தற்கொலைக்கு காரணம் சொல்

எந்த ஒரு பொருளின் வடிவமும் இருப்பும் அதை எதிர்கொள்ளும் பொருளின் வடிவமும் இருப்பும் சார்ந்தே அமைகிறது

இந்த தலைப்பே எனக்கு வாசிக்க விநோதமாக இருக்கிறது. இந்த வாக்கியம் இருவேறு பொருளைத் தருகின்றது. ஒன்று தற்கொலைக்கான காரணத்தை சொல்லச் சொல்வது. மற்றொன்று தற்கொலைக்கான காரணமே சொல்(word). இதில் இப்பதிவில் எடுக்க வேண்டியது இரண்டாவதே. ஆம். கட்டுரைக்குள் செல்வதற்கு முன் ஒரு சின்ன கதை தோன்றுவதால் சொல்ல நினைக்கிறேன்.

ஒரு நான்கு ஆண்டுகள் பள்ளிக்காலங்களில் செய்யுட்பகுதியில் சிலப்பதிகாரம் வாசித்தும், எல்லோருக்கும் தெரியும் இக்கதையை எனக்கு என் அம்மாவே சொல்லியிருக்கிறார். அக்கதையானது கோவலன் தான் சேரன்மாதேவியின் கால் சிலம்பை திருடியது என்பதறிந்தவுடன் பாண்டிய மன்னன் அவனைக் கொண்டுவா என சேவகர்களை ஏவுகிறான். சேவகர்களின் காதிலோ 'கொன்று வா' என விழ பதிலியாய் மதுரையே தீ விபத்தில் எரிந்து விடுகிறது. இப்போது கோவலனைக் கொன்றது யார் ? பிரம்மஹத்தி தோஷமே வரும் எனினும் யார் மீது கவிழும் ? மன்னனின் மீதெனில் அது தவறு. சேவகர்களின் மீது எனினும் தவறு. சொல்வோனும் கேட்போனும் எந்த இடத்திலும் தவறு செய்யவில்லை. சொல்லானது தனக்குள் இருக்கும் சப்த அலைகளை உருமாற்றி எதிராளியிடம் சென்று சேர்கிறது. இப்போது கோவலின் மரணத்திற்கு காரணம் அந்த சொல்லே தவிற ஏவிய வாயோ நுகர்ந்த செவியோ அல்ல. இதை நம்புவது கடினம் தான். இருந்தும் நான் எழுதியிருப்பதில் நம்பக்கூடியதாய் அமைகின்றது.

ஒட்டு மொத்த உலக வரலாற்றயே இந்த சொல்லினுள் நம்மால் அடக்க முடியும் எனில் உலக வரலாற்றை நினைத்துப்பாருங்கள் ? அப்படியெனில் நமது எதிர்வாதத்திற்கு ஹிட்லரோ முசோலனியோ அடிமைபடுத்திய வெள்ளைக்காரனோ இருக்க மாட்டார்கள். எல்லாம் சொல்லாக மட்டுமே இருக்கும். இந்த இழிநிலையை மனிதன்  எப்படி எதிர்கொள்வான் ? தொலைதொடர்பு நிலைகள் முதலில் அறுபட்டுவிடும். இதிலேயே நாம் காலங்கடந்து ஆதிகால தொலை தொடர்பிற்கு சென்றுவிடுகிறோம்.

இதை இன்னமும் சற்று வேறு விதமாக சொல்ல நினைக்கிறேன். உலகின் வரலாற்றை எப்படி பார்த்தாலும் அது ஒரே கோட்டில் இருக்கிறது. அஃதாவது ஒரு குழு மற்றொரு குழுவை அதிகாரம் செய்து, அதிகாரத்தின் விளைவாய் போர்களை புரிந்து உலகையே பிணக்கிடங்காக மாற்றி இப்போது அதன்வாடை வரலாறாய் மிஞ்சி இருக்கிறது. இப்போதும் இந்த அதிகாரம் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால் இதன் பிண்ணனி என்று புராணங்களுக்கு நமது புனைகதைகள் செல்கிறது. அந்த புனைகதைகள் உலகம் முழுக்க கடவுள்களால் நிரம்பி வழிகிறார்கள். இந்த கடவுள்களின் வரலாறும் அதிகாரம் சார்ந்தே இருந்து வந்திருக்கின்றது. இப்போது இந்த மொத்த விஷயத்தையும் சொல்லின் அதிகாரமாக மாற்றினால் ?

சொல்லே உலகம். உலகமே சொல். ஆனால் சொல் என்பது கூட ஒரு சொல்லே அன்றி வேறல்ல என்று பின்நவீனத்துவத்திலும் நான் லீனியரிலும் கலக்கியிருக்கிறது ரமேஷ் - பிரேமின் "சொல் என்றொரு சொல்" என்னும் நாவல்.நாவலில் இருக்கும் வரியை கொடுத்துவிடுகிறேன். அதுவே நாவல் என்ன என்பதையும் எப்படிப்பட்ட கட்டமைப்பை கொண்டிருக்கிறது என்பதையும் சொல்லும்

"ஒரு உடல் வார்த்தைகளாக பிரிந்து பிறகு தம்மை மாறி மாறிக் கோத்துக் கொண்டு கவிதையாக மாறிவிடுவதும், ஒரு புனைவுக் கதைக்குள்ளிருந்து நிஜ உலகம் ரத்தமும் சதையுமாகத் தோன்றி நகரத்தின் இருட்பகுதிகளில் உலவுவதும் பிறகு அவை அந்த கதைக்குள் மீண்டும் ஓடி ஒளிந்து பதுக்கமுறுவதும் நிகழ்ந்தபடி இருந்தன. நான் வாசிக்கிறேனா அல்லது அந்த நூலுக்குள் ஒரு பாத்திரமாகவோ அல்லது ஒரு வாக்கியமாகவோ வாழ்கிறேனா என்று குழப்பமாக இருந்தது. இப்பொழுது இக்குறிப்புகளை 'உடலின் வலியும் உணர்வில் இசையும்' என்ற அந்த நூலுக்குள்ளிருந்த படியேதான் எழுதிச் செல்கிறேனோ என்ற குழப்பம் எனக்குள் நீடிக்கிறது"

இந்நாவல் இரண்டு விதமான ஃபாண்ட்களில் எழுதப்படுகிறது. இந்த ஃபான்ட் விஷயம் முக்கியமானதும் கூட. ஒன்று நாவலுள் இருக்கும் ஒரு நூல். அது நாவலா கட்டுரையா என்பதை யூகிக்க முடியாதபடி வருகிறது. ஆனால் அது ஆதீதன் எழுதிய உடலின் வலியும் உணர்வில் இசையும் என்ற படைப்பு.

மற்றொன்று அதைச் சுற்றி குறிப்பாக ஆதீதனின் மரணத்தை சூழ்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் பகுதிகள். ஆதீதன் அடிப்படை குழப்பவாதி. அவனால் எதையும் தனக்குள் வைத்துக் கொள்ள முடியாது. கோபங்களையும் வெளியே எழுதக்கூடியவன். அவனின் நூல்கள் அதிகம் transgressive தன்மைகளை கொண்டிருக்கிறது. அவற்றை பலர் வாசிக்கிறார்கள் விமர்சனம் செய்கிறார்கள். அவன் சுயவாழ்க்கையை புனைவாக எழுதுவதால் அதிலிருந்து அவன் மரணத்தின் காரணத்தை அறிய முடியுமா என்று தேடுகிறார்கள் சிலர். விமோசனா பிரபஞ்சனா என்பவர்கள் அவனின் பிரதியை ஆராய்கிறார்கள். ஆத்மார்த்தி அரூபதர்சினி என்பவர்கள் அவனின் படைப்பையும் யதார்த்த வாழ்க்கையையும் இணைத்து விமர்சனம் என்ற கழிசடையை எழுதுகிறார்கள். அதீதனின் படைப்புகளின் அறிமுகங்களும் வருகின்றன. ஆக ஆதீதனின் analytical research ஏ சொல் என்றொரு சொல் என்னும் நாவல்.

இது முழுக்க முழுக்க பின்நவீனத்துவ படைப்பு. பின்நவீனத்துவத்தின் முக்கிய கூறு ஏற்கனவே இருக்கும் ஸ்தூலத்தை தகர்த்து எறிதல். இந்த தன்மையை இருவேறு படிகளாக ரமேஷ் பிரேம் எழுதியுள்ளார். முதலில் ஏற்கனவே இருக்கும் ஸ்தூலங்களான வரலாறுகளை மாற்றி அமைக்கிறார். வியாசனை எதிர்க்கிறார். உடனே அறிவுஜீவி என்னும் பதத்தை அலச ஆரம்பிக்கிறார். அப்போது இந்த இண்டலெக்சுவல்கள் பாலியலை ஒதுக்குவதற்கு ஒரு கற்பனைக் கதையை உலவ விடுகிறார்.

இதே போன்று பல கதைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதையை பேசுகிறது. பழையதை மறந்தால் தான் புதிய அத்தியாயங்களை கண்டறிய முடியும் என்பதைப் போல நாவல் செல்கிறது. சில அத்தியாயங்களில் எழுதப்பட்டிருக்கும் மொழி முற்றிலும் புதிதாக நவீனமாக இருக்கிறது.

ஒரு பேராசிரியாரின் வரலாற்றை எண்களை கொண்டே எழுதுகிறார். வாசிக்க வாசிக்க எனக்கு பிரமிப்பே கூடுகிறது. வரலாறு மனிதர்களால் நிறைந்தது தான். அந்த மனிதர்களின் குறிப்பிட்ட காலகட்டங்களில் நிகழ்ந்த சம்பவங்களே வரலாற்றை நிர்ணயம் செய்கின்றது. அந்த சம்பவங்கள் அனைத்தையும் வயதை வைத்தே கட்டுமானம் செய்வது ஆச்சர்யமாக இருக்கிறது.

நாவல் முழுக்க வேட்கை நிரம்பிய பக்கங்களால் வழிகிறது. இது ஆச்சர்யமாகவும் இருக்கிறது. காமம் நிறைய இடங்களில் வந்தாலும் யாவும் வெறி கொண்ட வேட்கையாக மட்டுமே இருக்கிறது. அந்த வேட்கை ஒரு சாபத்தை தீர்ப்பதற்காக இருக்கிறது.

இந்த சாபம் வேட்கை மற்றும் அத்தியாயங்கள் எல்லாம் சொல்லில் சென்று முடிவடைகிறது. இடையில் பௌத்தம் சார்ந்தும் சில பக்கங்கள் வருகின்றது. அதில் பௌத்தர் என்பதே ஒரு சொல் என்ற குறியீட்டில் தான் நகர்கிறது. பௌத்தர் அனந்தர் என்பவருடன் பேசிக் கொண்டிருக்கிறார். பௌத்தர்(சொல்) அவரிடம் சொல்கிறார்

"'நீங்கள் கேட்க விரும்பியவற்றையே என்மூலம் கேட்டறிந்தீர்கள். நீங்கள் தேடிக் கொண்டிருந்ததையே என்மூலம் கண்டடைந்தீர்கள். உங்களுக்கு விருப்பமான வற்றையே என் பேச்சாக உணர்ந்தீர்கள். நீங்கள் ஆக நினைத்ததையே என்மூலம் நிறைவேற்றிக் கொண்டீர்கள்'

'ஞானகாயரே அப்படியெனில் நீங்கள்தான் யார் ?'

'அதைத் தான் நான் ஐம்பத்து ஓரு ஆண்டுகளாய் தேடிக் கொண்டிருக்கிறேன்.'"

இந்த பௌத்தரை சொல்லாக பாவிப்பதும் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எழுதப்பட்டுள்ள வாசகத்தைப் போலத் தான்.

இந்நாவலில் இன்னுமொரு விஷயமும் அழுத்தமாக சொல்லப்படுகிறது. அஃதாவது உடல் வேறு நான் வேறு. நான் என்பது தனக்கென ஜீவனை கொண்டிருப்பது போலவே உடலும் கொண்டிருக்கிறது என்கிறார். மேலும் உடலை அவர் பிணம் என்கிறார். சொல்லையும் இப்படியே அணுகலாம். அப்படி அணுகுவது சுவாரஸ்யமானதும் கூட.

மேலும் பின்நவீனத்துவம் இரு படிநிலையாக இருக்கிறது என்று சொல்லியிருந்தேன். இவ்வளவு நேரம் சொன்னது தான் முதல் படிநிலை. மற்றொன்றோ மேலே சொன்ன எல்லாவற்றையும் எதிர்த்து மீண்டும் முதல்படிநிலைக்கு செல்கிறது. நான்லீனியரின் உச்சமாக இந்த transition ஐ கருதுகிறேன். அப்படி மாறும் இடத்தில் மேம்போக்காக மதங்களின் வழிப்போக்கை வேகமாக பகடி செய்து போகிறார். ஒரே கதாபாத்திரம் பௌத்தம் சமணம் சைவம் வைணவம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று எங்கெல்லாமோ செல்கிறது. ஆனால் நாவலில் எதையும் தொக்கி நிற்க வைக்கமால் சொல்லிச் செல்கிறார்.

நாவலின் கட்டமைப்பு முழுக்க முழுக்க ஆரம்பத்தில் சொன்னது போல் சுழற்சி முறையில் இருக்கிறது. நாவலை நான் லீனியர் என்று சொல்ல தோன்றுகிறது. அதே நேரம் மனம் மறுக்கவும் செய்கிறது. காரணம் நான் லீனியர் முடிவற்றது என்னும் தன்மையையும் கொள்ளும். இங்கோ நாவல் கடைசியில் சுழற்சியில் சென்று முடிகிறது. சொல்லுக்குள் வாசகன் சிக்கிக் கொள்கிறான். சொல்லே சொல்லுக்குள் சிக்கிக் கொள்கிறது.

இந்த சொல்லின் சிக்கலை தீர்க்க ஒரே வழிதான் என்று சொல்லலாம். அது இந்த சொல்லை புறக்கணிப்பது. அச்சொல்லை விட்டு தள்ளிப்போவது. இதை பல கதாபாத்திரங்கள் செய்கிறது. அதற்கு நாவலிலேயே ஒரு பதிலும் வருகிறது. அந்த பதிலே இக்கட்டுரையின் கடைசியாகவும் இக்கட்டுரைக்கு தலைப்பு வைத்ததன் அர்த்தமாகவும் இருக்கும். இந்நாவலை முழுதாக சொல்லவில்லை. காரணம் இந்நாவலின் உள்படிந்திருக்கும் விஷயங்களின், பகடிகளின் யதார்த்த உண்மைகள் தெரிந்தால் இன்னமும் கொண்டாடலாம். தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் சொல்லிலிருந்து தப்பிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மட்டுமே இப்பிரதி கொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்கு இந்நூல் தரும் பதில்

"மொழி வெளியிலிருந்து நீ வெளியேற நினைப்பது உனது தற்கொலை. நீயாக உனது மொழியை பேச மறுப்பது உனது தற்கொலை முயற்சி. உனது வாழ்தலும் மரணமும் மொழியுடனான இயைபு மற்றும் முரண்வினை. எப்பொழுது நீ உனது மொழியை இழந்து போகிறாயோ அப்பொழுது மரணமுறத் தொடங்குகிறாய். மொழியழிதல் என்பது மௌனமல்ல அது வேறொன்று"

பின் குறிப்பு : வாசித்த பின்பு தான் ரமேஷ் பிரேம் என்பவர்கள் இருவர் என்பதை அறிந்து கொண்டேன். அப்படியெனில் இது தமிழில் இருக்கும் collaborative writing வகையாயிற்றே!!!

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Win Tv said...

Nice Post wish you All the best - See more at: http://wintvindia.com/

Post a comment

கருத்திடுக