முதல் பகுதியை வாசிக்க - http://www.kimupakkangal.com/2014/01/1_24.html
நாவல் பல பகுதிகளாகவே பிரிந்து நிற்கிறது. ஒன்று பாபு மற்றும் யமுனா.
இதில் யமுனா பாபுவிடம் எதுவுமே சொல்வதில்லை. பாபு தன் காதலை சூசகமாக சொன்னவுடன் அவள் வேண்டாம் என்கிறாள்.
அதற்கு பின்னால் நடப்பவையெல்லாம் பாபுவின் கற்பனை தான்.
அவனாக நினைத்துக் கொண்டு அதன் படி முடிவுகளை எடுக்கிறான். அவனால் வெளிவர முடியாத காதல் யமுனாவை நெருங்க விடாமல் தடுக்கிறது.
அடுத்து யமுனாவின் குடும்ப மற்றும் பொருளாதார பிரச்சினைகள்.
இந்த பிரச்சினை எப்படியோ சென்று பாபுவிடமே ஒவ்வொருமுறையும் முடிகிறது.
பாபு ராஜம்.
இந்த இருவரின் நட்பு ஆழமாக பேசப்படுகிறது. இருவரின் நட்பையும் எங்கெங்கோ இழுத்து செல்கிறார். தி.ஜாவின் வலைப்பின்னல்விதமான படைப்பு இவர்களிடமிருந்தே தொடங்குகிறது.
இவர்களிடம் சங்கீத விசாரங்கள் நிகழ்கிறது.
அந்த விசாரத்தை அப்படியே அடிநாதமாக்கி ரங்கண்ணா என்று ஒரு குறு பட்டாளத்தை கதாபாத்திரங்களாக்கி அவர்களின் மூலம் சங்கீத பகுதிகளை நாவலில் விஸ்தீரணம் செய்கிறார். இந்த விஸ்தீரணம் இவர்களுடன் முடிந்துவிடாமல் ராமு என்றொரு கதாபாத்திரத்துடனும் நீள்கிறது.
இந்த பகுதியும் எப்படியோ பாபு யமுனா காதலுடன் ஒன்றிவிடுகிறது.
இதற்கிடையில் தங்கம்மாள் பாத்திரம். இந்த பாத்திரம் சற்று விசித்திரமான பாத்திரம் என்றே தோன்றுகிறது. இரு பாலினத்திற்கு ஏற்படு இச்சைகளை வெவ்வேறு கதைக்களனில் சொல்லியிருக்கிறார். ஆண்களின் மூலம் என்பதற்கு பாபு. பாபு யமுனாவை தெய்வமாக மனதளவில் தொழுகிறான். இது ராஜத்திடமிருந்து தொற்றிக் கொண்ட பழக்கம். இந்த தொழுகைக்கு என்ன அர்த்தம் என்று கூட மனதளவில் தேடுகிறான்.
அர்த்த வியர்த்த வாதங்களின் மூலமாகவும் நாவல் சென்று அவன் மூலம் வாசகர்களுக்கு இந்த தொழுகைக்கான அர்த்தத்தை கொடுக்கிறது. தங்கம்மாள் ஒரு கிழவனை மணம் செய்து கொண்டு பாபுவின் அடுத்த வீட்டில் இருப்பவள்.
அவளுக்கு பாபுவின் மேல் இச்சை. இப்போது பாபுவின் குழப்பங்கள் அதிகமாகிறது.
பாபு ராஜம் ஆகிய இருவரின் நட்பு கூட குழப்பத்தில் செல்வது நாவலின் ஆச்சர்யகர பகுதிகள். பாபு தனக்கு நிகழும் எல்லா விஷயங்களையும் ராஜமுடன் ஆராய்வது பழக்கம்.
ஆனால் யமுனா சார்ந்து இருக்கும் விஷயங்களையும் தங்கம்மாள் செய்யும் அத்துமீறல்களையும் அவனால் ராஜத்திடம் சொல்ல முடியவில்லை.
சமூக கலாச்சாரங்களை எதிர்த்து மனதளவில் தனக்கென ஒருகோட்டை கட்டியிருந்தாலும் அவை வெறும் வாய் வார்த்தையாக மட்டுமே அமைந்து விடுகிறது பாபுவிடம். நடைமுறை படுத்த பலரின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டும்.
அதற்கு பாபுவின் மனம் உகந்தது அல்ல என்று சொல்லப்படுகிறது. அவனின் செய்கைகள் பட்டவர்த்தனமாக நாவலில் சொல்கின்றன. தன் பலவீனத்தை அவனே சொல்கிறான்.
யமுனாவின் அப்பா இறந்த பொழுது,
“விதவையாவது சாதாரண நிகழ்ச்சி தான்.
இதை அமங்கலம் என்று நினைப்பது கூடி வாழ்கிற மனிதன் கட்டி எழுப்பிய உணர்ச்சி தான்…ஆனால் மனம் என்னவோ இதை வாங்க மறுக்கிறது”
நாவலின் முடிவிலோ பாபுவும் அதே கலாச்சார குட்டையினுள் விழுவது தான் நாவலின் உன்னதமாக கருதுகிறேன். அவனால் வார்த்தைகளால் மட்டுமே புரட்சியை கொணர முடியும் என்றொரு தருணத்தை அவனே உணர்ந்து கொள்கிறான்.
மேலும் இங்கே காண்பிக்கப்படும் இரண்டு காதல்களும் தேகத்தை மையப்படுத்தியே இருக்கிறது.
பாபு யமுனா காதல் இனம் புரியாத உணர்வாக மட்டுமே கடைசி வரை கொண்டு செல்லபட்டுள்ளது. கடைசியிலோ அதற்கு வேறு ஒரு அர்த்தம் கொடுக்கிறார் தி.ஜா. தங்கம்மாளின் இச்சையோ தேகத்துடன் மட்டுமே ஒன்றி இருக்கிறது.
யமுனா நாவலின் கடைசியில் ஒட்டுமொத்த கதையினையும் ஆளப்பார்க்கிறாள்.
குழப்பத்திற்கு விடை தருகிறாள். அதுதானா என்று குழப்பத்தில் இருந்தாலும் குழப்பமே அவனை சுய முடிவு எடுக்க வைக்கிறது.
அம்மா வந்தாள் நாவலிலும் இந்து அதிகாரத்தில் இருக்கிறாள்.
இங்கு யமுனா.
மேலும் நாவலின் தலைப்பிற்கான ஜஸ்டிஃபிகேஷனை ஒரு இடத்தில் கொடுக்கிறார்
“மோக முள் முப்பது நாளைக்கு குத்தும்” என. எல்லாமே நயமுற கையாளப்பட்டிருக்கிறது இந்நாவலில்.
இசை
இந்நாவலில் சொல்லப்படும் இசை சார்ந்த விஷயங்கள் கலை என்ற பொதுத் தன்மைக்கு முழுக்க பொருந்தும். நாவலின் ஆரம்பங்களில் பாபுவிற்கும் ராஜத்திற்கும் ஒரு பிரச்சினை எழும்புகிறது. அந்த பிரச்சினை யாதெனில் வீணை இசையை ரசிக்கிறார்கள் என. வெறும் இசையை ரசிப்பது எப்படி என ஆரம்பித்து வாய்ப்பாடோ சொல்லோ இல்லாத ஒரு சங்கீதத்தை எப்படி இவர்களால் ரசிக்க முடியும் என்று விவாதம் செல்கிறது.
ராகமே தன்னுள் ஒரு உருவம் கொண்டிருக்கும் போது அங்கே வாய்ப்பாடுகள் தேவையில்லை என்கிறார்.
இந்த இடங்களில் நினைவுப் பாதை நாவலும் இந்நாவலும் ஒரே கோட்டில் இயங்குவது போல தோன்றுகிறது. அங்கே வார்த்தைகள் இங்கே ராகம்.
மேலும் இது கலை சார்ந்து எல்லாவற்றிற்கும் பொதுவாக இருக்கும் வகையில் சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு கலையுமே ஒரு தியானம் தான். அதை முழுதாக அனுபவிக்கிறவனுக்கு, ஞானவானுக்கே பொருந்தும். இந்த ஞானம் என்பது என்ன என்று ஒரு இடத்தில் பிரச்சினை எழுகிறது. அப்போது நாவலில் ஒரு விளக்கம் வருகிறது. இந்த விளக்கமும் எல்லா கலைகளுக்கும் பொருந்தும். அது,
“சில்பத்தில ஞானம்னா மனசில நினைக்கிறதை கல்லிலே காமிக்கணும்.
சண்டையிலே வீராப்பை கையிலேயும் வில்லிலேயும் காமிக்கணும். அந்தமாதிரி தான் எல்லா சாஸ்திரமும்.
புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுக்கறதும், காதாலே கேட்டுகறது மட்டும் ஞானமாயிடாது.
அனுபவம் தான் ஞானம். செய்யறது தான் ஞானம்”
இந்த விளக்கம் செய்முறையாக பாபுவாக நாவலிலும் வருகிறது.
மேலும் இந்நாவலில் ரங்கண்ணா என்றொரு கதாபாத்திரம். அந்த பாத்திரத்தை பார்க்கும் போதெல்லாம் உன்னத கலைஞன் என்னும் உணர்வே என்னை மொய்க்கிறது.
அவர் சங்கீத ப்ரியர். பாபுவிற்கு சங்கீத பாடம் எடுப்பவர்.
தன்னை கீழ் மட்டத்திலேயே வைத்து பிற கலைஞர்களை கொண்டாடுகிறார். ஆனால் எந்த ஒரு இடத்திலும் தன்னை ஞானசூன்யம் என்று சொல்வதில்லை.
தம்புராவைத் தூக்கிக் கொண்டு வடக்கத்தியர்கள் நாவலில் வருகிறார்கள்.
அவர்களின் இசை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. அந்த இசையை மெய்மறந்து ரசிக்கிறார்.
கலையை மட்டுமே தன்னுடைய உயிர்நாதமாக கொண்டு அவர் நாவல் முழுக்க வலம் வருகிறார்.
அவர் இறக்கும் பகுதியை நாவலில் இசையாலேயே செப்பனிட்டிருக்கிறார் தி.ஜா.
இவரின் சீடனாக வரும் பாபுவிற்கும் இந்த குணம் தொற்றிக்கொள்கிறது. அவனிடம் கச்சேரி செய் கச்சேரி செய் என்று சொல்லும் ராமு என்பவனுடன் நிகழும் வாக்கு வாதத்தில் அவன் காரணம் சொல்கிறான் நான் முழுமையை உணராத போது எப்படி என்னால் மற்றவர்களுக்கு முழுமையை அளிக்க முடியும் என.
அங்கு சிலரின் கச்சேரிகளை கேட்டு வியர்த்தம் கொள்கிறான்.
அங்கே அவன் சொல்வதாவது வெறும் குரல் என்று தான் இங்கே சங்கீதம் இருக்கிறது.
ஆனால் சங்கீதத்தின் ஜீவன் இல்லை.
காதோடு சங்கீதம் முடிந்துவிடுகிறது. நான் அப்படி செய்ய விரும்பவில்லை என்னை தயார் செய்ய வேண்டும் என்கிறான். தேடலில் இறங்குகிறான்.
நாவலில் இந்த பகுதிகள் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.
பிடித்தமைக்கான காரணம் கலை ஒரு கடல் என்பதையும் அது ஆத்மார்த்தமான விஷயம் என்பதையும் கலைக்குள் நுழைந்தவன் ஒரு சந்நியாசியாக வாழ நிர்பந்திக்கப்பட்டவன் என்பதையும் மிகத் தெளிவாக நாவலில் சொல்லுகிறார்.
நாவல் பாபநாசத்தையும் கும்பகோணத்தின் சில தெருக்களையும் தத்ரூபமாக காட்டுகிறது. அதிசயம் யாதெனில் நாவல் முடியும் போது என்னால் யமுனாவை கற்பனையில் சித்தரிக்க முடிகிறது.
இத்தனைக்கும் அவர் யமுனாவின் வசனத்தையும் கதையையும் மட்டுமே சொல்லியிருக்கிறார்.
மேலும் அறுநூறு பக்க நாவலில் ஒரு நாற்பது பக்கம் மட்டும் ‘நான்’ என்னும் பதத்தில் எழுதியிருப்பது அதகளமாக இருக்கிறது. அது தி.ஜானகிராமனின் இயலாமையா என்ன என்று தெரியவில்லை.
காரணம் அங்கே யமுனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது,
ஒட்டு மொத்த நாவலில் அந்த பகுதிகள் மட்டும் தனியே இன்னமும் என்னுள் இருக்கிறது.
கதைசொல்லி என்னும் பத்த்தை என்னால் உணரவே முடியவில்லை.
அதற்கான காரணம் நானே அங்கு அலைந்து கொண்டிருக்கிறேன்.
என்னிருத்தல் யாதென தெரியாமல் ஒரு ஊரின் கதையை வேடிக்கைப் பார்த்திருக்கிறேன்.
முடித்தும் வெளிவரமுடியாமல் அலைந்து கொண்டிருக்கிறேன்.
. .
பி.கு 1 : தி.ஜா இந்நாவல் உருவானதை எழுதியிருக்கிறார்.
அது நாவலின் பின்னிணைப்பாக வருகிறது.
அது இணையத்திலும் கிடைக்கிறது. அதன் லிங்க்
- http://solvanam.com/?p=14107
1 கருத்திடுக. . .:
ஒவ்வொரு பாத்திரத்தின் ரசனையின் சுருக்கமான விளக்கமும் ரசனை... இணைய சுட்டிற்கு நன்றி...
Post a comment
கருத்திடுக