கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (4)
உணவு
வேளை விடும் போதே சிறு
குறிப்பைப் போல ஒன்றையும் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லியிருந்தார். உணவு சப்பிட்டுவிட்டு அந்த
இடத்தை சுற்றிப் பார்க்கலாம். பாம்புகள் நிறைந்திருக்கும் என்று சிறு எச்சரிக்கையும்.
சாப்பாடோ பிரமாதமான சாப்பாடு. கல்லூரி விடுதியிலேயே சாப்பிட்டு
வருபவனுக்கு அது தேவாமிர்தம். குறிப்பாக
ரசம்.
சாப்பிட்டு
அங்கு கிடைத்த புதிய நண்பர்
மோகன் என்பவருடன் சுற்றத் துவங்கினேன். எல்லா
இடங்களிலும் செடிகளும் மரங்களும் ஆக்ரமித்து இருந்தன. சில இடங்களைக் கண்டு
பிரமித்து நின்றாலும் என்னால் இயற்கையை ரசிக்க
முடியவில்லை. மனம் முழுக்க மீண்டும்
முகாமிற்கு சென்றுவிடுவோம். ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடுவர் என்று சொல்லிக் கொண்டே இருந்தது.
மேலும் மதிய வேளையில் எல்லா
மொழிபெயர்ப்பு சிறுகதைகளையும் அலச இயலாது. அதற்கான
காரணம் நேரமின்மை என்று சொல்லியிருந்தார்.
மீண்டும்
திரும்பும் போது அங்கே குடில்
போன்ற ஒரு அமைப்பு இருந்தது.
அங்கேயும் சிலர் அமர்ந்து சாப்பிட்டுக்
கொண்டிருந்தனர். எஸ்.ராவும் அவருக்கு
நெருக்கமானவர்களும் அங்கே தான் சாப்பிட்டனர்.
அந்த இடத்தில் ஒரு குரல் மட்டும்
கேட்க எல்லோரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தால்
எஸ்.ரா பேசிக் கொண்டிருக்கிறார்.
மனம் சிறிது வருத்தமடைந்தாலும் செவிகளை
கூர்மையாக்கி கலந்து கொண்டேன்.
காஃப்காவின்
சிறுகதை ஒன்றை அவர் பகிர்ந்திருந்தார்.
அக்கதையின் பெயர் சீனப் பெருஞ்சுவர்.
கதைக்கான லிங்க் - http://ulagailakkiyam.blogspot.in/2011/10/blog-post_20.html.
இந்தக்
கதையைப் பற்றியே அங்கு பேசிக்
கொண்டிருந்தார் என்பதை பேச்சை முடிக்கும்
போதே அறிந்து கொண்டேன். நான்
கலந்து கொண்ட போது அவர்
சீனப் பெருஞ்சுவரை விட பெரிதாக இருக்கும்
பாலம் ஒன்றைப் பற்றி பேசிக்
கொண்டிருந்தார். அந்த பாலம் இருந்த
இடம் இந்தியா. ஆந்திர மாநிலத்திலிருந்து காஷ்மீர்
வரை அந்த பாலம் சென்றதாம்.
முட்களாலேயே செய்யப்பட்ட பாலம். ஆறு பதினெட்டு
என்று அளவுகளையும் சொன்னார். எது உயரம் எது
அகலம் என்று தான் தெரியவில்லை!
அந்த
பாலம் சார்ந்து பேசியதற்கு இன்னுமொரு காரணம் காந்தி என்றும்
சொல்லலாம். காந்தியின் சத்தியாகிரகத்தை நாம் வெறுமனே வெள்ளைக்காரர்
உப்பிற்கு இட்ட வரியே என்று
மேம்போக்காக அறிந்து கொண்டிருக்கிறோம். அப்படியே கற்றும் தரப்படுகின்றது. அந்த வரிக்கு பின்னே
இருக்கும் லாபமே இந்தியாவை நிலைநிறுத்துகிறது
என்கிறார். இந்தியாவின் பெருவாரியான வருமானமானது உப்பினாலேயே இருந்திருக்கிறது என்கிறார்.
அந்த
உப்பை மக்கள் கடத்தக் கூடாது
என்பதற்காகவே இந்த பாலம் கட்டப்பட்டதாம்.
இந்த பாலத்தில் சமமான இடைவெளியில் நான்கு
காவலர்கள் நின்று கொண்டிருப்பார்களாம். இந்த காவலர்களுக்குரிய
பெயரையும் அவர் சொன்னார். கைவசம்
குறிப்பெடுக்க எதுவும் இல்லை என்பதால்
செவியே எல்லா வேலைகளையும் செய்து
கொண்டிருந்தது. அந்த காலகட்டத்தில் உப்பை
அதிகம் கடத்துகிறார்கள், குறிப்பாக கழுதையில் கடத்துகிறார்கள் என்பதறிந்தவுடன் கழுதைகளில் எதை ஏற்றி சென்றாலும்
சுங்கம் வசூலிக்கப்படும் என்னும் பழக்கம் இருந்ததாம்.
இதுவும் ஆங்கிலேயர்களுக்கு ஒருவித லாபம்.
அவர்
பழையகால ஆவணங்களை இதற்காக எடுத்து பார்த்திருக்கிறார்.
அதில் வெள்ளைக்காரர்களுக்கு உப்பினால் மட்டும் கிடைத்த லாபம்
எண்பத்தி ஒன்பது லட்சமாம். அது
தான் அக்காலத்திய நாட்டின் வருமானமாகவே இருக்கும் என்கிறார். அப்படியெனில் அக்காலத்திய வருடத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். என்னருகில் இருந்தவர் இந்த விஷயங்கள் மறைக்கப்பட்ட
இந்தியா நூலில் உள்ளதாக சொன்னார். மேலும் சம்பளம் என்பது சம்பா+அளம் என்பதிலிருந்தே வந்தது என்றார். சம்பா அரிசியையும் அளம் உப்பையும் குறிப்பதாகும் என்றார்.
இதை
சொல்லிக் கொண்டே கள்வர்களைப் பற்றி
பேச ஆரம்பித்தார். கள்வர்களுக்கு தங்களுக்கென இரு அறம் இருக்கிறது
என்று சொன்னார். தெரியாத வீட்டில் அடுத்தவன்
பேச்சிற்கிணங்க திருடுதல் கூடாது. அடுத்து வீட்டுப்
பெண்கள் மேல் மையலோ தவறாகவோ
நடத்தல் கூடாது. ஒரு வகையான
கள்வர்களைப் பற்றியும் கூறினார். அவர்கள் தாலியை மட்டுமே
அறுப்பவர்கள். அப்படி அறுப்பதற்கு முன்
அப்பெண்களின் கால்களில் விழுந்துவிடுவார்களாம். மன்னியுங்கள் மன்னியுங்கள் என்று கெஞ்சி கேட்பார்களாம்.
மன்னித்துவிட்டோம் என்றவுடன் தாலியை அறுக்க என்று
சொல்லி தாலியை அறுத்து சென்றுவிடுவார்களாம்.
இந்த கள்வர்கள் குழந்தைகளின் மீது கைவைப்பதில்லை. இதைத்
தான் அவன் இவன் படத்தின்
வசனத்தில் தான் எழுதியிருந்ததாகவும் பகிர்ந்து
கொண்டார்.
வேறு
ஒரு சில கள்வர்கள் உள்ளார்களாம்.
அவர்களின் பெயரையும் சொன்னார். பதிவு செய்து கொள்ளவில்லை.
அவர்கள் உப்பை மட்டுமே திருடுவார்களாம்.
குறவர்களில் ஒரு வகையாக இன்னமும்
இவர்கள் இருக்கிறார்கள் என்றார்.
இப்படி
பேசிக் கொண்டு மீண்டும் நீண்ட
சுவருக்கு வந்தார். அதை சொன்னதன் காரணம்
எப்பேர்பட்ட பெரிய சுவராக இருப்பினும்
அங்கே அரசியல் நுழைய நிச்சயம்
வழியோ ஓட்டையோ இருக்கும். இதைத்
தான் காஃப்கா தன் கதையினில்
சொல்லியிருக்கிறார் என்று சாதரணமாக முடித்தார்.
அந்த கதையை வாசிக்கும் போது
கட்டுரையை வாசிக்கும் எண்ணமே எனக்கு மேலோங்கி
இருந்தது. அதன் முழுச் சாரத்தையும்
ஒரு வரியில் முடித்தது பிரமிப்பையே
கொடுத்தது. இக்கதையை அவர் உணவிற்கு பின்
முகாமில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு
வேலை முடிந்தவுடன் புத்தக வெளியீடு ஒன்று
நிகழ்ந்தது. டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகமாக
வெளியிடும் முதல் நூல். அது
தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளை
எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்தது. இந்தத் தொகுப்பை இயக்குனர்
சசி வெளியிட்டார். இந்த தொகுதி சார்ந்து
சசி பேசியது சுவாரஸ்யமாக இருந்தது.
இதுவே தமிழின் இலக்கிய உலகை
நமக்கு காட்டுகின்றது. சில எழுத்தாளர்களின் சில
கதைகள் சசிக்கு பிரத்யேகமாக பிடித்திருந்தது.
இருந்தும் அவை தொகுப்பில் இடம்பெறாமல்
அதே எழுத்தாளரின் வேறு கதைகள் இடம்பெற்றிருக்கின்றனவே என்று அவரிடமே காரணம் கேட்டாராம்.
அதற்கு அவர் சொன்னதாவது இது
தமிழில் இருக்கும் மாறுபட்ட கதைகளுக்கான தொகுப்பு. இந்த தொகுப்பு முழுக்க
தமிழில் பல்வேறு மாதிரிகளில் எழுதப்பட்ட
கதைகளின் தொகுப்பு என்று சொன்னாராம். மேலும்
இயக்குனர் சசி தன்னிடம் உதவி
இயக்குனர்களாக வருபவர்களிடம் என்ன என்ன நூல்களை
வாசித்திருக்கிறீர்கள் சென்று இந்த நூலை
வாசித்து வாருங்கள் என்று சொல்வது வழக்கமாம்.
இனி இந்த தொகுதியை வாசித்து
வாருங்கள் என்று சொல்வதே நன்று
என்று சொல்லி முடித்தார்.
எஸ்.ரா இந்த நூல்
சார்ந்து சொல்லும் போது இதே போன்று
மொழிபெயர்ப்பில் சிறந்த நூறு கதைகளை
தொகுப்பாக்க வேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறது.
அதை இன்னமும் இரண்டாண்டில் முடிக்கலாம் என்றிருக்கிறேன் என்றார். கேட்கவே பிரமிப்பாய் இருந்தது.
அவர்
பேசிய ஆங்கிலக் கதைகள் சார்ந்து சொல்லலாம்
என்றே நினைத்தேன். ஆனால் பக்கங்கள் நீள்கின்றன.
அதனால் வேறு சில விஷயங்களை
சொல்லலாம் என்றிருக்கிறேன். ஒருவர் சந்தேகத்தினிடையே ஒரு
சராசரி சிறுகதை எத்தனை பக்கங்கள்
இருக்க வேண்டும் என்று கேட்டார். இது
பலரினுள்ளும் இருக்கும் சந்தேகம்.
அதற்கு
எஸ்.ரா சொன்ன பதில்
நன்றாக இருந்தது. அளவுகள் என்பது காலத்துடன்
முடிந்துவிட்டது. வெளிநாட்டில் கூட இப்போது வார்த்தைகளின்
அளவிலேயே சிறுகதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்றார். மேலும் tabloid ஏ சிறுகதையின் ஆதிவடிவம்
என்கிறார். நியூயார்க்கர் டைம்ஸ் பத்திரிக்கையை எடுத்துக்
கொள்ளுங்கள். நமது நாளேடைப் போலவே
தான் இருக்கும். எழுத்தின் அளவு மட்டும் சிறியதாக
அக்காலத்தில் இருந்திருக்கிறது. அதில் ஒரு பக்கத்தில்
சுருக்க சுருக்கமாக இரண்டு கதைகளை வெளியிடுவார்களாம்.
அதை கணக்கில் வைத்து பார்த்தால் ஏ4
காகிதத்தில் எட்டு பக்கங்கள் என்றார்.
இதே
இடத்தைப் பொறுத்தும் மாறுபடுகின்றது என்றார். ருஷ்யாவை எடுத்துக் கொண்டால் ஒரு சிறுகதை என்பது
அறுபதிலிருந்து எண்பது பக்கம் வரையிலும்
கூட செல்லலாம். தாஸ்தாயெவ்ஸ்கி காஃப்கா ஆலிஸ் மன்றோ
போன்றவர்கள் இப்படியே எழுதினார்கள். ஆலிஸ்மன்றோவிடம் தங்களின் பத்திரிக்கைக்கு சிறுகதை வேண்டும் என
யாரேனும் கேட்டால் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னே
தான் கதையே கிடைக்குமாம். இந்த
நீளமான அளவுகோள்களை கொள்ளும் கதைகளுக்கு பிரத்யேக காரணங்கள் இல்லை என்கிறார். ருஷ்யாவில்
வரும் நாளேடுகளில் சிறுகதைகளுக்கென எட்டு பக்கங்கள் ஒதுக்குவார்களாம்.
ஆதலால் தான் ஏ4இல்
அறுபது என்று நீள்கின்றது. தமிழில்
இப்படி எழுத ஆசைபட்டால் எழுதலாம்
வெளியிட தான் சிறுபத்திரிக்கை கிடைக்காது
என்றும் சொன்னார். இதே ஐரோப்பாவில் நான்கு
ஐந்து பக்கங்கள் தான் என்றார். ஆனால்
ஐரோப்பாவில் ஆசிரியர்களுக்கென பிரத்யேக இதழ்கள் வெளியிடுவார்களாம்.
இதே
போல் தான் நாவல்களுக்கும் என்றார்.
நாவல் என்றாலே அது அறுநூறு
எழுநூறு என்று தடிமனான அளவுகள்
தான் என்கிறார். சிறுநாவல் எனில் அசோகமித்திரனின் நாவல்களைப்
போன்று நூற்றி ஐம்பது முதல்
இருநூற்றி அம்பது வரை. குறுநாவல்
எனில் நூறுக்கும் கீழே இருக்கும் பக்கங்கள்
என்று சொல்லி முடித்தார். இந்த
அளவுகள் எழுதுபவர்களுக்கு தேவையே இல்லை. எழுத்தே
முக்கியமானது என்பதால் அதை மட்டுமே நோக்கலாம்
என்றும் சொன்னார்.
எஸ்.ராவிடம் ஒரு படைப்பில்
political correctness ஐ அணுக வேண்டுமா என்று
கேட்டார் ஒருவர். குறிப்பாக ஓநாய்க்
குலச் சின்னம் நாவலை முன்வைத்து.
எஸ்.ரா சொன்னதோ கருவை
பொறுத்த மட்டில் அதை பார்த்தே
ஆக வேண்டும் என்று. அப்போது தான்
எழுத்தாளர்களுக்கு இருக்கும் அரசியல் பிரக்ஞைப் பற்றிய
கேள்வி எழுந்தது. பதிலோ பகடியானது.
போர்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது. பலர் மடிந்து வீரத்
தழும்புகள் பெற்று விழுந்து கொண்டிருக்கிறார்கள்.
இடையே மருத்துவர் சென்று அவர்களுக்கு உதவி
செய்து கொண்டிருக்கிறார் அவரிடம் சென்று போர்
சார்ந்த பிரக்ஞை உனக்கு இருக்கிறதா
என்று கேட்க முடியுமா ? மருத்துவத்தை
விட்டு வந்து துப்பாக்கியுடன் போர்
செய் என்று சொல்ல முடியுமா
? நடிகனிடம் மருத்துவனிடம் இசைக் கலைஞனிடம் ஏன்
ஒரு அரசியல்வாதியிடம் கேட்காத கேள்வியை ஏன்
எழுத்தாளனிடம் மட்டும் வந்து கேட்கிறீர்கள்
என்றார். சிரிப்பின் சத்தம் அதிகமானது. அரசியல்
எழுத்தாளனுக்கு ஒரு வாய்ப்பு. அவன்
எல்லாவற்றிலும் அரசியலைக் காண்கிறான். மேலும் சமூகப் பிரக்ஞை
இருந்து அதை வெறுப்பதால் தான்
எழுதவே வருகிறான். இல்லையெனில் அவன் அந்த சமூகத்துடன்
ஒன்றியிருப்பானே என்று சாதரணமாய் பதிலை
முடித்தார். உண்மையும் அது தானே!!!
(தொடரும். . . )
பி.கு 1 : முந்தைய பதிவுகளை வாசிக்க பின்வரும் லிங்கை க்ளிக்கவும்
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)
பி.கு 2 : முந்தைய பதிவில் சொல்லியிருந்த வைக்கம் முகமது பஷீரின் பிறந்தநாள் சிறுகதைக்கான லிங்கை அருண் அனுப்பியிருந்தார். வாசிக்க - http://azhiyasudargal.blogspot.in/2010/04/blog-post_23.html.
பி.கு 1 : முந்தைய பதிவுகளை வாசிக்க பின்வரும் லிங்கை க்ளிக்கவும்
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (1)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (3)
பி.கு 2 : முந்தைய பதிவில் சொல்லியிருந்த வைக்கம் முகமது பஷீரின் பிறந்தநாள் சிறுகதைக்கான லிங்கை அருண் அனுப்பியிருந்தார். வாசிக்க - http://azhiyasudargal.blogspot.in/2010/04/blog-post_23.html.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக