குரு பெயர்ச்சி!!!

நேற்று அம்மா என்னை அழைக்கும் போது சொன்ன விஷயம் உனக்கு நல்ல காலம் பொறந்திருச்சி என. ஏன் எனக் கேட்டேன். அம்மா சொன்ன விஷயம் குரு உன் ராசியான மிதுனத்திற்கு பெயர்ந்திருக்கிறது என. ஜோசியங்களில் அம்மாவும் அப்பாவும் கில்லாடிகள். எனக்கு பார்க்க மாட்டார்கள். ஏன் எனக் கேட்டால் சொந்த மகனுக்கு பார்த்தால் பலிக்காதாம்! இந்த விஷயம் தொலைக்காட்சியில் யாரோ ஒரு ஜோசிய சிகாமணியின் சித்து விளையாட்டு!

இதனை அம்மா சொன்னவுடன் அப்படியெனில் என்ன என கேட்டேன். செல்வம் கொட்டோ கொட்டென கொட்டும் என சொன்னார். அப்படியே முகம் சுரிங்கியது. அப்படி நடந்தால் மட்டும் எவ்வளவு நன்றாக இருக்கும் ?

எழுதுவதை காட்டிலும் வாசிப்பதற்கு செலவு செய்ய ஆர்வமாக உள்ளேன். பட்டியலை நீண்டுவிடாமல் அதனை என் கட்டுக்குள் வைக்க நினைக்கிறேன். இலக்கியமோ பரந்து விரிந்த ஒன்று. கட்டுக்குள் எப்போதும் அடங்காது. நாம் இலக்கியவாதிகள் என நினைப்பவர்கள் எப்போதும் இலக்கியங்களின் ஒரு பகுதியே. அவர்களைத் தாண்டி எத்தனையோ பேர் இலக்கியங்களில் சமகாலத்தில் வரப்போகும் இலக்கியவாதிகள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சார்ந்து இருக்கும் தேடல் அதிகம் பேரிடம் இருப்பதில்லை. இதில் நானும் அடங்கும்.

நான் வாசிக்க வேண்டும் என நினைப்பதெல்லாம் இந்த உலகம் பெரிதாக கருதும் மறைந்த இலக்கியவாதிகளையே. சிலர் சமகாலத்திலும் இருக்கிறார்கள். இவர்களை மட்டுமே வாசிக்கிறோமே இது சரியா ? சமகாலத்துவ எழுத்தாளனாக இப்போது என் வசம் ஒரு தகுதி இருந்தும் சமகாலத்தில் நான் ஞானசூன்யனாக மட்டுமே இருக்கிறேன்.

இந்த சுய சிந்தனை வந்த போது தான் நண்பர் ஒருவர் என்னை அழைத்தார். சமீப காலமாக இவருக்கும் எனக்கும் நட்பு தொடங்கியிருக்கிறது. தொழில் ரீதியான நட்பு. இதில் எழுதுவது வாசிப்பது இரண்டும் அடங்கும். அவர் என்னிடம் சொன்ன விஷயங்கள் அப்படியே ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் உலகத்தில், தமிழ் உட்பட எழுதப்பட்ட புதினங்கள் தான் இப்போது வெவ்வேறு எழுத்தாளர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. கரு ஸ்தூலமாக காலத்தின் முன்னால் நின்றுவிட்டது. இதனை மௌனி முன்னமே சொல்லிவிட்டார் - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம் ? இதைத் தாண்டி என்ன இருக்கிறது சொல்வதற்கு. இலக்கியத்திற்கு இலக்கிய ரீதியான ஒரு பதில்.

இந்த நிலையில் தான் நாவல் வெளியீட்டின் போது இரா.முருகவேள் என் நாவல் சார்ந்து சொன்ன விஷயங்களை பார்க்கிறேன். அவர் என் நாவல் ஜேம்ஸ் ஜாய்ஸின் நாவலினை போலவே உள்ளது என்றார். அந்த நேரத்தில் எனக்கு அவர் யார் என்றே தெரியாது. பார்த்தால் நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு இலக்கியவாதி.

இப்படித் தான் ஒவ்வொரு இலக்கியமும் உலகில் அரங்கேறுகிறது. இதில் எனக்கிருக்கும் தலையாய கடமை சமகாலத்துடன் நான் ஒன்றுவது. அதற்கு என்ன வழி என யோசித்துக் கொண்டிருந்தேன். அம்மா குருவினை பற்றி சொல்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் கோவையில் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை நிகழும் இலக்கியச் சந்திப்பிற்கு சென்றேன்.

120 ரூபாய் என சில மாதங்களுக்கு முன் நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். என் வாழ்வில், குறிப்பாக இந்த கல்லூரி வாழ்வில் சினிமாவிற்கு தான் இந்த இழிநிலை என நினைத்தேன் இலக்கியத்திற்கு பெரிய கதி நேர்ந்தது.

இந்த மாதம் ஊரிலிருந்து கிளம்பும் போது அவசரத்தில் என் ஏ.டி.எம் கார்டினை வீட்டிலேயே விட்டு வந்துவிட்டேன். திரும்புவதற்கு கைவசம் சரியாக பணம் இருந்தது. இதில் எங்கே போய் இலக்கிய சந்திப்பில் கலந்து கொள்வது என தோழியிடம் கடன் வாங்க நினைத்தேன். அதற்குள் கல்லூரி சார்ந்து சில பணம் சென்று கைவசம் வெறும் 40 ரூபாய் தான் மிஞ்சியது. கடன் கேட்பது என முடிவாகிவிட்டது என 300 ஆக கேட்டேன்.

அவளும் கொடுத்தாள். ஊருக்கு செல்ல சில பணத்தினை ஒதுக்கிவிட்டு கொஞ்சம் பணத்தினை எடுத்துக் கொண்டு இலக்கிய சந்திப்பிற்கு சென்றேன். குறிப்பாக மதியம் சாப்பிட பணத்தினை மறவாமல் எடுத்துக் கொண்டு. அது தான் மிக முக்கியம். சாப்பிடாமல் எனக்கு இரவு தூக்கம் கெடுகிறது. 

இலக்கிய சந்திப்பு இனிமையாக முடிந்தது. அதனை தனிப்பதிவாக இடுகிறேன். அங்கு 'ஏழிலைக் கிழங்கின் மாமிசம்' என்னும் கவிதைத் தொகுப்பினை வாங்கினேன். திடிர் செலவால் கையில் குறைந்தது. பேருந்தில் ஏறினேன். விடுதி திரும்புவதற்கு.

பேருந்தில் பர்ஸினை திறந்தால் மீண்டும் நாற்பது ரூபாய்! யோசித்துக் கொண்டே டிக்கெட்டினை எடுத்தேன். பயணம் அப்படியே தொடர்ந்தது. இறங்கும் போது இருபது ரூபாய் இருந்தது. இதில் ஒரு ஜூஸினை குடித்துவிட்டு நடக்கலாம் என விடுதிக்கு நடந்தேன்.

அதிர்ஷ்டவசமாக ஒருவன் அவனின் காசில் என்னை ஆட்டோவில் அழைத்து சென்றான். பசி வயிற்றினை கிள்ளியது. இறங்கிய உடனேயே வேறு ஒருவரின் கப்பினை வாங்கிக் கொண்டு இரண்டு டம்ளர் பாலினை மெஸ்ஸில் வாங்கினேன். பசி அடங்கவில்லை. மூன்றாவது முறை தரமாட்டான்! இரண்டாவதே தடை தான். நண்பனுக்கு என ஏமாற்றி தான் வாங்கினேன்!

பேசாமல் அறைக்கு சென்று படுத்துவிடலாம். தூக்கத்தில் பசி மறந்து போகும் என கற்பிதத்தினை வளர்த்துக் கொண்டு அறைக்கு சென்றேன். சட்டையினை கழற்றினேன். கனமாக இருக்கிறதே என கையினை விட்டு துழாவினேன் சட்டைப்பையில் ஐம்பது ரூபாய்!!!

அலைபேசிக்கு ஒரு குறுந்தகவல். கண்கள் பசியிலும் களப்பின் மிரட்சியிலும் அலைபேசியினை பார்த்தது
உங்கள் ராசிக்கு குருபெயர்ச்சியினை அறிந்து கொள்ள வேண்டுமா ? (ஆங்கிலத்தில்)

குரு எப்படியோ பெயர்ந்திருக்கிறார்.

Share this:

CONVERSATION

2 கருத்திடுக. . .:

Post a Comment

கருத்திடுக