உடல் அரசியலாகிறது
கல்லூரியின் வேலைகள் தலைக்கு மேல் பாக்கிகளாக அமிழ்த்தி கொண்டிருக்கிறது. மனதிற்குள் வேரூன்றி இருக்கும் ஆசைகளும் என்னை மீளவிடாமல் இழுத்து செல்கிறது. அப்படி சென்ற இடம் தான் இலக்கிய சந்திப்பு. இம்முறை முழுவதும் எனக்கு பிடிக்கும் விதமாய் இல்லை.
அதற்கு மூலக்காரணமாய் அமைந்தது சுப்ரபாரதி மணியன் என்பவரின் சமீபத்திய நாவல் ஒன்று. அதை பொன்.குமார் என்பவர் பேசினார். பேசினார் என்பதை விட அந்த நாவலை முழுதாக சொல்லிவிட்டார். அந்நாவலின் பெயர் தரிநாடா. இதைத் தவிர எதையுமே சொல்ல விரும்பவில்லை. அப்படியொரு வெறுப்பு என்னுள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறது.
இதைப் போலத் தான் இளங்கவி என்பவர் நர்சிமின் ஒரு வெயில் நேரம் என்னும் நூலைப் பற்றி பேசினார். அவரின் பேச்சுகள் நன்றாக இருந்தன. ஆனால் எல்லா சிறுகதையையும் சொல்லிவிட்டார். அவர் சொன்னதிலிருந்து நர்சிமின் அந்த குறிப்பிட்ட படைப்பு சார்ந்து எனக்குள் ஒரு அவதானிப்பு எழுந்தது. அதன்படி நர்சிம் குறியீடுகளை மையமாக்குபவர். அஃதாவது கதையின் ஓட்டம் எவ்வளவு நீண்டதாக இருந்தாலும் அதன் கடைசியில் ஒரு வார்த்தையில் அதன் மையத்தை வைக்கிறார். அந்த வார்த்தைகளே முழுக்கதையையும் பேசுகிறது. அப்படியிருக்கையில் அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டால் ??? இதே கொடுமை தான் இந்த விமர்சனக் கூட்டத்திலும்!
அதே நர்சிமின் ஒரு கவிதைத் தொகுப்பை அகிலா என்பவர் பேசினார். இதை சொல்வதற்கு முன் அகிலாவைப் பற்றி சொல்ல வேண்டும். அவரைப் பார்த்தவுடன் இலக்கியம் இவ்வளவு பரந்து விரிந்திருக்கிறதா என்றே ஆச்சர்யம் கொண்டேன். அவரின் தோற்றம் பன்னிரெண்டாவது அல்லது முதலாமாண்டு படிக்கும் மாணவியின் தோற்றத்தை ஒத்தியே இருந்தது. இலக்கியத்தின் வளர்ச்சியை கண்டு பெருமை கொண்டேன். நிகழ்வு முடியும் போது அவருடன் பேசினால் என் மனம் கொண்ட கட்டமைப்பு அப்படியே சரிந்தது. அவர் பி.எச்.டி செய்கிறாராம்!!!
அவரின் பேச்சு நல்ல மேடை பேச்சாளாரை போன்று குரலின் ஏற்ற இறக்கங்களுடன் அழகுற இருந்தது. மேடை பேச்சாளர்களின் முக்கிய அம்சம் நல்ல ஞானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்கள் எவற்றைப் பற்றி பேசுகிறார்களோ அதனை சார்ந்த ஞானம். இது அகிலாவிடம் நன்கு இருந்தது. மேலும் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அகிலாவின் பேச்சு நல்ல உதாரணம். ஒரு கவிதையை முழுமையாக வாசித்துவிடுகிறார். பின் அவரின் சுயானுபவங்களை அங்கே சேர்க்கிறார். அதனூடே அவர் சொல்ல விழையும் தத்துவங்களை, அல்லது இவர் பிரதியிலிருந்து அறிந்து கொண்ட தத்துவங்களை சொல்கிறார். எல்லா கவிதைகளையும் சொல்லாமல் சிலவற்றை மட்டும் சொல்லி வாசிக்க வைக்கிறார். அவர் மேற்கோள் காட்டிய ஒரு வரியை மட்டும் சொல்லி இவர் பகுதியை முடிக்கிறேன்
"ஐன்ஸ்டீன் நியூட்டன் போன்றவர்களின் இயற்பியல் கோட்பாடுகளை மக்களின் முன்னே கொண்டு செல்லும் போது மக்கள் எனக்கு புரியவில்லை என்கின்றனர். ஒரு கவிதை அதே உணர்வை கொடுத்தால் கவிதை புரியவில்லை என்கின்றனர். இது எவ்வகையில் நியாயமாகும் ?"
இடைச்செருகல் : இதற்கடுத்து இருவரின் பேச்சை நான் கேட்கவில்லை. காரணம் ஒருவர். அவர் பிருஹன்னளை நாவலின் வெளியீட்டிற்கு வந்திருந்தார். அவர் இப்போது தான் நாவலை வாசித்திருந்தார். நாவல் சார்ந்து நிறைய பேசினார். எழுதி கேட்டிருக்கிறேன், தருவார் என்னும் நம்பிக்கையில். அவர் சொன்ன ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன் - சில நூல்களை இரவில் வாசிக்கும் போது இன்னமும் எத்தனை பக்கம் செல்லும் என்று பார்க்கத் தோன்றும், சிலவற்றை காலையில் மீதியை வாசிக்கலாம் என்று வைக்கத் தோன்றும் ஆனால் நீங்கள் என்னை வைக்கவிடாமல் இழுத்து சென்றிருக்கிறீர்கள் என்று.
இதற்குபின் தான் எனக்கு இலக்கிய சந்திப்பை பிடிக்க வைக்கும் வகையிலான ஒரு பேச்சு இருந்தது. அது திலகபாமாவின் படைப்புகள் சார்ந்து. முதலில் அவரின் படைப்புகள் சார்ந்து சிலர் பேசினர். அதில் அவரின் நாவலான "கழுவேற்றப்பட்ட மீன்கள்" சார்ந்து மதுமிதா என்பவர் பேசினார். அவர் தமிழகத்தின் பெண்ணிய எழுத்தாளர்களுள் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூல் உடல் அரசியலைப் பேசும் ஒரு நாவல். மேலும் இதனுள் இருக்கும் மொழி சிக்கலானது என்றும் சொன்னார். பின் திலகபாமாவாலேயே சில வரிகள் வாசிக்கப்பட்டது.
கடைசியாக திலகபாமா ஏற்புரை வழங்க வந்தார். அவருக்கு பெண்ணியம் என்ற வார்த்தையே பிடிக்காது என்றே தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அப்போது அவர் இந்த இரண்டு விஷயங்கள் சார்ந்தும் பேசினார். முதலில் மொழி. ஒரு படைப்பில் மொழி கடினமாக இருக்க வேண்டும் என்று நூதனமாக சொல்கிறார். ஏனெனில் மேம்போக்கான எழுத்துமுறை காலாவதியாகும் தன்மையுடையது. ஒரு படைப்பு ஒருவனை அழ வைக்க வேண்டும், சிரிக்க வைக்க வேண்டும், கண்ணீரை துடைக்க வேண்டும் இப்படி ஏகப்பட்ட வேலைகளை செய்ய வேண்டும். எளிமையான மொழி இவற்றை செய்யப் போவதில்லை. மொழி கடினம் என்பதையும் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை. அவர் சொல்வது பிணைக்கப்பட்ட மொழியின் தன்மை மட்டுமே மனிதனின் உணர்வுகளினூடாக விளையாடும் குணம் கொண்டது என்று.
அடுத்து உடலரசியல். இதை சாடவும் செய்கிறார் எழுதவும் செய்கிறார். ஏனெனில் அவருடைய சமகாலத்திய எழுத்தாளர்களாக இப்போது நிலவுகின்றவர்கள் உடலரசியலை ஆண்வர்க்கத்திற்கெதிரான ஒரு போட்டியாக மட்டுமே கருதுகின்றனர் என்னும் வாதத்தை முன்வைக்கிறார். இங்கே உடலரசியல் என்பது bodypolitics என்பதன் அப்பட்டமான அபத்தமான மொழிபெயர்ப்பாக மட்டுமே இருக்கிறது என்கிறார். ஆனால் உடலரசியல் என்பது இவர்கள் சமூகத்தில் சொல்லப்படுவதைக் காட்டிலும் முற்றிலும் வேறானது. சின்ன உதாரணம் என்று சொல்லி பின்வருவனவற்றை அவர் சொல்கிறார்
"அவருடைய வீட்டில் அவர் வெளிநாட்டிற்கு செல்ல தயாராகும் போது ஒரு எதிர்ப்பு வந்ததாம். குறிப்பாக அம்மாவிடமிருந்து. அவரின் அம்மா சொன்னாராம் நீ உன் கணவனை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டால் அவர் வேறு பெண்ணை பார்த்து சென்றுவிடமாட்டாரா என்று"
இதைவைத்து அவர் சொன்னது, இங்கே உடலை மையமாக்கி ஒரு அரசியல் உருவாகிறது. எங்கு சென்றாலும் இந்த பெண்ணின் உடல் சார்புத் தன்மையை பெறுகிறதே ஒழிய சுதந்திரத்தை அல்ல. இதைத் தான் நான் உடலரசியல் என்கிறேன். மேலும் இதையே நான் என் படைப்புகளில் மையமாக்குகிறேன்.
மேலும் அவரின் பயணக்கட்டுட்ரைகள் சார்ந்து அவர் சொல்லும் விஷயம் அவர் இணையத்தை பார்க்காமல் கண்டதை மட்டுமே எழுதுவது என்பது. அவர் ஓர் இடத்தையும் சொன்னார். ஒ என்னும் எழுத்தில் ஆரம்பிக்கும் ஊர். அங்கு புதையுண்ட நகரங்கள் பல உள்ளதாம். இணையத்தில் பார்த்தால் அங்கு எதுவுமே இல்லை என்று சொல்லுகிறதாம்.
திலகபாமாவின் பேச்சு இப்படி ஆழமாகவே பல எடுத்துக்காட்டுகளுடன் நிறைவடைந்தது. நான் சிலதை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். எனக்கு அவர் சொன்ன கோட்பாடுகளுடன் சில சந்தேகங்கள் இருந்தன. அதை வெளியில் செல்லும் போது கேட்டேன்.
அஃதாவது உடரலசியல் பெண்களின் அழுகுரல் வதைகளை மட்டுமே பேச வேண்டுமா ? என்பதே அது. அவர் என்னிடம் என்ன என்ன உடல் அரசியல் பேசும் நாவல்களை வாசித்திருக்கிறீர்கள் என்று கேட்டார். நான் சாரு நிவேதிதா தருண் ஜே தேஜ்பால் என்றேன். அவர் சாரு எழுதுவது உடல் அரசியலே இல்லை என்றார். அதற்கு எடுத்துக்காட்டாய் உடல் அரசியலுக்கு உட்படுத்துவது ஒரு பிம்பமாய் கற்பிதமாய் நம் சமூகத்தில் கற்பிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண் பெண்களின் விளையாட்டுகளை விளையாடவே கூடாது என்று இந்த சமூகம் எச்சரிக்கிறது. ஆண் பெண்களிடையே உடல் ரீதியாக ஒரு பேதம் சமூகத்தில் பெரிதளவில் விரிந்து நிற்கிறது. அப்போது அவர்களின் உடல் அவர்களின் அனுமதியன்றியே வதை செய்து கொண்டிருக்கிறது. அதைப் பேசுவதே உடலரசியல் என்றார். அவர் சென்றுவிட்டார். என் மனம் கேட்கவில்லை. அதனால் அவரிடம் சொல்ல நினைத்த பதிலை இங்கே பதிவிட்டு இப்பதிவை முடிக்கிறேன்.
சாரு உடலரசியலை பேசவில்லை என்றார். அப்படியில்லை. அவருடைய எல்லா நாவல்களும் உடலரசியலை மட்டுமே பேசுகிறது. ஆனால் பெண்ணினது அல்ல ஆணினது. ஆணின் உடல் வக்கிரமாக இச்சைகளின் பால் ஈர்க்கப்பட்டு செல்கிறது. வதைகளை காதலிக்கிறது. வதையையும் வலியையும் காமத்தையும் உடல் கொண்டாடுகிறது. அதே நேரம் மறுபக்கத்தில் உடல் வதைகளுக்குள்ளாகி செத்தொழிகிறது. உடல்களுக்கு பிரத்யேகமான ஒரு மொழி இருக்கிறது. அதை கேட்டே தீர வேண்டும். இதைத் தான் தேஜ்பால் தன் valley of masks நாவலில் துறவாக சொல்லுகிறார். மேலும் உடல் கொள்ளும் வற்புறுத்தலை சொல்லுவது மட்டுமே அல்லது அதை குறியீடாக்குவது மட்டுமே உடலரசியல் என்பதையும் நாம் ஏற்கக் கூடாது. உடல் தன் வசம் சில துய்ப்புகளையும் கொண்டிருக்கிறது. அதையும் சாருவின் நாவல் பேசுகிறது. தேகம் நாவல் எல்லாவற்றையும் ஆழமாக பேசும் ஒரு படைப்பு. வதை காதல் அவற்றின் மூலம் நிகழும் வேட்கை அதனால் மீண்டும் சூழப்படும் வதை என்று பலவீனமானவர்கள் படிக்க முடியாதபடி எழுதப்பட்டிருக்கும். ஒரு வேளை சாருவின் நாவல்களை வாசிக்காமல் இருந்திருந்தால் திலகபாமாவின் கூற்றுடன் ஒன்றி போயிருப்பேன். இரண்டு இடத்திலுமே உடல் வதைக்குள்ளாவதற்கு முன் சில கலாச்சார பிம்பங்களால் ஒரு கட்டினுள் நிறுத்தப்படுகிறது என்றே சொல்லுகிறது.
ஒரு வழியாக எனக்கான இடத்தில் பதிலை சொல்லிவிட்டேன் என சந்தோஷம் கொள்கிறேன். அவருக்கு தான் சென்றடையவில்லை!
பி.கு : சமீபத்திய ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் - வருவன பற்றிய எதிர்பார்ப்பும் கழிந்தன பற்றிய ஆற்றாமையும் காரணமின்றி மனதினுள் பொங்கி என் நிலையை கலங்கடிக்கிறது.
இந்த ஸ்டேட்டஸிற்கும் இந்த பதிவிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லை!!!
2 கருத்திடுக. . .:
"அவருடைய வீட்டில் அவர் வெளிநாட்டிற்கு செல்ல தயாராகும் போது ஒரு எதிர்ப்பு வந்ததாம். குறிப்பாக அம்மாவிடமிருந்து. அவரின் அம்மா சொன்னாராம் நீ உன் கணவனை விட்டுவிட்டு வெளிநாடு சென்றுவிட்டால் அவர் வேறு பெண்ணை பார்த்து சென்றுவிடமாட்டாரா என்று"
பாஸ்..ஒரு சின்ன எனது கருத்து...ஒரு ஆணின் திருமண வயது 28-29 தை எட்டிவிட்டது..பெண்ணிற்கு 24-25 . இருவரின் பாலியல் சிந்தனைகள்,பாலியல் ஆசைகள் என்பதை உண்மையாக அறிந்துக்கொள்ள அவர்களுக்கு முக்கியமான தேவை திருமணம்(நமது கலாச்சாரத்தில்).அப்படியிருக்க ... திருமணத்திற்கு பின்பு இருவரும் ஒரே இடத்தில் இருப்பது என்பது ஒரு நல்ல சூழலே உருவாக்கும்.இல்லையெனில் அது ஓர் மனரீதியான பாதிப்பை உருவாக்கும் என்பது என் கருத்து.இது உடல் அரசியலா..அல்ல உடல் மூலம் ஆணும் பெண்ணும் புரிந்துக்கொள்வதா என சொல்ல தெரியவில்லை..
நிச்சயம் உடல் அரசியல் தான். இப்பதிவு திலகபாமாவை முக்கியமாக்குவதால் அவர் ரீதியான பதிலை சொல்ல விழைகிறேன். அஃதாவது அவரின் பேச்சின் மூலம் அறிந்து கொண்ட பதில். தாங்கள் சொல்வது போல் எடுத்துக் கொண்டாலும் கலாச்சாரம் என்னும் பிம்பத்தால் உடல் ஒரு அரசியலுக்குள் சிக்கிவிடுகிறது. பெண்ணின் உடல் தான் கொள்ளும் முழுமையை அடைவதில்லை. அது எந்த வகையானாலும் சரி என்கிறது அவரது கூற்று.
Post a comment
கருத்திடுக