கூகை
நாவல் சார்ந்த என்னுடைய கட்டுரைக்கும்
இதே தலைப்பு தான் வைத்திருந்தேன்.
இப்போது எழுதவிருக்கும் நாவல் சார்ந்த பதிவிற்கும்
இதே தலைப்பை வைக்க ஆசை
கொள்கிறேன். காரணம் இப்போது சோ.தர்மனின் முதல் நாவல் சார்ந்து
எழுத இருக்கிறேன்.
தமிழ்
இலக்கியத்தில் பள்ளி என்ற ஒரு
சொலவடை உண்டு. யார் யார்
எந்த எந்த பள்ளி என.
இது கோட்பாடு சார்ந்தும் இருக்கலாம் அல்லது எழுதப்படும் மொழி
சார்ந்தும் இருக்கலாம் அல்லது புனைவின் கட்டமைப்பு
சார்ந்தும் இருக்கலாம். எதை எந்த எழுத்தாளர்
கைக்கொண்டாலும் அதன் வீரியம், குறிப்பாக
எழுத்தாளனுள் கனன்று கொண்டிருக்கும் தீயின்
சாயல் மட்டுமே அவரின் முதல்
படைப்பில் தெரியும். நமக்கு நாமே கேள்விக்
கேட்டுக் கொண்டால் கூட நாம் ரசிக்கும்
எழுத்தாளர்களின் முதல் படைப்பு பிடிக்காமல்
இருக்கும் அல்லது அவரது அவரது
முதல் படைப்பின் கரு சூப்பர் ஆனால்
எழுதப்பட்ட விதம் இத்தனாவது நூலைப்
போல இருந்தால் இன்னமும் அருமையாக இருக்கும் என்னும் எண்ணம் பொதிந்தே
தான் இருக்கும்.
சில
எழுத்தாளர்கள் தங்களின் பாணியை சில படைப்புகள்
தாண்டியவுடன் மாற்றிக் கொள்கிறார்கள். சிலருக்கு ஒரே விதம் அம்சமாக
அமைந்து விடுகிறது. அதிலும் சில படைப்புகள்
மட்டுமே உச்சத்தை தொடுகின்றன. இப்போது சோ.தர்மனுக்கு
செல்வது உசிதமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சோ.தர்மனின் முதல் நாவல் தூர்வை.
தூர்வையும் சரி கூகையும் சரி
அவர் வாழ்ந்த கரிசல் நிலக்
கதைகளை அங்கு கூடிக் கலந்து
அறிந்த சொல்லாடல்களையும் மக்களுடனேயே உள்ளார்ந்து இருக்கும் நம்பிக்கைகளையும் பதிவு செய்கிறார். அதை
மட்டும் செய்யாமல் அம்மக்கள் வாழ்ந்த அரசியல் பின்புலத்தையும்
காலத்திற்கேற்ப மாறும் நிலைப்பாட்டையும் சொல்லிச்
செல்கிறார். இந்த கருவுடன் இணைந்து
கட்டமைப்பிலும் இரண்டிற்கும் ஒற்றுமையாய் சில விஷயங்களை செய்திருக்கிறார்.
இடைவெளியற்று
கதையை நகர்த்துதல். கூகையைப் போல் இந்நாவல் இரண்டாகக்
கூட பிரியவில்லை. ஒரே பகுதி தான்.
இருநூறு சொச்ச பக்கங்களையும் ஒரே
மூச்சில் ஒரே வீச்சில் கதையை சொல்லி முடிக்கிறார். இதை வாசிக்கும் போது
கூகையில் இருக்கும் கட்டமைப்பானது கடினமானதோ என்னும் சந்தேக கீற்று
என்னுள் எழுகிறது. சற்று விரிவாக பார்க்கலாம்.
தூர்வை
நாவல் கரிசல் நிலக் கதையை
மிக எளிமையாக சொல்லி செல்கிறது. கூகை
மற்றும் தூர்வையை வாசிக்கும் போது ஏதேனும் ஒரு
நாவல் சிலருக்கு தொய்வினை தரலாம். அதற்கான காரணம்
இரண்டு நாவலும் ஒரே கதைக்கருவின்
நீட்சியோ அல்லது ஒரே கதையின்
இருவேறு உணர்வு மையப்படைப்போ என்னும்
சந்தேகம் எழும். நிச்சயம் இல்லை
என்பதே என் பதில். இரண்டு
நாவலும் வெவ்வேறு களத்தின், மொழியாளுமையால் ஆழமாக பேசப்படும் நாவல்கள்.
தூர்வை
என்பது கிணறு சார்ந்து இருக்கும்
நிலப்பகுதி. அல்லது வயல் பகுதி.
அந்த கிணற்றை நம்பி இருக்கும்
மக்களையே இந்நாவல் முழுமையாக பேசுகிறது. இதை முன்னுரையாகவோ பின்னுரையாகவோ
சொல்லியிருக்கலாம். சொல்லாமலேயே இந்நாவல் நகர ஆரம்பிக்கிறது.
பெயருக்கேற்றது
போலவே ஒரு கிணற்றின் காரணமாக
இயற்கையின் காரணமாக எளிதில் எப்படி
ஒரு கிராமத்தின் மனமே மாறுகின்றது என்பதை
நாவல் நுண்ணியமாக பதிவு செய்கிறது. இந்நாவல்
நிறைய நன்மையான விஷயங்களை கொண்டிருக்கின்றன. தலித்துகளை கதாபாத்திரமாக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆனால் தலித்துகள் நாவலில்
வருகிறார்கள் என்று முக்காலாசி வீதம்
தெரிவதில்லை. அதற்கு பெரிய காரணம்
தலித்துகளுக்குள்ளே இருக்கும் இருண்மைகளை இந்நாவல் பதிவு செய்யவில்லை. மாறாக
அவர்களுக்குள் இருக்கும் கொண்டாட்டமான உலகத்தை விஸ்தீரணமாக இந்நாவல்
விவரிக்கிறது.
நாவலின்
எந்த பக்கத்தை புரட்டினாலும்
நமக்கு நகைச்சுவையான சுவாரஸ்யமான கதைகள் கிடைக்கும். சுருங்க
சொல்ல வேண்டுமெனில் சிரிக்காமல் இந்நாவலை நம்மால் முடிக்கவே இயலாது.
இந்நாவலை வாசிக்கும் போது, குறிப்பாக நகைச்சுவைகளை
வாசிக்கும் போது ஜெய் பீம்
காம்ரேட் என்னும் படத்தின் ஒரு
பகுதியே எனக்கு நினைவில் வந்தது.
அதில் ஒரு தலித் பதிவு
செய்வார். அவர் தீண்டக்கூடாது என்பது
மேல்சாதிக்காரர்கள் விதித்த விதியாதலின் தண்ணீர்
குடிக்கும் போது தான் அவர்களின்
கையை தொட்டுவிட்டு ஓடிவிடுவோம் என்று மலரும் நினைவாய்
பதிவு செய்திருப்பார்.
இந்த
நாவலில் வரும் கிளைக்கதைகள் எல்லாமே
சிரிப்பூட்டும் விதமாகவே இருக்கிறது. சிரிப்புகள் பிண்ணனியாகவோ பூடகமாகவோ எதையுமே சுமப்பதில்லை. இந்த
சிரிப்பு நாவலின் கடைசி வரை
வருகிறது. நாவலின் கடைசியில் வரும்
தீத்தாம்பட்டி பாப்பா என்னும் கதாபாத்திரம்
பட்டணத்தில் நாகரீகம் என்னும் பெயரில் நிகழும்
அபத்தங்களை சிரிப்பூட்டும் வகையில் பேசி கடைசி
வரை அத்தன்மையை நாவலில் இழுத்திருக்கிறார்.
இந்நாவல்
இயற்கையுடன் இணைந்து இயற்கையையே கடவுளாக
பாவித்து வாழும் மனிதனின் மனதில்
நகரமயமாக்கல் எப்படிபட்ட உருவத்தை பதிவு செய்கிறது என்பதை
விளக்குகிறது. நாவலில் அது சார்ந்து
தர்க்கங்களும் நிகழ்கின்றன. நாவலின் கடைசி பகுதியே,
குறிப்பாக இருபது பக்கங்கள் இதைத்
தான் பேசுகின்றன.
மழை
பொய்த்து, நிலம் பிளந்து, கிணறு
தூர்த்து போகும் போது நிலம்
என்னும் பந்தம் வாழ்வாதாரத்தின் முன்
செயலிழந்து போய்விடுகிறது. இந்த ஒரு ஏக்கம்
உறவை துண்டிப்பதற்கு சமமானது. இந்த நிலையை இயல்பாக,
மெருகேற்றாமல் சொல்லி செல்கிறார்.
நாவலில்
வரும் மக்களுடன் பேய்கள் இணைந்தே இருக்கின்றன.
கிளைக்கதைகளாய் நிறைய பேய்க்கதைகளும், சில
விஷயங்களின் பின்புலங்களாய் பேய்க்கதைகளும், அதை பேசுவதற்கென்றே தனி
கதாபத்திரங்களும், பேய்கள் அல்லாது அமானுஷ்ய
விஷயங்களை பேசும் விதமும் நாவலில்
அருமையாய் அமைந்திருக்கிறது. கரிசல் சார்ந்து பேசுவதால்
அவர்கள் மீது திணிக்கப்படும் அதிகாரத்தின்
வன்மத்தையும் மென்மையாய் சொல்லிச் செல்கிறார். இந்த பேய்கள் கூட
நாவலில் அவர்களின் அகம் தேடும் பதிலியாய்
மட்டுமே உருக்கொள்கிறது
இதுமட்டுமில்லாது நாவலில் கொஞ்சம் வரலாறும் வருகிறது. அது கட்டபொம்மன் மற்றும் எட்டப்பனின் சுவாரஸ்யமான வரலாறு. நாவலில் இரண்டு பக்கங்களே வந்தாலும் சிவாஜியின் மூலம் மட்டுமே நாம் அறிந்து வைத்திருக்கும் கட்டபொம்மனின் உருவம் முழுவதுமாக உடைகிறது..
நாவலில்
புழங்கும் மொழி கூகையைக் காட்டிலும்
ஒரு விதத்தில் வசீகரமாகத் தான் இருக்கிறது. எங்கும்
சோ.தர்மன் நுழையாமல் கதை
சொல்லும் இடங்களில் கூட நெல்லை வகை
மொழியை உபயோகபடுத்தியிருப்பது நாவலின் அழகை மெருகேற்றுகிறது.
இதிலிருப்பது மொழியின் எளிமை என சொல்லியிருந்தேன்.
எப்படியெனில் இடையில் ஒரு கதாபாத்திரம்
வருகிறது என்றால் உடனே அக்கதாபாத்திரத்தின்
பிண்ணனியை சொல்லி கதைக்குள் செல்கிறார்.
இந்நாவலில் கருவின் தீவிரம் குறைவாக
இருக்கிறது அதே நேரம் கூகையுடன்
ஒப்பிடும் போது வேகமும் குறைவாக
இருக்கிறது.
அவரின்
எழுத்து வரிசைப்படி இதை முதலில் வாசித்திருந்தால்
இக்குறைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். இப்படி நகைச்சுவை ததும்பும்
நாவலை இப்போதே முதன் முதலாய்
வாசிக்கிறேன். ஏதேனும் ஒரு விதத்தில்
எனக்கு முதன்மை அனுபவங்களை கொடுக்கிறார்
சோ.தர்மன்.
பின் குறிப்பு : கூகை சார்ந்த என் பதிவை வாசிக்க - நூற்றாண்டின் கதைசொல்லி (வாசிக்க க்ளிக்கவும்)
1 கருத்திடுக. . .:
அழகான நேர்த்தியான விமர்சனம். கட்டபொம்மனைப் பற்றி கட்டமைத்த பிம்பம் ஒன்று நொறுங்கியது எனச் சொன்னீர்கள். இதுபற்றி நிறைய விவாதிக்கலாம். நான் பள்ளிப் பருவத்திலேயே நூலகத்தில் தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் ஒரு கொள்ளைக்காரன் என்கிற நூலை வாசிக்க நேர்ந்தது. உங்களைப் போலவே என்னுள்ளும் சிவாஜி மூலம் பிரம்மாண்டப்படுத்தி வைத்திருந்த பிம்பம் நொறுங்கியது. பிறகு ஒருமுறை நம்ம பாஸ்கர் ராஜாவுடன் இதுபற்றி விவாதித்துக் கொண்டிருக்கையில், “பாஸ் கட்டபொம்மு வெள்ளைக்காரன எதுத்த ஆளு, அப்ப அவனப்பத்தி இல்லாதத, பொல்லாதத கத கட்டி விட்டாத்தான, அவன் கூட சண்ட போட்டா, மத்த மக்கள் அமைதியாயிருப்பாங்க ? இதெல்லாம் வெள்ளக்காரன் ட்ரிக் பாஸ்” என்றார். இதுவும் ஒரு வகையில் சரியாகத்தான் பட்டது. இன்னும் கேட்டால் ராஜராஜசோழன் போன்ற மாபெரும் அரசர்கள் கூட தனக்கு வேண்டிய உயர் சாதியினரை மட்டுமே போற்றிப் பாதுகாத்தாரே அன்றி ஒடுக்கப்பட்ட மக்களையெல்லாம் கோயில்களை கட்டச் சொல்லி தொடர்ந்து வாட்டினார் என்றும் வாசித்தேன். வரலாறுகளில் பலப்பல புனைவுகள் உண்டு, ஆனால் வரலாறை பகுத்தறிந்து ஊன்றி நோக்கினால், நிறைய பேர் பிம்பங்கள் நொறுங்கும் போல :)
Post a comment
கருத்திடுக