கதை பேசுவோம் பற்றி பேசுவோம் (2)
ஜி.நாகராஜன் மற்றும் நகுலன்
இருவரும்
முகாமில் வெவ்வேறு நேரத்தில் பேசப்பட்டனர். இருந்தாலும் எழுதும் போது இருவரையும்
பிரித்து எழுத வேண்டுமா என்னும்
எண்ணமே எனக்கு தோன்றியது. இவ்விரண்டு
எழுத்தாளர்களின் படைப்பும் அதனூடே செல்லும் விஷயங்களும்
அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை தொட்டே
இருக்கும். இந்த காரணத்தால் தான்
இரண்டு பேரையும் இணைத்து சொல்ல விரும்புகிறேன்.
முதலில் ஜி.நாகராஜனைப் பார்ப்போம்.
ஜி.நாகராஜனின் கதை ஒன்றை வாசிக்க
வேண்டும் என்று முன்னரே கொடுத்திருந்தார்.
அதற்கான லிங்க் - http://azhiyasudargal.blogspot.in/2009/08/blog-post_5158.html
ஜி.நாகராஜன் சார்ந்து அவர் சொல்லிய சில
விஷயங்களைக் காண்போம். ஜி.நாகராஜன் பார்பதற்கே
முரட்டு ஆளைப் போன்று கம்பீரமாய் இருப்பவராம். அவரின் கதைகளில் எல்லாம்
வேசைகள் வந்த வண்ணமே இருப்பர்.
பின் கட்டு தெருக்களாகவே அவரின்
கதைகள் நிரம்பி வழியும். அவரிடம்
ஏன் இப்படி எழுதுகிறீர்கள் என்று
கேட்ட போது அது விருப்பத்திற்குரிய
இடம். விலக்கி வைக்கப்பட்ட இடமல்ல.
விரும்பினால் செல்லலாம் என்பாராம்.
ஜி.நாகராஜன் அழுக்கு சட்டை வேட்டியுடன்
தண்ணியடித்துக் கொண்டிருந்தாராம். என்னய்யா இப்படி தண்ணியடித்துக் கொண்டிருக்கிறீர்
வாருங்கள் என்று நண்பரொருவர் சட்டை
வாங்கி கொடுத்தாராம். ஒரு மணி நேரம்
கழித்து மீண்டும் அதே நண்பர் நாகராஜனைப்
பார்க்கிறார். அப்போதும் கந்தல் ஆடையிலேயே இருக்கிறார்.
ஏன் என்று கேட்ட போது
நீ கொடுத்த சட்டையை விற்று
தான் குவாட்டர் வாங்கினேன் என்றாராம் நாகராஜன்.
மேலும்
அசோகமித்திரனின் கதை ஒன்றை சொன்னார்.
அக்கதையின் பெயர் விரல். அக்கதையில்
நாயகன் நண்பர் வீட்டிற்கு எப்போதும்
வருகிறான். எப்போதும் பணம் கேட்கத்தான் என்பது
நண்பரின் மனைவிக்கும் தெரியும். அன்று நபர் வீட்டில்
இல்லை. மனைவி சென்று வாருங்கள்
என்று அனுப்பிவிட்டார். ஆனாலும் கத்திக் கொண்டே
இருக்கிறார். ஏன் எனில் மனைவி
அறைந்த கதவினிடையில் அவரின் விரல் சிக்கிக்
கொண்டது. திறந்தவுடன் அவன் விரலில் ரத்தம் வழிய திரும்பி செல்ல ஆரம்பித்துவிட்டான். எதிரில் நண்பர் வர
இருவரும் மருத்துவமனைக்கு செல்கிறார்கள். அங்கே டாக்டர் இல்லை.
அப்போது அவன் நண்பனிடம் இந்நேரத்தில்
(ஒரு கடைப் பெயர் சொல்லி)
பிரியாணி கிடைக்குமா என்று கேட்கிறான். கிடைக்கும்
என்றவுடன் சாப்பிடலாமா என்று கேட்டு இருவரும்
செல்கின்றதாக கதை முடிகிறது. இந்த
ஆள் ஜி.நாகராஜனாக தான்
இருக்கக் கூடும் என்று சொன்னார்.
அவரின் நடைமுறை வாழ்க்கையே இப்படி
முரணான விஷயங்களாக நிரம்பி இருக்கிறது.
மேலும்
ஜி.நாகராஜனை, குறிப்பாக அவரின் எழுத்துகளை சியோர்ஜ்
லியோன்(seorge leone) இன் திரைப்படத்துடன் ஒப்பிட்டார்.
அவரின் ஒரு படத்தில் பெண்ணொருத்தியை
நால்வர் கற்பழிக்க நெருங்குகிறார்கள். அவளோ சர்வ சாதரணமாக
என்ன செய்ய போகிறீர்கள் என்று
கேட்கிறாள். கற்பழிக்கப் போகிறோம் என்றவுடன் எனக்கு இதனால் ஒன்றும்
இல்லை நான் துடைத்துக் கொண்டு
சென்றுவிடுவேன் என்று சொல்லிவிடுகிறாள். எல்லோரும்
அமைதியாக திரும்பி விடுகிறார்கள். ஒருவன் மட்டும் காபி
சாப்பிடலாமா என்று கேட்கிறான். இதை
நாகராஜனின் எல்லா கதைகளிலும் காண
முடியும் என்கிறார்.
ஜி.நாகராஜன் காமத்தை எழுதுபவர் அல்ல.
அவரின் கதைகளில் காமம் அல்லது நிர்வாணம்
எங்குமே வராது. அவர் சொல்ல
விழைவது எல்லாம் வேசைகளின் பகல்
வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள்ளே இருக்கும்
அவர்கள் சித்தரிக்கும் வாழ்க்கை. பாலியலுக்குள் இருக்கும் அறத்தை பேசும் எழுத்துகள்
அவருடையது என்கிறார்.
இதை
மேலுள்ள கதையில் கூட உணர
முடியும். வேசி இறந்ததற்கு துக்கம்
கேட்க சென்றால் பழியானது கேட்க செல்பவனுக்கே வரும். சமூகத்தில் அவப்பெயர் அவனையே சாரும். அப்போது அவன்
செய்வது அங்கே இருப்பவர்கள் சொல்வதுமாக
கதை நகர்கிறது.
மேலும்
ஒரு உதாரணத்தை அல்லது ஒப்பீட்டை சொன்னார்.
ஜுராஸிக் பார்க் நாவலை எழுதிய
மைக்கேல் க்ரிச்டன் ஆழ்கடல் நீச்சல் தெரிந்தவராம்.
அப்படி ஒருமுறை ஆழ்கடல் நீச்சல்
செல்கையில் அவருடைய மூச்சுக் குழாய்
கழன்று விட்டதாம். அருகில் தன்னுடன் வந்த
ஒரு பெண் நீச்சலடித்து இருக்கிறாள்.
இருந்தும் அழைக்க முடியவில்லை. அவளே
சில கணத்தின் பின் பார்த்து அவளுடைய
மூச்சுக்குழாயை கொடுத்து இருவரும் மேலே வருகிறார்கள். மரணத்தைக்
கண்டபின் அவரால் இயல்பிற்கு திரும்பமுடியவில்லை.
அப்போது
அந்த பெண் என்ன செய்யப்
போகிறீர்கள் என்று கேட்கிறாள். அவர்
சொல்வதாவது உடனே நான் புணர்ச்சி
செய்தால் மட்டும் உயிருடன் இருப்பதை
உணரமுடியும் என. இதையும் நாகராஜனின்
எழுத்தில் காண முடியும் என்கிறார்.
அஃதாவது மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக பாலியலை கையாள்வது.
சிறுகதை
எழுத முயல்பவர்கள் நாகராஜனின் வார்த்தை பிரயோகங்களை நன்கு கவனிக்க வேண்டும்
என்றும் சொன்னார். நாகராஜன் எங்குமே முத்தம் கொடுத்தான்
முத்தம் கொடுத்தாள் என்று பிரயோகிக்க மாட்டாராம்.
முத்தித்தாள் முத்தித்தான் என்று தான் உபயோகிப்பாராம்.
இப்படி உணர்ச்சிகளின் முரண்கள் எழுத்தின் சுழிச்சி என்று நிறைய நாகராஜனின்
எழுத்துகளில் காண முடியும்.
கௌரவமாக
தமிழில் காமத்தை எழுதியவர் ஜி.நாகராஜன் மட்டுமே என்றார். ஹென்றி
மில்லருக்கு நிகரானவரும் கூட என்றார்.
இப்போது நகுலன்
சார்ந்து கொஞ்சம் பார்ப்போம்.
வந்திருந்தவர்கள் கேள்வி கேட்கும் போது
தான் கே.என்.சிவராமன்
நகுலன் மற்றும் மௌனியின் school of thoughts பற்றி சொல்லுங்கள் என்று
கேட்டார். இருவரும் வேறு வேறு என்று
மௌனியையே சொல்ல ஆரம்பித்தார். நான்
நகுலனை சொல்லி மௌனிக்கு செல்லலாம்
என்றிருக்கிறேன்.
நகுலன்
அடிப்படையில் ஒரு கவிஞன். தன்
கவிதைகளுக்கு அவர் கதாபாத்திரங்களை கொடுக்கும்
போது அது கதையாகிறது என்கிறார்.
நகுலன் மாதிரி சமகாலத்தில் ஆட்கள்
இல்லையே என்று கேட்பது முழுதும்
தவறு என்கிறார். நகுலனின் எழுத்துகள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே
வாழ்ந்தவர் அவர் என்று சில
சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறினார்.
நகுலனும்
எஸ்.ராவும் அடிக்கடி சந்திக்கின்றவர்கள்.
ஒருமுறை அப்படி பேசிக் கொண்டிருக்கும்
போது நகுலன் (பெயர் மறந்துவிட்டேன்)
கவிஞரின் கவிதையை சொன்னாராம். வீட்டுள்ளிருந்து
பூனை ஒன்று அவர்களை கடந்து
சென்றதாம். அப்போது எஸ்.ராவைக்
கண்டு இந்த பூனைக்குக் கூட
இந்த கவிதை தெரியும் தெரியுமா
என்று கேட்டாராம். மேலும் இது விமர்சனம்
கூட செய்யும் என்றிருக்கிறார். ஆச்சர்யத்தில் பார்க்கும் போது அது தனியா
பண்ணிக்கும் என்று சொல்லி பேச்சை
மாற்றிவிட்டாராம்.
வேறொரு
முறை நகுலனின் வீட்டருகில் நிறைய பெண்கள் நடந்து
போய்க் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து அழகாக இருக்கிறார்களா என்று
கேட்டாராம். எஸ்.ராவும் அழகாக
இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டாராம். உடனே
எப்படி என்று கேட்டுவிட்டாராம் நகுலன்.
அதை விவரிக்க தெரியாமல் இருந்த போது நகுலன்
தொடர்ந்தாராம் நான் தினமும் பார்க்கிறேன்
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மாதிரி
தோன்றுகிறது. ஒரு நாள் ஏக்கம் நிறைந்த ஐயோ ஒரு நாள் பரிதாபம் நிறைந்த ஐயோ ஒரு நாள் அழகாக ஒரு நாள் அழகற்றவளாக ஆனால் நீங்களோ தீர்மானமாக சொல்கிறீர்களே
என்று கேட்டாராம்.
வீட்டின்
வாசலில் ஒருவன் எப்போதும் வந்து
நின்று சைக்கிளின் பெல் அடிப்பானாம். நகுலனும்
கை காட்டுவாராம். எஸ்.ரா சங்கேதமா
என்று கேட்ட போது நகுலன்
சொன்ன பதில் அவனும் ஏன்
அடிக்கிறான் என்று சொன்னதில்லை நானும்
காரணத்துடன் கைகாட்டுவதில்லை என்று.
இதைவிட
அவரின் நினைவலைகளுக்கு சிறந்த உதாரணம் விருது
தான். அவருக்கு விருது அறிவித்தவுடன் எஸ்.ரா அழைத்து சென்றாராம்.
நகுலனோ ஏன் வெள்ளைக் காகிதத்தை
யாரும் விருதாக கொடுப்பதில்லை என்று
கேட்டாராம். கொடுத்தால் யாரும் வாங்கமாட்டர்களே அதனால்
தான் கொடுப்பதில்லை என்றவுடன் இந்த ஐம்பதாயிரத்தை வைத்து
நான் என்ன செய்ய, எப்படி செலவு செய்ய, இதை அனுபவிக்க எல்லா சொந்தங்களும் வருமே என்று
புலம்பிக் கொண்டே வந்தாராம். விருது
கொடுத்து பேச அழைத்தவுடன் அச்சபையில்
இருந்த எல்லோரைப் பற்றியும் பேசினாராம். எல்லோரும் இது முடித்து அவரைப்
பற்றி பேசுவார் அவரைப் பற்றி பேசுவார்
என்று காத்திருந்தார்களாம். கடைசிவரை பேசவேயில்லையாம். கடைசியில் எல்லோரிடமும் அவர் கேட்ட கேள்வி
எல்லோரும் ஏன் இங்கே வந்திருக்கிறீர்கள்
என்று. உங்களுக்கு விருது கொடுக்கிறார்கள்அதைக் காண
வந்திருக்கிறோம் என்றவுடன் நல்ல வேளை உயிருடன்
இருக்கும் போதே கொடுத்துவிட்டீர்கள் இல்லையெனில்
நீங்கள் அதை பார்க்க முடியாதல்லவா
என்று முடித்தாராம்.
இவர்
எழுப்பிய கேள்வி தான் முதலில்
பார்த்த இன்மைப் பகுதிகள். நீங்கள்
என்னை பார்ப்பதைப் போலவே என் வீட்டைக்
கடந்து செல்பவர்கள் என் இன்மையைப் பார்ப்பார்கள்
தானே என்று எஸ்.ராவிடம்
கேட்டிருக்கிறாராம்.
நகுலனின்
எழுத்துகளில் வரும் சுசீலா அவரை
வாசித்த எல்லோருக்கும் பிடித்த பாத்திரம். அவளைப்
பற்றி எஸ்.ராவிடமே பத்து
வித கதைகளை சொல்லியிருக்கிறாராம் நகுலன். சொல்லிமுடித்து
நம்புறல்ல என்று கேட்பாராம். இப்படி
பகடியாக சொல்லும் போது இன்னுமொன்றையும் சொன்னார்.
ஒரு
இலக்கியத்திலிருந்து வரியொன்றை சொல்லி இது அந்த
அறையின் இரண்டாவது தளத்தில் இருக்கும் இத்தனாவது புத்தகத்தின் 142 ஆவது பக்கத்தில் உள்ளது
என்று. என் நினைவிற்கு வருகிறது
என்றாராம். எடுத்து பார்த்தால் அதே
வரிகள் அவர் சொன்ன அதே
இடத்தில். இதைச் சொல்லி அவருக்கு
நினைவுகள் பிழன்றெல்லாம் செல்லவில்லை. அதை அவர் கைக்கட்டுப்பாட்டில்
வைத்திருக்கிறார். தேவையான இடத்தில் மட்டும்
பிரக்ஞையை பிரயோகித்து கொள்கிறார் என்றார்.
நகுலனின்
எழுத்துகள் இருத்தலை சிதறடிக்கவிட்டு இருக்கும் ஒரு தன்மையுடையது. ஆதலால்
தான் எல்லாவற்றிலும் அவர் நகுலனை காண
விரும்பினார். எழுத்தின் மூலமே எல்லாவற்றிலும் கண்டார்.
எல்லாவற்றிலும் வாழும் மனிதன். அது
அவருடைய இயல்பு. அவர் பைத்தியம்
போல இருக்கிறாரே என்று பட்டால் அது
நம் குறையே ஒழிய நகுலனது
அல்ல என்று அவரைப் பற்றி
சொல்லி முடித்தார்.
மௌனி
மௌனியும்
சந்தேகத்தின் போது கேட்கப்பட்டவரே. ஒரு
கதையை நாம் வாசிக்கிறோம். எழுத்தாளன்
எத்தனை வர்ணனைகளை வைத்து எழுதியிருந்தாலும் நாம்
சுருக்கவே யத்தனிக்கிறோம். வர்ணனைகளை கண்கள் கடந்து சென்று
கொண்டே இருக்கின்றன. வர்ணனைகள் அற்ற ஒரு கதையை
வாசிக்கிறோம். நம்மால் சுருக்க முடியவில்லை.
இந்த கோட்பாடு கதை என்பதற்கு
மட்டுமே பொருந்தும். அப்போது அக்கதை புரியவில்லை
என்று சென்றுவிடுகிறோம். இந்த புரியா நிலையில்
எழுதுபவரே மௌனி.
மௌனியின்
கதைகள் ஆரம்பம் கொள்வதற்கு மட்டுமே
நடப்பை நாடுகின்றன. பின் அவை கதைமாந்தர்களின்
கடந்து காலத்தினுள்ளும் அல்லது நினைவோடைகளினுள்ளும் கற்பனைகளுக்கு
உள்ளும் பயணம் செய்யத் துவங்குகிறது.
உருவகங்களும் அரூபத்தின் உருவங்களுமே மௌனியின் எழுத்துகளில் நிறைந்து உள்ளன என்றார்.
மேலும்
மௌனி பெரும்பாலான கதைகளில் தொலைவை காட்டிச் செல்கிறார்.
கதையில் அருகருகில் இருவர் அமர்ந்திருந்தாலும் அவர்களின்
மனம் தூரத்திலேயே இருக்கிறது. இந்த தூரத்தையே மௌனியின்
கதைகள் மையபடுத்துகின்றது என்று அவர் பகுதியை
சுருக்கமாக முடித்தார்.
2 கருத்திடுக. . .:
நகுலனின் சுசீலா உண்மையான ஒருத்தி. மேலும் சுவாரசியத்திற்காக எஸ்.ரா,சேர்த்த சில அமெரிக்கைகளில் உண்மையில்லை, ஆனால் அவை வாசக ஈர்ப்பிர்க்கு தேவையான ஒன்று. தவறில்லை.
ந்ிஅழ்க்ழ்ைழ்ழ்வ்ை அர்ும்ைய்ாக் ப்த்ிவ்ுச்ெய்த்ுள்ள்ிீர்க்ள். ம்க்ிழ்ஸ்ஸ்ிச்ச்ி.
Post a Comment
கருத்திடுக