தொலைய நினைப்பவனின் கதை (1)
ஆரம்பத்தில்
இருந்து எழுத நினைக்கிறேன். மனம்
முழுக்கவும் கூட அப்படியே எழுது
எழுது என என்னை ஆர்பறிக்கின்றது.
எஸ்.ராமகிருஷ்ணன் நான் அதிகம் வெறுத்த
ஒரு ஆளுமை. தன் மூளை
முழுக்க சரக்குகளை, அதுவும் உலகளாவிய ஞானம்
வைத்திருந்தும் எழுத்தில் சலிப்பினை கொடுத்துக் கொண்டே இருக்கிறாரே என
நினைத்த ஒரு ஆளுமை. அவரை
வாசிக்க ஆரம்பித்த போது இதே உணர்வு
என்னை துரத்திக் கொண்டே வந்தது. சந்தேகத்தின்
பேரிலேயே அவரின் நாவல்களை வாசிக்க
ஆரம்பித்தேன். முதலில் வாசித்தது யாமம்.
கதைசொல்லுபவனின்
தேவை சமூகத்திற்கு எத்தகையது என்பதை உரைக்கும் பணியை
செய்துவருபவராகவே எஸ்.ரா எனக்கு
தெரிகிறார். கதை சொல்லியாக அவரின்
புனவுகள் என்னை ஒவ்வொரு முறையும்
கவர ஆரம்பித்தது. யாமம் நாவலிற்கு முன்பு
நான் வாசித்திருந்த அவரின் சிறுகதைத் தொகுதிகளை
பின் நினைவுகளால் அசை போட்டுப் பார்த்தேன்.
மென்மையாய் என்னை ஒரு கதைசொல்லி
வருடினான்.
சாரு நிவேதிதாவின் எழுத்துகள் வாசித்த நாட்களிலிருந்து என்னை
ஆண்டே வருகிறது. அவர் எழுத்தின் மூலம்,
குறிப்பாக புனைவுகளின் மூலம் எனக்கு அறிமுகம்
செய்த அதிகாரத்தின் பல்குணங்களும் பன்முகங்களும் என்னுள்ளும் வியாபித்து இருக்கிறது. உலகமே அதிகாரத்தால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இருந்தும் அவரின் படைப்புகள் ஒரு
நண்பனின் வார்த்தைகளாக மட்டுமே என்னிடம் நெருங்கி
வந்திருக்கின்றன. இந்த மனநிலை என்னிடமிருந்து
மாறாமல் எல்லா நாவல்களையும் படைப்புகளையும்
அணுக வேண்டிய நிலை என்னுள்
ஏற்பட்டிருந்தது. அப்போது நான் வாசித்த
எஸ்.ராவின் நாவல் தான்
உப பாண்டவம்.
என்னால்
காலத்திற்கும் மறக்க முடியாத நாவலாக
உப பாண்டவம் அமைந்திருந்தது. அங்கே கதை சொல்லி
என்பதை விட ஒரு போதகனாக
எனக்குள் எஸ்.ரா உருவெடுத்திருந்தார்.
எப்போது மனம் சஞ்சலம் கொண்டிருந்தாலும்
உப பாண்டவர்களின் சில பக்கங்களை எடுத்து
வாசிக்கத் துவங்குகிறேன். குறிப்பாக அங்கே கிருஷ்ணன் அர்ஜுனனிடம்
சொல்கிறான்.
“உன் புலன்களின் சரித்திரத்தை உன் சரித்திரமாக கொள்ளாதே…
நீ புலன்களின் புலனாளி”, எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
இன்னமும்
இது போல் நிறைய இருக்கிறது.
எஸ்.ரா என்றாலே உப
பாண்டவம் மட்டுமே நினைவில் தேங்கும்படி
என்னுள் தன் ராஜ்ஜியத்தை நிலைநிறுத்தியிருந்த
போது அதனுடன் துணை கொண்ட
நாவலாக அவரின் நிமித்தம் அமைந்துவிட்டது.
ஆம் துணையே புரிந்து கொண்டிருக்கிறது.
எஸ்.ராவின் எழுத்துகளில் எப்போதும்
பல கதைகள் நான் லீனியராக
சொல்லப்படுவதுண்டு. அங்கே கதை சொல்லியின்
வசீகரம் யாவரையும் நாவலின் கடைசி வரை
இழுத்து சென்றுவிடும். அது அவரின் பொறியாகக்
கூட இருக்கக் கூடும். என் நண்பரொருவர்
என்னிடம் சொல்வதுண்டு என்னால் எஸ்.ராவின்
எழுத்தினுள் நுழைய முடியவில்லை என.
இந்த நுழைதல் என்னும் அர்த்தம்
எனக்கு புரிபடவில்லை. நாம் நமக்கு எளிதாக
இருக்கும் பாதையில் மட்டுமே பயணம் செய்ய
நினைக்கிறோம். எழுத்து என்பதோ எப்போதும்
ஒரு சுழல்வட்ட பாதை. ஒவ்வொரு எழுத்தாளர்
உருவாக்கும் சுழல்களும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கக்
கூடும். இந்நிலையில் தனி மனிதனின் அக
உலகத்திற்கு ஏற்ப எழுத்தாளனால் எழுத
முடியாது. காரணம் அது அவனின்
காண முடியாத பக்கங்களின் எழுத்துருக்கள்.
நண்பரிடமே நுழைதல் சார்ந்து கேட்டேன்.
அவர் தாஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றி ஒரு முறை
பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார் தாஸ்தாயெவ்ஸ்கி உருவாக்கும் கேள்விகளை வாசிக்கும் போது நான் சிந்தனை
என்னும் போதையில் திளைத்துவிடுகிறேன் என. எழுத்து வாசகனை
சிக்க வைக்க வேண்டும். சிந்திக்க
வைக்க வேண்டும் என யோசித்தேன். யாமம்
உறுபசி உப பாண்டவம் மட்டுமே
இதுவரை எஸ்.ராவின் எழுத்தில்
வாசித்திருக்கிறேன். உப பாண்டவம் தவிர
மற்ற இரண்டும் வெறும் கதைகளாக வரலாற்றை
புனைவாக மாற்றும் ஒரு கருவியாக இருந்திருக்கிறது.
இந்த பார்வையில் பார்க்கும் போது நிமித்தம் அவரின்
மற்ற நாவல்களைக் காட்டிலும் தனியாக நிற்கின்றது.
நாவலின்
முன்னுரையில் இப்படி சொல்கிறார் – எனது
முந்தைய நாவல்களைப் போலவே இந்த நாவலும்
தனித்துவமான கதையைக் கூற முற்படுகிறது.
இதை முற்றிலும் மறுதலிக்கிறேன். இதுநாள்வரை எஸ்.ராவை வாசித்தவரையில்
முழுவதும் வித்தியாசமான முயற்சியாக நிமித்தம் நாவல் படுகிறது. Notes from the underground என்னும் நாவலில் தாஸ்தாயெவ்ஸ்கி
நாற்பது வயதிற்கு மேல் ஏன் வாழ
வேண்டும் என அசாதாரணமாக சொல்லுவார்.
இதன் மறுவடிவம் தான் நிமித்தம் நாவலோ
என சந்தேகத்தை பல இடங்களில் எழுப்புகின்றது.
தாஸ்தாயெவ்ஸ்கி காட்ட முனையாத பல
தனிமை சார்ந்த அவலங்களை நாவலில்
பதிவு செய்திருக்கிறார். உலக அளவில் பல்வேறு
களங்களில் இயங்கிய சில இலக்கியவாதிகளை
சில பக்கங்களில் தன் புனைவால் தகர்த்து
இருக்கிறார். அதில் இருவரை முக்கியமானவராக
உணர்கிறேன்.
ஒருவர்
தாஸ்தாயெவ்ஸ்கி மற்றொருவர் நிகோஸ் கஸான்சாகிஸ். சற்று
விரிவாக சொல்கிறேன். நாவலின் கதை தேவராஜ்
என்பவனின் வாழ்க்கையை வரலாறாய் சொல்வதே. அவனுக்கு ஒருக்காது கேட்காது. ஒரு காது பாதி
கேட்கும். பிறந்ததிலிர்ந்து வந்த வியாதி இல்லை.
இடையில் காய்ச்சல் கண்டிருந்த பொழுது அவனுக்கு இட்ட
ஊசியால் காது செவிடாகிவிட்டது. இது
உடலின் ஊனம். இந்த ஊனம்
சமூகத்தில் எப்படி பார்க்கப்படுகின்றது ? வீட்டில் எப்படி
பார்க்கப்படுகிறது ? சாமான்ய மனிதனின் வாழ்க்கைக்கும்
இது போன்ற குறைகளை உடைய
மனிதர்களின் வாழ்க்கைக்கும் சமூகம் என்னும் சமமான
தளத்தில் எப்படி உறவு ஏற்படுகின்து
? மேலும் இந்த இருவேறு மனிதர்களும்
தங்கள் இருவரையும் எப்படி அணுகுகிறார்கள் ? எப்படி
மதிப்பிடுகிறார்கள் ? அவனுக்குண்டான மாற்றுபாதை, அவனுக்கான உலகம் எப்படி இருக்கும்
என்பதை மிக விரிவாக அழகியலும்
துன்பியலும் பொங்க எழுதியிருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
எஸ்.ராவிடம் ஏன் சோகத்தையே
எழுதுகிறீர்கள் என்று ஒரு முறை
மின்னஞ்சலில் கேட்டிருந்தேன். அதற்கு அவர் எனக்கு
அளித்த பதில் முக்கியமானதாக படுகிறது.
அவர் சொன்னது
“நான் வாழ்வின் வீழ்ச்சியை பற்றி பேசும் எழுத்தாளன், கசப்பும்
வேதனையும் கொண்ட நினைவுகள் எனக்கு மிக அதிகம், அது என்
எழுத்தின் வழியாக வெளிப்படுவது இயல்பே
சந்தோஷம் நுரை
போன்றது, தோன்றும் போது அழகாக இருக்கிறது, உடனே
மறைந்தும் விடுகிறது, ஆனால் வேதனை, காயத்தை போன்றது, நாள்பட்டு வலிக்கிறது, காய்ந்து போனாலும் அதன் தடம் அப்படியே
இருக்கிறது
வேதனையை கடந்து செல்லமுடியும், ஆனால்
வேதனையே இல்லாமல் வாழ முடியாது”
எல்லா இடங்களிலும் இந்த துன்பியல் சார்ந்த
விஷயங்கள் கலையாக மாறிவிடுவதில்லை. எஸ்.ராவின் நிமித்தம் நாவலில்
அது அவ்வளவு அற்புதமாக மாறுகிறது.
தான் காது கேளாதவனாக இருப்பது
தனது குற்றமில்லை என்பது நாயகனின் தேவராஜின்
முதல் வாதம். ஆனால் ஏன்
தன் வயதொத்தவர்கள் அவனின் இன்மையை வைத்து
பகடி செய்கிறார்கள். இது அவனின் முதல்
கேள்வி. இந்த இன்மையால் தான்
பலருக்கு பிடிக்காதவனாய் இருக்கிறோம் என்பது அவனாக கொள்ளும்
முதல் கற்பிதம். கடைசியாக அவன் கண்டு கொள்ளும்
விஷயம் இதனாலேயே நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பது.
தன்வசம் இருக்கும் ஒரு விஷயம் மிகப்
பெரியதாய் இருப்பதால் தன்னை சுற்றி நிகழும்
யாவற்றையும் அவன் அந்த காதோடு
ஒப்பிட்டு பார்ப்பது மனித இயல்பின் வெளிப்பாடு.
அவனுக்கு காது அவ்வளவே.
(தொடரும்...)
பின் குறிப்பு :
அவரின் நாவல்களில் நான் வாசித்து பகிர்ந்தவைகள்
உப பாண்டவம் - http://www.kimupakkangal.com/2013/11/blog-post_8.html
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக