Reservoir Dogs - 1992

மீண்டும் குவெண்டின் டரெண்டினோ. இந்த படம் என்வசம் வெகு நாட்களாக இருந்தே வருகிறது. சமீபத்தில் தான் பார்த்தேன். அதுவும் ஒரு விபத்து தான். சரியான ஜுரம். தூக்கமும் வரவில்லை. ஒரே மந்தமாக இருந்தது. இந்நிலையில் ஏதேனும் சண்டைப்படம் பார்க்கலாம் என்று முடிவெடுத்த போது இவரே நினைவிற்கு வந்தார். இவர் படங்களில் குறையாத கெட்ட வார்த்தை நல்ல நகைச்சுவை அதே சமயம் ரத்தம் என வழியும் காட்சிகள். இதனால் இவரை பார்க்கலாம் என்று இப்படம் பார்த்தேன்.இதுவரை நான் பார்த்த குவெண்டினின் படங்களில் இது எனக்கு வித்தியாசமாகப் படுகிறது. ஏனெனில் எப்போதும் அவர் படங்களில் இசை படத்தின் அங்கமாகவே இருக்கும். ஆனால் பிற படங்களில் அது கதையின் குறியீடுகளாக இருந்து வந்திருக்கிறது. சின்ன உதாரணம் கில்பில். அதில் முதல் காட்சியில் நாயகியை யாரோ ஒரு முகம் தெரியாத மனிதர் சுடுவது போல வரும். அந்த காட்சி முடிந்த உடன் குவெண்டினின் ஸ்டைலில் படத்தின் பெயர்கள் நடிகர்கள் வேலை செய்தவர்கள் என பெயர் போட்டுக் கொண்டே இருப்பார். இதன் பிண்ணனியில் ஒரு பாடல் ஓடிக் கொண்டிருக்கும். அது சோகம் கலந்த பாடல். அந்த பாடல் அந்த நாயகியைத் தான் குறிக்கும். ஒரு குறியீடாக. முழுப்படம் முடிந்த உடன் மட்டுமே இந்த இணைப்பை நம்மால் கண்டு கொள்ள முடியும். இந்த படத்திலோ இசைக்கு ஒரு தனி இண்ட்ரொடக்ஷன் இருக்கிறது.

எப்படி இண்ட்ரொடக்ஷன் எனில் படத்தின் முதல் காட்சியில் ஒரு ஹோட்டலில் நிறைய பேர் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் குவெண்டினும் ஒரு கதாபாத்திரமாய். குவெண்டின் தான் அவர்களுக்கு ஒரு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். கன்னிகழியாத பெண்ணின் சோகமயமான பாடல் என்பதே அவர் சொல்லும் கதை. அது தனி ட்ராக்கில் சிரிக்கலாம். அப்படியொரு கதை. அப்போது அந்த கூட்டத்தில் இருக்கும் ஒருவன் ரேடியோவில் ஓடும் ஒரு பாட்டை சொல்லுவான். இந்த பாடலே பின்னால் வரும் சில காட்சிகளில் பிண்ணனி இசையாய் ஒலிக்கும். அங்கே எனக்கு அந்த இசை அந்நியமாக தெரியவில்லை. படத்தினுள்ளேயே ஒன்று உருவாக்கப்படுகிறது. படத்தினுள்ளேயே பயன்படுத்தப்படுகிறது.

மேலும் படத்தின் ஆரம்ப காட்சிக்கு அடுத்ததாக அனைவரும் அந்த ஹோட்டலிலிருந்து வெளியே நடந்துவருவார்கள். அப்போது அனைவரின் முகத்தையும் குளோஸ் அப்பில் காட்டி அதில் அவர்களின் பெயர்களை போடுவார். குவெண்டினின் பெயர் வரும் போது அவர் கொடுக்கும் போஸ் இருக்கிறதே.. அங்கேயே அவரின் சேட்டை ஆரம்பம். . .

படம் ஆரம்பித்த முதல் பத்து பதினைந்து நிமிடங்கள் வெறும் வசனங்களாக செல்லும். என்ன நடக்கிறது இது என்ன மாதிரியான படம் என்றே யூகிக்க முடியாதபடி செல்ல்லும். முழுக்க அடல்ட் காமெடி. நடுவில் சமூகபிரச்சினை ஒன்றும் பேசப்படும். இப்படி செல்லும் போது காட்சி மாறி ஒருவன் காரின் பின்சீட்டில் ரத்தக்களறியுடன் தான் சாகப்போகிறேன் என புலம்பிக் கொண்டிருப்பான். முதல் காட்சியில் காண்பிக்கப்பட்ட கூட்டத்திலிருந்த ஒருவன். இதுவும் குவெண்டினின் ஒரு முறை தான். இயல்பாக செல்லும் காட்சிப்படிமத்திலிருந்து சம்மந்தமில்லாது கதைப்படி பின்னால்  வர வேண்டிய காட்சியை காண்பிப்பது.

இது ஒரு ஹீஸ்ட் வகை திரைப்படம். கொள்ளையடிப்பது போன்றது. இந்த கதை யாதெனில் வைரத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் திட்டம் தீட்டுகிறது. கொள்ளையடிக்க இருந்த இடத்தில் போலீஸும் இருந்திருக்கிறது. இவர்கள் கொள்ளை அடிக்க அவர்கள் கண்டறிய தெறித்து ஓடி திட்டம் போட்டபடி ஒவ்வொருவராக வேர் ஹௌஸிற்கு வருகிறார்கள். அப்போது அவர்களுக்குள்ளேயே சந்தேகம் வருகிறது நமக்குள்ளொரு போலீஸ் இருக்கிறான் என. அந்த போலீஸ் யாரென கண்டுபிடிப்பதே இப்படத்தின் கதை.

விஷயம் யாதெனில் பார்வையாளனுக்கு யார் அந்த போலீஸ்காரன் என்பது படத்தின் பாதியிலேயே சொல்லப்பட்டுவிடுகிறது. அதன் பிறகு அவனின் பிண்ணனி மெல்ல மெல்ல சொல்லப்படுகிறது. ஆனால் படத்தில் கொள்ளையை காண்பிக்கவேயில்லை. ஒருவேளை லோ பட்ஜெட் படங்களுக்கு இது போன்ற யுத்திகள் அதிகம் உதவலாம். படத்தின் கடைசிவரை பார்வையாளனுக்கோ கொள்ளை படத்தை பார்த்த உணர்வு தேங்கியே இருக்கிறது. இப்படி யுக்தியை கையாண்டாலும் அதற்கு சம்னபடுத்தும் அளவு படத்தில் சரக்கு இருக்க வேண்டும். இப்படத்தில் கொட்டி இருப்பதால் இது தனி உதாரணம் என்றே சொல்ல நினைக்கிறேன்.

இந்தப்படம் முழுக்க முழுக்க வசனங்களால் நிறைந்திருந்தாலும் அவை ஒரு இடத்திலும் நம்மை அலுப்பிற்கு கொண்டு செல்வதில்லை. வசனங்களில் வரிக்கு வரி கெட்ட வார்த்தைகள் புழுங்கி அந்த நபர் யாராக இருக்கும் என எண்ண வைக்கும் திறன் அதிரடியாக இருக்கிறது. அதன்பிறகு ரத்தம். அதற்கு இப்படத்தில் பஞ்சமே இல்லை.

குவெண்டினின் படங்களில் இப்படத்தால் கொண்ட அவதானிப்பு
1. ப்ளாக் ஹ்யூமர். இப்படத்தில் ஒரு காட்சி. அதில் ஒருவன் போலீஸ்காரன் ஒருவனின் காதை அறுக்கிறான். அறுத்தது மட்டுமல்லாமல் அதை தன் வாயருகில் கொண்டு போய் do you hear me ? என்று சொல்வது. இது போல் இன்னமும் ஏராளமான காட்சிகள் இப்படத்தில் இருக்கிறது.

2. நடுநிலையாமை. நடுநிலையாமை எனக்கு படைப்புகளில் பிடிக்காது. எதுவாகினும் அதை நன்மையின் பக்கத்திற்கே எடுத்து செல்வது. தீமை வெற்றிக் கொள்வது போல செய்யாமல் இருப்பது போன்றது. குவெண்டினின் திரைப்படகளில் நடுநிலையாமை இருக்கிறது. அதே சமயம் அதன் மறுபக்கமும் இருக்கிறது. இரண்டுமே சமநிலையில் தருபவர் என்னும் நிலையில் எனக்கு ஒரு திருப்தி கிடைக்கிறது. உதாரணம் இப்படத்தின் க்ளைமாக்ஸ். க்ளைமாக்ஸ் என்பதால் சொல்லாமல் விடுகிறேன்.

3. அடுத்து பாத்திர அமைப்புகள். ஒரு படம் எனில் அது ஒரு fixed frame. அதற்குள் புழங்கும் மனிதர்களை பார்வையாளன் அறிந்து கொள்ளாமல் இருப்பின் கதையை எப்படி உள்வாங்க முடியும் ? இந்த கேள்விக்கான பதிலாகத் தான் குவெண்டினின் ஒவ்வொரு பட கட்டமைப்பையும் நான் பார்க்கிறேன். தொண்ணூறு சதவிகிதம் அவர் படங்களில் இருக்கும் கதாபாத்திர பிண்ணனிகளை அறிந்தே கதையை புரிதல் கொள்கிறோம்.


Reservoir Dogs ஒரு bloody துள்ளல். . . .

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக