பிரபஞ்சத்தின் சாவி

இது இந்த வருடத்தின் நூறாவது பதிவு. பொத்தாம் பொதுவாக ஒரு நூலின் கட்டுரை அல்லது சினிமா சார்ந்த பார்வையினை எழுத நான் விருப்பப்படவில்லை. ஒரு குறுங்கதை எழுதலாம் என நினைத்தால் மண்டைக்குள் எதுவும் வரவில்லை. என்ன செய்யலாம் என யோசிக்கும் போது தான் the alchemy of desireஉம் வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் பல பக்கங்களில் அப்படியே எனை மறந்து உலகத்தினையே மறந்திருந்தேன். அதில் இரண்டு பக்கங்களைமட்டும் நான் ஒரு பதினைந்து முறையாவது வாசித்திருப்பேன். அதனை ஏன் மொழிபெயர்க்கக்கூடாது ? நமக்கு அவ்வளவு ஆங்கிலம் அத்துப்பிடியா என அறிவு கேலி செய்தாலும் எனக்குள் இருந்த desire இப்போது என்னை எழுத வைக்கிறது. உங்களுக்காக அந்த நாவலின் 176 மற்றும் 177 ஆம் பக்கங்கள், என் சிற்றறிவுத் தமிழில். . .

ஃபிஸ்ஸுடன் முடியாக்கலவியில் இருந்த தருணங்களை மட்டுமே உண்மையென உணர்ந்துகொண்டிருந்தேன். என் வாழ்வின் சாரமே அவளின் தேகமாகிக் கொண்டிருந்தது. ஒரே நாளில் பலமுறை சம்போகம் கொண்டோம். மீத நேரத்தில் அலுவலகத்திலும் சகோதரனிடத்திலும் இருக்கும் போது கூட நாங்கள் செய்ததும் செய்யப்போவதுமாக நிறைந்த விஷயங்கள் என்னை ஆட்டிப்படைத்தது.  அந்த நேரங்களில் என்னை மறந்த நிலை மதங்களையும் கடந்திருந்தது. கயிறுகளால் கட்டப்பட்டு சுழல்கின்ற துறவியினைப் போல் கயிறுகள் அறுபடாமல் பிரபஞ்சத்தினை கண்டறிந்துகொண்டிருந்தேன்.

இந்த சுழற்சி நிற்கப்போவதில்லை ஒட்டு மொத்த பிரபஞ்சமும் கண்டறியப்படும் வரை.
சுயபிரக்ஞையினை இழக்கும் வரை.
பிரபஞ்சத்தின் இதய ஆழத்தில் இருக்கும் சூன்யத்தினை சுவைக்கும் வரை.

ஒவ்வொரு நாளும் அந்த சூன்யத்தினை சுவைக்க சுவைக்க அதற்கு ஈடான ஒன்றினை என்னால் கற்பனை கூட செய்ய முடியவில்லை. காமத்தின் உச்சத்தை ஏன் மூதாதையர்கள் வழிபட்டும் பயந்து கொண்டும் இருந்தார்கள் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. அது மட்டுமே தன் கடவுளை தானே சென்றடைவதற்கான வழி. அங்கு மத போதகரோ ராஜாவோ வழிகாட்டத் தேவையில்லை. தேவையெல்லாம் போதகர்களாலும் ராஜாக்களாலும் கட்டமைக்கப்பட்ட விதிகளுக்கு அப்பால் இருக்கும் காதல். பிரபஞ்சத்தின் சாவி போதகர்களிடமோ ராஜாவிடமோ இல்லை. பிரபஞ்சத்தின் சாவி காதலியின் தேகத்தில் இருக்கிறது.

என் வசம் சாவி இருந்ததால் ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தினை திறந்து கொண்டிருந்தேன்.

என்னுடன் ஃபிஸ் இருக்கும் போது நான் எப்படி கிங் கபோலாவையோ பணத்தையோ யோசிக்க முடியும் ? அந்த வருடங்களில் நாங்கள் எங்கும் கேட்டிராத எங்கும் படித்திராத விஷயங்களை வெளிக் கொணர்ந்து கொண்டிருந்தோம். காலங்களால் எங்கள் மேல் படர்ந்திருந்த வெட்கத்தினை துயிலுரித்துக் கொண்டிருந்தோம். அந்த வெட்கங்களுக்கு அடியில் கற்பனையிலும் சித்தரித்திராத அப்பாவியை கண்டறிந்தோம். எப்போதேனும் எட்டிப்பார்க்கும் சந்தோஷம் யாரிடமிருந்தும் எதனையும் எடுக்காமல் கொடுத்துக் கொண்டே இருந்தது. உடலை மட்டும் நிர்வாணமாக்காமல் ஆன்மாவினையும் அம்மணமாக்கினால் பூமியினையே சுற்ற வைக்கலாம் என்பதனை கண்டுபிடித்தேன்.

காதலர்கள் உடலை வெளிக்காட்டும் போது காமத்தினை பகிர்கிறார்கள்
காதலர்கள் ஆன்மாவினை வெளிக்காட்டும் போது கடவுளை சுவைக்கிறார்கள்

ஒவ்வொரு முறையும் ஃபிஸ்ஸின் முன் நிர்வாணம் ஆகும் போது எங்கள் தேகம் ஆன்மா இரண்டுமே நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தேன்.

நாங்கள் தீராத் தேடல்களை தேடுபவர்களாய் இருந்தோம்

சென்ற இடங்களிலெல்லாம் மற்ற காதலர்காளைப் போல நாங்கள் தான் முதன் முதலில் சென்றடைந்ததாய் உணர்ந்தோம்.

காதலர்களின் தேகம் தான் முடிவில்லா இரகசியங்களை கொண்டிருக்கிறது என்பதை கண்டுபிடித்தோம்.

வெவ்வேறு காலநேரத்தில் அதே இரகசியங்கள் வெவ்வேறு உண்மைகளை சொல்லிக் கொண்டிருந்தது என்பதை கண்டுகொண்டோம்.

ஃபிஸ்ஸுடைய தேகத்தின் வளைவுகள் மற்றும் பிளவுகளின் ஊடாக செல்லும் பொழுது தொடர்ந்து கவர்ந்திழுக்கப்பட்டேன்.

சில நேரங்களில் அதன் தன்மை மிகுதியாகி முதல் தீண்டலுக்கு முன்பே நாங்கள் நடுங்க ஆரம்பித்தோம். சுரங்கத் தொழிலாளிகளைப் போல் முதல் நெருக்கத்தின் தீண்டல் எப்படி இருக்கும் என முனைந்து கொண்டிருந்தோம். நான் ஸ்தூலமாக, கடினப்பட்டு; தேவையுடன் நேரத்தினை தள்ளிப்போட்டுக் கொண்டே. அவள் உணர்ச்சிகள் பொங்க, உதடுகள் துடிதுடிக்க. பிறகு நாங்கள் தீண்ட, எப்போதும் நடக்கும் ஒரு வெடிப்பு, நாங்கள் இருவரும் மூலமும் உன்மத்தமுமாக, விலங்கும் வனதேவதையுமாக, சதையும் ஆன்மாவுமாக, ஃபிஸ்ஸும் நானுமாக.

சில நேரங்களில் சந்தோஷம் நரக வேதனையாக மாறி அவளுடைய தடித்த சதை துணுக்கை கடித்துச் சவைக்கத்  தோன்றும். வேறு சில நேரங்களில் சொர்க்கத்தினை நிரப்பும் அழுகுரல் கூவலை விடுக்கத் தோன்றும்.

காதலில் இருவருக்கிடையே இருவர் செய்யும் எதுவும் தப்பாவதில்லை என்பதை பிறகே அறிந்து கொண்டேன்.

அப்பா அம்மா சட்டம் நண்பன் யாரும் காதலர்களின் நிலத்தில் ஆட்சி செய்ய முடியாது என்பதை பிறகே அறிந்து கொண்டேன்.

உண்மையாக காதலிப்பவர்களுக்கு தெரியும் பிரபஞ்சத்திற்கான சாவி காதலர்களின் தேகத்தில் இருக்கிறது என்பதை பிறகே அறிந்து கொண்டேன்.

என் வசம் சாவி இருந்ததால் ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தினை திறந்து கொண்டிருந்தேன்.


நான் கண்டடைந்த பிரபஞ்சம் முழுக்க இச்சைகளால் கட்டமைக்கப்பட்டிருந்தது.

பி.கு : சில ஆங்கில வார்த்தைகளுக்கு உதவிய நிர்மலுக்கு நன்றி

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

pichaikaaran said...

சரளமாக இருந்தது . ரசித்தேன்

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்த வைத்தது 'தேடல்கள்'...

இந்த வருட 100 - மென்மேலும் தொடர, சிறக்க வாழ்த்துக்கள்...

Post a comment

கருத்திடுக