படத்தின் பெயரும் நடிகர்களின் பெயர்களும் காண்பிக்கப்படுகின்றன. ஒரு கப்பல். அங்கே தரையில் ஒருவன் பின்கழுத்தில் கத்தி குத்தபட்டு கிடக்கிறான். அங்கங்கே பேரல்களினின்று எரியக் கூடிய திரவம் வழிந்து கொண்டிருக்கின்றது. ஒருவன் எழுந்து கொள்ள முடியாமல் பேரல் ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருக்கிறான். நெருப்பை எடுத்து அந்த திரவத்தின் மீது எரிகிறான். அது தீப்பிடித்து நகர்ந்து செல்கிறது.
ஒரு இடத்தில் அதன் மேல் இன்னுமொரு நீர் வந்து விழுகிறது. நெருப்பு அதற்கு மேல் செல்ல முடியாமல் அங்கேயே நிற்கிறது. பிண்ணனி இசை மூளைக்குள் சென்று அதிர்வுகளை எழுப்பிய வண்ணம் இருக்கிறது. காட்சியை விட்டு சிறிதும் அகல முடியாத நிலை. மேலிருந்துவிழும் அந்த நீர் ஒரு மனிதனின் சிறுநீர். அவனின் முகம் இருளில் காட்டப்படவில்லை. நீளமான கருப்பு நிற கோட்.
படிகட்டுகளில் இறங்கி வருகிறான். சிகரெட் பற்ற வைக்கிறான். முன்னர் சொன்னது போன்றே ஒரு இசை. எப்படி இருக்க கீட்டன் ? என்று கீழே கிடப்பவனின் பெயர் தெரியப்படுத்தப்படுகிறது. இருளுடன் இருப்பவன் கொஞ்சம் பேசிவிட்டு கைகளில் துப்பாக்கியை அவன் முன் நீட்டுகிறான். வசனத்தினிடையில் அவன் பெயர் கீஸர் என்று சொல்லப்படுகிறது. துப்பாக்கி சூடு. சிகரெட்டை கீழே போடுகிறான். கப்பலின் ஒரு பகுதி வெடித்து புகையாகிறது.
***
நேற்று எனக்கு செய்முறை தேர்வு. இன்று விடுமுறை. என் அறையில் உள்ளவர்களுக்கோ இன்று தேர்வு. அவர்களும் வந்தவுடன் நாளைய தேர்விற்கு படிக்கலாம் என்று சும்மா இருக்க முடிவு செய்தேன். இந்நிலையில் தான் இப்படம் பார்க்கலாம் என்று தோன்றியது. ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்த என்னை முதல் காட்சியிலேயே உள்ளே இழுத்தது இப்படம். ஒரு ஆக்ஷன் படம் இப்படியல்லவா ஆரம்பிக்க வேண்டும். அந்த இசையின் அதிர்வுகள் இன்னமும் என்னுள் இசைந்து கொண்டே இருக்கிறது.
இப்படத்தைப் பற்றி நிச்சயம் என்னால் நிறைய எழுத இயலாது. இப்படத்தின் கதை பல முடிச்சுகளாக நிரம்பி இருக்கிறது. இது தான் கதை என்று யூகிக்கும் தருணத்தையும் இந்த திரைக்கதை கொடுக்கிறது. அடுத்த நொடியிலேயே அதை உடைத்து புதிய கதையை திரைக்கதையே தருகிறது.
ஒரு ட்ரக்கை கொள்ளை அடித்ததற்காக ஐந்து பேரை பிடிக்கிறது போலீஸ். இங்கிருந்து கதை தொடங்கி ஆரம்ப காட்சியில் நடந்த கப்பல் சண்டைக்கு செல்கிறது. இந்த குழப்பமான கதையின் வில்லன் யார் என்று கண்டறிவதே படத்தில் வரும் போலீஸ் மற்றும் பார்வையாளர்களின் வேலை. கப்பல் வெடித்ததையும் ஒரு போலீஸ் துப்பறிகிறார். இந்த இரண்டும் மாறி மாறி கப்பல் நோக்கி திரைக்கதை நகர்கிறது.
இது போன்ற படங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் இவன் தான் வில்லன் என்று அறிந்தவுடன் நமக்கு அதற்கடுத்த காட்சிகள் சுவாரஸ்யமற்றதாய் அமைந்துவிடும். பொதுவாக வில்லன்கள் நாயகனிடமிருந்தும் போலீஸிடமிருந்தும் தப்பிக்க பார்ப்பார்கள். இந்த படமோ கடைசி நொடி வரை வில்லன் யாராக இருக்கும் என்னும் உணர்வை தக்க வைத்திருக்கிறது. அறியும் தருணத்திலேயே படம் முடிந்தும்விடுகிறது.
இந்த படத்தின் இன்னுமொரு அசாத்திய தன்மை யாதெனில் படத்தில் வரும் அனைவருக்கும் சமமான அளவில் பாத்திரம் அமையப்பெற்றிருக்கிறது. சந்தேகப்படின் எல்லோர் மேலேயும் சந்தேகப் பட வேண்டி வரும். அப்படியொரு கதாபாத்திர அமைப்பு.
se7en பார்த்ததிலிருந்து கெவின் ஸ்பேஸியின் மீது எனக்கு ஒரு அபரிமிதமான ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. இப்படத்தில் அவரே கதை சொல்லி. முழுக்கதையும் அவரின் பார்வையிலேயே நகர்கிறது. இவரின் கதாபாத்திரமும் முதல் வசனத்திலேயே ஈர்த்துவிடுகிறது. எல்லோரையும் அவரே அறிமுகம் செய்கிறார். செய்துவிட்டு இங்கே நான் ஏன் மாட்டியிருக்கிறேன் என்று சொல்லும் போது அவரின் கதாபாத்திரம் என்னுள் பிடிக்க ஆரம்பித்துவிட்டது.
படத்தில் வில்லனை காண்பிக்காமல் டெவில் என்றே சொல்லி பயமுறுத்துகிறார்கள். வில்லனை காண்பிக்காமலேயே படம் கொடுக்கும் அதிர்வு இன்னமும் என்னுள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிறது. வில்லனைப் பற்றி ஒரு பஞ்ச் டையலாக்கும் படத்தில் இருக்கிறது. அத்துடன் இக்குறும்பதிவை முடிக்கிறேன்
The greatest trick the devil ever pulled… was convincing the world he didn't exist.
ஆக்ஷன் மர்மம் ட்விஸ்ட் விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு வரம்!!!
1 கருத்திடுக. . .:
பல 'திருப்பங்கள்' உள்ளது என்பது மட்டும் புரிகிறது...
Post a comment
கருத்திடுக