லயம் பிறழும் குதிரைகள்
லயம் பிறழ்ந்து கொண்டே இருக்கிறது. பிறழ்ந்தாலும் மீண்டும் வந்து ஆதார லயத்துடன் கூடிக் கொள்கிறது. சில சமயம் உடனடியாக. சில சமயம் நீண்ட நேரம் பொறுத்து. இந்த பிறழ்வு நாட்கணக்கில், மாதக்கணக்கில், ஆண்டு கணக்கில் நீண்டு போகலாம். திரும்ப வந்து கூடாமற் போகலாம் - வால் நட்சத்திரங்கள் போல். சில நீள் வட்டத்தில் பயணம் செய்து ஏழாண்டுக்கொருமுறை, பத்தொன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை. . . சில அகன்ற நீள் வட்டத்தின் முடுங்கிய முனை போல வந்து, கூடிப் பின்பு திறும்பப் பறந்தே போய்விடலாம். . .
எத்தனை
உண்மையான வார்த்தைகள் இவை. எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் நாம் இருவகையாக பிரிந்து
நிற்கிறோம். ஒன்று சுயமாக முடிவினை எடுப்பது. மற்றொன்று சமூகத்தை பின்தொடர்ந்து நாம்
மனதில் கொள்ளும் முடிவுகளுக்கு சமூகம் என்ன பிரதிபலிக்கிறது என்று சூதானமாக ஆவதானித்து
பின் நாம் அவற்றிற்கு புறம்பான ஒரு முடிவை எடுப்பது.
இந்த
இரண்டாவது வகையறா கிட்டதட்ட அறிவாளி முகமூடி போடுவது கூட. எப்படியெனில் நாம் மனதில்
ஒரு நினைப்பை பரிபாலனம் செய்து கொண்டோம். விஷயம் அந்த செயலை நம்மைத் தவிர யாரும் செய்தல்
கூடாது. இந்த கட்டுமானம்ம் உடையாமல் நம் பிம்பத்தை நாம் வைத்துக் கொள்கிறோம். சமூகத்தின்
பால் நாம் கொள்ளும் அவதானிப்புகள் கூட இந்த விஷயத்தை கண்டறிவது தான்.
இதை
நேர்த்தியாக நாம் செய்துவிட்டோமேயானால் நாம் நமக்கு ஞானி ஆகிவிடுகிறோம். என் கேள்வி
இது தான் ஞானமா ?
இந்த
கேள்வி காலங்காலமக பல மேதைகளால் கேட்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் மனிதன் புறத்தேடல்களையே
தலையாய் கொள்கிறான். அது அவனுக்கு சந்தோஷத்தை அளிக்கிறது. சமூகத்தில் பெறுமதிப்பை பெறவைக்கிறது.
திரளிற்கு நடுவே தனிப்பட்டு தெரியும் சமயத்தில் அவன் அறிவாளியாகவே பாவிக்கப்பட்டுகிறான்.
அவனுக்குள்ளோ ஒரு நீயா நானா ஓடிக் கொண்டு தான் இருக்கும் இது ஞானமா என.
இந்த
வாதப் பிரதி வாதங்களுக்கு எப்போதுமே முடிவு கிடையாது. அவை தன் நீட்சிகளை தன் இஷ்டத்திற்கு
கொள்கிறது. மனிதனின் நினைவுகளை கடந்த காலத்திற்கு இட்டுச் சென்று அவனின் வாழ்க்கையை
அவனுக்கே காட்டுகிறது. நீ ஞானத்தை தேடுகிறேன் பேர்வழி எனத் தேடிக் கண்டடைந்த விஷயத்தை
பார், நீ தொலைத்து விட்டுச் சென்று இப்போது உனக்காக காத்துக் கொண்டிருக்கும் காலத்தைப்
பார், உன்னை அறிவாளியாக காட்ட சமூகக் காரணிகளை உனக்குள் நீயே நிர்வகித்து சமுகத்தை
புறந்தள்ளி இப்போது அதுவே அவர்களுக்குப் பழகி உன்னை புறத்தே தள்ளி வைத்திருக்கும் நிலையைப்
பார் என அச்சுறுத்துகிறது.
அந்த
வேளையில் அவன் தன் அடுத்தத் தேடலை தொடங்குகிறான். முன்னால் செய்த தவறுகளையெல்லாம் பின்
செய்யக் கூடாது என ஒரு கோட்பாடுகளை வரையறுத்துக் கொண்டு தொடர்கிறான். வாழ்க்கை கோட்பாடுகளால்
நிர்வகிக்கப்பட்டது அல்ல. அதை மனிதன் எப்போதுமே உணர மறுக்கிறான்.
ஒரு தேற்றம் தோற்கும் போது இன்னொரு தேற்றம் அவனுள் எழுகிறதே அன்றி தேற்றங்களற்றதே வாழ்வு என்னும் நிலையை உணர மறுக்கிறான். நானும் விதிவிலக்கல்ல.
நடக்க
நடக்க பாதைகள் உருவாகும், அங்கெல்லாம் ஒரு பயணம் இருக்கும், மனதினுள் பயணக்குறிப்புகள்
நமக்கு தெரியாமலேயே எழுதப்படும். எழுத்திலும் சரி பயணத்திலும் சரி நாம் ஒரு தேடலை கொண்டிருக்கிறோம்.
அதில் கருவை திணித்து நாவலாக்கி நம்மிடம் நாஞ்சில் நாடன் ‘சதுரங்கக் குதிரை’ என்னும்
பெயரில் அளிக்கிறார். சதுரங்கத்தில் குதிரை தான் விசித்திரமாக நகரக் கூடியது. சதுரங்கக்
குதிரையையும் ஆரம்பத்தில் சொன்ன விஷயத்தையும் சேர்த்துப் பாருங்கள் பொருள் புரியும்.
ஆட்டு வைக்கப்படும் பதுமை நாம்(சதுரங்கக் குதிரை).
இதுவரை
சொன்ன அனைத்து விஷயங்களையும் அழகுற தன் நாவலில் நாராயணன் என்னும் கதாபாத்திரம் மூலம்
கொணர்கிறார். அங்கே கதை சாதாரண அலுவலகத்தில் ஆரம்பிக்கிறது. ஆதவன் காண்பிப்பது போல
அங்கே மனிதர்கள் போடும் வேஷங்களை, முகமூடிகளை மனதளவில் நாயகன் அங்கலாய்க்கிறான். இது
ஏன் என சிந்திக்கிறான்.
அப்போது
அவனுடைய அம்மா இறந்த செய்தி அவனுக்கு கிடைக்கிறது. அவன் வட இந்தியாவில் இருப்பவன்.
அங்கிருந்து பயணப்பட்டு வருகிறான். சிந்தனைகள் கற்பனைகள் கடந்தகால நினைவுகள் அவனுள்
அசைபோடுகிறது. அவன் ஒரு நாற்பது கடந்த ஆள். ஏற்கனவே மணமானவன். மனைவி இறந்துவிட்டதால்
ஒண்டிக்கட்டையாக இருப்பவன்.
அம்மாவின்
சடங்குகள் முடிந்தவுடன் அவனுக்கு மறுமணம் செய்ய வேண்டும் என அவனின் நலம் விரும்பிகள்
நினைக்கின்றனர். ஏகப்பட்ட பெண்கள் நாவலில் சுயம்வரம் போல வருகிறார்கள். இவனுக்கு ஒரு
பெண் பிடித்திருக்கிறது ஆனால் அவளை மணம் செய்வதற்கான வாய்ப்புகள் சொற்பமே அவனுக்கு
அமைகிறது.
இதில்
மீண்டும் வேலைக்கு செல்கிறான். அங்கிருந்து ஒரு பயணம் அங்கு அவன் கொள்ளும் அனுபவங்கள்
சொன்னது போல் அவனையறியாமல் அவன் தன் மேல் ஏற்றிக் கொண்ட முகமூடி கொள்ளும் தேடல்கள்
என சென்று யாரை மணம் செய்கிறான் அல்லது மணமே செய்யாமல் இருக்க்கிறானா என்பதை நாவல்
அழகுற சொல்கிறது.
இந்நாவல்
அநேக இடங்களில் ஆழம் காணவில்லை. அம்மா இறந்த விஷயம் அங்கு நிகழும் சடங்குகள் போன்றனவெல்லாம்
மேலோட்டமாகவே சொல்லப்படுகின்றன. அவனின் நினைவோடைகள் மட்டுமே முன்னிலை படுத்தப்படுகின்றன.
நாவலின் ஒரு இடத்தில் சொல்கிறான்
எவர் தயாராக குழியில் கால்நீட்டிக் கொண்டு, சாவை விரும்பி தவம் செய்து கொண்டு, போதத்துடன் கிடந்துவிட முடியும் ? வருகின்ற சாவு எப்போதும் தன்னைத் தாண்டி அடுத்தவனிடம் தான் போகும் என்றொரு நம்பிக்கை
அவன்
யாரைப் பார்த்தாலும் மணம் வேண்டாம் துறவறம் செல்கிறேன் என்பது போல் பேசுகிறான். அனைத்திலும்
ஒருவித பயம் ஆனால் தன்னை சூழ்ந்து கொண்டிருக்கும் ஆசை. இதற்கான பதிலும் நாவலிலேயே வருகிறது.
கிட்டதட்ட அது தான் வாழ்க்கை, நாம் வாசித்துக் கொண்டிருக்கும் நாவல் என்பது போல் நாஞ்சில்
நாடன் சொல்லிவிட்டுப் போகிறார். அவரின் வரிகளிலேயே பதிவை ஆரம்பித்தேன் அவருடைய வார்த்தையிலேயே
பதிவை முடிக்கிறேன்
எல்லாமே தற்காலிகமான விஷயங்கள் தான்.
நேற்றை இன்றால் எப்படியும் ஜெயங்கொண்டு கைப்பற்ற முடியாது.
இப்படியே ஒரு நாள் எல்லாம் நேற்றாகிப் போகும். ஆகிக் கொண்டிருக்கிறது.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக