியாது. அதற்கான
காரணம் இந்நாவலின் பரப்பு மிக விஸ்தீரமானது.
அப்படி ஒருவர் இணையத்தில் தொடர்ந்து
வாசித்து நாவல் முடிந்தவுடன் எழுத
முடியுமெனில் நான் அவரின் உழைப்பை
கண்டு நிச்சயம் பெருமிதம் கொள்வேன். என்னால் அப்படி முடியவில்லை. முடியவும்
முடியாது. என்னுடைய ஞாபக சக்தி குறைவு.
ஆதலால் முதற்கனல் நாவலை நூல்வடிவில் மீள்வாசிப்பு
செய்தேன்.
நூல்வடிவம்
எனும் போதே நான் இணையத்தில்
நுகர்ந்த நாவலே முழுவடிவம் பெறுகிறது.
இணையத்தில் ஒவ்வொரு இரவும் வாசிக்கும் போது
எனக்கு முந்தைய நாளின் தொடர்ச்சி கொஞ்சமெனும்
அறுந்தே இருந்தது. நாவல் பெரும் களம்.
அக்களத்திற்கு சவால் விடும் புனைவே
முதற்கனல்.
புனைவா
? ஆம் புனைவு தான். முன்னுரையிலேயே
சொல்லியிருக்கிறார். அநேகம் பேருக்கு மகாபாரதம்
தாயின் வழியாகவே கடத்தபட்டு சில சில கதைகள்
சொல்லப்பட்டு வந்திருக்கிறது. இதைத் தான் மகாபாரதம்
என்று நாம் கொண்டிருக்கிறோம். இந்த
மகாபாரதத்தை நாம் வழிபடுகிறோம். இதிகாச
நூலாக இந்து மதத்தின் ஒரு
புராணமாக புராதனமான நூலாக வைத்து பூஜிக்கிறோம்.
ஒரு
இதிகாசம் என்ன செய்கிறது. அம்மதத்தை
தழுவுபவர்களை அற வழியில் செலுத்துகிறது.
வழிநடத்துகிறது. இது எல்லா மதத்தினருக்கும்
பொருந்தும். அவரவர்களின் புனித நூல்களை ஆராய்ந்தாலும்
அங்கே குறுங்கதைகள் நிறைய இருக்கின்றன. அந்த
குறுங்கதைகள் எல்லாம் ஒரு அறத்தை நிறுவுகின்றன.
அந்த அறத்தை வாசிப்பவனின் மனதிலோ
கேட்பவனின் செவியிலோ ஆழமாக பதிய வைக்கிறது. இக்கதைகளை, இதிகாசங்களை விரும்புபவர்கள் முதலாக எதிர்பார்ப்பது சலிப்பில்லாமல்
செல்லும் கதைகள் தான்.
சமீபத்தில்
எஸ்.ராமகிருஷ்ணனின் கதை முகாமில் கூட
எல்லா இளைஞர்களுக்கும் அறிவுரைகளை கேட்க பிடிக்கும். ஆனால்
அது அறிவுரையின் வடிவத்தில் இருத்தல் கூடாது என்றார். இதற்கான
முன்னுதாரணம் தத்தமது இதிகாசங்களில் இருக்கிறது. நம்முடைய அம்மா அப்பா காலத்தில்
கதை சொல்லுபவர்கள் நிறைய பேர் இருந்தனர்.
இப்போது கதை சொல்லுபவர்களுக்கு ஒரு
படிப்பினை தேவைப்படுவதாய் இருக்கிறது. இந்த நிலையில் இதிகாசம்
என்னும் மரபை உடைத்து முழுக்க
ஒரு புனைவை மையமாக வைத்து
எழுதப்படுவது தான் வெண்முரசு. அதன்
முதல் பகுதி தான் முதற்கனல்.
நாம்
வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்திற்கு கலியுகம் எனும் பெயர் இருக்கிறது.
இந்த யுகங்கள் பலவித கணக்குகளில் பல
பெயர்களில் இருந்து வளர்ந்து வந்திருக்கிறது. இந்த கலியுகம் அறப்பிழை
நிறைந்ததாய் ஒழுங்கின்மை நிறைந்ததாய் இருத்தல் கூடாது என்னும் நல்லதொரு
ஆசையில் யாகம் நடத்துகிறான் ஜனமேஜயன்
என்னும் அரசன். அந்த வேள்வி
ஒரு முனிவரால் தடுக்கப்படுகிறது. அதற்கு காரணம் ஒழுங்கின்மையினால்
தான் ஒரு ஒழுங்கு அமையப்படுகிறது.
ஒழுங்கின்மையை முழுதாக அழித்தால் உலகத்தால் இயங்க முடியாது. அதுவும்
இருத்தல் வேண்டும் என்று சொல்லி வியாசனின்
பாரதத்தை ஜனமேஜயன் கேட்கிறான். இங்கிருந்து தான் நாவல் ஆரம்பமாகிறது.
இந்த
நாவலில் இரண்டு பிரதான கதைகள்.
அஸ்தினாபுரம் என்னும் பாரதவர்ஷத்தின் மைய நிலவியலை அரசாளும்
அதிகாரத்திற்கு கொண்டுவர சத்யவதி செய்யும் பிரயத்னங்கள். மற்றொன்று பீஷ்மர் என்னும் தேவவிரதன். இவனுள் இருக்கும் தனிமையையும்
கடமையையும் அவமானங்களையும் பயணம் வீரம் அறம்
என்று எல்லாவற்றையும் சொல்லி செல்கிறார். இந்த
இரண்டு கதைகளும் மையபிணைந்து இருக்கிறது.
முதலில்
அஸ்தினாபுரத்தைக் காண்போம். பாரதவர்ஷத்தையே அடக்க ஹஸ்தி என்னும்
மன்னன் வைத்த நாட்டை ஆள
அரசனில்லை. அரசனில்லாத எல்லா கதைகளும் சொல்லப்படுகிறது.
அப்போது சந்தனு என்னும் அரசனுக்கு
கங்கர் குலம் மூலமாக பிறந்த
மகன் தான் தேவவிரதன். இவன்
கங்கர் குலம் என்பதாலேயே நாடாளக்
கூடாது என்னும் கட்டளை விதிக்கப்படுகிறது. அதன்
பின் சத்தியவதி என்பவளை மணம் செய்து இரு
குழந்தைகள் பிறக்கின்றன. சித்ராங்கதன் விசித்திரவீரியன். சித்ராங்கதன் இறந்து போக விசித்திர
வீரியனை நாடாள வைக்க ஆசை
கொள்கிறாள். ஒருவேளை அரசன் இல்லாத நாடாக
இருப்பின் அந்நாட்டை யார் வேண்டுமெனினும் போரிட்டு
வெல்ல முடியும். தேவவிரதன் பிதாமகனாக இருக்கும் வரையில் அது நிகழாது என்று
அறிந்தும் அவளுக்குள் இந்த பயம் இருந்து
கொண்டே இருக்கிறது. விசித்திரவீரியன் ஒரு நோயாளி.
இப்போது
பீஷ்மர் என்னும் தேவவிரதனுக்கு செல்வோம். பீஷ்மர் அறத்தால் நிறைந்தவன். சாபத்தால் நிறைந்தவன். விசித்திர வீரியனுக்கு மணம் முடிக்க வேண்டும்
என்னும் எண்ணத்துடன் காசி நாட்டு மகளிரை
கவர்ந்து வரச் சொல்கிறாள் சத்யவதி.
பீஷ்மர் அதை செய்ய அதில்
ஒரு பெண்ணாக வரும் அம்பை எதிர்த்து
நின்று பீஷ்மர் பிடியிலிருந்து வெளியே வருகிறாள். பீஷ்மர்
கடத்தி வந்தார் என்னும் காரணத்தினாலாயே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அஸ்தினாபுரத்தின் படையை தம்மால் எதிர்த்து
நிற்க முடியாது என. பீஷ்மர் நைஷ்டிக
பிரம்மாச்சாரி. அம்பை காதல் கொண்ட
சால்வ மன்னனும் விரட்டியடிக்க காசிமன்னனும் அப்பாவாக அவளுக்கு இடமளிக்காமல் போக பீஷ்மரும் காதலை
ஏற்காமல் போக பித்தியாகிறாள்.
அவளுடைய
மகன் சிகண்டி பீஷ்மரை கொல்ல தயாராகிறான். அவன்
ஆண் குணம் நிறைந்த பெண்
உடல் கொண்டவன். தோற்றத்தால் அவன் கொள்ளும் இழிவுகள்
அவமானங்கள் என்று இந்த மூன்று
விஷயங்களையும் அழகாக அறத்தால் நிறைவு
செய்கிறார்.
அவர்
உருவாக்கும் புனைவு களம் அஸ்தினாபுரம், சால்வ நாடு, கங்கை, சிபி
நாடு, காந்தாரம் என்று நிறைய வருகிறது.
அந்த எல்லா இடங்களையும் விரிவாக
வித்தியாசங்களை காண்பித்து விளக்கி செல்கிறார். நிறைய இடங்களில் இந்த
விஷயங்கள் தான் முட்டுக்கட்டையக இருக்கிறது.
சில இடங்களின் வர்ணனைகள் நிறைய பக்கங்களுக்கு செல்வதால்
அயற்சியை கொடுக்கிறது.
அறம்
தர்மம் என்று நம் ஏட்டில்
வகுத்த நியதிகளும் நிகழும் விதிகள் ஒன்றாகின்றனவா என்று தெளிவாக சொல்லிச்
செல்கிறார். இது முழுமுதற் புனைவு.
அந்த புனைவினுள்ளேயே அறம் தர்மம் அரசியல்
களம் என்று எல்லாவற்றையும் சொல்கிறார்.
இதிகாசங்கள் எப்போதும் குறுங்கதைகளால் நிறைந்தது. அதன்படியே இங்கே அறத்தை போதிக்க
அறப்பிழையை சுட்டிக்காட்ட நேரும் போதெல்லாம் ஒரு
குறுங்கதை வருகிறது. சிபிசக்ரவர்த்தியின் கதை சத்யவான் சாவித்ரியின்
கதை என்று நீள்கிறது. அதிலிருந்து
கதாபாத்திரங்கள் அறத்தை எடுத்துக் கொண்டு
தத்தமது நோக்கை நோக்கி செல்கின்றன.
இந்நாவல் பேசும் அறத்தை நாவலிலேயே
ஒருவரியாய் குறிக்கிறார்
“நூல்கள்
நெறிகளை சொல்கின்றன என்பது பெரும் மாயை.
நெறிகளை வளைக்கும் முறைகளை மட்டுமே நூல்கள் கற்பிக்கின்றன.”
ஒவ்வொரு
மனிதனின் அகமும் ஏதோ ஒரு
கோட்டில் இயங்கிக் கொண்டிருகின்றன. உற்று நோக்கினால் எதுவுமே
புதியதில்லை. எல்லாமே புராணங்களிலும் காப்பியங்களிலும் சொல்லப்பட்டவையே. அதை அழகுற இந்நாவல்
பேசுகிறது.
வாசிப்பதற்கு
இந்நாவல் கடினமாக இருக்கிறது என்று நண்பர்கள் சிலர் சொன்னார்கள். நூல்வடிவில்
அந்த கடினம் இல்லை என்றே தோன்றுகிறது. நிறைய வார்த்தைகளுக்கு அப்பக்கத்தின்
அடியிலேயே அர்த்தம் சொல்கிறார். இதில் நிறைய அரசியல்
பேசப்படுகின்றன. எல்லாவற்றையும் நடைமுறையால் இருக்கும் அரசியலோடு ஒப்பீடு செய்யவும் முடியும். இது அவரவர்களின் மனதை
பொருத்து. எனக்கு இது பெரும்
களத்தில் இயங்கும் ஒரு மாபெரும் புனைவு.
இந்நாவலில்
நிறைய கதாபாத்திரங்கள் வருகின்றன. எல்லாமே அவர்கள் காட்ட நினைக்கும் இடத்தின்
பிரதிநிதிகள். இதிகாசம் என்னும் போர்வைக்குள் வெறும் கதையை சொல்லிபோகாமல்
முதற்கனல் ஒவ்வொரு கதைமாந்தரின் அகத்தை வெளிக்கொணருகிறது. நாவல்
முடிக்கும் நேரத்தில் சில இடங்களின் மதிசூழ்
அரசியலின் முழுமையை நமக்கு அளிக்கின்றது என்று
பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.
பின்
குறிப்பு : முருகன் கேட்ட கேள்வி
சமீபத்தில் வந்த நோவா படத்தையே
எனக்குள் நினைவூட்டியது. வேதாகமத்தில் காயினை கொள்பவர்களுக்கு பழி
வந்து சேரும் என்று சொல்லப்படுகிறது.
படத்திலோ காயீன் கொல்லப்படுகிறான். பாவங்களை
காண்பிப்பதில்லை. ஒரு பேட்டியில் அதன்
இயக்குனர் டாரென் அரனோஃப்ஸ்கியிடம் இது
சுற்றுச்சூழலை பற்றி நிறைய பேசுகிறதே
என்று கேட்ட போது வேதாகமம்
அதை சொல்கிறது அதை நான் படமாக்கியிருக்கிறேன்
என்றார். இந்த பதிலே வெண்முரசு
முழுமுதற்புனைவு என்பதற்கும் பொருந்தும்.
வெண்முரசின் அடுத்த பாகமான மழைப்பாடலையும்
தினம் வாசித்து வருகிறேன். அது வேறு ஒரு
மையத்தை கொண்டிருக்கிறது. அதையும் நூல்வடிவில் வாசித்து பின்னரே எழுதுவேன். முதற்கனலில் வெகுண்டெழும் சினத்தை சூழ்ச்சியுடன் இணைக்கிறார் எனில் மழைப்பாடல் முழுக்க சூழ்ச்சிகளும் அரசியலும்.
Subscribe to:
Posts
(
Atom
)