முல்லை மீதொரு இரத்தக்கறை
பன்னிரெண்டாவது
வரை மட்டுமே சங்க இலக்கியம்
சார்ந்து வாசித்து வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் தமிழின் ஐந்திணைகள், சிறுபொழுது,
பெரும்பொழுது என்று எதைக் கேட்டாலும்
அத்துபிடியாக பதில் சொல்வேன். இப்போது
எதுவுமே நினைவிற்கு வரமாட்டேன் என்கிறது. தேடி வாசித்தால் தான்
சுகமாக இருக்கிறது. வகுத்தவன் எதை நினைத்து வகுத்தான்
என்று தான் தெரியவில்லை. எல்லாம்
சாலப் பொருத்தமாகவே இருக்கிறது.
நாம்
இருக்கும் இடங்களுக்கேற்ப நம் மனங்கள் மாறுபடுகின்றது
என்னவோ எல்லோரும் அறிந்தது. இந்த மாறுதல்கள் உலகமயமான
உண்மை என்று திணைகளாக பிரித்துள்ளனர்.
அத்திணைகளுள் ஒன்று தான் முல்லை.
முல்லைத் திணையின் பொருள் கூறும் பொழுது
புறப்பொருள் நிமித்தம் என்று சொல்கிறார்கள். இது
சற்று காதல் கலந்ததும் கூட.
தலைவன் பிரிந்து செல்கிறான். அவன் செல்லும் வேலை
இனிதே முடிந்து மீண்டும் தன்னிடம் வந்து சேர வேண்டும்
என்று இருப்பதே இத்திணையின் நோக்கம்.
இதை
சொன்னதன் காரணம் இத்திணை கூறும்
விஷயங்கள் இன்னமும் அப்படியே தான் இருக்கிறது. இயற்கையை
வயல்வெளிகளை காடுகளை விரும்புபவர்களுக்கு எல்லா
உறவுகளுமே முதலில் அந்த இயற்கை
தான். அது கொடுக்கும் அந்யோன்யம்
வேறு எதுவும் தரப் போவதில்லை.
என் வீட்டின் பின்னிருக்கும் தென்னைமரமே எனக்கு என் வீட்டை
முதலில் நினைவில் கொண்டு வந்து நிறுத்தும்.
மரத்துடன் பேசினால் கூட நமக்குள் பைத்தியமோ
என்னும் சபலம் தட்டவே தட்டாது.
இப்படி அழகியலை நிரம்ப கொண்டிருக்கும்
இயற்கை, காடுகள் ஏன் ஒரு
ஆற்றாமையை தன்னுள்ளே வைத்திருக்கிறது. வசீகரமான சோகம் இவ்விஷயம். A melancholy.
இந்த
சோகமயம் நிரம்பிய காடு சார்ந்த வன்மங்களை சோளகர் தொட்டி என நாவலாக்கியிருக்கிறார் ச.பாலமுருகன். எரியும்
பனிக்காடு நாவல் பரதேசி படமாக
வெளியானபோது தான் இந்த நாவலை
நான் அறிந்து கொண்டேன். அறிந்து
கொண்டதைக் காட்டிலும் வாசித்தது அதி தாமதமாகவே அமைந்தது.
ஒவ்வொரு
காலத்திலும் சில இலக்கியவாதிகள் எதிர்
காலம் சமூகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களை மறந்து
விடுதல் கூடாது என்னும் நோக்கில்
நிகழும் அரசியல் மாற்றங்களை எழுத்தில்
பதிவு செய்கிறார்கள். சிலர் அக்காலத்தில் நிகழும்
பல்வேறு சமூக கோட்பாடுகளையும் பதிவு
செய்கிறார்கள். லத்தின் அமேரிக்க இலக்கியங்களில்
சிலரின் எழுத்துகள், குறிப்பாக புனைவெழுத்துகள் புரட்சிக்கே காரணமாக அமைந்திருக்கிறதாம். இந்நிலையில்
நாம் இது போன்ற நூல்களின்
மூலம் மட்டுமே புனைவுகளில் இந்தியாவின்
குறுக்குவெட்டு தோற்றத்தை காண்கிறோம்.
எரியும்
பனிக்காடு, சோளகர் தொட்டி, ப.சிங்காரத்தின் நூல்கள், பதினெட்டாவது அட்சக்கோடு, the story of my
assasins முதலிய நூல்கள் மூலம் மட்டுமே
என்னைப் போன்ற சமூகம் சார்ந்த
குறைந்தபட்ச அறிவுடையவர்களுக்கு இந்தியாவின் பன்முகங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
நான் புனைவுகளையே தேடி தேடி வாசிப்பதால்
மேலே உள்ள நூல்களை குறிப்பிட்டேன்.
நான் ஒவ்வொரு நூலிலும் சமூகத்தின்
அதிகாரம் சார்ந்து ஏதேனும் அறிந்து கொள்கிறேன்
எனில் அது முழுக்கவே எனக்கு
புதியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு நாவல் தான்
சோளகர் தொட்டியும்.
வீரப்பனின்
மரணம் நிகழ்ந்த சமயத்தில்
எந்த ஒரு பாதிப்பையுமே எனக்கு அச்செய்தி அளிக்கவில்லை. செய்தி தொலைக்காட்சிகள் பிடிக்காது,
பாடல் பிடிக்காது, நடிகர்கள் தாவித் தாவி சண்டையிடும்
படங்கள் மட்டுமே எனக்கு பிடித்தமாய்
இருந்த பருவத்தில் வீரப்பனை சுட்டு வீழ்த்தினர். அப்போது
எனக்கு தெரிந்ததெல்லாம் சந்தன மரத்தை கடத்தினார்.
தவறென போலீஸார்கள் தேடினர். சுட்டு வீழ்த்தினர். அதுவும்
அப்பொழுது சினிமாக்களில், அப்போது மட்டுமல்ல இப்போதும்
சினிமாக்களில் போலீஸ்காரர்கள் வீர தீர பராக்கிரம
சாலிகளாக காட்டுவதனால் வீரப்பனை கொன்ற போலீஸார்களையும் இராணுவத்தின்
உதவியையும் அப்போது கொண்டாடினேன். திரையில்
வரும் போலீஸார்களை விட நிஜப் போலீஸ்
அதி நேர்மையானவர்கள், வீரர்கள் என்று. இந்த நூல்
அதிகாரம் இந்தியாவில் செய்த வன்மங்களை வர்ணிக்கின்றது.
நினைவுகளாக என்னுள் படிந்திருக்கும் வீரப்பன்
சார்ந்த விஷயங்கள் வேறு உருவம் கொள்கின்றன.
இதை
எழுதிய ச.பாலமுருகன் பி.யு.சி.எல்
என்னும் அமைப்பில் இருந்திருக்கிறார் என்னும் குறிப்பு நூலில்
இருக்கிறது. அது மனித உரிமைகளுக்காக
உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அதிலிருந்து பழங்குடியின
மக்களோடு இருந்து அவர்களின் அவலங்களை
பதிவு செய்திருக்கிறார். எழுத்தில் வல்லமை அல்லது சொல்
விளையாட்டு போன்றவற்றை மட்டும் எதிர்நோக்குபவர்களுக்கு இந்நாவலில் ஒன்றுமே
கிடைக்காது. ஓரிடத்தில் மட்டும் இந்த விஷயம்
நாவலில் குறையாய் இருக்கிறது. அதை கடைசியாய் சொல்கிறேன்.
இது முழுக்க முழுக்க துரத்துபவர்களுக்கும்
துரத்தப்படுபவர்களுக்கும் இடையே இருக்கும் வலி
மற்றும் அதிகாரத்தை விரிவாய் விவரிக்கும் நாவல்.
நாவல்
தன்னுள்ளே இரண்டாய் பிளவுபட்டு நிற்கிறது. முதல் பாகத்தில் அதிகாரத்தின்
ஆரம்பத்தை மட்டுமே சொல்லியிருக்கிறார். மனிதன்
குழுக்களாய் வாழ்ந்தே பழக்கப்பட்டிருக்கிறான். அந்த குழு உருவாகும்
போதே அங்கு ஒற்றுமை நிலவ
வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. சிலரின் பலங்கள் ஒடுங்கிவிடுகின்றன.
பலரின் பலவீனம் குழுவிற்கே பரவிடுகின்றது.
இந்த இரண்டும் சமநிலையில்லாமல் போகும் போது அங்கே
சீர்குலைவு ஏற்படும் வாய்ப்பு அமைகிறது. இதைத் தான் நாவலில்
வரும் தொட்டி என்னும் ஊரில்
இருக்கும் சோளகர்களுக்கு நிகழ்கிறது. அவர்களுள் இருக்கும் பலவீனம் அதிகாரத்தைக் கண்டு
அஞ்சுதல். அறிந்து கொள்ளும் அடுத்த
நிமிடத்திலிருந்தே தொடர்ந்து அதிகாரத்தை செலுத்த ஆரம்பிக்கிறார்கள். இதைத்
தாக்கு பிடிக்க முடியாமல் போக
அவர்களின் நம்பிக்கை சிதிலமடைகிறது. இதோடு அவர்களின் வம்சத்திற்க்கென
இருக்கும் வரலாற்று கதைகளையும் அங்கு இருக்கும் பல்வேறு
இன மக்களையும் சொல்லிச் செல்கிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் முதல்
பாதி முழுக்க கொஞ்சம் வன்மையும்
நிறைய மென்மையும் கொண்டது.
இரண்டாம்
பாகமோ முழுக்க வன்முறைகள். வீரப்பனை
பிடிக்க வேண்டி சுற்றியிருக்கும் கிராமங்களில்
இருக்கும் சிறுபான்மையின மக்களிடம் கர்னாடக போலீஸும் அவர்களைத்
தொடர்ந்து தமிழக போலீஸும் செய்த
வன்கொடுமைகளை இந்நாவலின் இரண்டாம் பகுதி முன்னிலைப் படுத்துகிறது.
வீரப்பனுக்கு உணவு மற்றும் இதர
தேவைகளை இங்கிருந்தே அனுப்புகிறார்கள் என்று மக்களை தூக்கி
சென்று துன்புறுத்துகிறார்கள். பெண்களை பிறப்பு உறுப்புகளில்
சித்ரவதை செய்வது மட்டுமில்லாமல் இரவு
நேரங்களில் கற்பழித்தலையும் சடங்கு கணக்காய் செய்கிறார்கள்.
இவர்களின் விடிவு காலம் எப்படி
இருக்கும் என்பதை இந்நாவல் சொல்லவில்லை.
மாறாக முல்லைக்கு மேலே சொல்லியிருக்கும் பொருள்
சார்ந்து நாவல் முடிகிறது.
சராசரி
வாழ்க்கையினின்று வன்கொடுமை வாழ்க்கைக்கு செல்லும் மனிதர்களின் மனமும், மீண்டும் அங்கிருந்து
இருத்தலுக்காக அலையும் போது இருக்கும்
மனதினையும் குறுக்கு வெட்டு தோற்றமாக காட்டியிருக்கிறார்
பாலமுருகன். இந்நாவலில் காட்டும் வன்முறையின் உச்சம் எப்படி சொல்லியிருக்கிறார்
எனில் ஒரு பெண் தன்னை
கொடுமைபடுத்தியவரையே நன்றியுடன் நினைவில் கொண்டு விடைபெறுகிறாள். காரணம்
தன்னை இவராவது உயிருடன் விட்டாரே
என.
இந்நாவலில்
எனக்கு ஒரே ஒரு குறை பட்டது.
வன்முறைகள் நாவலில் குவிந்து கிடக்கின்றன.
மென் உள்ளம் கொண்டவர்களால் இந்நாவலின்
இரண்டாம் பாகத்தை முகம் சுழிக்காமல்
வாசிக்கவே இயலாது. அப்படி இருக்கும்
வன்முறைகளில் அழகியல் இல்லை என்பது
என் தனிப்பட்ட குறை. அதிகாரத்தை மட்டுமே
இந்நாவல் மையம் கொண்டுள்ளதால் இவர்
விவரிக்கும் சித்ரவதைகள் ஒரு செய்தியின் தொனியையே
எனக்கு கொடுக்கிறது. வன்முறையை அதிகம் விரும்புபவன் ஆதலின்
இவ்வேக்கம் என்னுள் எழும்பியிருக்கலாம்.
இன்னுமொரு
குறையும் பட்டது. ஆனால் அதை நண்பர் நிவர்த்தி செய்துவிட்டார். அந்த குறையானது இதில் பேச்சாக வரும்
பகுதிகளில் உபயோகபடுத்தியிருக்கும் மொழி கதைசொல்லியின் மொழியாகவே
இருக்கிறது. சோளகர் மக்களுக்கு பிரத்யேக
வழக்கு மொழிகள் இல்லையா ? அவர்களைப்
பற்றி இந்நூல் முலம் மட்டுமே
அறிந்து கொள்கிறேன். ஆதலால் சந்தேகமாய் இக்கேள்வி
என்னுள் ஆரம்பத்திலிருந்து எழுந்து துரத்திக் கொண்டே
வந்தது. நண்பர் முன்னுரையில் இருக்கும் விஷயத்தை நினைவூட்டினார். அவர்களுக்கென பிரத்யேகமான மொழி உள்ளது அதை வாசகர்களுக்காக எளிமை படுத்தியிருக்கிறோம் என சொல்லியிருக்கிறார்.
இதைத்
தவிர இந்நூல் நாம் காணும்
இந்தியாவின் தமிழகத்தின் அறிந்திராத தோற்றமாக இருக்கிறது. உடலை ரசிக்கும் யாரும்
அதன் உள்ளுறுப்புகளை ரசிப்பதில்லை. அதே போல் தான்
இந்நாவலில் பேசப்படும் அரசியலும் சோளகர்களும்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக