சமரசமில்லாத கதாபாத்திரங்கள்
கீரனூர்
ஜாகிர்ராஜாவின் கருத்த லெப்பை மட்டுமே
வாசித்திருக்கிறேன். அது எனக்கு பிடித்து
போனதன் காரணம் அநேக எழுத்தாளர்கள்
செய்யும் ஒரு பிழையை அவர்
செய்வதில்லை. நாவல்களை எடுத்துக் கொண்டாலே கதாபாத்திங்களும் நிகழும் களங்களும் நிறைய
வந்து செல்லும். இரண்டில் ஒன்றாவது நிறைய வரும். அப்படி
இல்லையெனில் அது நகுலனைப் போன்றவர்களின்
எழுத்துகளாக இருக்கும். அதன் அளவுகள் குறைவே.
நாவல்
என்பது பரந்து விரிந்த ஒரு
பகுதி. அங்கு எழுத்தாளன் சொல்ல
வருவதை சொல்வதற்கு நிச்சயம் நிறைய கதாபாத்திரங்கள் தேவைப்படுகின்றது.
இந்த தேவைகளை எப்படி அவர்கள்
சரிவர எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் தான் விஷயமே இருக்கிறது.
நாவல்களில் கதாபாத்திரங்கள் தேவையில்லை என்று சொல்வதற்கொப்ப நிச்சயம்
பாத்திரங்கள் இருக்கும்.
ரெயினிஸ்
ஐயர் தெரு போல் ஒரு
இடத்தை விவரிக்கும் நாவலாக இருப்பின் நிச்சயம்
அத்தெருவின் எல்லா கதாபாத்திரங்களையும் சொல்ல
வேண்டும். அம்மகளின் அகத்தை, அந்த நிலவியல்
எப்படி மாற்றியிருக்கிறது அல்லது அந்த நிலவியலை
அவர்கள் எப்படி மாற்றியிருக்கிறார்கள், காலத்திற்கொப்ப அவர்களின்
தடங்கள் அங்கே பதியப்படுகின்றனவா என்று
கேள்விகள் எழும்பி கொண்டே செல்கின்றன.
ஒரு இடத்தையே மையமாக கொள்ளும் நாவல்கள்
இக்கேள்விகளுக்கெல்லாம் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்.
அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடு, இரா.முருகவேளின் எரியும்
பனிக்காடு போன்றவைகளும் இந்த வேலையை செவ்வனே
செய்கின்றன. இவற்றில் சில மட்டுமே க்ளாஸிக்குகள்
ஆகின்றன.
அப்படி
நிலத்தை மையமாக கொண்ட கீரனூர்
ஜாகிர்ராஜாவின் நாவல் ஒன்றை வாசித்தேன்.
அவரின் நாவல் சலிப்புறாமல் செல்லும்
அளவு கதைகளில் ஆழத்தையும் வைத்து நிறைய கதைகளையும் சொல்லிச் செல்கிறார். அப்படி நான் வாசித்த
நாவல் மீன்குகைவாசிகள். இந்நூலின் முன்னுரையில் மீன்காரத் தெரு என்னும் அவரின்
முதல் நாவலின் தொடர்ச்சி போல
இருக்கும் என்று எழுதியிருந்தார். அதனாலேயே
இந்நாவலை முதலில் வாசித்தேன்(சண்டித்தனம்
தான்!)
மீன்காரத்
தெரு என்னும் குளத்தை ஒட்டி
இருக்கும் ஒரு தெருவையே இந்நாவல்
மையமாக பேசுகிறது. ஒரு தெரு எப்போதும்
ஆச்சர்யத்திற்குரியது. அத்தெருவின் வசிக்கும் எல்லோரும் ஆரம்பத்தில் பல்வேறு குணம் கொண்டவர்களாக
இருக்கிறார்கள். ஆனால் காலநேரத்திற்கொப்ப எல்லோரும்
ஒத்த கருத்துடையவர்களாக மாறுகிறார்கள். இது அவர்களுக்குள் இருக்கும்
பழக்கம் என்று எளிமையாக சொன்னாலும்
ஒரு மர்மம் ஒளிந்து கொண்டு
தான் இருக்கிறது. பொறாமைக் குணமும் தெருவினுள் நிகழும்
சண்டையால் ஏற்படும் வஞ்சமும் மக்களை எளிதில் மாற்றி
விடுகிறது.
இதை
எல்லோரும் உணர்ந்து தான் இருக்கிறார்கள். நாம்
வசிக்கும் தெருவை சுற்றி பார்த்தால்
கூட நாம் காணும் எல்லாமே
ஒரு நாடகம் தான். உண்மை
அல்ல. சிரித்து பேசுகிறார்கள். அடுத்தவர் குழந்தையை வாஞ்சையாய் அரவணைக்கிறார்கள். இடையிடையில் நிகழும் சண்டையில் வசை
வார்த்தைகளை கொண்டு திட்டுகிறார்கள். மீண்டும்
பழகுகிறார்கள். எல்லாம் புறத் தோற்றத்தில்.
உள்ளே எப்படி இருக்கும் ? கண்
முன்னே நிகழும் எல்லா அபத்தங்களையும்
எல்லா கண்களும் கண்டு கொண்டு தான்
இருக்கின்றன. அதனுடன் எல்லோரும் பழகிக்
கொள்கிறார்கள்.
ஆனால்
அவர்களுக்குள்ளே ஒரு மாற்று இருக்கிறது.
இந்த மாற்று எல்லோருக்கும் தெரியாமல்
மறைத்து இரகசியமாக காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த மாற்று வழியை
அனுபவிக்கும் தருணங்களிலெல்லாம் அவர்கள் சந்தோஷம் கொள்கிறார்கள்.
அதுவே அவர்களுக்கான வாழ்க்கையாகிறது. இந்த அபத்தங்களினூடே இருக்கும்
மாற்று வழியை புனைவின் மூலம்
கீரனூர் ஜாகிர்ராஜா முன்வைக்கிறார்.
மீன்காரத்
தெருவில் பல குடும்பங்கள் இருக்கின்றன.
அவற்றில் இரண்டை எடுக்கிறார். ஒன்று
அமீனா இருக்கும் குடும்பம். இன்னொன்று சண்முகம் இருக்கும் குடும்பம். அமீனாவின் குடும்பத்தில் ரஜீனாவும் அமீனாவும் வேசித் தொழிலை செய்கின்றனர்.
அந்த வேலையை அவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
இந்நிலையில் அமீனா கர்ப்பமாகிவிடுகிறாள். அவள் சென்று
கொண்டிருந்த வீட்டில் இருப்பவர் அவளை விலக்கிவிட்டார். அவள்
நொண்டி நசீரின் வீட்டிற்கு செல்கிறாள்.
இதை இங்கு நிறுத்துவோம்.
சண்முகம்
ஊரில் பூசாரியின் குறியை அறுத்துவிட்டு ஓடிவிடுகிறான்.
பம்பாய் சென்று வேலை செய்து
பின் ஒரு இசுலாமிய பெண்ணை
காதலித்து அவளுக்காக முஸ்லீமாக மாறி மீண்டும் ஊருக்கு
வருகிறான். ஊருக்குள் மின்சாரத்தை கொண்டு வர பிரயாசை
கொள்கிறான். இந்த இரு மக்களின்
வாழ்க்கையும் எப்படி அந்த ஊரால்
மாறுகிறது என்பதை நாவல் விவரிக்கிறது.
அதை
மட்டும் சொல்லாமல் இந்த இருவரின் பார்வையில்
ஊரை காண்பிக்கிறார். ஒரு பார்வையில் ஊரே
அபத்தமாக இருக்கிறது. அந்த அபத்தத்திலிருந்து விலகி
நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று
ஏங்குகின்றது. அமீனா மட்டும் மாற
வேண்டும் என்று நினைக்கவில்லை. மாறாக
எல்லோரின் நிலையும் மாற ஆசை கொள்கிறாள்.
அந்த தெருவில் இருக்கும் எல்லோரின் மேலும் அன்பு எல்லோருக்கும்
கசிகிறது. ஒரு இடத்தில் மதம்
தாண்டிய அன்பு கசிகின்றது என்பதையும்
காட்டுகிறார். சுபைதய்யா என்னும் பாத்திரம் கிணற்றில்
விழும் போது ஒரு சக்கிலியன்
காப்பாற்றுகிறான். அவன் மேல் அவளுக்கு
ஆசை வருகிறது. இந்த இடங்கள் மெல்லிய
காற்று வருடி செல்வது போல
இருக்கிறது.
இதே
போல் தான் அமீனாவும் நசீரும்
பேசிக் கொள்ளும் இடங்கள். நசீர் வரும் பக்கங்களிலெல்லாம்
கலையே மகத்தான மாற்று வழி
என்று சொல்கிறான். கலை என்பதையே அறிந்திராத
அமீனாவிற்கு இது விந்தையாக இருக்கிறது.
அந்த பக்கங்களில் நசீரின் பேச்சாக இப்படி
வருகிறது
கலை
எப்பவுமே பாவம் ஆகாது ஆமி.
அதை புறக்கணிக்கறது தான் பாவம்
மகத்துவத்தை
கலையாக மாற்றும் போது அதன் மகோன்னதம்
மறைந்து கலைத்துவம் என்னும் விஷயம் குடிபுகுந்துவிடுகிறது
என்னும் அடிப்படைவாதமும் கலைப் பார்வையும் எதுவுமே
தெரியாத அமீனாவிடம் முறையிடுகின்றன. அமீனாவின் விதமாய் வாதங்கள் மாறுகின்றன.
இது எல்லாவற்றையும் எள்ளலுடன் கொடுத்திருக்கிறார்.
நான்
லீனியர் வகையிலேயே கீரனூர் ஜாகிர்ராஜா எழுதுகிறார்.
இந்நாவலில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு
தலைப்புகளை சுமந்து வருகிறது. எல்லாமே
ஒரு சிறுகதை போலத் தான்
இருக்கின்றன. எள்ளலும் துய்ப்பும் ஒவ்வொரு பக்கத்திலும் நிரம்பி
வழிகிறது. முன்பே சொன்னது போல
ஒரு கதாபாத்திரத்தை ஏற்றி அடுத்த கதாபாத்திரத்தை
குறைவாக பேசி நாயகன் நாயகி
என்று சொல்லாமல் எல்லோருக்கும் தகுந்த அளவு பக்கங்களை
கொடுத்து அருமையாக படைத்திருக்கிறார். மொத்தத்தில் மீன்குகைவாசிகளே நாயகர்களாக இருக்கிறார்கள்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக