வன்மத்தின் விளையாட்டு

ஒவ்வொரு கலாச்சாரமும் தனக்கென சில முரண்களை கொண்டிருக்கிறது. அம்முரண்களை பேசும் சில நாவல்களை உலகம் எப்போதும் transgression என்னும் பதத்தில் ஒதுக்கி வைத்திருக்கிறது. இந்த தன்மை எல்லா இடங்களிலும் முழுமை பெறுவதில்லை. எல்லோரும் அறம் நோக்கி தங்களை நகர்த்திக் கொண்டிருப்பதால் இந்த அறப்பிழை சார்ந்த விஷயத்தை முழுமையாக கையாள்வதில்லை.

கையாண்டால் எப்படி இருக்கும் ? இதற்கு சிறந்த எடுத்துகாட்டாக நினைப்பது தி.ஜானகிராமனைத் தான். அவரைப் பற்றி ஹிந்துவில் வேலை பார்க்கும் ஒருவருடன் பேசும் போது அவர் சொன்னது தி.ஜா காண்பிக்கும் கதாபாத்திரங்கள் நாம் காணும் அறத்திலிருந்து பிரிந்து இருந்தாலும் அதை அவர் நியாயபடுத்துகிறார். இதுவும் யதார்த்தவாதம் தான். எனக்கு தி.ஜாவை பிடிக்க காரணமும் இது தான்.

இதே போன்றதொரு கருவை கையாண்டிருக்கும் நாவலை இன்று வாசித்தேன். நாவலின் கரு மிக மிக மெலிதானது. வார்த்தைகளில் நாவலாசிரியர் விளையாடவில்லை. எளிமையாக புரியக்கூடிய வட்டார மொழிப் பிரயோகம். ஆனால் நாவல் முழுக்க இருக்கும் வேகம் எப்படி என்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. பூடகாமவும் இருக்கிறது. நாவலின் தலைப்பே மிக அழகானது.

அது பெருமாள் முருகன் எழுதிய "மாதொருபாகன்".


இத்தலைப்பிற்கான அர்த்தத்தை நாம் எப்படியும் எடுத்துக் கொள்ளலாம். ஆணுக்குள் பெண்ணும் பெண்ணுக்குள் ஆணும் எப்போதும் இருந்தே வருகிறார்கள். இவர்களை நாம் பிரித்து பொருள் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது. நமக்குள் இருக்கும் ஒரு பாதி பெண்ணை/ஆணை அடையாளம் காண புறவுலகில் ஒரு பெண்ணை/ஆணை அடைய வேண்டியதாய் இருக்கிறது.

அப்படி அறிந்து கொள்ளும் தருணத்தில் நாம் எல்லோரும் மாதொருபாகன் என்னும் நிலையை அடைகிறோம். இந்த நிலையை நம் எல்லோராலும் அடைய முடியாது. காரணம் மாதொருபாகன் என்பது ஒரு குறியீடு. புறத் தோற்றத்தால் அடையக் கூடியது அல்ல. மனதால் சமபாதி இடத்தை அளிப்பது. அப்படி கொடுக்கும் போது மட்டுமே காதல் மற்றும் காமம் ஆகிய இரண்டும் முழுமை அடையக் கூடும்.

அடைந்துவிட்டோம் என வைத்துக் கொள்வோம். நாமிருக்கும் கலாச்சாரத்தை பார்க்க வேண்டும். எல்லோர் வீட்டிலும் ஆணாதிக்கம் ஏதோ ஒரு வகையில் குடி கொண்டே இருக்கிறது. இச்சமூகத்தில் பிறந்த நம்முள் அதன் சாரம் சிறு துளியாவது இருக்கக் கூடும். அதை அமிழ்த்தி நம்மை மேலெழும்ப செய்வதே நாம் செய்யக் கூடிய பெரும் செயல். இந்த தருணத்தில் நாம் நம் சரி பாதியின் மேல் சந்தேகம் கொள்ளும் போது மனம் சேர்ந்தே இருக்குமா ? அப்போதும் மாதொருபாகன் என்னும் நிலையை எய்த முடியுமா ? இந்த கேள்வியை அடிநாதமாக்கியிருக்கிறார் பெருமாள்முருகன். இது தான் அவரின் எழுத்தில் நான் வாசிக்கும் ரசிக்கும் முதல் நாவல்.

இந்நாவலின் கதையானது காளி பொன்னா என்னும் தம்பதியினர். இருவருக்கும் குழந்தையில்லை. திருச்செங்கோட்டில் இருக்கும் ஒரு கோயிலில் வருடந்தோரும் நிகழும் திருவிழாவில் பதினான்காம் நாளன்று ஒரு சடங்கு நடைபெறும். அதில் குழந்தைப்பேறு இல்லாத பெண்கள் கலந்து கொள்வர். சாமி அருள்பெற்று இறங்கும் ஆண்களுள் யாரேனும் ஒருவர் மூலம் குழந்தை உண்டாகும். இதற்கு பொன்னாவை அனுப்ப வீட்டிலுள்ளோர் முடிவு செய்கின்றனர். இதன் முடிவு என்ன ஆகிறது என்பதே நாவலின் முடிவும்.

நாவலை இரண்டு மூன்று பாகங்களாக பிரிக்கலாம். அன்பு புறக்கணிக்கப்படும் போதும் எழும் சினம் மிகவும் கொடியது. அதை சினம் கொள்பவராலேயே தாங்கிக் கொள்ள முடியாது. அது ஒரு நோய். இந்த நோயை மிக அழகாக பொன்னாவின் பாத்திரத்தில் காட்டியிருக்கிறார். பொன்னாவிற்கு குழந்தையில்லை என ஊரே அவளை எப்படியேனும் ஒதுக்கும் போது அவளுக்கு எழும் சினத்தை உடனே வெளிக்காட்டி தன்னைத் தானே ஒதுக்கிக் கொள்கிறாள். அவளுள் அந்த சினம் எழுப்பும் எண்ணங்கள் அவளை சிதைக்கிறது. மாற்றாக காளியையே நினைக்கிறாள்.

காளிக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் காதல் மிக மென்மையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் வெட்ட வேளியில் புணர வேண்டும் என இருக்கும் ஆசை. பகலில் கொடுக்கும் முத்தம். முழுதையும் அனுபவிக்க முடியாமல் பின்னடுக்கில் இருந்து வேலை செய்ய அழைக்கும் அம்மா , அதனால் உருவாகும் ஆற்றாமை என காதல் உணர்வுகளின் மூலம் நாவலில் அடர்த்தியாகிறது.

காளிக்கான மாற்று அங்கே காடாக இருக்கும் தொண்டுப்பட்டி. அங்கே நிகழும் நினைவின் ஊடான காதலும் வாசிக்க இன்பமாய் இருக்கிறது.

தமிழ் மரபில் இருந்து வரும் சாமிக்கான வேண்டுதல்களும் அதை நிறைவேற்ற ஒவ்வொரு குடும்பம் படும் இன்னல்களும் யாரும் அறிந்ததே. இங்கே அவை சாமிக்காக நிகழாமல் ஒருவர் மற்றொருவர் மீதிருக்கும் காதலால் நிகழ்கிறது.

இதைத் தவிர நாவலின் இடையிடையில் வரும் கிளைக்கதைகள் மிக சுவாரஸ்யமாய் இருக்கிறது. நாவல் தன் மூலக்கதையிலிருந்து பிரிந்து அல்லது தடம் மாறி செல்கிறதோ எனத் தோன்றியது. ஆனால் இந்நாவலில் இருக்கும் எல்லா பக்கங்களும் முக்கியமானது என வாசித்து முடித்த பின்பே உணர்ந்தேன். குறிப்பாக ஆரம்ப சில பக்கங்கள். பூவரச மரத்தை பற்றிய நீண்ட வர்ணனையும் அதனுடைய சிறு வரலாறும் வரும். இது எதற்கு என்பதே நாவல் முடிந்த பின் தான் தெரியும். இந்த குறியீடு நாவலின் அழகியல் விஷயங்களில் முக்கியமானதும் கூட.

பெண்ணை நமக்குள் நாம் சேர்த்துக் கொள்ளும் போது தான் பெண் என்பவள் உருவம் பெறுகிறாள். நமக்குள் பெண் என்பதே உணர்வாகிறது. இது நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் தெரிகிறது. மேலும் அத்திருவிழாவில் புணர்தல் நிமித்தமாக திரியும் ஆண்கள் மேல் சாமி வருகிறது என்னும் விஷயம் உணர்வு சார்ந்த தர்க்கமாக நாவலில் பேசப்படுகிறது. மேலும் அதை வாசிக்கும் போது பட்டினத்தடிகளின் வரிகள் ஒன்று நினைவிற்கு வந்தது. 

ஊற்றை சரீரத்தை யாபாசக் கொட்டிலை யூன்பொதிந்த
பீற்றற் துருத்தியைச் சோறிடுந் தோற்பையைப் பேசறிய
காற்றிற் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே
யேற்றித் திரிந்துவிட் டேனிறைவா, கச்சியேகம்பனே

அத்திருவிழாவில் கூத்து நிகழ்வுரும். அங்கே நிகழ்வது கடவுளுக்கு மகவை உணவாக்கிய கதை. அதற்கு பதில் பட்டினத்தடிகளை கூத்தாய் அங்கே நிகழ்த்தியிருக்களாம்! விளைவு மாதொருபாகனுக்கே!!!

நாவலில் பிரதானமாக இருக்கும் உணர்வு வன்மம். இந்த வன்மம் காதலினுள்ளும் மரபினுள்ளும் மனித உணர்வுகளினுள்ளும் உள்ளார்ந்து சென்று நிகழ்த்தும் புதிர்த் தன்மை நிறைந்த விளையாட்டே மாதொருபாகன். அது ஒரு குறியீடு. அதன் ஒரு பகுதியை மட்டுமே நாவலாக்கியிருக்கிறார். வேறு சில விஷயத்தை நாவலின் கடைசியில் ஆரம்பித்து நழுவி விடுகிறார் சாமர்த்தியமாய்.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

திண்டுக்கல் தனபாலன் said...

திரைப்படமே எடுக்கும் போல... விமர்சனத்திற்கு நன்றி...

Post a comment

கருத்திடுக