எழுத்தால் நான் வாழ்கிறேன் (1)

எப்போதும் போல் இம்மாதமும் இலக்கிய சந்திப்பிற்கு செல்லலாம் என்று முடிவுடன் இருந்தேன். இம்முறை தனியொரு ஈடுபாடும் இருந்தது. அதற்கு காரணம் நாஞ்சில் நாடன். ஒரே ஒருமுறை அவருடைய பேச்சை கேட்டிருக்கிறேன். அவரின் பேச்சில் ரௌத்திரம் எப்போதும் இருக்கும். ஒரு முறை கேட்டதிலேயே அப்படியொரு ஈர்ப்பு எனக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த முறை அவரை என்னால் முழுதாக புரிந்து கொள்ள முடிந்தது. காலையில் அம்மா அழைத்து என்னை எழுப்பியது கூட தெரியாமல் உறங்கியிருக்கிறேன். காலை உணவு உட்கொள்ள நண்பன் என்னை எழுப்பும் போது தான் மணி பார்த்தேன். எட்டு! அவசர அவசரமாக குளித்துவிட்டு பிய்க்க முடியாத பூரியை அவசரத்தின் பலம் கொண்டு பிய்த்து தின்று கிளம்பினேன். எப்போதும் பேருந்திற்கு அதிக நேரம் காத்திருக்க வேண்டும். இன்றோ என்னை காத்திருக்கவிடாமல் பேருந்து வர வெகு சீக்கிரமே சென்றுவிட்டேன்!

அங்கே இளஞ்சேரல் எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். என்னிடம் நர்சிம் என்பவரின் நூல் ஒன்றை கொடுத்து அடுத்த மாதம் பேசுகிறீரா எனக் கேட்டார். எனக்கு கேட்க மட்டுமே ஆசை என்பதால் இல்லை என்று மறுத்துவிட்டேன். அதே நேரம் விழா ஆரம்பிக்கும் வரை வாசிக்கலாமா என்று கேட்டு வாசிக்க ஆரம்பித்தேன். அவர் ஒரு கார்ப்ரேட் நிறுவனத்தில் பணிபுரிபவர். அவர் எழுதிய சிறுகதை தொகுதி அது - ஒரு வெயில் நேரம். அதில் முன்னுரை எழுதியிருந்தவர் கல்கியின் துணை ஆசிரியர் அமிர்தம் சூர்யா. அதில் எனக்கு இரண்டு கேள்விகள் எழுந்தன. 

 1. அவர் அதில் இத்தொகுப்பின் இடையில் சினிமா திரைக்கதை போன்று வசனங்கள் வருவது அழகாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஒரு கதை சீறாக செல்லுவதன் அடிப்படை எடுத்துக் கொண்ட மொழியைப் பொறுத்து தான் இருக்கிறது. சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் எழுதும் literature of trash என்னும் வகையறாவில் இது கவலை இல்லை. ஆனால் சீறாக செல்லும் மொழி இடையில் சினிமாத்துவமாக மாறினால் அது படைப்பை பாதிக்காதா ? (பதில் தெரிந்தால் சொல்லவும் அடியேனும் அறிந்து கொள்வேன்)

2. வாக்யம் ரஸாத்மகம் காவ்யம்(வாக்கியத்தில் சத்தியத்தின் ரஸம் இருந்தால் அது காவிய அந்தஸ்தை அடையும்). இதுவும் முன்னுரையில் இருந்ததே. இதை எப்படி அர்த்தப்படுத்துவது என்றே தெரியவில்லை. என் கேள்வி குதர்க்கமாக இருக்கலாம். ஆனாலும் அதற்குள் ஒரு நியாயம் இருக்கிறது. ஆதலின் பதில் தெரிந்தால் சொல்லவும். என் கேள்வி - ஒரு நாவல் முழுக்க முழுக்க பொய்யும் புனைசுருட்டும் மையமாகி வாசகனையும் பொய்யை நம்ப வைக்கும் அளவு எழுதப்பட்டிருக்கிறது எனில் மேற்கண்ட விஷயம் அங்கு எப்படி செல்லுபடியாகும் ? இது எல்லா இடங்களிலும் சாத்தியமா ?

எப்போதும் பத்து மணிக்கு தொடங்கும் இலக்கிய சந்திப்பு இன்று பதினோரு மணிக்கு தொடங்கியது. கோவை ஞானியை பாராட்டும் பொருட்டு ஒரு விழா அமைக்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். கோவை ஞானி எனும் போது எனக்கு என் பதிப்பாளர் சொன்ன விஷயம் நினைவிற்கு வந்து செல்கிறது. ஏற்கனவே பதிவு செய்திருக்கிறேனா எனத் தெரியவில்லை. இருந்தாலும் எழுதுகிறேன்.

கோவை ஞானி ஒரு வெகுஜன பத்திரிக்கைக்கு தொடர்ந்து கதை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தாராம். எந்த கதையுமே வெளிவரவில்லையாம். ஒரு நாள் அவருக்கு கோபம் அதிகமாகி அந்த பத்திரிக்கையின் அலுவலகத்திற்கே சென்று என் கதைகள் என்ன ஆனது என சத்தம் போட்டிருக்கிறார். உடனே அவர்கள் ஒரு கோப்பினை எடுத்து அவரிடம் கொடுத்திருக்கின்றனர். அது முழுக்க அவரின் கதைகள். அவர்கள் மேலும் ஒன்றை சொல்லியிருக்கின்றனர். அஃதாவது எங்கள் பத்திரிக்கையை வாசியுங்கள் பின் அனுப்புங்கள் என. தங்களின் கதைகள் அனைத்தும் அருமை ஆனால் எங்கள் பத்திரிக்கைக்கு உகந்தது அல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே அந்த பத்திரிக்கையின் கடந்த சில இதழ்களை வாங்கி புரட்டி வாசித்திருக்கிறார். தன் கதைகளில் அங்கங்கு திருத்தங்களை செய்து அந்த பத்திரிக்கைக்கு உகந்தது போல மாற்றி கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அவருடைய கதைகள் வெளி வந்து கொண்டே இருந்ததாம். அப்படிப்பட்ட அவருடைய படைப்புகளை சில விருதுகளும் கௌரவித்திருக்கின்றன. அவரை கௌரவிக்க ஒரு விழா ஏற்பாடு செய்திருக்கின்னர். அவரோ அது வேண்டாம் என சொல்லிவிட்டார். அதனால் விழா ஆய்வாளர்களைப் பற்றி திரும்பியது. இதில் ஒருவர் ஞானியின் அனைத்து படைப்புகளையும் இணையத்தில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.

அதற்கு செல்லும் முன் ஒரு விஷயம். நாஞ்சில் நாடன், நாச்சிமுத்து, கோவை ஞானி போன்றவர்கள் விருதுளை வாங்கியவர்கள். ஆனால் இன்று அங்கு நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் மூலம் ஒரு உண்மையை கண்டறிந்து கொண்டேன். குறிப்பாக நாஞ்சில் நாடனிடமிருந்து. அது,
"விருதுகள் காலாவதி ஆகும் குணம் உடையது என்பதை படைப்பாளி அறிந்து கொண்டால் மட்டுமே அடுத்தவர்களின் படைப்பை மேடை ஏற்றவோ பரிந்துரைக்கவோ ரசிக்கவோ முடியும்"

மூவரின் பேச்சும் அதிகமாக என்னை ஈர்த்தது. இன்று நிறைய பேர் பேசினார்கள். முதலில் ஜவஹர் என்பவரின் ஆய்வு நூலைப் பற்றி பேசினார்கள். ஆய்வுகள் அதி முக்கியமானவை என்பதையே இன்று தான் என்னால் உணர முடிகிறது. அனைவரின் பேச்சுகளிலிருந்தும் தான் என்னால் இம்முடிவிற்கு வர முடிகிறது. ஆய்வுகள் மட்டுமே நமது தொன்மத்தை அடுத்த வம்சத்திற்கு எடுத்து செல்கிறது. ஜவஹர் என்பவர் தொல்காப்பியரின் திணை கோட்பாட்டை வைத்து உலக இலக்கியங்களை அலசியிருக்கிறார். நம் தமிழில் இருக்கும் அரும்பெரும் இலக்கியங்கள் காலந்தொட்டு நிற்க வைக்கக் கூடிய விஷயம் இந்த ஆய்வுகள் என்கிறார்கள்.

எம்.ஏ.சுசீலா
ஜவஹருக்கு அடுத்து எம்.ஏ.சுசீலா. அவருடைய நூல்கள் பெண்ணியத்தை மையமாக்குபவை. அவரின் நூல்களை பின்வரும் லிங்கில் பார்க்கலாம் - http://www.masusila.com/p/blog-page_31.html. அவருடைய இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் முக்கியமானவை. அவை குற்றமும் தண்டனையும் மற்றும் அசடன். இரண்டுமே தாஸ்தாயெவ்ஸ்கியின் நூல்கள். இப்போது கூட அவரின் வேறு இரண்டு நூல்களை மொழிபெயர்க்கும் ஆசையில் இருக்கிறார். மேலும் க்ரைம் அண்ட் பனிஷ்மெண்ட் நாவலை மொழிபெயர்க்க அவருக்கு ஆறு மாதங்கள் ஆனதாம். அதே இடியட் நாவலை மொழிபெயர்க்க அவருக்கு ஒன்றரை வருடங்கள் ஆனதாம். அது பெரிய அளவிலான ஒரு படைப்பு.

மொழிபெயர்ப்பு பற்றி அவர் சொன்னார். மொழிபெயர்ப்பு உண்மையில் கடினமான வேலை. வாசித்த ஒரு படைப்பை நாம் பலமுறை அணுக வேண்டும். இது ஈடுபாட்டுடன் வருவது அதனால் கவலை இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பின் பெரிய சவால் மூலத்தில் இருக்கும் உணர்வுகள் இதிலும் இருக்க வேண்டும். அதற்கேற்ற வார்த்தை பிரயோகங்கள் அமைய வேண்டும். அதே போல் அவர் ஆற்றாமையுடன் சொன்னார் மொழிபெயர்ப்பிலேயே இருப்பதால் சொந்த படைப்பை தர இயலாமல் போய்விடுமோ என.

அசடன் நாவல் நான் வாசித்ததில்லை. அதில் அவருக்கு காலம் எடுத்தமைக்கு காரணம் அதிலிருக்கும் பிணைக்கப்பட்ட கதையமைப்பாம். குற்றமும் தண்டனையும் நாவலைப் பற்றி அவர் சொல்லும் போது ஒரு விஷயம் எனக்கு முரண்பாடாய் பட்டது. அந்நாவல் சார்ந்த என் பதிவு - http://www.kimupakkangal.com/2012/08/crime-and-punishment.html. அவர் சொல்கிறார் இக்கதையின் நாயகனுக்குள் நடக்கும் வேதியியல் மாற்றமானது பின்வரும் திருக்குறளை ஒத்தி இருக்கிது என.

"தன்நெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்"

இத்திருக்குறளின் படி தவறு செய்தவன் பிராயச்சித்தம் தேடுகிறான் எனில் இது சரியாக இருக்கும். இங்கோ கதையின் நாயகன் ரஸ்கோல்நிகோவ் பிராயச்சித்தம் தேடவில்லையே. தான் செய்த கொலையில் மாட்டிக்கொள்வோமோ என்னும் தன்முனைப்பிலேயே இருக்கிறான். அவனே குற்ங்களை ஆதாரமில்லாமல் செய்வது எப்படி என்று வகைமை படுத்துகிறான். அதை செயல்பாட்டில் கொண்டு வரும் போது அவனுடைய தர்க்கங்களுக்கும் நிஜவாழ்க்கைக்கும் பெரியதொரு முரண்பாட்டுப் போர் நிகழ்கிறது. அப்படியிருக்கையில் எப்படி இத்திருக்குறளுடன் ஒத்துப் போகும் என்று நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரிடம் கேட்டேன். அவர் சொன்னார் நாயகனின் மனம் இருகூறாக பிரிந்து நிற்கிறது. அவன் மனம் பிராயச்சித்தம் தேடவில்லை. ஆனால் செய்தது தவறு என நினைக்கும் ஒரு பாதி மனத்தை மற்றொரு பாதி எதிர்க்க முனைகிறது. இதைத் தான் நான் அத்திருக்குறளை வைத்துக் கூறினேன் என்றார். ஒருவித ஆச்சர்யம் என்னை அறியாமல் சூழ்ந்தது. மீண்டும் வாசித்த நாட்கள் அப்படியே கண்முன் வந்து சென்றது.

அவர் சொன்ன ஒரு விஷயம் இப்போதும் கேட்கிறது. அது தான் மொழிபெயர்ப்பாளர்களின் உன்னத அனுபவமாக எப்போதுமே இருக்கும். அஃதாவது நான்கைந்து முறை மொழிபெயர்ப்புக்காக ஒரு நூலை வாசிக்கும் போது அந்த இலக்கியவாதி காட்டும் தர்ஸனத்தை என்னால் நேரில் காணமுடிகிறது என்கிறார். எம்.ஏ.சுசீலாவிடம் தாஸ்தாயெவ்ஸ்கி அதிகாரம் செலுத்திக் கொண்டிருக்கிறார். . .

சக்தி செல்வி
இவர் பேசும் போது அவருடைய வெள்ளந்தியான மனப்போக்கை உணர முடிந்தது. அவர் சொன்னதில் ஒரு விஷயம் எனக்கு பிடித்திருந்தது. அவர் எழுதிய கவிதைகளை வாசித்து சிலர் வேறு அர்த்தங்கள் சொல்கிறார்களாம். அதை கேட்கும் போது அவருக்கே புதியதாய் இருக்கிறது என. அது தான் எழுத்தின் வீரியம். நம்மை வைத்து எழுத்து உயிர்வாழுகிது. நாம் வெறும் ஒரு கருவி. சிலரின் உடல்கள் அந்த எழுத்தின் வீரியத்திற்கு ஈடு கொடுக்க முடியாதபடியால் அவர்களின் படைப்பு சிதிலமடைகிறது.

சு.வேணுகோபால்
இவர் பகடி கலந்து பேசினார். நாஞ்சில் நாடனுக்கு பின் வந்த யாராலும் அவரின் பேச்சிலிருந்து மீளமுடியாமல் இருந்துவிட்டனர். மேலும் நாஞ்சில் நாடனுக்கு போட்டியாய் கம்பன் சார்ந்து தானும் ஒரு நூல் எழுதப்போவதாக சொன்னார். இதைத் தவிர ஜெயலலிதா வெகுஜன பத்திரிக்கை ஒன்றில் எழுதிய மூன்று தொடருக்கு நோபல் கிடைக்காததை நினைத்து வருத்தம் தெரிவித்தார்!!!

(அடுத்த பதிவில் நாஞ்சில் நாடனின் பேச்சை பகிர்கிறேன்... ஒரு வரியில் இங்கு சொல்கிறேன். ஆளுமைகளை தேடும் ஒரு தமிழ்பித்தனின் உரை. உரை முடியும் வரை அவர் எனக்கு தேர்ந்த தேடல் கொண்ட வாசகனாகவே தெரிந்தார்... விரைவில் அடுத்தது. . . )

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக