இலக்கிய டார்ச்சர்
சுயவிமர்சனம், சுயதம்பட்டம், தன்னிலை விளக்கம்,
நூல் வாசிக்க ஆசை இருந்தும் வாங்க முடியாமல்
இருப்பவர்களின் வயிற்றில் தீ வைக்கும் படலம், மொத்ததில் கிமுவின் ஒரு
இலக்கிய டார்ச்சரே கீழ்காணப்போகும் பதிவு. மேலும் பிரிந்து நிற்கும் ஒவ்வொரு
பதிவிற்கும் தொடர்புகள் உண்டு. டார்ச்சருக்கு பயந்து கொண்டு அந்த தொடர்புகள்
ஓடிவிட்டன. ஆதலால் வாசகர்கள் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
*****
முதலாமாண்டில் நான் வேறொரு அறையில் இருந்தேன். அப்போது என்
அறைப்பங்காளனான ஒருவனின் அக்கா வீட்டுக் கல்யாணத்திற்காக மதுரை சென்றிருந்தேன்.
நானும் சில நண்பர்களும் அந்த கல்யாணம் எல்லாம் முடிந்து மதுரையிலிருந்து கிளம்ப
வேண்டிய நேரம் என முடிவெடுத்ததை விட தாமதமாக கிளம்பினோம். விளைவு ஒரு பதினொன்று
மணியளவில் கோவை எல்லையை கடந்து கொண்டிருந்தோம்.
என் கல்லூரி இருப்பது ஒரு எல்லையில். அங்கு பேருந்து வசதிகள் பகல்
வேளைகளிலேயே அதிக நேர இடைவெளிக்கு பின் தான் வரும். கடைசி பேருந்து ஒன்பதோ பத்தோ.
நள்ளிரவில் கூட பேருந்து உண்டு என்று சில நண்பர்கள் சொல்லுகின்றனர் ஆனால்
ஊர்ஜிதமாக தெரியவில்லை. மதுரையிலிருந்து கோவை வரும் பேருந்துகள் பொதுவாக
சிங்காநல்லூருக்கு தான் செல்லும். இரவு அல்லது அதிகாலை எனில் காந்திபுரம் வரும்.
நாங்கள் ஏறிய பேருந்தும் அதிர்ஷ்டவசமாக காந்திபுரம் வந்தது. ஒரு பேருந்து கூட
அந்நேரத்தில் இல்லை. சில பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திற்கும்
சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கும் மட்டும் இருந்தது.
நாங்கள் ஏற வேண்டிய பேருந்து வாளையார் என்னும் ஊருக்கு செல்ல கூடிய
ஒன்று. அது உக்கடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று உக்கடம் பேருந்து ஏறினோம்.
அங்கு சென்றால் பேருந்து நிலையமே வெறிச்சோடி கிடந்தது. அப்படியே நாங்கள்
ப்ளாட்ஃபார்மில் அமர்ந்தோம். பேசாமல் உறங்கிக் கொள்ளலாம் காலையில் முதல்
பேருந்தில் சென்று விடலாம் என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.
கண்களில் தூக்கம் அளவு கடந்து பொங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த
போலீஸ்காரரோ எங்களை அடிக்காத குறையாக பேருந்து நிலையத்திலிருந்து போகச் சொன்னார்.
வேறு வழியின்றி கால் டாக்ஸியில் கேட்டுப் பார்த்தோம். விலை மிக அதிகம் என்பதால்
ஆட்டோ பேசினோம். பேரமும் பேசினோம். கைக்காசு எல்லாம் போட்டு எப்படியோ இரண்டு மணி
அளவு விடுதி வந்து சேர்ந்தோம்.
என் அறையில் நான் மட்டுமே வந்திருந்தேன். ஒருவன் திருமணத்திற்கே
வரவில்லை. இன்னமும் இரண்டு பேர் திருமணத்திலிருந்து வரவில்லை. விடுதி அறையினை
தட்டிக் கொண்டிருந்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. என்னைத் தவிர இவ்வளவு நேரம் வெளிச்சத்துடன்
பேசுவது யாரென்று பார்த்தேன்.
அவனுடைய பெயர் கணேஷ். அறிவியலில் அதீத ஆசை கொண்டவன். எதையாவது
கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவன். அன்று நிறைய A4 பேப்பரில்
வரைபடங்கள் போட்டிருந்தான். என் கண்களிலோ தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது. செருப்பைக்
கூட கழற்றவில்லை என்னிடம் அந்த காகிதங்களை காண்பித்து அவன் வரைந்திருந்த டிசைன்களை
விளக்கிக் கொண்டிருந்தான். அவனை தடுக்க எனக்கு துளிக்கூட மனம் வரவில்லை. எத்தனையோ பேர்களிடம் சென்று சென்று என் கதையை வாசியுங்கள் என் கதையை
வாசியுங்கள் கருத்து சொல்லுங்கள் என்று சுற்றியிருக்கிறேன். என் கதைகளை அன்று
முதல் இன்று வரை உதாசீனம் செய்த(ப)வர்கள் என் நண்பர்கள் தான். அந்த உதாசீனம்
மிகுந்த வலி கொண்டதாய் இருக்கும். அதற்காக அவர்களை வெறுக்கவா முடியும் ? இருந்தும்
மனதில் குத்திக் கொண்டே இருக்கிறது!!!
*****
நேற்று என் அறைபங்காளனின் கோரிக்கை
"தயவு செஞ்சு பன்னிரெண்டு மணிக்காவது லைட்ட ஆஃப் பண்ணுடா தூக்கம்
வரலடா ? ஏன் தெனம் தெனம் லைட்டு போட்டு இப்படி டார்ச்சர் பண்ற ?"
*****
பரிசுத்தொகை கிடைத்தது. என் அத்யந்த நண்பன் மாஸ்டர் என்னிடம்
கேட்டான் இந்த பணத்தை உன் அடுத்த வெளியீட்டிற்கான சேமிப்பில் வைக்கப் போகிறாயா
என்று. இல்லவே இல்லை. எனக்கு நிறைய வாசிக்க ஆசையாக இருக்கிறது. மேலும் என்
புலம்பல்கள் நூல்கள் வாங்க காசு இல்லையே என்பது தான். இந்நிலையில் தான் இந்த குரு
பெயர்ச்சி. எனக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். மேலும் கைகளில் காசு
வந்த உடன் ஐந்து ஆங்கில நாவல்களை ஆர்டர் செய்துள்ளேன்.
ஆங்கில நாவல்களெல்லாம் எனக்கு ஒரு எட்டாக்கனி. காரணம் அங்கு விலைகள்
அதிகமாக இருக்கிறது. நான் சம்பாதிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை என் கைக்காசு
என்று வாங்கிவிடுவேன். இப்போது பத்து தமிழ் நாவல்களுக்கு ஒரு ஆங்கில நாவல் என்று
வாங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போதோ சரியாக பிரித்து வைத்து வாங்கியிருக்கிறேன்.
தமிழ் நாவல்களுக்கும் ஒரு லிஸ்டு தயார். ஆனால் அதை ஆர்டர்
செய்வதாயில்லை. கோவையில் விஜயா பதிப்பகம் என்றொரு புத்தக நிலையம் இருக்கிறது.
நல்லதொரு களஞ்சியம் அது என்றே சொல்ல வேண்டும். அங்கு விஜயா பதிப்பகத்தின் நூல்கள்
வாங்கினால் மட்டுமே தள்ளுபடி. என் சொந்த ஊரில் 500க்கு மேல் வாங்கினாலே
தள்ளுபடி. தள்ளுபடியில் மீதம் போகும் காசில் கூட ஒரு நூல் வாங்கலாம்.(சே
எப்படியெல்லாம் மூளை யோசிக்குது)
*****
இப்பதிவின் நீதி : மூவாயிரம் ரூபாய் எனக்கு தற்சமயம் கிடைத்த ஒரு
பொக்கிஷம்
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக