அது அவர்களுக்கான உலகம்
இரண்டு
விஷயங்கள் சார்ந்து சொல்லி இன்றைய பதிவிற்கான
நாவலுக்குள் செல்லலாம் என்றிருக்கிறேன். அந்த இரண்டுமே தற்போது
வாழ்ந்து வரும் அனைவரும் அனுபவிக்கக்
கூடிய ஒன்றே. முதல் விஷயம்
விளையாட்டு.
இரண்டாண்டுகளுக்கு
முன் நான் வசிக்கும் தெருவில்
குழந்தைகள் மாலையானால் போதும் கத்தி கூப்பாடு
போட்டு விளையாடுவார்கள். வேலை முடிந்து களைப்புடன்
சின்ன உறக்கம் போட நினைக்கும்
மத்தியவர்க்க ஆண்கள் எல்லோரும் அந்த
குழந்தைகளை மிரட்டிய வண்ணமே இருப்பர். அதையெல்லாம்
வாங்கிக் கொண்டு அவர்களின் விளையாட்டு
தொடரும். விளையாடி விளையாடி போரடித்து அம்மாவின் திட்டுகளை அடுக்கடுக்காய் வாங்கிக் கொண்டு பின் வீட்டினுள்
சென்று சாப்பிடுவதும் சிறியதாக படிப்பதும் சென்று பின் மீண்டும்
விளையாட்டின் ஞாபகம் வரும். எல்லா
தெருக்களிலுமே இது இயற்கையாக நடக்கத்
தான் செய்கிறது.
இப்போதும்
என் தெருவில் குழந்தைகள் இருக்கிறார்கள். சத்தமோ குறைவு. என்
நண்பனின் தங்கை சில நாட்களுக்கு
முன் சொன்ன விஷயம் சந்தோஷமாக
இருக்கிறேன் அதற்கான காரணம் வியர்த்து
விறுவிறுக்க விளையாடியது என்றாள். என்றைக்கேனும் செய்யும் ஒரு சடங்காக மாறியிருக்கிறது
சிறுவர்களுக்குள் இருக்கும் விளையாட்டு. சற்று பெரியவர்களாக ஆக
விளையாடினால் நம்மை சிறுபிள்ளையாக நினைப்பார்களோ
என்னும் அபத்த எண்ணம் ஒன்று
குடி புக ஆரம்பித்துவிடுகிறது.
இதைத்
தவிர கொடூரமான விஷயங்கள் தொலைக்காட்சியும் எலக்ட்ரானிக் விளையாட்டுகளும். இவ்விரண்டும் இணைந்து வீட்டை விட்டு
வெளியில் வராமல் சிறுவர்களை முடக்கி
விடுகிறது. சினிமாக்களை அதி தீவிரமாக காண்கிறார்கள்.
பல விளையாட்டுகளை நாம் மறந்து கொண்டிருக்கிறோம்.
இப்போது
இரண்டாவது விஷயத்திற்கு வருகிறேன். இது சாதி சார்ந்தது.
என்னுடைய அம்மா அப்பா காலத்தில்
சாதியின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.
பிறப்பால் நான் பிராமணன் வேறு.
ஆக வர்க்க பேதம் சார்ந்து
சொல்லவே தேவையில்லை. என் தாத்தா கிட்டதட்ட
கங்காணி தான். அவரின் ஆதிக்கத்தையும்
மீறி என் அம்மா மற்றும்
அம்மாவின் உடன் பிறந்தவர்கள் வேறு
சாதி மாணவர்களுடன் பள்ளிகளில் நட்பாக இருந்திருக்கின்றனர். அப்போது அந்த
அந்த சாதிக்காரர்கள் செய்யும் விஷயங்கள் என்ன அவர்களின் அன்றாடம்
எப்படி இருக்கிறது என்று எல்லாவற்றையும் அறிந்திருக்கின்றனர்.
இது என் அம்மாவிற்கு மட்டும்
பொருத்தமல்ல இதை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்,
இளைஞராக இருப்பின் அவர்களின் அம்மா/அப்பாக்களுக்கும். இதை
இங்கு சொல்வதன் காரணம் இந்த தலைமுறையினருக்கு
அறிதலுக்கான இடம் சுருங்கி போய்விட்டது.
விவசாயம்
செய்வது பற்றி எனக்கு என்
கல்லூரியில் இருக்கும் நண்பன் பாடம் எடுக்கிறான்.
சொல்வதற்கே அசிங்கமாக இருப்பினும் இந்த அசிங்கத்தை நான்
மட்டுமல்ல என்னுடன் இருக்கும் எல்லா இளைஞர்களுமே சுமந்தாக
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முறையான கல்வி பயின்று,
படிப்பறிவுள்ளவன் என்னும் அகங்கார தோரணையில்
நான் இங்கு கணினியை இயக்கிக்
கொண்டிருக்கிறேன். நான் வாழும் அதே
நூற்றாண்டில் கல்வி கிடைக்காதவர்கள் இருக்கத்
தான் செய்கிறார்கள். அவர்களை உற்று நோக்கின்
அவர்களை யாரோ என் போன்றவர்கள்
அதிகாரம் செய்கிறார்கள்.
இது
அம்மா காலத்திலிருந்து நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படி அடக்கி ஆண்டாளும் ஆள்பவர்களின்
புத்திரர்கள் கீழ்படியும் சிறுவர்கள் செய்யும் வேலைகளை அறிந்தே வைத்திருந்தனர்.
அவர்களுடன் இணக்கமாகவே இருந்தனர். பெரியவர்களிடையே சாதி ரீதியான ஒடுக்குதல்கள்
இருப்பினும் சிறுவர்களிடையே அறிதலும் புரிதலும் சமபங்காய் ஏதோ ஒரு வகையில்
மறைமுகமாகவேனும் இருந்து வந்தன. இது
குறைந்த சதவிகிதமே.
இப்போது
இது போன்ற ஒட்டுதலை என்னால்
காண முடியவில்லை. காய் விற்பவரின் மகன்
வந்தான் எனில் அது இது
என்று விளிப்பது கேட்கவே ஆபாசமாய் இருக்கிறது.
படித்தவன் செய்ய வேண்டிய காரியமா
அது ? குழந்தைகள் பேச நினைத்தாலும் வரிந்து
உள்ளே இழுத்து செல்லும் குடும்பங்களை
தான் நான் கண்ணால் காண்கிறேன்.
விதிவிலக்குகள் இருக்கலாம். இல்லை என்று சொல்ல
வரவில்லை. இருந்தாலும் இந்த கூட்டம் எனக்கு
நாராசமாய் தெரிகிறது.
காய்
விற்பவர் ஒரு பெண். அவருடைய
மகள் பத்தாம் வகுப்பில் தேறவில்லை.
காய் விற்பவர் அடித்திருக்கிறார். என்னுடைய அப்பா கருணை உள்ளம்
கொண்டவர் என்பதால் வருடந்தோறும் நோட்டு புத்தகங்களை வாங்கித்
தருவார். இருந்தும் அவர் இந்த மதிப்பெண்களை
கேட்டு என்னிடம் சொன்னது அவங்களுக்கெல்லாம் அவ்வளவு
தான் வரும். இந்த ஃபாஸிஸ
மனோபாவம் எல்லா நகர மக்களிடமும்
ஒளிந்து கொண்டிருக்கிறது. நகர மக்கள் என்பதை
விட அதிகாரம் கைகொண்டவர்களின் மனதில். நல்லது செய்ய
நினைப்பவர்களுள்ளும் இருக்கிறது. ஏதேனும் ஒரு கணத்தில்
வெளி வரலாம். அதை அடக்கி
அவருக்குள் இருக்கும் நன்மையை கொணருவது தான்
முக்கியமாக படுகிறது.
இதுவரை
சொன்னது எல்லாம் நான் கண்டது.
பார்த்தவற்றிலிருந்து நான் உருவாக்கி வைத்துள்ள
ஒரு அவதானிப்பு. இது அக்குழந்தைகளின் பார்வையில்
சிறுவர்களின் பார்வையில் எப்படி இருக்கும் ? அவர்களின்
உலகம் எப்படி இருக்கும் என்பதை
விரிவாக விவரித்து நாவலாக எழுதியுள்ளார் பெருமாள்
முருகன். அந்நாவல் கூள மாதாரி.
கூளையன்
என்னும் சிறுவன். அவன் கவுண்டர் ஒருவரின்
வீட்டில் ஆடு மேய்ப்பவனாக இருக்கிறான்.
ஆடுகளை எடுத்துக் கொண்டு மேய்க்க செல்லும்
போது அங்கே அவனுக்கு வேறு
மேய்ப்பர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். இந்த எல்லாரோடும் இணைந்து
விளையாடுவதும், தத்தமது கவலைகளை பேசிக்
கொள்வதும் அவரவர்களின் முதலாளி கவுண்டர்கள் எப்படிப்பட்டவர்கள்
என்று சொல்வதுமாக நாவல் முழுமைக்கும் செல்கிறது.
கவுண்டனின்
மகன் செல்வன். அவனும் கூளையனும் நண்பர்கள்.
இருவரும் இணைந்தே இருக்கிறார்கள். நண்பர்களாக
சிறுவர்களாக இருக்கும் போது கூட எப்படி
அவர்களிடையே வர்க்க பேதம் உருவாகிறது
என்பதை மிக அழகாக காட்டியுள்ளார்.
வர்க்க பேதங்கள் திடிரென முளைக்கும் விஷயமல்ல.
உள்ளேயே ஊறியது. ஆனால் வெளிப்படுவது
என்னவோ உறவுகளையும் அன்பையும் உடைத்துக் கொண்டு தான் இருக்கிறது.
இந்த
கவுண்டன் - ஆடு மேய்ப்பவன் அதிகாரத்தை
மட்டும் காண்பிக்காமல் மேய்ப்பர்களிடையே கூட ஒரு அதிகாரத்தை
காட்டுவது இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மொண்டி என்னும் பாத்திரத்தை
கண்டு எல்லோரும் அஞ்சுகிறர்கள். அஞ்சுதல் என்னும் வார்த்தை கூட
தவறு. அகங்காரம் கொண்டவன் என்று எல்லோரும் அறிந்து
வைத்திருக்கிறார்கள். இந்த அதிகாரம் இருந்தால்
தான் எல்லோரையும் விட மேலானவனாக இருக்க
முடியும் என்னும் விஷயம் நாவலில்
வருகிறது.
இந்த
பாத்திரத்தில் அது அதிகாரமாக இருக்கிறது
எனில் நெடும்பன் என்னும் பாத்திரத்தில் அது
தைரியத்தின் ரூபத்தில் வருகிறது. கூளையன் நாவல் முழுக்க
ஒரு மாணவனாக இருக்கிறான். காணும்
எல்லோரிடமிருந்தும் ஏதோ ஒன்றை கற்றுக்
கொண்டே வருகிறான். ஒவ்வொரு கதாபாத்திரமும் அவனுக்கு
ஒரு விஷயத்தை சொல்லியே செல்கிறது. நாவலின் ஆரம்ப பக்கங்களில்
அவன் பார்வையாளனாய் தெரிகிறான். பாதி நாவலைத் தாண்டியதும்
செயல்பாட்டாளனாய் மாறுகிறான்.
வவுறி
என்னும் கதாபாத்திரம் சிறுவயதில் இருக்கும் பெண் தோழமையை மிக
அழகாக சொல்லி செல்கிறது. சிறுவயதில்
கிடைக்கும் பெண் தோழமைகளை நம்மால்
ஆயுள் முழுக்க மறக்கவியலாது. ஏதோ
ஒரு கணத்தில் மீண்டும் அத்தோழமை ஒன்று சேராதா என்று
மனம் ஏங்கும். பகுத்தறியமுடியாத தோழமை என்று தான்
சொல்ல வேண்டும். எப்படி இது பகுத்தறயமுடியாததாக
மாறுகிறது என்பதை ஆணின் பார்வையில்
சொல்லி செல்கிறார்.
வீரன்
என்னும் ஆடு நாவலில் வருகிறது.
இந்த ஆட்டிற்கும் கூளையனுக்கும் இருக்கும் ஒரு உறவு காதலில்லா
விசாரத்தை நாவலிலிருந்து தூக்கி எறிகிறது. ஒவ்வொரு
ஆட்டிற்கும் ஒரு பெயர் வைத்து
அனைத்துடனும் அவன் கொள்ளும் உரையாடல்கள்
அவனுடைய ஒரு பட்டாளம் அந்த
ஆடுகள் என்றே சொல்லத் தோன்றுகிறது.
இந்நாவலில்
வர்ணனைகள் நிறைய இருக்கின்றன. பிடிக்காதவர்களுக்கு
நிச்சயம் சலிப்பூட்டக் கூடும். எனக்கு ரொம்ப
பிடித்தமைக்கான காரணம் நான் அனுபவிக்காத,
அனுபவிக்க ஆசைபட்ட உலகத்தை காட்டியிருக்கிறார்.
சந்தேகம் வரா வண்ணம் அதை
விவரித்தும் இருக்கிறார் பெருமாள் முருகன். உரைநடைப் பகுதிகளில் வரும் கொங்கு மொழி
ரசிக்கத்தக்கவகையில் உள்ளது. நாவலின் கடைசியினில்
வன்முறையை பேசுவதாய் சில பக்கங்கள் வருகின்றன.
அந்த எல்லா பக்கங்களிலும் கொங்கு
மொழியே ஆட்சி செய்கிறது.
விளையாட்டு
பற்றிய வர்ணனைகளை தனியே சொல்ல ஆசைப்படுகிறேன்.
காரணம் விளையாடும் போது அவர்களிடையே மிருகங்களுக்குள்
நிகழும் வன்மங்கள் தேங்கிவிடுகின்றன. விளையாட்டையும் மிருகங்களையும் ஒப்பிடுகிறார்கள். தங்களையே மிருகங்களாக நினைத்துக் கொண்டு விளையாடுகிறார்கள். அப்போது
பெருமாள் முருகன் சிறுவர்களை விட்டுவிட்டு
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் சென்று அவர்களின் சண்டையை
வர்ணித்து அப்படியே கீழிறங்கி சிறுவர்களுக்கு வருகிறார். அந்த பக்கங்கள் எல்லாம்
மொழியால் அதி சுவாரஸ்யமாய் இருக்கிறது.
இந்நாவல்
வாசிப்பவர்களுக்கு தத்தமது கடந்த சிறுபிள்ளைக்
காலத்தை காட்டலாம். அவர்கள் காணும் குழந்தைகளின் செயல்களை நினைவூட்டலாம். அல்லது புதுமையான சிறுபிள்ளை
காலத்தை காட்டலாம். இதை வாசித்த பின்
தெருவில் செல்லும் கிராமத்து குழந்தைகளின் உலகம் இப்படி தான்
இருக்குமோ என்று சந்தேகம் எழுப்பலாம்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நகரத்து
சிறுவர்களின் உலகத்தை பெற்றோர்கள் எதை
எதையோ திணித்து பெரிதாக்க முயற்சிக்கிறார்கள். கிராமங்களில் இருக்கும் குழந்தைகளின் உலகமோ சிறியது. அவர்களாலேயே
செய்யப்பட்டது. முழுமையைக் கொண்டது. அப்படிப்பட்ட முழுமையான உலகத்தை தான் இந்நாவல்
நமக்கு கொடுக்கிறது.