சொல் வேறு அர்த்தம் வேறு

எனக்கு நூல்கள் சார்ந்து இருவகையான ஈர்ப்பே இருந்து வந்திருக்கிறது. ஓன்று முன்னமே சொன்னது போல் பித்தனிலை எழுத்துகள். மற்றொன்று வித்தியாசமான கட்டமைப்பு கொண்ட நூல்கள். ஏனைய நூல்களையும் வாசிப்பேன். ஆனால் இது போன்ற தன்மைகள் கொண்ட நூல் என்னை எங்கேயோ கண்மண் தெரியாத ஒரு வெளிக்கு கொண்டு செல்லும்.

ஒவ்வொரு எழுத்தாளரை அணுகும் போதும் அவரின் எழுத்துகள் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா என்று மனதினுள் சிறு சபலம் ஏற்படுவதுண்டு. அவர்களின் எழுத்துகள் ஒருவேளை மேலே சொன்ன இரண்டு வகையறாவில் ஒன்றாக இருப்பின் சந்தோஷம் பன்மடங்காக ஆகிவிடும். இப்படி நான் சந்தோஷத்தை அனுபவித்தது மௌனி, லா.ச.ரா, நகுலன், க.நா.சு, கோபிகிருஷ்ணன் போன்றோரிடம் தான்.

அதே உணர்வு இப்போது தமிழவன் மேலும் வருகிறது. க.வை.பழனிச்சாமி என்பவர் தமிழவனின் வார்ஸாவில் ஒரு கடவுள் என்னும் நாவலை வாசிக்க சொல்லிக் கொண்டே இருந்தார். என் பட்டியலில் சேர்த்து வைத்துக் கொண்டேன். அந்நாவலை அல்ல தமிழவனை நான் வாசித்தே தீர வேண்டும் என்று. எனக்கு அப்போது ஒரு முரணும் மனதளவில் இருந்தது. சாரு தமிழவனின் எழுத்துகள் மீது எதிர்மறையான ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார். அதை நான் வசித்திருக்கிறேன். இருவேறு முரண்பட்ட உணர்வுகளையும் படைப்பால் கொடுக்க முடியும் எனில் அப்படைப்பில் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்பது தானே உண்மை. அதனால் வாசிக்க வேண்டும் என்றே முடிவு செய்தேன்.

அவரின் மூன்று நாவலிகளை வாஙியிருக்கிறேன். அளவில் சிறியதாகவே இருக்கிறது. ஆனால் கருவில் அல்ல!!! அப்படி நான் வாசித்த நாவல் தான் "முஸல்பனி".


http://nirmalcb.blogspot.in/2013/10/blog-post_21.html - இந்த லிங்கை க்ளிக்கினால் காப்ரியல் கார்ஸியா மார்க்வேஸின் தனிமையின் நூறு ஆண்டுகள் சார்ந்த ஒரு நல்ல  விர்மர்சனத்தை காண முடியும். இதை இங்கே குறிபிட்டமைக்கு காரணம் அதனுடன் போட்டியிடும் அளவு மாயா யதார்த்த தன்மை இந்நூலில் உள்ளது. ஒரு இடத்தில் தான் இந்நூல் அதிலிருந்து பின்வாங்குகிறது. அதை பின் சொல்கிறேன்.

மாயா யதார்த்த நாவல்கள் தமிழில் அதிகம் வருவதில்லை என்னும் குற்றங்களை நாவலின் மூலம் அவர் முன்வைக்கிறார். மேலும் மாயா யதார்த்தத்தின் தன்மை ஒரு மாய உலகை யதார்த்தமாக காட்டுவது. அதற்கு ஒரு முன்மாதிரி நிச்சயம் தேவை. அதற்கு தமிழவன் அவரறிந்த தமிழின் வரலாற்றை எடுத்து பகடி செய்திருக்கிறார்.

நவீன எழுத்துகளில் இருக்கும் ஒரு மேம்போக்கான தன்மை எனக்கு பிடித்திருக்கிறது. அஃதாவது விவரணைகளை வர்ணனைகளை புறந்தள்ளுதல். இது பின்நவீனத்துவத்திற்கான ஒரு வழி என்றும் சொல்லலாம். காரணம் வர்ணனைகளை முன்வைத்து படைப்பு வாசகனின் சிந்தனையை ஆள்வைதைக் காட்டிலும் வர்ணனைகளற்று வெறும் கதையை மட்டும் வைத்து வாசகனை சிந்திக்க வைக்கும் முறை. 

நாவல் மிகச்சிறிய குறுநாவல் என்னும் பதத்தில் இருப்பினும் வாசித்தல் கடினமானதே. இது நான் லீனியர் முறையில் எழுதப்பட்டிருக்கிறது. இடையிடையில் தமிழவன் நுழைந்து குழப்புவதால் மெடா ஃபிக்‌ஷன் எனவும் சொல்லலாம். ஆனால் அவர் வரும் இடங்கள் அநாயாசமானது.

சின்ன உதாரணம் சொல்கிறேன். இது தெகிமொலா நாட்டில் ஆரம்பிக்கிறது. அங்கு அரசனாக இருப்பவன் அத்திகரிப்பா. அவனைப் பற்றிய அறிமுகமே முதல் இரண்டு பக்கங்கள். அவனுக்கு பல முகங்கள். கூடுவிட்டு கூடுபாய்வதை அறிந்தவன். அதனால் எதிரிகளிடமிருந்து எளிதில் தப்பித்துவிடுவான் என்று சொல்கிறது நாவல். இரண்டாவது பக்கத்துடன் முதல் அத்தியாயமும் முடிகிறது. அதன் கடைசி வரிகள்,
"பின்பக்கத்திலிருந்து வாசிக்கப்படும் தெகிமொலா சரித்திரம் அத்திகரிப்பா என்னும் முதல் அரசன் பற்றி கூறுவதுடன் ஆரம்பிக்கிறது"

கதை முழுக்க அறுபட்டு நிற்கும் இந்த வரலாறு தான், அஃதாவது தெகிமொலாவின் வரலாறு. அத்திகரிப்பாவிற்கு 3300 ஆண்டுகளுக்கு பிறகு 3 மணிக்கு 3 நிமிடங்கள் இருக்கும் போது பிறந்தவள் முஸல்பனி(முஸல்பனிக்கு பதினைந்து காதலர்கள் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்). இந்த இருவரின் கதை, அந்த மக்களின் வரலாறு என்று சிறிய பெட்டகத்தினுள் நீண்டு நிற்கிறது.
 
ஒட்டு மொத்த நாவலையும் ஒருசேர சொல்ல வேண்டுமெனில் அது "சொல் வேறு அர்த்தம் வேறு" தான். இது தான் அங்குள்ள மக்களின் கொள்கையும் கூட. இதை இங்கு சொல்வதன் காரணம் இந்நாவலில் புழங்கும் பெயர்கள். முஸல்பனியை கொல்வதற்கு ஒருவன் அவளின் மாளிகைக்குள்ளேயே வருகிறான். அந்த மாளிகைக்குள் பெண்கள் மட்டுமே வர முடியும். இவன் எப்படி வந்தான் என ஆச்சர்யம் கொள்கிறாள். முஸல்பனி மூன்றாக பிரிந்து நிற்பவள். மூன்றையும் கொன்றால் தான் அவளை கொல்ல முடியும். நாவலில் வரும் இவனின் பெயர் "வெள்ளி போன்று முளைத்தவன்". இது போல் இன்னமும் நிறைய குறியீடுகள் நாவலில் இருக்கின்றன. அதை தமிழவன் முன்னுரையில் படிமம் என்கிறார். மேலும் இங்கு நிகழும் சில தத்துவார்த்த சிக்கல்களையும் இதே முறையில் சொல்லியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

தமிழவன் தன்னுள் இருக்கும் அதீத ஆசைகளை, வெளிக்கொணர முடியாத சில சொல்லாடல்களை இதில் வைக்க நினைத்துள்ளார் என்பது தெளிவாகிறது. முன்னுரை தான் எனக்கு இந்நூலில் பிடிக்காததாக இருக்கிறது. அதில் சுயபிரஸ்தாபம் மிகுந்து உள்ளது. மேலும் அதில் மிலோராத்பாவிச், போர்ஹேஸ், மார்க்வேஸ் போன்றவர்கள் எழுத்தில் புதுவகையை கொணர நினைத்தவர்கள் என்று சொல்லியிருக்கிறார். இதை முன்னமே சொல்லிவிட்டதால் நான் அறிந்த சில விஷயங்கள் இக்கதையுடன் இடர்படுவதை என்னால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக நிர்மல் dictionary of khazars நாவலில் வரும் ஒரு பெண்ணை சார்ந்து சொல்லியிருந்தார். அவளுக்கும் முஸல்பனிக்கும் ஏகப்பட்ட சம்மந்தம் இருக்கின்றன என்று உள்மனது சொல்கிறது. அந்நூலை வாசிக்காததால் அதை என்னால் குறிப்பிட முடியவில்லை!

இந்நாவலில் திகில் தன்மையும் நிறைந்தே இருக்கிறது. முஸல்பனியும் அவளுடைய அப்பா அத்திகரிப்பாவும் சேர்ந்து இருக்கும் போது ஒரு அத்தியாயத்தில் இன்றிலிருந்து மூன்றாவது நாளில் அத்திகரிப்பா இறக்கப் போவது அவருக்கு தெரியவில்லை என்று சொல்லியிருப்பார். அதே போல் சம்மந்தமில்லாது வேறு ஒரு அத்தியாயத்தில் இறக்கிறார். அது கொலை. செய்தது யாரெனில் அத்திகரிப்பா. அத்திகரிப்பாவே அத்திகரிப்பாவை எப்படி கொலை செய்ய முடியும் ? இது நாவலில் அதிசுவாரஸ்யமாக செல்லும் பகுதிகள்.

இந்நூலில் அதிகப்படியாக பிடித்தது ஒரு முழுக்கதையும் ஆதியும் அந்தமும் சொல்லப்பட்டு இடையில் இவ்விரண்டியும் இணைக்கும் பகுதியை வாசகனுக்கு விட்டுவிடும் முறை. காரணம் ஓலைச்சுவடிகளில் கிடைத்தவை என்று முடித்துவிடுகிறார்.

இவரின் எழுத்துமுறை எனக்கு பிடித்திருக்கிறது. விரைவில் அவரது ஏனைய நூல்களையும் வாசிப்பேன். மார்க்வேஸின் நூலுடன் போட்டியிடமுடியாத தன்மை ஒன்றுள்ளது என்று சொல்லியிருந்தேன் அல்லவா. அது வர்ணிப்பு தான். வர்ணிப்பு இருந்தால் அதே அளவு இந்நாவலும் வந்திருக்கும்.

கடைசியாக நாவலிலிருந்து சில வரிகள். மெடாஃபிக்‌ஷன் தன்மை நிரம்பிவழியும் வரிகள்...

"அவர்கள் மிகப் புகழ்பெற்றதும் - அதற்காக அவர்கள் பெருமிதம் கொள்வதுமான நாவலை யாரும் எழுதவில்லை. எனினும் எழுதப்பட்டதாக கருதப்பட்டது.
 
அந்த நாவலின் வசீகரமும் அதன் உள்ளடக்கமும் அந்த நாவல் எழுதுவதற்கு சாத்தியமற்றது என்பதில் தான் அடங்கியுள்ளது. அந்த கற்பனை நாவல் முழுமை பெறாதது. ஏனெனில் அந்த நாவலில் கொண்டுவர வேண்டும் என்று நாவலாசிரியன் விரும்பும் உண்மைகளும் உலகமும் இதுவரை வரலாற்றில் இல்லாதது."
 
நாவலை நாவலே பேசும் வார்த்தைகள்.

பி.கு : நிறைய வரிகளை மேற்கோள்களாக சொல்ல ஆசைதான். வர்ணனைகளற்ற நாவலாக இருப்பதால் நிறைய எழுதினால் இந்த நாவலே வந்துவிடும் என்னும் அச்சம் எழுத விடாமல் தடுக்கிறது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக