அம்மாவும் எஸ்.ராமகிருஷ்ணனும்


மகாபாரதம் பாரதத்தில் இருக்கும் மாபெரும் இதிகாசங்களுள் ஒன்று என்ற போதும் எனக்கு அது வாசித்திராத கேட்டறிந்த ஆற்புத புனைவு. இந்த கேட்டறிதலுக்கு பெரும் துணையாய் இருப்பவர் என் அம்மா. சின்ன வயதிலிருந்து எனக்கு சொல்லி வந்த மகாபாரத கதைகளின் பால் அதிகம் ஈர்க்கப்பட்டேன். எதற்காவது பெயர் சூட்ட வேண்டுமெனினும் கூட எனக்கு மகாபாரதமே நினைவிற்கு வரும். முழுதும் தெரிந்தவனல்ல நான். என் அம்மாவிற்கும் முழுதும் தெரியாது. அவருக்கு தெரிந்தவையெல்லாம் எனக்கு அவ்வப்போது சொல்வதுண்டு.

இந்நிலையில் நேற்று எஸ்.ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் என்னும் நாவலை வாசிக்கத் தொடங்கினேன். மகாபாரதம் எனக்கு பிடித்த புனைவாகையால் இந்த நாவல் எனக்கு அவரின் பிற நாவல்களை விட மிகவும் பிடித்தே இருந்தது. அங்கங்கே என் அம்மாவும் எஸ்.ராவும் எனக்குள்ளே மோதிக் கொண்டனர். சில இடங்களில் என் அம்மா எனக்கு சொன்ன கதைகளை எஸ்.ரா ஒட்டு கேட்டுள்ளாரோ என்பது போல் நாவலின் வாக்கிய அமைப்புகள் இருந்தன.

இந்நாவலின் முன்னுரையில் இதை எழுதுவதற்கு அவர் நூல்களின் வழியாக மேற்கொண்ட பயணத்தினை சொல்லியிருப்பார். அது மிக மிகப் பெரியது. தேடலும் பரந்து விரிந்த வாசிப்புமே இந்நாவலை எழுத வைத்திருக்கிறது என்பதை வாசிக்கும் போது நன்கு அறிந்து கொள்ள முடியும். பொதுவாகவே ஒவ்வொரு புனைவும் தனக்கென ஒரு வெளியை வைத்திருக்கின்றது. அங்கு எழுத்தாளனை இழுத்து செல்கிறது. மகாபாரதம் வீரியம் அதிகம் இருக்கும் ஒரு புனைவு. எஸ்.ராவால் முழுதும் எழுத முடியவில்லையோ என்றே இந்நாவல் சொல்ல வைத்திருக்கிறது. எழுத்தினூடே இதிகாசத்தை அடக்க முடியாமல் எழுத்து தவிப்பது போல தொக்கி கதைகளை சொல்லிப் போகின்றன. முன்னுரையில் கூட அவர் சொல்கிறார்
"பித்தேறிய நிலையின்றி வேறு கணம் சாத்தியமல்ல என்பதைப் போல எழுத்தின் முனை நெருக்குகின்றது" என்று.
மகாபாரதமே ஒரு நான் லீனியர் வகையிலான கதைப் போக்கை உடையது. அதை எஸ்.ரா இன்னமும் ஒரு நான் லீனியராக்கியிருப்பது என்னைப் போன்ற பித்தனுக்கு போதையூட்டக் கூடியதாய் இருக்கிறது.

இந்த நாவலின் பாரதம் பாண்டவர்களையும் கௌரவர்களையும் மட்டும் மையப்படுத்தாமல் பாண்டவர்களுக்கு திரௌபதியின் மூலம் வந்த உபபாண்டவர்களையும் சில குறுகிய கதாபாத்திரங்களையும் விரிவாக பேசுகிறது. எனக்கு இந்நாவலில் அதிகம் பிடித்த கதாபாத்திரங்களாக அஸ்வத்தாமன், திரௌபதி(யக்ஞசேனி எனும் பெயர் எனக்கு பிடித்திருப்பதால் அப்படியே வைத்துக் கொள்கிறேன்) ஆகியோர்களை சொல்வேன். எனக்கு பிடித்தமைகளை கொஞ்சம் சொல்லலாம் என்றிருக்கிறேன்.

முதலில் அஸ்தினாபுரம். மகாபாரதம் நான்கு பிராந்தியங்களை பிரதானமாக கொண்டிருக்கிறது என்பது என் எண்ணம். அவை அஸ்தினாபுரம், இந்திரபிரஸ்தம், குருக்ஷேத்திரம், விராட தேசம். இந்த நான்கு நகரங்களின் விளக்கமும் மிக தெளிவாக வரையறுக்கக் கூடிய வகையில் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக அஸ்தினாபுரத்தை,. இந்த நாவல் கிட்டதட்ட கௌரவர்கள் அருகில் அல்லது அவர்கள் பக்கத்திலிருந்து எழுதபட்ட நாவலாகாவே தெரிகிறது. அஸ்தினாபுரம் அவ்வளவு அழகு வாய்ந்த நகரமாம். அதைப் பார்த்தே இந்திரபிரஸ்தத்தை யுதிஷ்ட்ரன்(தருமன்) கட்டமைத்தான் என்று வருகிறது. இருந்தாலும் அஸ்தினாபுரத்து தொன்மை வாய்ந்த அழகில் கொஞ்சம் கூட இந்திரபிரஸ்தம் கொண்டிருக்கவில்லை என்பது போன்ற கற்பனை என் மனதினுள் விரிகிறது. இந்திரபிரஸ்தம் காண்டவ வனம் என்னும் ஒரு வனமே. அங்கே தான் நகரம் கட்டமைக்கப்படுகிறது.

இந்த நகரங்கள் என்பது மனிதனால் கட்டி வசிக்கும் மக்களால் கொள்ளப்படும் பண்டமல்ல என்பது இந்நாவல் தெளிவாக பேசும் ஒரு விஷயம். ஒரு இடத்தில் பின்வருமாறு வருகிறது
"நகரங்களின் தனிமை மிகவும் அலாதியானது. எந்த நகரமும் தன்னைப் போல இன்னுமொரு நகரம் இருப்பதை அனுமதிப்பதே இல்லை. அது தன் வடிவத்தை மிக ரகசியமாக கொண்டிருக்கிறது. அதன் சூட்சுமத்தை புரிந்து கொள்ளவோ, அதன் வடிவத்தை பிரதி எடுத்துக் கொள்வதையோ அது அனுமதிப்பதேயில்லை"  என. மேலும்
"தனக்கு என்ன பெயரிடப்பட்டிருக்கிறது என எந்த நகரமும் தெரிந்துகொள்வதில்லை"

இந்திரபிரஸ்தம் அஸ்தினாபுரத்தின் பிரதிபிம்பம் என்கிறார்.

மற்ற இரு இடங்களுக்கு பின்வருவோம். இப்போது யக்ஞசேனி. இதை வாசிக்கும் போது ஏன் யாரும் தைரியமாக இதை படமாக எடுக்க முன்வர மறுக்கிறார்கள் என்று சிந்தனையாகவே இருந்தது. நம்வசம் உலகத்தையே திரும்பி பார்க்க வைக்குமளவு ஒரு புனைவு இருந்தும் கண்ணீர் சிந்த வைக்கும் நாடகமாகவே எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதிலும் இதை படமாக எடுக்க வேண்டுமெனில் யக்ஞசேனியாக நடிப்பதற்கு உலகின் ஆகச்சிறந்த நடிகை நிச்சயம் வேண்டும். வாசிக்கும் போதே என்னால் யக்ஞசேனியின் உருவத்தை கற்பனையில் கொணர முடியவில்லை. அவ்வளவு தூரம் எழுத்தின் வீரியம் அந்த பாத்திரத்தில் புதைந்து இருக்கிறது. சொல்கிறேன் பாருங்கள்.

குந்தியின் மதிநுட்பத்தால் ஐவருக்கு மானைவியாகிவிடுகிறாள் யக்ஞசேனி. ஐவரோடும் இருக்க வேண்டும். ஒருவருடன் வாழும் போது மற்ற ஐவர்கள் நெருங்கக் கூடாது. முதலில் யுதிஷ்ட்ரனுடன் வாழ்கிறாள். குழந்தை பிறக்கிறது. அவன் பெயர் பிரதிவிந்தன். பிறந்தவுடன் யுதிஷ்ட்ரனுடனேயே வாழ்ந்துவிடலாம் என எண்ணுகிறாள். குந்தியோ அப்படி இருக்கக் கூடாது நீ ஐவருக்கு மனைவி என எடுத்துரைக்கிறாள். அதே போல் மனதை கல்லாக்கி ஐவருடனும் குழந்தை பெற்றுக் கொள்கிறாள். அதன் பிறகு அவள் சொல்லும் வார்த்தை நான் ஐவரின் தாய் என்பதே. அவளுக்கு கிடைத்த கட்டற்ற விடுதலையாக இது சொல்லப்படுகிறது. மேலும் அவள் வரும் நிகழ்வுகள் அனைத்துமே மனதை வருடிச் செல்கிறது. இவளின் இன்னுமொரு செயலையும் சொல்ல நினைக்கிறேன்.

எனக்கு மகாபாரத்தத்தில் மிகவும் பிடித்தது அஞ்ஞாதவாசம். அவர்கள் வேற்றவர்களாக ஓராண்டு காலம் வாழ வேண்டும். அப்போது அவர்கள் விராட தேசம் செல்கிறார்கள். விராட தேசம் ஒளிந்து வாழ்பவர்களுக்கான ஒரு தேசம் என சொல்லப்படுகிறது. அங்கு நுழைவதற்கு முந்தைய நாளே தாங்கள் என்னவாக இருக்கப் போகிறோம் என்பதை மூத்தவன் யுதிஷ்ட்ரனிடம் கேட்டு தெரிந்து அதற்கு தங்களை செழுமை செய்து கொள்கிறார்கள். அங்கு தான் அர்ஜுனன் பிருகன்னளையாகிறான். இவர்கள் ஒருவரையொருவர் அங்கு மறந்து தத்தமது ஏற்றிக் கொள்ளப்பட்ட பாத்திரங்களை வாழ்ந்து வந்தாலும் யக்ஞசேனி தங்களை கவனித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியவில்லை. அவள் இவர்களின் உளவியலை ஆராய்ச்சியே செய்து கொண்டிருக்கிறாள். அதன்படி அவள் சொல்லும் கூற்று கேட்பதற்கே அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக நினைக்கும் யாவும் அவர்களுக்குள் பலகீனமாக இருந்த உணர்வுகளின் வெளிப்பாடே என்கிறாள். ஓராண்டுகாலம் அந்த உருவங்கள் எனும் போது அவளுக்கு பயம் பீறிடுகிறது. காரணம் பீமன் சமையல்காரன். விரல்நுனிகளை மென்மையாக்குகிறான். ஓராண்டுகாலம் இப்படியே இருந்துவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் வீரம் குறைந்துவிடுமோ என ஐயம் கொள்கிறாள்.  விராட தேசத்தினுள் நடப்பவை யாவும் யக்ஞசேனியால் நிகழும் redemption. அதற்காக அவள் செய்யும் செயல்களை நாவல் தெளிவாக பேசுகிறது. வாசிக்க வாசிக்க பிரமிப்பும் ஏற்றம் கொள்கிறது.

அஸ்வத்தாமன். துரோணரை எப்படி கொள்வது என்று யாருக்கும் தெரியவில்லை. அவர் வேதத்தால் காப்பாற்றபட்டவர் என்பது யாரும் அறிந்ததே. அப்போது யுதிஷ்ட்ரன் முதன் முறையாக ஒரு பொய்யை சொல்கிறான் - அஸ்வத்தாமா அத குஞ்சலகா என. குஞ்சலகா எனில் யானை. அஸ்வத்தாமனின் யானை இறந்தது என சொல்கிறான். இறத்தலை குறிக்கும் சொல் வரும் போதே துரோணரின் உயிர் பிரிகிறது. அஸ்வத்தாமன் இதற்கு பதிலியாய் செய்வதும் அவனுக்கு கிடைக்கும் சாபமும் பிரத்யேகமானது. இதில் நன்றாக பார்த்தால் மகாபாரதத்தில் அதிகம் புத்திர சோகமே பீடிக்கிறது. அஸ்வத்தாமனை தவிர. பதிலுக்கு பதில் நிகழும் புத்திர சோக நிழ்வுகள் வன்மை மிகுந்ததாக இருக்கிறது. இந்த அஸ்வத்தாமனின் கதை என் அம்மா சொன்னது. எஸ்.ராவோ இதே பிண்ணனியை சொல்லி யானைக்கு பதில் குதிரை என்கிறார். ஏதோ ஒன்று நிச்சயம் உண்மை என்று மட்டுமே மனம் சஞ்சலம் கொள்கிறது.

குருக்ஷேத்திரம். இதன் விரிவான அமைப்பை போர் மூலம் மட்டுமே நாம் அறிந்து கொள்ள முடியும். போரினை எங்குவைப்பது என்பதற்கு சிலரை அனுப்புகிறார்கள். அதில் இந்த இடத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். காரணம் இங்கே தான் நீளமான பகல் இருக்கிறது என. போருக்கான முன்னேற்பாடுகள் யாவும் விரிவாக பேசுவதால் நாவலை வாசிக்கும் போது போரின் அமைப்புகள் அப்படியே கண்முன் விரிகிறது. மேலும் நாவலில் ஒரு பகுதி இப்படி வருகிறது
"யுத்தம் துவங்கியவுடன் எவரும் அஸ்திரப் பிரயோகமோ வாள் பிரயோகமோ செய்யக் கூடாது. முதலில் ஒருவருக்கு ஒருவர் வாக்கினால் சண்டை போட வேண்டும். அந்த வாக்கினால் இறந்து போனவர்களையும் கௌரவம் மிக்க மூதாதையர்களையும் ஸ்திரீகளையும் பங்கம் செய்யும் வாக்கினை பிரயோகிக்கக் கூடாது. வாக்கினால் யுத்தம் செய்யும் வீரனுக்கு அவன் சாரதி சொல் எடுத்துத் தருதல் கூடாது. ரதசாரதிகள் ஒருபோதும் ரதத்தில் வரும் அரசனுக்கோ, வீரனுக்கோ அறிவுரை சொல்லுதல் கூடாது" என.
இதை இருபக்க படையும் ஏற்றுக் கொள்கிறது. இதைத் தவிர இன்னமும் சில விதிமுறைகள் இருக்கின்றன. எனக்கு இருக்கும் சந்தேகம் இந்த முறைப்படி தான் குருக்ஷேத்திரப் போர் நிகழ்ந்ததா ? மேலும் மேலே சொன்னவற்றின் கடைசி வரிக்கும் கீதோபதேசத்திற்கும் சம்மந்தம் உள்ளதா ? எஸ்.ராவிற்கே வெளிச்சம்.

கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு சொல்லும் சில வார்த்தைகள் என்னை வெகுவாக கவர்கிறது. அவை,
"அர்ச்சுனா... உன் கண்கள் காட்சிகளின் உள்அரங்கினுள் சுழல்கின்றன. நீ எதிர்நிற்பவர் முன் சிறுவனைப் போல உருக்கொண்டு விட்டாய். உன்னை வீழ்த்தக் கூடிய ஒரே ஆயுதமான ஞாபகத்தின் முன் நிற்கிறாய். ஞாபகம் உன் காலைப் பற்றி இருளினுள் இழுக்கின்றது. அது நிஜமானதல்ல....

அர்ச்சுனா... நான் ஒரே நேரத்தில் பால்யத்திலும் வாலிபத்திலும் மத்யத்திலும் முதுமையிலும் வாழ்கிறேன். என் இருப்பை நான் ஒருமுகம் கொள்வதில்லை. நீ உன்னை அர்ச்சுனன் என்னும் வில்லாளியாகவே மையம் கொண்டிருக்கிறாய். யுத்த நிமிஷம் அதனை உருக்குலைத்துவிட்டது."

இன்னமும் நீண்டு கொண்டே இவை செல்கிறது. இதைத் தவிர சொல்வதற்கு நிறைய இருந்தாலும் அம்மா எனக்கு சொன்ன ஒரு விஷயம் மட்டுமே நினைவில் வந்து வந்து செல்கிறது. போர் முடிந்து அனைவரின் முடிவுகளும் எப்படி இருந்தன என்பதே அது. கிருஷ்ணனின் முடிவு மட்டுமே அம்மா சொன்னது போல இருந்தது. அம்மா சொன்னதை இங்கு பதிவிடலாம் என்றிருக்கிறேன். உண்மை எதுவென யானறியேன். எஸ்.ரா சொல்வது அம்மாவின் புனைவுடன் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது.

அம்மா சொன்னது :
போரில் வெற்றி கண்டபின் யுதிஷ்ட்ரன் முப்பத்தி ஆறு ஆண்டுகள் ராஜ்ஜியமாண்டான். பின் பாண்டவர்கள் குந்தி யக்ஞசேனி காந்தாரி திருதிராஷ்ட்ரன் என யாவரும் வனவாசம் சென்றுவிட்டனர். காரணம் முதுமையடைந்துவிட்டார்கள். அவர்களின் வீரம் திறமை யாவும் முதுமையின் பலத்தில் பலவீனம் அடைந்துவிட்டன. இவர்கள் யாருக்கும் மரணதேவன் வரவேயில்லை. மிகவும் கவலை அடைந்தவர்கள் என்ன செய்ய என கிருஷ்ணனிடம் கேட்டார்கள். அப்போது ஒரு ஆண் கர்ப்பிணி வேடத்தில் அங்கு வந்தான்(அவள் பெயர் அம்மாவிற்கு தெரியவில்லை). கிருஷ்ணர் அப்படியே ஆகட்டும் என்றவுடன் அவனின் வயிற்றிலிருந்து உலக்கை ஒன்று வந்து விழுந்தது. இதனால் அடித்துக் கொண்டு இறந்தால் தான் மரணம் உண்டு என்றார் கிருஷ்ணர். பீமனால் அந்த உலக்கையை எடுக்கக் கூட முடியவில்லை. மீண்டும் கிருஷ்ணரிடம் முறையிட, அந்த உலக்கையை சிறு சிறு துண்டாக்கி சரயு நதியில் தூக்கி போட்டார். அவையனைத்தும் தர்பையாக மாறியது. தர்பை கிழிக்கும் தன்மையுடையது. அதில் அடித்துக் கொண்டு மரணியுங்கள் என்று சொல்ல பாண்டவர்கள் அப்படியே இறந்து போயினர். ஆனாலும் காந்தாரி குந்தி திருதிராஷ்ட்ரனுக்கு மரணம் வரவில்லை. அவர்கள் கிருஷ்ணரிடம் முறையிட நீங்கள் செய்த பாவங்களையெல்லாம் சொல்லுங்கள் உங்களுக்கு மரணம் கிடைத்துவிடும் என்றார். அப்போதும் காந்தாரி மட்டும் மீதமிருந்தாள். பிறகே யோசித்து கூறினாள் நான் குந்தியைக் கண்டு பொறமைக் கொண்டே என் வயிற்றினில் உலக்கையை கொண்டு அடித்து கருவை நூறு பிணடமாக்கினேன் என. உடனே அவளுக்கும் மரணம் வாய்த்தது. இதனால் தான் மணம் ஆகும் போது கூட மணம் செய்யும் பெண் பதிவ்ரதா தர்மத்தை ஐந்த பெண்களைப் போல கொள்ள வேண்டும் என்பார்கள். அந்த ஐவர்கள் - அகல்யா திரௌபதா சீதா தாரா மண்டோதரி. குந்தி பத்தினி தர்மத்தை மீறியதாலும் காந்தாரி அடுத்த பெண்ணைக் கண்டு பொறாமை கொண்டதாலும் இந்த தர்மத்தினுள் வரமாட்டார்கள்.

இது தான் என் அம்மா சொன்ன கதை. இதன்பின் வரும் கிருஷ்ணனின் முடிவு எஸ்.ரா சொல்வது போன்றே உள்ளது. என்ன எஸ்.ரா வேடுவனாக வருபவனின் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நாவலில் சிறு குறைபாடு எனக்குள் உள்ளது. அநேக இடங்களில் சில விஷயங்களை சொல்லாமல் சென்றுவிடுகிறார். உதாரணம் குளம் கேட்கும் கேள்விகளும் யுதிஷ்ட்ரன் சொல்லும் பதில்களும் போன்றவை. கேட்டது சொன்னான் என்னும் பதத்திலேயே கடந்துவிடுவதால் அவ்விடங்கள் எனக்குள் தொக்கி நிற்கின்றன.

தனிபட்ட முறையில் இந்நாவல் எனக்கு ஒரு ஆவணமாக தெரிகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் மூன்று நாவல்கள் வாசித்திருக்கிறேன்(இதனையும் சேர்த்து). அதில் இதே எனக்கு ஆகப்பிடித்தமையாக இருக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக