மழையுடனான சின்ன சம்போகம்

மழையினைத் தாண்டிய ஒரு போக(தை)ப் பொருள் இவ்வுலகில் எதுவும் இருக்க முடியாது.

இந்த வார்த்தையினை உபயோகிப்பதற்கு கூட சின்ன காரணம் இருக்கிறது. மழை பிடிக்கிறது என சொல்பவர்கள் அனைவரும் ஒரு தற்காலிக சந்தோஷ விரும்பிகளாகவே இருக்கின்றனர். ஒரு முறை ஃபேஸ்புக்கில் அராத்து என்பவரின் பதிவில் ஒரு வரியினை வாசித்த ஞாபகம் - 'மழை எனக்கு ரொம்ப பிடிக்கும் என சொல்பவர்கள் யாரும் சிரபுஞ்சி செல்வதில்லை'

இது தான் யதார்த்த சந்தோஷம். தேடலற்ற மனிதர்களாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்த மனிதர்களின் நிலையினை கொண்ட இந்த கட்டுரையினை நான் எழுதவில்லை. நான் மழை விரும்பி இல்லை. மழையினை நான் ரசிப்பதே ஒரு விபத்து தரும் இன்பம். விபத்து எப்போது நடந்தால் உலகம் ஸ்தம்பிக்கும் - எதோ ஒரு விஷயத்தில்.

இந்த மழையும் நம் உணர்வுகளை சார்ந்தே இருக்கிறது. மழையினை ரசிப்பவனாக இருப்பினும் அவனுக்கு அவசரம் எனும் பட்சத்தில் மழை வந்தால் மழையினை வையவே செய்கிறான். இந்த மழையோ யாரின் அனுமதியினையும் கேட்காமல் ஒவ்வொருவரின் உணர்வுக்கேற்றவாரு தன் உருவத்தினை மாற்றிக் கொள்கிறது. சிலரை சந்தோஷம் கொள்ள செய்கிறது சிலருக்கு அருவருப்பினை அளிக்கிறது. சிலருக்கு தேவை. சிலருக்கு இம்சை. மழைக்கோ இருத்தல்(பொழிதல்) மட்டுமே.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கல்லூரி முடிந்தது. அடுத்த ஒருமாதம் விடுமுறை. மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். என்னிடம் வந்து யாராவது நீ எழுத்தாளனாக இருக்க ஆசைப்படுகிறாயா அல்லாது ப்ரமோட்டராக இருக்க ஆசைப்படுகிறாயா என்றால் என் பதில் இரண்டாவதாகவே இருக்கும். நான் வாசிக்கும் அனைத்து நூலினையும் பற்றிய எனது பார்வையினை எழுத ஆசைப்படுகிறேன். இது சுயதம்பட்டம் அன்று. வாசிக்கும் உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை என் பர்வையிலிருந்து பலருக்கு சொல்ல விரும்புகிறேன். சிலருக்கு ஒரு புதிய இலக்கியத்தினையாவது என்னால் அறிமுகப்படுத்த முடியும் என ஆழமான நம்பிக்கை இருக்கிறது. அது நாளையிலிருந்து நடக்கவிருக்கிறது.

கல்லூரி முடிந்தவுடன் சேலம் பேருந்தில் ஏறினேன். எப்போதும் எனக்கு பயணங்கள் இன்றுபோல் மிக இனிமையாக அமைந்ததே இல்லை. காரணமறியாமல் ஒரு உச்சபட்ச சந்தோஷத்தில் திளைத்துக் கொண்டிருந்தேன். எனக்குள் இருந்த அந்த சந்தோஷமான உலகம் என் கண்களுக்கே கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் ஜன்னலோர சீட்டும் கிடைத்தது. ஒவ்வொரு பேருந்திலும் அனைவருக்கும் இருக்கும் சின்ன ஆசை இது. அங்கு என்ன இருக்கிறது என யாராலும் யோசிக்க முடியாது. ஆனால் அதற்கு அலையும் மனம் ஒரு அலாதியானது.

பேருந்து கிளம்பியது. காதுகளில் குடிகொண்ட இசை. என்ன இசை யார் பாடியது எந்தப்படம் எந்த மொழி எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் இசை மட்டும் எனக்குள் பாய்ந்து கொண்டிருந்தது. கோவையினை தாண்டும் வரை கண்கள் ஜன்னலுக்கு வெளியே எதனையோ தேடிக் கொண்டிருக்கும் போது கைகள் தோழியுடன் சாட்டில் இருந்தது. அப்படியே லேசாக கண்ணயர்ந்தேன். சிறிது நேரத்திலேயே முழிப்பு வந்தது. அவனாசியினை கடந்து இருந்தேன்.

ஜன்னலுக்கு வெளியே வெகு தூரத்தில் ஒரு மலை. தூரத்திலிருந்து பார்க்க கூர் முனையினை கொண்டிருந்தது. அதற்குமேல் இருந்து பேருந்தில் சென்று இருக்கும் எனக்கு மேல் வரை கருமேகங்கள். அந்த மலையினை பார்க்கும் போது இது கனவா எனவும் சந்தேகம் வந்தது.

லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் படம் பார்த்திருப்பீர்கள். அதில் மோதிரத்தினை மோர்டார் என்னும் எரிமலையில் போட ஹீரோ மலை உச்சியில் ஏறிக் கொண்டிருப்பான். அப்போது அந்த மலையில் மேலே நெருப்புகளே மேகமாய் இருக்கும். அதே போல் தான் இங்கும் இருந்தது கருமேகங்கள். அங்கங்கே மேகங்கள் கழன்று விழுந்தது போல தோற்றங்களும் தென்பட்டது. வெகு நேரங்களுக்கு, அம்மலை எனைத் தாண்டிப் போகும் வரை அதனையே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு மட்டும் அந்தரங்கமாக கவிதைகளை சொல்லிக் கொண்டிருந்தது.

மின்னல். இடி. லேசான தூரல். எனக்கு முன்னிருந்த சீட்டுக்காரர்கள் டக் டக்கென ஜன்னலை மூட ஆரம்பித்திருந்தனர். எனக்கு ஏன் என தெரியவில்லை. சின்ன தூறலுக்கு ஏன் இப்படி அடைக்கிறார்கள் என ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பேருந்தின் வேகத்தினை பொறுத்து ஒரு வளைவிற்கு அப்பால் மழை கொட்டிக் கொண்டிருந்தது. 

என்ன ஆகும் பார்க்கலாம் என அப்படியே அமர்ந்திருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என்னை அந்த மழைத் துளிகள் நனைக்க ஆரம்பித்தது. முழங்கை முட்டியினை ஜன்னல் கம்பியின் மேலே வைத்து கண்களை கூர்மையாக்கி வரும் சாலையினை பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் அணிந்திருந்த கண்ணாடியினை கழற்றினேன். அனைத்தும் மிகத் தூய்மையாக தெரிந்தது.

மழையினில் தெரிந்த புனிதம்.

முழுக்கை சட்டையினை அணிந்து கொண்டிருந்தேன். கைகள் மடிக்கப்பட்டு இருந்தது. அதனை கவனித்த போது ஒவ்வொரு சொட்டுகளும் அதனுள்ளே மூழ்கிக் கொண்டிருந்தது.

மழையின் வேகம் அதிகமானதால் படிகளின் மேலே இருக்கும் ஷட்டரினையும் எடுத்துவிட்டார்கள். முழுக்க அடைக்கப்பட்ட பேருந்தில் என்னுடைய ஜன்னல் மட்டும் திறந்திருந்தது. கால் பாதங்களுக்கு மட்டும் ஜில்லென காற்று வர ஆரம்பித்தது.

அப்படியே கால்களிலிருந்து மேலே கொஞ்சம் கொஞ்சமாக அதன் தாக்கம் வர ஆரம்பித்தது. கால் மயிர்கள் கூச்செறிந்து எழுந்து நின்றது. ஒருக்கணம் கண்களை என்னையறியாமல் மூடினேன். ஏதோ ஒரு மின்னல் கீற்று கட்டமைக்கப்பட்ட மதிப்பீடுகளால் நிறைந்த மூளைக்குள் பாய என் மடியினை பார்த்தேன். முப்பத்தி மூவாயிரம் ரூபாய் மதிப்புள்ள எனது டெல் லாப்டாப்பும் எனது சம்போகத்தினை பார்த்து கெக்கலியிட்டுக் கொண்டிருந்தது.

ஜன்னல் மூடப்பட்டது. கால்கள் மட்டும் அனுபவித்துக் கொண்டிருந்தது மழையினால் அனுப்பப்பட்ட குளிர் காற்றினை. கண்ணாடிகளுக்கு அப்பால் மழை பொழிந்து கொண்டிருந்தது.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அன்று காலையில் கல்லூரிக்கு சென்றவுடன் என் தோழி என்னை பார்த்து - என்ன இன்னிக்கு ரொம்ப அழகா இருக்க ? என கன்னத்தில் குழி விழச் சொன்னாள். அதற்கும் மேலே சொன்ன சந்தோஷத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Nattu said...

romba alaga eldhirukanga.

Post a comment

கருத்திடுக