சிதம்பர ரகசியம்

நேற்று நீயா நானா கண்டு கொஞ்சம் கோபமே வந்தது.

ஆண்களும் பெண்களும் வண்டி ஓட்டுவதை பற்றி பிதற்றிக் கொண்டிருந்தனர். வேறு எப்படிச் சொல்வது எனத் தெரியவில்லை. ஆண்களின் பக்கம் ஒரு குற்றச்சாட்டு வருகிறதெனில் பெண்கள் பக்கம் மற்றுமொரு குற்றச்சாட்டு. 

பெண்கள் வாகனம் ஓட்டுவதில் செய்யும் தவறுகள் என ஆண்கள் சொன்னால் அதை அவர்கள் ஏதோ ஒன்றின் அடிப்படையில் தான் சொல்கிறார்கள் என அர்த்தம் கொள்ளாமல் பெண்கள் என்பதாலேயே சாடுகிறார் என விஷயத்தினை வியர்த்தமாக்குகிறார்கள். இந்தப் பக்கம் மட்டும் சோடையா என்ன ? பெண்கள் வண்டி ஓட்டும் போது அவர்களை குறுகுறுவென பார்ப்பது எங்களுக்கு நடுக்கத்தை கொடுக்கிறது என தன் கூற்றினை ஒருவர் முன்வைக்கிறார். ஆண்களில் ஒரு பிரதிநிதி(பேசுபவன் அக்கருத்திற்கு பிரதிநிதி தானே ?) அப்படிப் பாப்பது என்னவோ பிறப்புரிமைப் போல குரல் கொடுக்கிறான்.

சரி தொலையட்டும் சாப்பிடும் வரை பார்த்தாக வேண்டும் என தொடர்ந்து பார்த்தேன். ஒரு குறிப்பிட்ட ஜோடி. அவர்கள் நண்பர்கள் என்று சொன்னர்கள். அவளுக்கு வண்டி ஓட்ட ஆசை. அவனுக்கு அவளைப் பின்னால் வைத்து வண்டி ஓட்ட ஆசை. இளமை வண்டி ஓட்டுகிறது என விட்டுவிடலாம். அதற்கு காரணம் கேட்டபோது ஒன்றினைச் சொன்னான். அவள் என்னைச் சார்ந்து இருப்பதே இந்த வண்டி விஷயத்தில் தான் அதுவும் தன்வசம் கொண்டால் நான் என்ன செய்வது ? இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லையே. மேலும் அப்பா அம்மா காலத்துலருந்து அம்மா அப்பா பின்னாடி தான உட்கார்ந்துட்டு வர்றாங்க என்று முடித்தான். அடங் கொண்ணியான் எங்கிருந்து இந்த மாதிரி ஜோடிய புடிச்சிகிட்டு வர்றானுங்கன்னே தெரியல.

நம் அம்மா காலத்தில் எல்லாம் வண்டிகள் எட்டாக் கனி. அவ்வளவு சுதந்திரமும் தரப்படவில்லை. இப்போது கணவனின் பின்னால் சுதந்திரமாக அமர முடிகிறதே என்பதை எப்படி அனுபவிக்கிறார்கள் என்று ஆய்வே செய்யலாம். சிலருக்கு உச்சபட்ச சந்தோஷம். சிலருக்கு அடிமட்ட பயம்.

அடிமட்ட பயத்தினை நான் நேரில் என் அம்மாவின் உருவத்தில் கண்டிருக்கிறேன். அம்மாவினை முன்மாதிரியாக வைத்து நான் படைத்த பாத்திரம் தான் பார்த்தி மாமி, பிருஹன்னளை நாவலில். பார்த்தி மாமி பாத்திரமும் சரி சுலோக்‌ஷனா மாமி என்றொரு பாத்திரமும் சரி இரண்டுமே இந்த நவீன யுகத்தின் வண்டிகளைப் பற்றிப் பேசுகிறது.

என்னுடைய நிலைக்கு வருவோம் என சாப்பிட்டுக் கொண்டே யோசித்தேன். படு மோசமான நிலை. எனக்கு இன்னமும் வண்டி ஓட்டத் தெரியாது. பைக்குகள் எனில் சுத்த மோசம். கடினப்பட்டு நண்பனின் வண்டியில் கற்றுக் கொண்டேன். என்னைப் பார்த்து நன்றாக ஓட்டுகிறாய் எனவும் சொன்னான். சொன்ன நேரமோ என்னவோ ஓட்டும் போது முன்னே ஒரு டெம்போ சென்று கொண்டிருந்தது. நான் எங்கோ நினைப்பினை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருந்தேன். பின்னால் அமர்ந்திருந்த நண்பன் பிரேக்கினைப் போடு என்றான். ஸ்கூட்டி போன்ற ஸ்கூட்டரின் நினைப்பில் கைவசம் இருக்கும் க்ளட்சினைப் பிடித்தேன். அவன் கால்லடா என கத்தினான். கால் மாற்றி கியரினைப் போட்டுக் கொண்டிருந்தேன். அடுத்து இடி தான். நல்ல வேளை அப்போது மெதுவாகச் சென்று கொண்டிருந்தேன். வந்த அடி வண்டியுடன் போனது. நண்பனால் சொல்லித் தர தான் முடியும். மறதியோ ஒட்டுண்ணியைப் போல இருக்கிறது. அதற்கு அவன் என்ன செய்வான்!

கடைசியாக பைக் ஓட்டியது நேற்று முன் தினம் தான். நண்பன் ஒருவனுடன் அவனுக்கு ஏதோ சான்றிதழ்கள் வாங்க வேண்டுமென சேலம் இரும்பாலைக்கு சென்றேன். அங்கே பிரதான வாயிலிலிருந்து உள்ளே செல்ல மூன்று கி.மீ அளவு வரும். அதுவரை மட்டும் ஆளில்லா ரோட்டில் அடிக்கடி வண்டியை நின்று போக நின்று போக ஓட்டி மன நிம்மதி கொண்டேன்.

ஸ்கூட்டி தான் நன்றாக ஓட்டுவேணா எனப் பார்த்தால் உள்ளூர்க் கிழவிகள் பலரிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்!!!!

இப்போதைக்கு எனக்கு வண்டியெல்லாம் வேண்டாம் என வீட்டில் சொல்லியாயிற்று. மனதில் கைவசம் காசிருந்தால் அடுத்த நூலைப் பற்றி சிந்திக்கலாம் என சொல்லிக் கொண்டேன். இந்தப் பேச்சை எடுத்தாலும் சிலரின் கேள்வி எனக்குள் தோன்றுகிறது. ஏன் இப்புடித் துள்றீங்க ? இன்னமும் காலம் இருக்குல்ல ? அவர்களுக்கு வெளிவராத என் சிறுகதையிலிருந்து ஒரு பகுதி

இதே கேள்வியினை கதாபாத்திரத்திடம் ஒருவன் கேட்க அவன் சொல்லும் பதில்
"என்னை மரண பயம் துரத்திக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை நான் இறந்துவிட்டால் இந்த உலகம் என்னை மறந்துவிடும் அதனால் ஆதாரங்களை எனக்குள்ளிருந்து நானே, அதையும் இப்போதே சேமித்துக் கொண்டிருக்கிறேன்"

பகிரத் தோன்றியது. பத்தி முடிந்தது.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக