நூற்றாண்டின் கதைசொல்லி
இப்பதிவின்
ஆரம்பத்தில் நான் அறிந்த சில கதைசொல்லிகளைப் பற்றி சொல்லி செல்லலாம்
என்றிருக்கிறேன். கதைசொல்லிகள் புனைவின் முக்கிய புள்ளிகள். ஆனால்
அவசியமானதன்று. நாவலின் அமைப்பைப் பொறுத்து
இந்த கதைசொல்லி அமைகிறார்கள். ஒரு நாவலைப் பொறுத்தமட்டில்
மட்டும் சொல்கிறேன். ஒவ்வொரு நாவலும் பெரிய
கதையொன்றை சுமந்து செல்கிறது. அதை
சிலர், குறிப்பாக கட்டமைப்பில் புதியதை வைக்க நினைப்பவர்கள்
கதையை உடைத்து முழுமையான கதை
என்னும் அம்சத்தையே குலைத்து சிதறடித்துக் கொடுப்பார்கள். உதாரணம் சாரு நிவேதிதா,
நகுலன் போன்றவர்கள். அவர்களின் புனைவுகளில் கதை இருக்கும். கண்டறிய
வேண்டிய கடமையும் வாசகனிடம் நிறைந்து இருக்கும். ஆக இவர்களைப் போன்றவர்கள்
கதைசொல்லி என்னும் அம்சத்தினுள் வரவே
மாட்டார்கள்.
இந்த
கருத்து அநேகம் பேருக்கு முரணாக
படலாம். காரணம் சாருவின் புனைவுகளை
வாசித்தவர்கள் அவர் கதை சொல்கிறாரே
என்று சொல்வர். அவருடைய நாவல்களில் parables நிறைய
வரும், ஜென் கதைகள் போல.
அது மட்டுமில்லாமல் நிறைய கதைகளை சம்மந்தமில்லாமல்
சொல்வார். இந்த வார்த்தைப் பிரயோகமே
தவறு. இருந்தாலும் சொல்வதன் காரணம் இதை வாசிப்பவர்களுக்கு
புரிய வேண்டுமே என்னும் நோக்கத்தில். அந்த
முறை நான் லீனியரினுள் அடங்கும்.
நாவல் முழுமையில் என்ன கதையை சொல்கிறது
என்பதை மட்டுமே நான் இங்கே
நோக்க ஆசைப்படுகிறேன்.
அப்படி
கதை சொல்லி என சொல்ல
ஆரம்பித்தால் அசோகமித்திரன், ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பெருமாள்
முருகன் தொடங்கி சமகாலத்து சாம்நாதன்
வரை எல்லோரும் அடங்குகிறார்கள். இந்த எல்லோருடைய கதைகளையும்
உற்று நோக்கினால் கதையமைக்கும் விதத்தில் ஒரு ஒற்றுமையை நிச்சயம்
காண முடியும். அதாவது ஒரு நாவலினுள்
இருபது கதாபாத்திரம் வைப்பதாக இருப்பின் இருபது பேரினையும் ஒரே
இடத்தில் சொல்லாமல், அங்கங்கு அத்தியாயங்களாய் சொல்லி பின் எல்லாவற்றையும்
ஒன்று சேர்ப்பார்கள். இந்த இடங்களில் எவ்வளவு
சுவாரஸ்யங்களை வைக்கிறார்களோ அதைப் பொருத்தே வாசகனின்
வாசிப்பு உயிர்ப்பு பெற்றிருக்கும்.
இந்த
கதைசொல்லிகளில் மாற்றத்தை காண முடியுமா, வித்தியாசத்தை
காண முடியுமா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன்.
யதார்த்தவாதம், மார்க்ஸீயம், மாயா யதார்த்தவாதம் என்று
எதை எடுத்துக் கொண்டாலும் எல்லாவற்றிலும் மேலே சொன்ன விஷயங்களே
தழைத்தோங்கி நிற்கின்றன. இந்த கோட்பாடுகளைத் தாண்டிய
கட்டமைப்பை காண்பது கடினமாக இருக்கிறது.
பாக்கெட் நாவல்களை எடுத்தால் கூட இந்த நிலைதான்.
இந்த தேடலை மனத்தின்கண் வைத்து
தான் கூகை என்னும் நாவலை
கையிலெடுத்தேன். ஃபேஸ்புக் நண்பர்களில் சிலர் இந்நாவலை கொண்டாடியிருந்தார்கள்.
ராஜராஜேந்திரன் என்பவரின் கொண்டாட்டமே இந்நாவலை வாசிக்க தூண்டியது.
அந்நாவலின்
முன்னுரையில் ஆசிரியர் சோ.தர்மன் இப்படி
குறிப்பிடுகிறார்
“காலவெளியில்
ஒரு சமூகம் தன்னைத் தானே
எப்படி கடந்து போகிறது என்பதை
காட்சிப்படுத்த, மற்ற எந்த வடிவத்தை
விடவும் நாவல் வடிவமே மிகவும்
சரியான வடிவம் என்று கருதுகிறேன்”
இது
எனக்குள் இன்னமும் ஆர்வத்தை தூண்டியது. ஒவ்வொரு எழுத்தாளருக்குள்ளும் நாவல் எவ்வடிவத்தில்
இருத்தல் வேண்டும் என்னும் எண்ணம் ஒன்று
இருக்கும். அது மட்டுமில்லாமல் நாவல்
சார்ந்த கோட்பாடு அவரவர்க்கே உரித்தாய் இருக்கும். இந்த வாக்கியம் மூலம்
சோ. தர்மனின் உள் இருக்கும் நாவல்
என்பது எப்படி இருக்கும் என்று
அறிய ஆசைபட்டேன். நாவலை தொடங்கினேன்.
வாசித்தல்
என்பது இந்நாவலை பொருத்த மட்டில் A pleasurable pain. எல்லா நாவல்களிலும் பல்வேறு
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்ய, சம்பவங்களை நிகழ்த்த,
சம்பவங்களை ஒன்றிணைக்க ஆசிரியர்கள் அத்தியாயங்களை வகுப்பர். அத்தியாயம் என்பதே வாசகனுக்கு கொடுக்கப்படும்
இடைவெளியின் குறியீடு. த்ரில்லர் வகை நாவலாகவே இருப்பினும்
அத்தியாயங்கள் முடியும் தருணத்தில் ஒரு இடைவெளி இருந்து
கொண்டே தான் இருக்கிறது. அதை
தெரிவு செய்வதும் செய்யாமல் இருப்பதும் வாசகனின் விருப்பமாகிறது. இந்நாவலில் அத்தியாயங்களே இல்லை. முதல் 236 பக்கங்களுக்கு
ஒரு பகுதி அல்லது பாகம்.
மீத பக்கங்களுக்கு இரண்டாம் பாகம்.
இப்படி
இரண்டாக பிளவு கொண்டிருந்தாலும் நாவலில்
மேலே சொல்லியிருந்த எல்லா விஷயங்களும் இந்நாவலிலும்
உள்ளது. பல்வேறு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு
கதாபாத்திரத்திற்குமான வரலாறு, நிலவியலின் வரலாறு,
வன்மங்களின் வர்ணனைகள் என்று நிரம்பி வழிகிறது.
என்னால் யோசிக்க முடியாத விஷயமும்
கொண்டாட்டமான விஷயமும் இங்கு தான் அடங்கி
இருக்கிறது. எல்லா விஷயங்களையும் ஒரே
மூச்சாக சொல்லி செல்வது எப்படி
என்று தான் தெரியவில்லை. நாவலை
இடைவேளியே இல்லாமல் வெவ்வேறு நிலவியலுக்கு தாவுகிறார், மார்க்ஸீய விஷயங்களை பேசுகிறார், நாவலினூடே மேஜிக்கல் ரியலிஸக் கதைகளை சொல்கிறார், கடவுள்
சார்ந்து தர்க்கம் செய்கிறார், இடைவெளி மட்டும் இல்லாமல்
இருக்கிறது.
இந்நாவல்
அப்படி என்ன சொல்கிறது என்று
பார்த்தால் இது தலித்துகளை மையப்படுத்தும்
தத்துவார்த்த அல்லது பக்தி நாவல்.
கடவுள் என்பது ஒரு நம்பிக்கை.
அது அவரவர்களின் இச்சைகள் சார்ந்தது. இந்த நம்பிக்கையை நாம்
பொருளாக பவித்து சுமந்து கொண்டு
செல்கிறோம். எல்லா இடங்களுக்கும் சுமந்து
கொண்டே செல்கிறோம். இந்த சுமையை நம்மால்
இறக்கி வைக்க முடியவில்லை. ஆனால்
மனதிலிருக்கும் ஒரு எண்ணம் இந்த
சுமையை எல்லோரும் சுமக்க வேண்டும் என்பது.
இந்த எண்ணம் ஒரு மனிதனை,
அவனை சுற்றியிருக்கும் மக்களை என்ன செய்கிறது
என்பதை நாவல் விரிவாக பேசுகிறது.
இந்த விரிவு கொண்டுள்ள வேகம்
அசாத்தியாமானது.
இந்த
விஷயத்தை வெறுமனே சொல்லாமல் கீழ்த்தட்டு
மக்களின் அன்றாடத்தை விளக்குகிறார். சாதி ரீதியான பேதங்களில்
பெரிதாய் குடி கொண்டிருப்பது அதிகாரம்
தான். இந்த அதிகாரமோ ஒரு
சங்கிலித் தொடர். இந்த அதிகாரம்
இல்லையெனில் இருநிலையில் இருக்கும் மக்களுக்கும் சுமுகமான வாழ்க்கை கிடைக்காது. மேல் சாதிக்காரன் கீழ்சாதிக்காரன்
மீது அதிகாரம் செய்யவில்லையெனில் அவனின் அபத்தமாக கருதப்படும்
விஷயங்கள் நடந்தேறாது. அபத்த விஷயங்களெனில், பீ
அள்ளுவது, பிணந்தூக்குவது போன்ற செயல்கள். அதே
கீழ்சாதிக்காரர்களைப் பொறுத்தவரை பொழைப்பே நடக்காது. நடக்கவில்லையெனில் வரவு இராது. இரு
வேறு மக்களின் உளவியல். பிரச்சினையும் கூட. கேட்க அபத்தமாகவோ
பூர்ஷ்வா தனமாகவோ இருந்தாலும் கூட
இது தான் நாவலில் இருக்கும்
மனிதர்களின் அகம்.
இந்த
இருபக்கத்திலும் விதிவிலக்குகள் இருக்கிறார்கள். அந்த விதிவிலக்குகள் சுயசாதிகாரர்களிடையே
கூட எதிரிகளாக கருதப்படுகிறார்கள். அவர்கள் மீதும் அதிகாரம்
செலுத்தப்படுகிறது. அப்படிப்பட இரண்டு விதிவிலக்கு மனிதர்களையே
இந்நாவல் கதநாயகர்களாக்கி கதையை நகர்த்துகிறது.
பள்ளக்குடி,
பறக்குடி, சக்கிலியக்குடி இவர்கள் தான் கதைப்படி
கோவில்பட்டியருகே இருக்கும் கிராமமொன்றின் கீழ்சாதிக்குடிகள். இவர்கள் மேல் அவ்வூர்
ஜமீந்தார்களும் மேல்ஜாதி மனிதர்களும் அதிகாரம் செலுத்துகிறார்கள். இந்த நிலையில் நடராஜய்யர்
என்பவர் சீனி என்பவனிடம் தன்
நிலத்தையெல்லாம் அவர்களின் சாதிக்கு, பள்ளக்குடியில் இருக்கும் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு பட்டணம் செல்லலாம் என்றிருக்கிறார்.
அவர்கள் வேலை செய்து அவருக்கு
தேவையானதை அல்லது கொள்முதலை கொடுத்துவிடுவார்கள்.
அவரும் சம்பளம் கொடுத்து விளைவதில்
ஒரு பங்கையும் கொடுக்கிறார்.
அதிகாரம்
ஒருவனுக்கு வரும் நேரத்தில் அவனுக்குள்ளேயே
ஒரு பொறுப்பும் குடியேறுகிறது என்று சொல்வார்கள். இவர்களுக்குள்
உருவாகும் பொறுப்பு என்னவாகிறது ? சாதி ரீதியான விடுதலைக்கு
வழிவகுக்குமா ? அப்படியே வழிவகுத்தால் மேட்டுக்குடியினர் அந்த சுதந்திரத்தை விட்டுவிடுவார்களா
என்று நாவல் விஸ்தீரணம் கொள்கிறது.
இந்நாவலின்
புழங்கும் மொழியானது அவ்வளவு அழகியல் நிறைந்ததாய்
இருக்கிறது. பேச்சு வழக்கில் தெரியும்
நெல்லையின் வாடை வசீகரம் நிரம்பியதாய்
இருக்கிறது. கதைசொல்ல வேண்டிய இடத்தில் இரு
வேறு உருவங்களை அவர் கைக் கொள்கிறார்.
ஒன்று அந்த கதையை சொல்லிப்
போவது. சில இடங்களில் கதையை
நேரடியாக சொல்லாமல் விலங்குகளை, பறவைகளைக் கொண்டு சொல்லிச் செல்கிறார்.
இந்த இரண்டாம் இடங்களில் சோ.தர்மனின் கோட்பாடுகள்
நேரடியாக நாவலில் தெரிகிறது. நாவல்
என வரும் போது இது
குறையாகபட்டாலும் அங்கிருக்கும் மொழி நம்மை வசீகரத்தின்
சுழற்சியில் உள்ளிழுத்துக் கொள்கிறது.
இதுமட்டுமில்லாமல்
நாவலில் ஆசிரியர் கதாபாத்திரங்களாய் நுழைக்கும் எல்லோருக்கும் ஒரு பின்புலக் கதையை
வைத்திருக்கிறார். இடைவெளிக்கான இடமின்றி செல்லும் நாவலில் எங்கேனும் ஒரு
இடத்தில் இந்த பின்புலத்தை சொல்லிவிடுகிறார்.
சில இடங்களில் அதை வாசிக்கும் போது
சுவாரஸ்யமாக இருப்பினும் எதற்கு வருகிறது என்று
சந்தேகத்தை கொடுக்கிறது. அதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட
கதாபாத்திரத்தை சாதாரணமாக அறிமுகம் செய்யும் போது நமக்கு அக்கதாபாத்திரத்தை
முழுமையாக அறிந்த திருப்தி கிடைக்கிறது.
கதாபாத்திரங்கள் பழக்கப்பட்ட மனிதர்களாகிவிடுகிறார்கள்.
இதைத்
தவிர நாவலில் இருக்கும் மாயா
யதார்த்த தன்மைகள். கூகையை குலதெய்வமாக நினைப்பவன்
நாயகன் சீனி. அந்த கூகை
சார்ந்து விவரிக்கும் விஷயங்கள் கற்பனையின் உச்சத்தில் இருந்தாலும் யதார்த்த உலகிலிருந்து அவற்றை கூறாக எடுத்து
சொல்வதால் நம்பகத் தன்மை நிறைந்து
காணப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் திடிரென தோன்றும் தோற்றங்களான
கடவுளர்களுக்கும் இப்படி நிறைய கதைகள்
நாவலில் புழங்குகின்றன. இரண்டாம் பாகம் முழுக்கவே ஒரு
மேஜிக்கல் ரியலிஸக் கதை தான்.
முதல்
பாகம் முழுக்க கடவுள் தன்மை
ஊரை என்ன செய்கிறது என்பதை
காட்டுகிறது. இது கூகைச் சாமியாகவும்
நாவலின் இடையில் முளைத்தெழும் கிறித்துவமாக
இருந்தாலும் அருமையாக சொல்கிறது. இடையிடையில் சோ. தர்மனும் மகாபாரதம்
வேதாகமம் என்று நிறைய மேற்கோள்களை
சொல்லிச் செல்கிறார்.
இவர்
சொல்லும் அல்லது காட்டும் கடவுள்
தன்மையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நானும் அதையே விரும்புகிறேன்.
ஒரு இடத்தில் பௌத்தத்தை நாவலுள் நுழைக்கிறார். கடவுள்
நிர்வாணமாக இருப்பதே நன்று என்கிறார். இயற்கையையே
கடவுளாக நினைப்பவன் சீனி. கூகை ஒரு
பயந்த பட்சி. அப்படி இருக்கையில்
அந்த பறவையை வழிபடுவது எல்லோருக்கும் சிறப்பாக தெரியவில்லை. சீனி சொல்வதோ கூகை
கற்றுத் தருவது பொறுமையை என.
இந்நிலையில் நாவலில் ஒரு பாத்திரம்
கூகைச் சாமிக்கு அணிவித்துவிடு என நகைகளை தருகிறது.
அப்போது நாயகன் சொல்லும் விஷயம்
//கூகைச்
சாமியின் நிர்வாணத்தை மறைக்க வேண்டாம். ஏனெனில்
பறவைகளின் அழகே அதன் நிர்வாணம்தான்.
பறவைகளின் தூய்மையும் நிர்வாணம்தான். அதுவும் கூகை தன்மேல்
நிறம்கூட விரும்பாத சுத்த நிர்வாணி. முக்தியின்
வாசல், நிர்வாணம்//
முக்தியை
பேசும் இந்நாவல் வேறு ஒரு இடத்திற்கு
இதற்கு மாற்றான ஒரு கருத்தை
முன் வைக்கிறது. மதமாற்றம் நிகழும் தருணத்தில் நாயகன்
முக்தியை விரும்பாமல் நிறைய சொல்கிறான். இறந்த
பிறகு என்ன ஆவேன் என்பது
எனக்கு எப்படியும் தெரியவில்லை. தெரியப்போவதுமில்லை. அப்படியிருக்கையில் நான் ஏன் இருக்கும்
போது என் மனம் விரும்பும்
கடவுளை அதிகார கீழ்படிதல் போல
வழிபடாமல் கொண்டாடக் கூடாது என. இந்த
தர்க்கங்கள் தொடர்ச்சியாக நிகழாமல் வெவ்வேறு இடத்தில் நிகழ்கிறது.
எல்லா
கடவுளரும் ஒன்றே. எல்லாம் மூதாதையர்களின்
அனுபவ வெளிப்பாடே என்று ஒரு இடத்தில்
ஊர்ஜிதமும் செய்கிறார். அனுபவங்கள் சரியாக, வழிவழியாக சொல்லப்பட்டு
நாம் நிறை குடமாக இருக்கிறோம்.
வேர்தேடி செல்கிறோம். அப்படி சென்றால் கிடைக்கப்
போவது என்னமோ எல்லாம் ஒன்று
தான் என்னும் எண்ணமே என்கிறார்.
நாவலின் உயிர் நாடியாக கடவுள்
சார்ந்த தர்க்கங்களையே நான் எடுத்துக் கொள்கிறேன்.
இந்நாவலுள்
வன்மம், கற்பனை, காதல், பக்தி,
மார்க்ஸீயம், முதலாளித்துவம் என எல்லாம் விரிவாக
சொல்லப்படுகிறது. அத்தியாயம் இல்லாமல் எழுதுவது எப்போது வேண்டுமானாலும் வாசகனுக்கு
தொய்வினை கொடுக்கலாம். அதை சுவாரஸ்யமாக எல்லா
விஷயங்களையும் சொல்வது சோ.தர்மனின்
அசாத்தியமான எழுத்தில் கைவந்திருக்கிறது. இதுவரை வாசித்த எழுத்தாளர்களிலேயே
மிகச்சிறந்த கதைசொல்லி என்று இவரையே சொல்ல
தோன்றுகிறது.
உலக
புத்தக தினத்தன்று கிமு பக்கங்களில் இவரை
அறிமுகம் செய்வதில் பெருமையே கொள்கிறேன்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக