யாமாமாநீ யாமாமா

முன்பின் தெரியாத ஒருவருடன் முகமன் ஏற்படுகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் தங்களைப் பற்றியே சொல்லி அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அப்போது நாம் நினைப்பது எல்லாம் நமக்குள் இருக்கும் சாதனைகள், எதிரே இருப்பவனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தக் கூடிய நம் வாழ்வில் நிகழ்ந்த சிறப்பம்சங்கள் முதலியன தான். இந்த அனைத்திலும் ஒரு பைத்தியக்காரத் தனம் இருக்கும். எதற்காக இப்படி செய்ய வேண்டும் ? ஏன் நாம் எல்லோரும் மற்றவர்களைக் காட்டிலும் ஒருப்படி மேலே இருக்க நினைக்கிறோம் அல்லது அவர்களை விட தர்க்க அடிப்படையிலாவது முன் இருக்க நினைக்கிறோம் அல்லது ஏன் அவர்கள் சொல்வதை செவி மடுக்க நினைக்கிறோம் என. இதை நான் பைத்தியக்காரத்தனம் என எண்ணிக் கொண்டிருக்கும் போது ஒரு எழுத்தாளன் அவர்கள் சொல்வதே பைத்தியக்காரத்தனத்தை தேடும் ஓர் உன்னத பயணம் என்கிறான்.

நம்மை நாம் அறியும் தருணங்களே தனிமை மட்டும் தான். தனியாக இருக்கும் போது மட்டுமே நம் தேவை என்ன என்பது நமக்கே தெரிய வருகிறது. அல்லது அறிமுகம் ஆகிறது. நம் தேவைகள் அப்படி தெரியவரும் போது ஒன்றுடன் நின்று விட மறுக்கிறது. அநேக நேரங்களில் தனிமை அறுபட்டு விடுவதால் நாம் நம் தேவைகள் என்ன என்பதை தேடி செல்ல மறந்து அல்லது மறுத்து விடுகிறோம். நீண்ட நெடுந் தனிமை கிடைத்துவிட்டால் நம் தேவைகளின் தேடல் வேரூன்றி நம்மை நமக்குள்ளேயே எங்கோ இழுத்து சென்றுவிடும்.

இந்த தேடல்களெல்லாம் புதிதான ஒன்றை எப்போதும் நமக்கு தரப் போவதில்லை. எனக்கு தெரிந்த மருத்துவர் ஒருவர். அவரைப் பற்றி என் நாவல்களில் எழுத வேண்டும் என்றிருந்தேன். (அடுத்ததாக எழுதினால் அவரின் பாத்திரம் நிச்சயம் வரும்). அவர் மனிதனின் வாழ்நாளில் வரும் எல்லா நோய்களுமே மனம் கொள்ளும் வெளிப்பாடு என்று தான் சொல்வார். மலேரியா காய்ச்சலுக்கும் இதுவே வித்து என்றும் சொன்னார். ஆக நாம் காண இயலாத மனம் நமக்கு அநேக காட்சிகளை கண் கூடாமல் காட்டிக் கொண்டிருக்கிறது.

இந்த காட்சிகளின் வழியே நாம் தெரிந்து கொள்ளப் போவதெல்லாம் நம் சுயம் மட்டுமே. வாழ்க்கையின் முக்கியமான விஷயம் நம் சுயத்தை இழக்காமல் இருப்பது. நம்மை நாமே மறக்கும் தருணங்களில் மட்டுமே இந்த உலகத்தில் பிரக்ஞை என்னும் பெயரில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் மனோ உலகம் அற்புதமான ஒன்று. It make a way to define ourselves.

இந்த மனம் இழுத்து செல்லும் பாதைகள் முழுக்க பைத்தியக்காரத் தனங்களால் நிறைந்து இருக்கிறது. அதன் மதிப்பீடுகள் அவனவன் பொறுத்தே. அவனவனின் இச்சைகளை பொறுத்தே. எதன் மீது நாம் அதீத இச்சையை கொண்டிருக்கிறோமோ அதன் வழியிலேயே நம்மை நாம் கண்டு கொள்ள முடியும். சிலருக்கு எழுத்தில் சிலருக்கு ஓவியத்தில் இயற்கையில் கலவியில் வாசிப்பில் பக்தியில் நடிப்பில் என எண்ணிக்கையிலடங்கா இச்சை சார் செயலில் நம்மை நாம் கண்டு கொள்ள முடியும்.

இதில் என்ன சந்தோஷத்தை அடைந்து விடப் போகிறோம் என்று அநேகம் பேருக்கு தோன்றும். அதை பலர் பிரம்மம் கர்ம வினை பிறவிப்பயன் என்று சொல்லுகிறார்கள். அதை அடைந்து விட்டவனால் நினைத்த போது காணக்கூடிய அளவு அந்த பயணத்தை கைக்குள்ளே வைக்கக் கூடியவனால் இரண்டே விஷயங்களை செய்ய முடியும். ஒன்று வாழ்நாள் முழுக்க அவனுக்காக அவனுடன் பைத்தியமாக வாழ்வதும் மற்றொன்று நினைத்ததை செய்யக் கூடிய மனதைரியத்தை பெறுவதும். இதைத் தான் அஹம் பிரும்மாஸ்மி என்றும் சொல்லுகிறார்கள்.

இந்த பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன் தன் கதையை தானே பதிவு செய்கிறான். அது தான் நகுலன் எழுதிய "நினைவுப் பாதை".


நான் பித்தனிலை நாவல்களை தேடும் பைத்தியமாக பதிவுகள் இடும் போது சில நண்பர்கள் இந்நாவலை வாசிக்க சொன்னார்கள். எனக்குள் நகுலன் சார்ந்து ஈர்ப்பு இருந்தே வந்தது. இடையில் ஒரு எழுத்தாளரை சந்திக்க நேர்ந்தது. அவரோ நகுலனை பிடிக்கவில்லை என்றே சொன்னார். ஒருவரை பிடிக்க வைப்பது நம் கடமை அல்ல. காரணம் அவை ரசனை சார்ந்த ஒன்று. ஆனால் அவர் அதற்கு ஒரு காரணமும் சொல்லியிருந்தார். அஃதாவது யதார்த்த வாத எழுத்துகளை தகர்த்து எறியும் வண்ணம் ஒரு புரட்சி எழுத்தில் நிகழ்ந்திருக்கிறது. அதில் முளைத்தது தான் இது போன்ற எழுத்துகளும் மாயா யதார்த்தமும் என. மேலும் எனக்கு அறிமுகம் செய்த நபர்கள் யாவும் இந்நாவலை கொண்டாடுவதன் காரணம் கடைசியில் வரும் பித்தனிலை பக்கங்கள். வாசித்த போதே உணர்ந்து கொண்டேன் ஒட்டு மொத்த நாவலுமே தமிழின் மெடா ஃபிக்‌ஷன் வகைமையில் ஒரு பொக்கிஷம் என.

மெடா ஃபிக்‌ஷன் நாவலை ஆரம்பிக்க அட்டகாசமான வார்த்தைகள் இவைகளை தவிர வேறெப்படி முடியும். அதாவது,
"இனி எழுதுவதற்கு என்ன இருக்கிறது, இனி எழுதவே கூடாது என்று இருந்தவன் இப்போது மறுபடியும் எழுதுகிறேன். இது மாத்திரமன்று; ஒருவித நியதியும் வகுத்துக்கொள்ளாமல் தான் எழுதுகிறேன். முதல் வாக்கியம் எழுதிய பிறகுதான் அடுத்த வாக்கியம். இப்படி அமையும் என்று அது அமையும் வரை எனக்குத் தெரியாது"

இப்படி சென்று கொண்டே நாவலில் அறிமுகம் ஆகும் முதல் கதாபாத்திரம் நகுலன். ஆம் இந்நாவல் முழுக்க நிறைந்திருப்பவர் நகுலன் மட்டுமே. நினைவுப் பாதை எனும் நாவலில் அவர் எழுதவிருக்கும் யாவற்றையும் அவர் முதல் பக்கத்திலேயே சொல்லிவிடுகிறார். அவர் செய்யப் போவதெல்லாம் முன்பின் தெரியாத வாசகனுக்கு தன்னை அறிமுகம் செய்து கொள்வது மட்டுமே. அதற்கு பல்வேறு பாத்திரங்களை அவராகவே எடுத்துக் கொள்கிரார்.

அந்த கதாபாத்திரங்களும் அவராக இருக்கும் பட்சத்தில் அவர்களுடன், தனக்குத் தானே நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலில் தன்னை அறிமுகம் செய்து கொள்ள பார்க்கிறார். வார்த்தைகளின் மூலம் அதை செய்ய நினைக்கிறார். விளைவு வார்த்தைகளினுள்ளேயே சிக்கிக் கொள்கிறார். இந்த சிக்குதல் தான் வாசித்தலில் சிலருக்கு கடினத்தை கொடுத்தாலும் சிலருக்கு உச்சபட்ச கொண்டாட்டத்தை கொடுக்கின்றது. நான் இரண்டாம் கட்ட ரசிகன்.(அப்படியெனில் முதற்பகுதியில் இருப்பவனும் ரசிகனோ!!!!)

நாவல் ஒரு இடத்திலும் பிசகாமல் பித்தனிலையை மட்டுமே பேசுகிறது. மேலும் விட்ட இடத்திற்கு கதையை எழுதும் நவீனன்(நவீனனும் நகுலனும் ஒன்று என்று நாவலில் வருகிறது) வர இயலாமல் தவிக்கிறான். நினைத்ததையெல்லாம் சொல்லிவிட வேண்டும் என்று கிடைத்த இடத்தில் அட்டகாசமாக சொல்கிறான். மேலும் நாவல் ஒரு நாவல் எழுதுவது எப்படி என்னும் கேள்விக்கும் பதில் சொல்கிறது. நாவல் சார்ந்து மேலும் தமிழ் இலக்கியத்தில் இருக்கும் புனைவுகள் சார்ந்து குறிப்பாக எழுத்தப்பட்ட காலத்தில் நிலவிய இலக்கியம் சார் அரசியல் சார்ந்து அழகாக சொல்லிப் போகிறார்.

அரசியல் பகுதிகளைவிட நாவல் எழுதுவது பற்றிய பகுதிகளும் சுயானுபவங்களும் தான் அட்டகாசமாக வந்திருக்கிறது. நவீனன் பல உருவங்களை எடுக்கிறார். அவரவர்கள் பேசும் போது அங்கே நான் என்னும் கதாபாத்திரம் சம்மணமிட்டு அமர்ந்திருக்கிறது. இந்த நான் மனித உருவங்களுடன் எங்குமே பேசுவதில்லை. இந்த நானிற்கு தேவையெல்லாம் எதிரே இருப்பவர்களின் பைத்தியக்காரத் தனம் தான். சின்ன உதராணம் அவன் ஒரு கதை சொல்கிறான். அக்கதையில் ஒரு குடிகாரன் சாமியாரிடம் செல்கிறான். குடியை நிறுத்த. அவன் சொல்கிறான் நான் சொன்னால் நிறுத்த மாட்டாய், நிறுத்தவும் போவதில்லை என. உடனே போதனையாய் நிறுத்தாமல் குடி என சொல்லி அனுப்புகிறார். சில நிமிடங்கள் நூலை மூடி வைத்துவிட்டு இந்த வரிகளுள் அதில் நகுலன் கொணர்ந்த பகடியை நினைத்து மனதளவில் கொண்டாடினேன்.

நகுலனே வாசகன் அறிந்தவாறு நாவலுக்குள் எழுதி கொண்டிருப்பதால் ஒரு இடத்தில் சொல்கிறார் - 
""நவீனன்" என்கிறேன் "நகுலன்" என்கின்றேன். ஆனால் நான் யார் யாரை சந்திக்கின்றேனோ நான் அவர் அவர் ஆகின்றேன்"
இந்த வாக்கியத்தினால் கதாபாத்திரம் சார்ந்து ஏற்படும் குழப்பங்கள் நிவர்த்தி ஆகிறது என்று சந்தோஷம் கொள்ள முடியவில்லை. அதற்கான காரணம் நாவலில் அடிக்கடி நவீனன் சொல்கிறான் நான் சதைகளுக்குள்ளே சிக்கியிருக்கிறேன் என. காரணம் அவனது ஆன்மா கூட்டை விட்டு வெளியில் செல்ல யத்தனிக்கிறது. யத்தனிப்பதன் காரணம் எல்லாம் சுயத்தை அறிதல் மட்டுமே. நவீனனின் ஒவ்வொரு பக்கமும் எனக்கு பச்சாதாபத்தை தான் ஏற்படுத்துகிறது. 

மேலும் ஒரு நாவல் என்ன என்ன செய்ய வேண்டும் அதனுள் எழுத்தாளன் வைப்பதே சட்டமா என நிறைய கேள்விகளுக்கு இதில் பதில் இருக்கிறது. ஒன்றை மட்டும் சொல்கிறேன்,
"நவீனா, எழுத்தாளன் என்ன செய்தாலும் அவனை நீ புரிந்துகொள். அவனுக்கு அறிந்தும் பொய் சொல்வது நிர்பந்தம். இந்த நிலை கெட்ட சமூகத்தில் தன் நிலையை காப்பாற்றிக்கொள்ள எந்த ஆத்ம கிருத்தியத்தையும் அவன் செய்யத் தயங்க மாட்டான். இதெல்லாம் உனக்கு போக போகத் தெரியும்"

நாவல் கவிதை சிறுகதை எல்லாவற்றிற்கும் விளக்கம் கொடுக்கிறார் நகுலன். கவிதைக்கு அவர் பாசுரங்களிலிருந்து ஒரு பொருள் தருகிறார். இது தன் பிரதியை தானே செய்யக் கூடிய உச்சபட்ச பகடி. காரணம் அவர் தன் நாவலில் சுயத்தை தேடும் கருவை வைக்கும் போது, அவர் குறிக்கும் பாசுரமும் விளக்கமும் பின்வருமாறு இருக்கிறது,

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.

பொருள் : ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா? நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது முற்றிலும் தகும். பேரியாழ் என்னும் வீணையை வாசிப்பவனே! யாவரும் விரும்பத்தக்க கட்டழகனே! பகைப்பொருள்களும் சிவனைச் சாரின் பகை தீர்ந்து நட்பாகும் என்ற உண்மையினை யாவரும் காணுமாறு பாம்புகளை உடையவனே. கை, கால் முதலிய அவயவங்கள் காணா வண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே. சீகாழி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவனே. இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! மாயை முதலிய மலங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!.


மாயை கடவுளின் திருமேனி என்கிறார் பாரதி. ஆனால் நகுலனோ என்னைப் பற்றி தூர் வாறி எழுதவே ஏக விஷயங்கள் உள்ளது என்கிறார். ஆனால் மாயையை மறுப்பதில்லை. காரணம் அவரின் உருவமே அவருக்கு ஒரு மாயை. இதை கடந்தால் நிச்சயம் தன்னால் தன் சுயத்தை அடைந்துவிட முடியும் என அவர் செய்யும் ஆராய்ச்சி தான் நினைவுப் பாதை நாவல்.

இதில் சுசீலா என்னும் பாத்திரம் ஒன்று வருகிறது. அவள் நவீனனை நிராகரித்த போது அவளின் நினைவுகளை அசை போட்டு அசைபோட்டு மீட்டெடுக்க பார்க்கிறான். முடியாத நிலை எய்தும் போது அவன் செல்லும் பித்தனிலையை காண்பிக்கும் பக்கங்கள் எத்தனை ஆண்டுகள் ஆயினும் வேறு யாராலும் எழுத இயலாத ஒரு எழுத்து. முழு நாவலும் கூட அப்படியே. அவருக்கு தனிமை வதையாக இருந்திருக்கலாம். எனக்கோ இப்போது அவரின் தனிமை ஒரு கொண்டாட்டமாக இருக்கிறது. இந்த சுசீலாவைப் பற்றி எழுதினாலே பக்கங்கள் நீளும். காரணம் அவ்வளவு அவிழ்க்கபடா(அவிழ்ப்பது வாசகன் கையிலேயே இருக்கிறது) முடிச்சுகள் எழுத்தினால் சுசீலாவின் பின் வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் படைப்பாளி படைப்பு வாசகன் இந்த மூவருக்கும் இடையே இருக்கும் கொண்டாட்டங்கள் படைப்பை சார்ந்து இருக்க வேண்டுமே ஒழிய படைப்பாளி - வாசகனுக்கு இடையில் இருக்க வேண்டாம் என தர்க்க ரீதியாக பேசுகிறார். Transgression படைப்பு சார்ந்து மிக காத்திரமாக நாவலில் இருக்கிறது.

சுயத்தின் பெருமை என்ன என்று அவர் சொல்கிறார். அதோடு என் பத்தியை அரை மனதாக முடித்துக் கொள்கிறேன். எந்த வரிகளை போட்டு முடிக்க வேண்டும் என்று நினைத்தேனே ஒழிய எவற்றையெல்லாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்யவில்லை.

நகுலா! நீ என் தோள் மேல் கை போட்டு எங்கோ அழைத்து செல்கிறாய். கண் காணாத உலகத்தினுள் பிரவேசிக்கிறேன். எல்லாம் வார்த்தைகளாக மாறி உருவேடுத்துக் கொண்டிருக்கிறது. வார்த்தைகளுள் சிக்கி வார்த்தைகளை சதைபிண்டமாக்கி அதற்கு சில அனுபவங்களை கொடுத்து மீண்டும் வார்த்தை என்னும் சிறையிலிட்டு என்னிடம் கொடுத்தாய். நீ யார் என்று யோசிக்கும் தருவாயில் நான் என்பதற்கு நீ கொடுத்த வார்த்தைகள் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன

"என்னை ஏதோ ஒன்றுடன் தொடர்புபடுத்தித் தானே ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறீர்கள் - சிறு சம்பவங்கள் கூட இருக்கலாம் - நான் என்பது என்ன அப்படி நிர்விகாரமான நிர்க்குணமான நிர்மலமான நிரந்தரமான ஒரு நித்ய வஸ்து ஒன்றும் இல்லையே"

எனக்குண்டான சிந்தனை : எல்லாம் அனுபவம் என்றாய். தேடி தேடுதலின் வழியில் கிடைத்த பதில்களை உன்னுடைய நானிற்கானதாக்கிக் கொண்டாய். அப்படியெனில் எனது நான் ?????

பின் குறிப்பு :  தலைப்பிற்கான அர்த்தம் "ஆன்மாக்களாகிய நாங்கள் கடவுளென்றால் அது பொருந்துமா ?"

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக