தொகுப்பு vs கதை
தொகுப்பு கதை ஆகியவற்றிற்கு
விளக்கங்கள் கொடுக்க தேவையில்லை.
ஆனால் இரண்டும் ஒரு
கோட்டில் இயங்க ஆரம்பிக்கும்
போது அங்கே விளக்கங்கள்
தேவையாய் இருக்கிறது.
என் அப்பாவிற்கு இப்போது
சர்க்கரை வியாதி. அதனால்
தினமும் காலையில் நடை
செல்ல சொல்லியிருக்கிறார் மருத்துவர்.
இரண்டு நாள் விடுமுறையில்
வந்திருப்பதால் நாமும் செல்லலாமே
என்று உடன் சென்றேன்.
நான் இருக்கும் ஏரியாவிலிருந்து ஒரு அரை
மணி நேரம் நேர்க்கோட்டில் சென்றேன். எனக்கு
நேர்க்கோட்டில் செல்வது பிடிக்காது.
அப்படி நடக்கும் போது
ஏரலில் நிர்மலுடன் இருந்த
நேரத்தில் அவர் சொன்ன
ஒரு விஷயம் எனக்கு
நினைவில் வந்து வந்து
போய்க் கொண்டிருந்தது. அஃதாவது
அவருடைய ஊரான ஏரலிலிருந்து
அவருக்கு யாரேனும் கம்பேனி
கொடுத்தால் நடந்தே குற்றாலம்
செல்லலாம் என்பதே அது.
எனக்கும் கேட்கவே ஆசையாக
இருந்தது. காரணம் அது
ஒரு முன்முடிவுடன் செல்லும்
பயணம் அன்று. கால்
போன போக்கில் குற்றாலத்தின்
திசையில் செல்ல வேண்டும்.
வழியில் பயணம் பிடிக்கவில்லை
எனில் அப்படியே திரும்பி
விட வேண்டியது தான்.
இது தான் அவருடைய
ப்ளான். இதை மனம்
அசை போட்டுக் கொண்டிருக்கும் போதே இந்த
காற்றாலையின் இறக்கை ஒன்றை
பெரியதொரு லாரி எடுத்து
சென்று கொண்டிருந்தது. வேடிக்கை
பார்த்துவிட்டு எங்களின் நடையை
தொடர்ந்தோம். அதை பார்க்கும்
போது சிறுவயதில் அதைக்
கண்டு நான் வியக்கும்,
மனதளவில் வானத்தில் பறக்கும்
நினைவுகளும் வந்து போனது.
அங்கு அறுபட்ட நினைவுகள்
நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் பாதங்களுடன் சேர்ந்து
கொண்டு சென்றது. அப்பா
இப்போது தான் வாக்கிங்
செல்வதால் காலையில் அவர்
காணும் மனிதர்களின் சுபாவங்களை
தினம் எங்கங்கு யார்
யாரை காண்பார், வாசன்
கண் மருத்துவமனை வாசலில்
இருக்கும் செயற்கை புல்லின்
மேல் படர்ந்திருக்கும் ஈரப்பதத்தின்
சுகம் என்று சொல்லிக்
கொண்டே வந்தார். கேட்கவே
அருமையாக இருந்தது. இப்போது
வாசகர்களுக்கு ஸ்டாப்.
இவ்வளவு நேரம் சொன்னதை
நான் சிறுகதையாக எழுத
முடியும் தானே ? குறுநாவலாக
எழுத முடியும் தானே
? அங்கு நான் எழுதும்
போது இந்த காட்சி
அமைப்புகளை மாற்றி அமைக்க
வேண்டிவரும். அதே இந்த
அனைத்தையும் அப்படியே விரிவாக்கினால் அது ஒரு
காலைப் பொழுதின் தொகுப்பாக
இருக்கும். அப்படி செய்தால்
இது சராசரி மிடில்
க்ளாஸ் வர்க்கத்தின் கதை.
இதே பேதத்தை இப்போது
கொஞ்சம் திகில் கலந்து
பார்ப்போம்.
நான் இருப்பது ஒரு
நகர். கிட்டதட்ட அறுநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்
இங்கே இருக்கின்றன. என்
தெருவில் மட்டும் பத்துக்கும்
மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன்.
தினமும் ஒருவரை ஒருவர்
அனுசரித்துக் கொண்டு ஒரே
நகர் என்னும் ஒற்றுமையுடன்
வாழ்ந்து வருகிறோம். எங்கள்
தெருவில் ஒரு குடிகாரன்
இருக்கிறான் என்று வைத்துக்
கொள்வோம். அவனுக்கும் எங்கள்
ஏரியாவில் இருக்கும் அனைவருக்கும்
எப்போதேனும் ஒரு சண்டை
நிகழ்ந்தே இருக்கிறது. ஆக
அவன் இல்லையெனில் கொஞ்சம்
சந்தோஷம் நிகழலாம் என்னும்
எண்ணம் தெருவில் வலுத்து
நிற்கிறது. அந்த நேரம்
பார்த்து அந்த குடிகாரன்
ஒரு குடியானவனை கொலை
செய்யப் போகிறேன் என்று
ஊர் முழுக்க தண்டோரா
அடிக்கிறான். ஊரே கேட்கிறது.
அந்த குடியானவானும் ஏதோ
ஒருவிதத்தில் தெருவில் அனைவர்
மனதிலும் ஒரு கசப்பை
சம்பாதித்தவன் தான்.
இங்கு இந்த கசப்பு
என்பது முக்கியமான ஒன்று.
காரணம் ஊருடன் கூடி
வாழவில்லை என்றாலும் இந்த
கசப்புமேம்படுகிறது. ஊருடன் கூடி
வாழ்ந்தாலும் அவர்களின் கோட்பாடுகளுக்கிணங்க மறுக்கிறோம் என்று
குறை கண்டுபிடிப்பார்கள். வாழவில்லையெனினும் கண்டுபிடிப்பார்கள். பொல்லாத
சமூகம். இப்போது அவர்கள்
இந்த கொலையை தடுக்க
யத்தனிக்கிறார்கள், மனிதாபிமானத்தின் அடிப்படையில்
ஆனால் அறிவிக்கப்பட்ட்து. அந்த
குடியானவன் நாமாக இருந்தால்
என்ன செய்வோம் ?
நாம் ஒரு பணக்காரர்.
மிடுக்குடன் இருப்பவர். பிறருடன்
பேசினாலே நம் தரம்
தாழ்ந்துவிடுமோ என்னும் எண்ணம்
கொண்டவர். இந்நிலையில் நமக்கு
நாம் கொலை செய்யப்பட
போவதாக செய்தி நமக்கே
வருகிறதெனில் நம் நிலை
?
இந்த கேள்வியை அல்லது
இந்த கதையை மேலே
சொன்ன தொகுப்பு முறையில்
அழகாக சொல்லப்பட்டிருக்கும் நாவல்
தான் காப்ரியல் கார்சியா
மார்க்வேஸின் Chronicle of a Death Foretold.
கதை ஒரே நாளில்
நிகழ்கிறது. சாந்தியாகோ நாசர்
என்பவன் தான் ஊரில்
பெரிய செல்வந்தன். ஏஞ்சலா
விகாரியோ என்பவளை பயார்டோ
சான் ரோமன் என்பவன்
மணந்து கொள்கிறான். முதலிரவின்
போது அவள் ஏற்கனவே
கன்னி கழிந்தவள் என்பது
அவனுக்கு தெரிந்து விடுகிறது.
அவளை வீட்டிற்கு விரட்டிவிடுகிறான்.
அவளுடைய சகோதரர்கள் இதற்கு
காரணம் யார் என்று
கேட்கிறார்கள். சாந்தியாகோ நாசர்
என்று சொன்னவுடன் இருவரும்
கிளம்புகிறார்கள். அபிஸிந்த் என்னும்
போதையை உட்கொண்டு ஊருக்கே
தம்பட்டம் அடிக்கிறார்கள் சாந்தியாகோ
நாசரை கொலை செய்யப்
போகிறோம் என்று. சில
இடங்களில் சொல்லவில்லையெனினும் அவர்களுக்கிடையே இருக்கும் பேச்சுகளில்
அறிந்து கொள்கிறார்கள். விஷயம்
சாந்தியாகோ நாசரிடம் சென்றதா
அவரை கொன்றார்களா ? என்பதே
மீதக்கதை.
அந்த காலையில் ஊரே
ஒரு கொண்டாட்டத்தில் இருக்கிறது.
அங்கு பிஷப் வருகை
தருகிறார். அவரை வரவேற்க
செல்கிறார் நாசர். இங்கு
கதை ஆரம்பித்து அப்படியே
அந்த நாளை பதிவு
செய்கிறது.
இந்நாவலில் ஒரு முரண்
மிக அழகாக பதிவாக்கப்பட்டுள்ளது.
மனிதனுக்கு சுயகௌரவம் மிகப்பெரிய
விஷத்தைப் போன்றது. அப்படி
சுயகௌரவம் சமூக மதிப்பீடுகளால் ஏறும் பொழுது
பிற மனிதர்களுடன் வர்க்க
பேதம் வந்துவிடுகிறது. அவன்
சொல்ல நான் கேட்க
வேண்டுமா என்னும் குணம்
தொற்றிக் கொள்கிறது. பொருளாதார
ரீதியாக பிற மனிதர்களைக்
காட்டிலும் உயர்ந்து இருப்பதால்
சமூகம் சார்ந்து தான்
சொல்லும் கருத்துகளே சரி
என்னும் நிலைக்கு அம்மனிதன்
தள்ளப்படுகிறான். அவனுக்குள்ளேயே ஒரு
உலகம் உருவாகி அவனுக்கு
எச்சரிக்கை விடுக்கிறது நீயே
நீ வாழும் பகுதியில்
ராஜா என்று. அப்போது
ஒருவன் தன்னை கொலை
செய்ய வருகிறான் என்றாலே
அந்தஸ்தின் காரணமாக விளைந்த
எதிரிகள் என்னும் கட்டமைப்பு
வெளித் தோற்றமாக எழுகிறது.
மனதிற்குள்ளேயோ சாதாரண மனிதனைப்
போல் அவன் அழுகிறான்
பயப்படுகிறான் வெளியில் என்ன
வேஷம் போடுவது என
திட்டம் போடுகிறான். இந்த
மனத்திற்கும் சமூக மதிப்பீடுகளுக்கும் இடையில் இருக்கும்
முரணை அழகுற சாந்தியாகோ
நாசரின் பாத்திரத்தில் சொல்லியிருக்கிறார்.
புனைவின் படி சொல்லப்படுவதும் அவன் காதிற்கு
எட்டாமல் வழுகி விழுகிறது.
சிலர் அடுத்தவர்கள் சொல்வார்கள்
என்னும் நிலையில் இருக்கிறது.
இந்த அடுத்தவர்கள் என்னும்
விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்.
நாம் சொல்லி ஒரு
கொலை மிரட்டலை தூண்டிவிட்டோமோ என்னும் சமூக
அச்சம் எப்போதும் கூட்டத்தை
பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.
இந்த பயம் இங்கே
நன்கு சொல்லப்பட்டுள்ளது.
இந்நாவல் சிறிய அளவில்
விறுவிறுப்பாக சென்றாலும் ஒரு
அறுபட்ட கதையையே சுமந்து
செல்கிறது. கதைசொல்லி யாரென்று
விளக்கவில்லை. மேலும் சாந்தியாகோ
நாசரால் தான் கன்னி
கழிந்தது என்று அவள்
சொல்லுகிறாள். ஒரு இடத்தில்
தன் காதலனை காப்பாற்ற
அப்படி சொல்லியதாக கதை
நகர்கிறது. இந்த குழப்பம்
தெளிவாக்கப்படவில்லை. நாவலின் க்ளைமாக்ஸும்
அறுபட்ட நிலையிலேயே உள்ளது.
குழப்பம் இல்லை அறுபட்ட
நிலை.
இந்நாவலில் பாராட்ட வேண்டியது
நாவலில் கொடுக்கும் வேகம்.
அவருடைய மூன்று நாவல்கள்
வாசித்திருக்கிறேன். அதில் எனக்கு
பிடித்தது love in the time of cholera தான்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக