எத்திக்கு நான் செல்ல ?
வாழ்வில்
ஒரு இடத்தில் தொலைத்த விஷயங்களை நாம் எப்போதேனும் சந்தித்துக் கொண்டு தானிருக்கிறோம்.
அதே நேரம் சில விஷயங்கள் நாம் எத்திசை சென்றாலும் நம்மை துரத்திக் கொண்டு தான் இருக்கிறது.
அது துரோகம் துவேஷம் ஏன் அன்பாகக் கூட இருக்கலாம். இந்த அன்பாக என சந்தேகத்தின் தொனியில்
சொன்னதற்குக் காரணம் அநேக நேரங்களில் கண்களில் புலப்பாடுமாறு இருந்தும் நாம் தேர்ந்தெடுக்க
மறுக்கிறோம், அன்பை.
அப்படி
நாம் அன்பை மேற்பூச்சினைப் போல பாவிக்கும் சமயங்களில் இதர உணர்வுகள் பெரிதாக தெரிகிறது.
அன்பே உலகின் சாரமாக இருக்கும் போது அதைத் தொலைத்தது போல் தெரியும் மாய பிம்பம் நமக்குள்
ஒரு தேடலை விதைக்கிறது. அந்த தேடல் மனதளவில் நின்று விடாமல் வாழ்வாதாரத்திற்கும் உகந்த
புறத்தேடலாக அமைகிறது. தேடிக் கொண்டே செல்கிறோம்.
முடிவுகளற்ற
தேடல் எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் அந்த பயணத்தை மேற்கொள்பவனுக்கு ஞானம் பிறக்கிறது.
அதேசமயம் பழைய நினைவுகள் தீயாய் துரத்துகிறது. மீள முடியாமல் தவிக்கிறான். தேடலை ஆரம்பிக்கும்
முன் அவன் கொண்ட வாழ்க்கைக் கடன் பாக்கிகளால் இப்போது அவதியுறுகிறான். அப்போது அவனின்
முடிவு யாதாகி இருக்கும் ? நிச்சயம் அந்த கடந்தகாலத்தை அடைவதே.
நமக்கென்ன
டைமெஷினா இருக்கிறது, நினைக்கும் போது கடந்து காலத்திற்கு சென்று வேண்டுவனவெல்லாம்
மாற்றியம்மைக்க. அப்படி மட்டும் இருந்திருந்தால் இந்த உலகம் எப்போதோ ஆழ்மன நிம்மதியை
அடைந்திருக்கும். வன்முறைகள் தற்கொலைகள் நிகழ்ந்திருக்காது. மனிதன் கால் போன போக்கில்
செல்வது எல்லாம் அவனுடைய ஆறடி உடலுக்கான நிம்மதி நாடியே.
எப்படி
எத்திசையில் சென்றாலும் நாம் தேடுவதை அடையவிடாமல் அங்கே ஒரு மதயானை நிச்சயம் மறுதலித்து
நிற்கும் என்பதை மிக அழகாக சொல்லும் நாவலே நாஞ்சில் நாடனின் “எட்டுத் திக்கும் மதயானை”
இந்த
நாவலின் அளவு என்னை ஈர்த்ததா என தெரியவில்லை வாங்கியதிலிருந்து வாசிக்க வேண்டும் என்னும்
அவா மட்டும் இருந்து வந்தது. அதன் படி இன்று ஆரம்பித்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு
பயணம் என்று மட்டுமே தீர்மானத்திற்கு வர முடிகிறது. பூலிங்கத்தின் வரலாறு என்று இந்நாவலைச்
சொன்னால் கூடத் தகும்.
பூலிங்கம்
கதையின் நாயகன். அவன் செய்யாத தவறுக்கு செண்பகத்தின் அப்பாவின் அடியாட்களால் அடிபட்டு
விரையில் பெரும் சேதம் அடைகிறான். பழி தீர்க்க அவர் வீட்டின் வைக்கப்போரை எரிக்கிறான்.
செய்யாத தப்புக்கே அந்த அடி அடித்தார்கள், இதில் இதைத் தெரிந்தால் வாழ்க்கையே போய்விடும்
என பயந்து ஊரை விட்டு யாருக்கும் சொல்லாமல் கிளம்புகிறான். மேலே சொன்ன அனைத்து தத்துவங்களும்
அவனை துரத்துகிறது.
முதலில்
ஒரு இடத்தில் தன்னை காப்பாற்றிக் கொள்ள ஒருவனைக் கொல்கிறான், அடுத்து ஒரு இடத்தில்
திருட்டுப் பட்டம் கிடைத்து அங்கிருந்து விரட்டியடிக்கப்படுகிறான், அடுத்து ஒரு சரக்கு
பரிமாறும் இடத்தில் வேலையில் சேர்கிறான். அங்கு சரக்குகளை ஒருவனிடம் ஏமாந்து விடுகிறான்.
இவன் தான் அதை விற்றது என இவனை அடித்து துவைத்து அங்கிருந்து அனுப்புகிறார்கள். அடுத்து
வேறு ஒரு இடத்தில் வேலை செய்கிறான். அங்கு ஒரு கொலைகாரனை காப்பாற்றுகிறான். அப்போது
அவனுடைய பழைய பெண்ணை பார்க்கிறான். அஃதாவது யாரால் ஊரிலிருந்து பயந்து ஓடி வந்தானோ
அவள். அவள் பெயர் செண்பகம்.
அப்போது
அவனுக்கு ஒரு பிரச்சினை வருகிறது. மூன்று இடத்திலும் ஒவ்வொரு பெண் கதாபாத்திரம் வருகிறார்கள்.
முதலில் ஒரு சேட். இந்த கதாபாத்திரம் அவனுக்கு அம்மாவின் நினைவையே கொடுக்கிறது. அடுத்து
கோமதி. வயதில் மூத்தவள். அவனுக்கோ அவள் மீது காதல் வருகிறது. இவ்விரண்டிற்கும் முன்
அவன் தன் சொந்த ஊரில் இருந்த போது சுசீலா. அவளுடன் உடலுறவு வைத்து குழந்தையே பிறந்துவிட்டது.
ஆனால் அவளுடைய அக்குழந்தையின் அப்பா யார் என்பது அவளுக்கு மட்டுமே வெளிச்சமானது. அவனுக்கு
கோமதியை மணம் செய்ய ஆசை. கோமதியோ செண்பகம் இல்லறத்தில் சந்தோஷமாக இல்லை அதனால் அவளை
மணம் செய்து கொள் என்கிறாள். இதற்கான விடை மற்றும் அங்கங்கு விட்டு வந்த பழைய பாக்கிகள்
என்ன ஆகிறது என சகல கேள்விகளுக்கும் மிக அழகாக பதில் சொல்கிறது மதயானை.
எழுதப்பட்ட
முறை மிக அருமையாக இருக்கிறது. ஒரு கதை எங்கு ஆரம்பிக்கிறதோ அதைத் தொடர்பு கொண்டு முடிவுறுதல்
இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அதில் இடைப்பட்ட தூரங்களை பல சம்பவங்களால் திரித்துவிட்டு
ஒன்றை மறக்கச் செய்து அடுத்த சம்பவங்களை நிகழ்வித்து எழுத்துகளில் நெகிழ்வூட்டுகிறார்.
போர்கீஸிய
முறையைப் பற்றி நேனோ சிறுகதை சார்ந்து எழுதிய பத்தியில் சொல்லியிருந்தேன். அந்த முறைப்படி
ஒரு வார்த்தைக்கு பின் ஒரு கதையோ அல்லது பெரும் சாராம்சமோ மறைந்திருக்க வேண்டும். இங்கு
நாஞ்சில் நாடன் சில விஷயங்களை நாவலின் போக்கில் நீட்டி முழக்க்கி விளக்குகிறார். அதை
ஒரு வார்த்தையால் முடிக்கிறார். அதே இந்த விளக்கங்கள் தேவைப்படும் இடங்களில் அந்த வார்த்தையை
குறியீடாக மாற்றுகிறார். இந்த யுத்தி அநேக பக்கங்களில் என்னைக் கவர்ந்தது.(குறிப்பாக
நாவலின் பிற்பாதி. குறித்து வைத்தேன். காணவில்லை!)
அவரின்
எழுத்துகளும் சீராக ஒரே மனநிலையில் இல்லை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சொல்லிக் கொண்டிருக்கும்
போது அந்த இடத்தில் இருக்கும் உணர்வின் உச்சத்திற்கு செல்கிறார். அவரின் எழுத்தே மாறுகிறது.
இரண்டு இடங்களைச் சொல்கிறேன் பாருங்கள். கீழே நாவலில் என்னை பாதித்த வரிகளையும்ம் பகிர்வேன்.
அந்த எழுத்திற்கும் இதற்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தினை கவனியுங்கள். நாஞ்சில்
நாடனின் பித்தனிலையை உணர்ந்து கொள்ள முடியும்
“அசம்புச் சாலையின் விளக்கில் இருந்த வெண்தாமரைக்
குண்டு. அகன்று பரந்திருந்த தாமரை இலைகளின் மேல் பொத்தினாற்போல் வந்திறங்கிய நாரைகள்.
கால்பாவியும் பாவாமலும் நின்று கொண்டு, மீனைக் கொத்திக் கொண்டு, கடல் மடக்கி பறந்த
போன வேகம். நாரையின் கனத்தில் தாமரை இலையின் மேல் ஏறிய தண்ணீர் பாதரசமாய் உருண்டுருண்டு
அசைந்த வண்ணம். . .“
“வானவெளியில் சுயஈர்ப்பிலிருந்து
கழன்று, பிற ஈர்ப்புகளில் உட்புக மறுத்து, எந்த விதியின்
இயக்கத்துக்கும் ஆட்பட மறுத்த கோளத்தின் சுழற்சி போல் ஆகிவிட்டது வாழ்க்கை”
“இருபத்தியிரண்டு
வயதில் திருமணம் ஆகி, ஆணோ பெண்ணோ இருபத்தி மூன்றாம் வயதில் பெற்று,
பல்கிப் பெருகி, பரிதவித்துப் பாழாகி, மண்ணில் புதைந்து, புல்லாகி, பூண்டாகிப்
பல் விருகமாகி, பாம்பாய், பறவையாய்,
மனிதராய் மீண்டும் பிறந்து, இறந்து. . .”
இப்படி
நாவலை புகழ்ந்து என் மனம் சொன்னாலும் இந்நாவலைச் சார்ந்து பல கேள்விகள் மனதினுள் எழுகிறது.
ஒரு மனிதன் செல்லும் வழியெங்கும் தீங்குகள் மட்டுமே சூழுமா ? ஒரு இடத்தில் கெட்டதுகளைச்
செய்ய ஆரம்பித்தால் அவனின் பயணங்கள் முழுமைக்கும் அதன் தாக்கங்கள் தொடர்ந்து கொண்டே
இருக்க்குமா ? அனைத்துமே தற்செயல்களாக நாஞ்சில் நாடன் காட்டியுள்ளார். தற்செயல்களாக
கெட்டதுகள் மட்டுமே நடக்குமா ?
நாவல்
முடிந்தும் இக்கேள்விகள் எட்டுத் திக்குக்களில் எத்திக்கு செல்வது என யோசிக்க்க வைக்கிறது.
நாஞ்சில் நாடனுக்கே பதில் வெளிச்சம்.
இந்நாவலில்
என்னைக் கவர்ந்த வரிகளைச் சொல்லி முடிக்கிறேன்
சூரியன் தென்படாவிட்டால்
கிழக்கென்றும் மேற்கென்றும் தெரியாது. திசைகள் அற்ற உலகம். திசைகள் தெரிந்து தான் என்ன
செய்ய ? வாழ்க்கை என்பது திசைகளற்று சுழலும் கோளம் தான் போலும். சுழற்சி
முக்கியம். நின்றுவிட்டால் 'தொப்'பென வீழ்ந்துவிடும்
துவேஷம், துரோகம், துயரம் போல் கவலைகளும் செழித்துப் பயிராகும்
பூமி. நாற்றாக நடுவாரும் இல்லை. களையாக பறிப்பாரும் இல்லை
முன்னும் போகவிடாத, பின்னும் போகவிடாத, நின்ற பாவனையில் ஓடிக் கொண்டிருப்பதாகக்
கற்பனை செய்து கொள்ளும் சுய நிந்திப்புக்கு உள்ளான வாழ்க்கை
தேடிப் பார்த்தால்
அவனவன் உள்ளே ஒரு அநாதை ஒளிந்திருப்பான்
சமாதி என்பது கூட, சாவு வராத அவஸ்தையில், குழியில் இறக்கி, மண் போட்டு மூடி விடுவதாக இருக்குமோ என்னவோ ?
எந்தக் குற்றமும்
அடுத்தவர் தெரிந்து கொள்ளாதவரையிலும் குற்றமா என்ன ?
துன்பப் படுவது தான்
வாழ்க்கையின் சத்தும் சாரமும் என்றால் எதற்கு இந்த வாழ்க்கை ? எந்தக் கானல் நீரைத் தேடி, நாத்தொங்க, மூச்சிரைக்க, கண்கள் மயங்க, அடிவயிறு
எக்க இந்த ஓட்டம் ?
இந்திய சினிமாப்
பாடல்களின் உத்தமப் பொதுக்காரணி காது கிழிப்புத் தான்
ரகசியமாய்க் குற்றம்
செய்வதைப் பற்றி மனிதனுக்குப் பெரிய மனசாட்சிக் குத்தல்கள் இல்லை. காரியம் எல்லாம்
அடுத்தவன் தெரிந்து கொள்வதில் தான்
காசு பெரும் மனத்திராணி.
காசுடையவன் கற்புநிலை கொண்ட அறம்சார் பத்தினி. காசற்றவன் விபச்சாரி போல. காவலர் கூட
வன்புணர்ச்சிக்கு உரிமை பெற்றவர் போல நடந்து கொள்வார்கள்
எல்லாத் தர்ம பரிபாலனத்துக்கும்
காரணம் சுயநலம் தான்
குற்றங்கள் துரத்தும்
வாழ்க்கை. குற்றமென்றும் அல்லவென்றும் தீர்மானிப்பது யார்
? வென்றவன் எழுதுகிறான் நியாயத்தின் அத்தியாயங்களை. தோற்றவன் என்பவன் தூர் வாங்காத கிணறு; அழுகி நாறும் தண்ணீர்; பெற்று வீசிய கள்ளக்
குழந்தைகளின் சவங்களைக் கோரப் பற்களில் கடித்துச் சிரிக்க்கும் இசக்கி வாழும் பாழ்க்குகை
எல்லோரும் எல்லாமும்
செய்து கொண்டிருக்கிறார்கள். எந்தத் தனியனும் கூர்மையான அர்தத்தில் சமூகத்தின்
எதிரி. சமூகம் என்பதும் பொதுவான அர்த்தத்தில் தனியனுக்கு எதிரி.
எல்லாம் வெளிப்புனிதம் -
தத்துவப் பன்னீர் தெளித்து, சமயப் புகை
போட்டு, அறநூல் சார்ந்து பூசினாலும். . .
வீடென்பது கடுமையானதோர்
ஒழுக்கத்தின் பாற்பட்டதுதான்
மாநகரம் எல்லோரையும்
வாங்கி உள்ளே போட்டுக் கொள்வது, என்றாலும் தீராப் பசி கொண்டது
பின் குறிப்பு : நான் எழுதிய கும்பமுனிக் கதைகள் அவரின் சூடிய பூ சூடற்க நூலினைப் பற்றியது. அதிலிருக்கும் ஏகப்பட்ட தத்துவங்கள் இதிலும் இடம்பெறுகிறது.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக