Memento - 2000


நோலனின் ஆராய்ச்சியில் அடுத்த படி தான் இப்படம். பார்வையாளனின் புரிதலுக்கு இப்படம் சற்று சவாலும் விடுகிறது. இந்தப்படம் இல்லை எந்த படத்தினையும் தமிழ் திரை உலகத்துடன் ஒப்பிடக்கூடாது என எண்ணம் கொண்டிருந்தேன். இப்படத்தில் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் இப்படம் தமிழிலும் இந்தியிலும் ஒரே இயக்குனரால் ஒரே பெயரில் தழுவி எடுக்கப்பட்டது(நோலனிடம் சொல்லியோ சொல்லாமலோ).

ஒரு படத்தினை தழுவி எடுக்கிறோம் எனில் மூல படத்தினை சிதைக்கின்ற உரிமை நம்மில் யாரிடமும் கிடையாது. இங்கோ சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறது. கதைக்கு பின் செல்வோம்.

நான்-லீனியர் தன்மையினை அதிகம் கதைக்குள் கொண்டு வர உதவுவது நான் என்னும் பாத்திரம் தான். இதனை அதிகம் இலக்கியங்களில் காண முடியும். அஃதாவது ஒரு கதையமைப்பில் பிரதானமாக இருக்கும் பாத்திரத்தின் பெயர் எதுவும் சொல்லாமலோ அல்லது சொல்லியோ அது கதையினை நகர்த்தி செல்வது போல செய்வது. இது மற்ற கதைகளில் இருக்காதா ? இருக்கிறது எப்படி எனில் ஒரு பாத்திரம் பேசும் வசனங்களை மேற்கோளிட்டு சொல்வது. நான் குறிப்பிடும்நானோகதையினை மூன்றாவது ஒருவனான பார்வையாளனிடம் சொல்வது.

இதனால் என்ன நடக்கும் ? நான் என்பதன் தொடர் ஆதிக்கத்தால் அந்த கதாபாத்திரமாகி அதன் அனுபவங்களை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பிப்போம். இதுவும் சில நேரங்களில் தான். வாசகனுக்கு கவிதையே பிடிக்காது அதே கதையினை சொல்லும் நானுக்கோ கவிதை அருவியாய் கொட்டுகிறது. அந்த நேரத்தில் நிச்சயம் இந்த நான் திறன் கோவிந்தா!

இந்த நான் என்னும் பாத்திரத்தினை உருவாக்க சில கோட்பாடுகள் இருக்கிறது. முக்கியமாக அது ஜனரஞ்சகமாக இருக்க வேண்டும். அனைவராலும் உணரக்கூடிய உணர்ச்சிகளை அந்த கதாபாத்திரம் கடத்தி செல்ல வேண்டும். அப்போது தான் பலதரப்பட்ட வாசகர்கள் அதனை உணர முடியும். மேலும் இந்த நான் என்பது ஒரு பொய்யான பிம்பம். கதையினை எழுதிய எழுத்தாளனின் திறனால் அது நமது சுயத்தினை தனதாக்கிக் கொள்கிறது. அப்படிப்பட்ட கதைகளில் நிச்சயம் இந்த பாத்திரம் பொய் என்பதற்கான சான்றுகள் இருக்கும். அதனை வாசகன் கண்டுபிடிக்கும் போது மட்டுமே அந்த சிறையிலிருந்து அல்லது அந்த புதிரிலிருந்து வெளிவர முடியும்.

இந்த நான் என்னும் தன்மையினை திரையில் கொணர முடியுமா ? இது கொஞ்சம் முரணான விஷயம் அல்லது கேள்வி. ஏனெனில் இலக்கியம் என்பது பிரதி. அதில் இருக்கும் கதாபாத்திரங்கள் கண்களுக்கு தெரியாமல் ஏதோ ஒரு நிலையில் உலவிக் கொண்டிருக்கிறது. அதே திரையெனில் அனைத்து கதாபாத்திரங்களும் கண்ணெதிரே இருக்கிறது. கண்முன்னே தெரியும் பாத்திரத்தினை எப்படி பார்வையாளன் தனதாக்கிக் கொள்ள முடியும் ?

சிந்தனைகளையும் யோசனைகளையும் மட்டுமே பார்வையாளன் தனதாக்கிக் கொள்ள முடியும். நான்-லீனியர் படங்களில் பார்வையாளனுக்கு கூடுதல் பளுவும் சேர்ந்துவிடுகிறது. ஒன்று கதைக்குள் கருசார் விஷயங்களை புலனாய்வது மற்றொன்று என்ன கதையென நாமே சித்தரிப்பது.

இந்த அனுமானங்கள் கூட நோலன் தன் படைப்புகளில் வைக்க வேண்டும் என நினைத்திருக்கலாம். படமும் அப்படி தான் இருக்கிறது. இரண்டு விதமான புதிர்களை உருவாக்க வேண்டும். அதற்கு காட்சியமைப்பு எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என அதிகம் இப்படத்தினில் உழைத்து இருக்கிறார்.

இப்படத்தினை பொருத்தவரை ஒன்றினை குறிப்பாக சொல்ல நினைக்கிறேன். ஃப்ளாஷ் பேக். இதனை அநேகம் படங்களில் நாம் பார்த்திருப்போம். அதில் நானறிந்த விஷயங்களை சொல்கிறேன். ஒரு வகை சீராக சென்று கொண்டிருக்கும் கதை போக்கில் சொல்லப்படாத கதைமாந்தர்களின் கடந்த காலத்தினை சொல்வது. இன்னுமொரு வகை யாதெனில் கதை தொடர்சியாக செல்கிறது. அந்த தொடர்ச்சியிலிருந்தே சில காட்சிகளினை எடுத்து ஃப்ளாஷ் பேக்காக காண்பிப்பர். இது பார்வையாளனின் முட்டாள் தனத்தினை காண்பிக்கும். இதற்கு நிச்சயம் இயக்குனரினை பாராட்டியே ஆக வேண்டும். இந்த இரண்டாவது முறையினை மீள்பார்வை பார்க்கும் பொழுது கூட அதே உணர்வினை அக்காட்சி அளித்தால் இயக்குனர் சூப்பர். இதனை நன்றாக நினைவில் கொள்ளுங்கள் இல்லையெனில் ஃப்ளாஷ் பேக் இந்த கட்டுரையில் வந்துவிடும்!


இந்த படத்தில் பிரதானமாக இருக்கும் விஷயம் மற்ற நோலன் படங்களில் இல்லை. இதனை சொல்வதற்கு முன் இக்கதையினை நான் சொல்லியே ஆக வேண்டும். லியானார்டோ என்பது கதாநாயகனின் பெயர். அவனுக்க்கு இருக்கும் வியாதி - Anterograde amnesia. இதன் விளைவுகள் அவனால் பத்து அல்லது பதினைந்து நிமிடங்களை தாண்டி எதனையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. ஒரு சம்பவம் அவன் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு பின் அவனுக்கு தற்காலிக நினைவுகளை சேகரித்து வைக்கும் திறன் போய்விட்டது. அந்த விபத்து யாதெனில் அவன் மனைவியினை ஒருவன் கற்பழித்து கொன்றுவிட்டான். அந்த ஒருவனின் பெயர் இவனுக்கு ஜான்.ஜி. அந்த ஒருவனை எப்படி பழிவாங்குகிறான் என்பதே கதை.

இப்போது தங்களுக்கு இதன் தமிழ் மொழியாக்கம் என்ன என அறிந்திருப்பீர்கள். சித்ரவதை என ஏன் குறிப்பிட்டிருந்தேன் என்பதையும் இந்த கட்டுரை முடியும் போது நிச்சயாம் அறிந்து கொள்வீர்கள்.

இந்த கதைக்கருவினை இப்படம் எப்படி சொல்கிறது அல்லது நோலன் எப்படி சொல்லியிருக்கிறார் என்பதில் தான் சில விஷயங்கள் அடங்கியிருக்கிறது. படத்தில் இரண்டு கதை இரண்டு விதமாக செல்கிறது. ஒன்று மேலே சொல்லப்பட்ட பழிவாங்கும் கதை. மற்றொன்று லியோனர்டோ தொலைபெசியில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறான். அங்கு அவனுடைய வேலை பார்க்கும் இடத்தில் நடந்த சில விஷயங்களை சொல்கிறான். குறிப்பாக சாமி ஜான்கின்ஸுடன் நடந்த உரையாடல்.

முதலில் பழிவாங்கும் பகுதியினை பார்ப்போம். இந்த பகுதி முழுக்க ரிவர்சில் செல்கிறது. முதல் காட்சி படத்தின்(கதைப்படி) கடைசியினை சொல்கிறது. அதற்கு அடுத்த காட்சி அதற்கு முந்தைய சம்பவத்தினை சொல்கிறது. இப்படி ஒவ்வொரு பகுதியும் அதன் நீட்சியினை தேடாமல் கடந்த காட்சிகளை நோக்கி நம்மை நகர்த்துகிறது. இந்த கடந்த கால தேடலில் துப்பறியும் சில விஷயங்களும் அடங்கியிருக்கிறது. அவனால் நினைவுகளை சேகரிக்க முடியாது என்பதால் சிலவற்றினை போட்டோக்களாலும் உடம்பில் பச்சை குத்தியும் தன் நினைவுகளை அவன் சேகரிக்கிறான். இப்படியே தான் படம் நினைவு துப்பறிதல் என செல்கிறது. இதனை தொடர்ந்து காட்டினால் பார்வையாளனுக்கு அலுப்புதட்டாதா ?

இன்னுமொரு கதை என சொல்லியிருந்தேன் அல்லவா அது முழுக்க கறுப்பு வெள்ளையில் நடக்கிறது. அதில் நாயகன் ஒரு பெண்ணிடம் பேசுகிறான். அவள் பெயர் சாமி ஜான்கின்ஸ். அந்த பெண்ணின் கணவருக்கு Anterograde amnesia என்னும் வியாதி. அந்த வியாதியினை டாக்டர் எப்படி அணுகுகிறார் என அற்புதமாக எடுத்திருக்கிறார். ஒரே ஒரு காட்சியினை சொல்கிறேன். அந்த கணவரின் முன் மூன்று பொருட்களை டாக்டர் வைக்கிறார். ஒன்று உருண்டை வடிவம் இன்னொன்று பெட்டி வடிவம் இன்னொன்று முக்கோண வடிவம். அந்த முக்கோண வடிவத்தின் அடியில் மின்சாரம் கொடுத்திருப்பர். மூன்றும் இரும்பு. அதில் டாக்டர் ஒவ்வொன்றாக சொல்ல அதனை அவர் எடுப்பார். முக்கோணத்தினை எடுக்கும் போது ஷாக் அடிக்கும். அப்போது இது ஒரு டெஸ்ட் என சொல்லுவார். மீண்டும் சிறிதும் மாற்றமின்றி அதனையே கேட்பார் அவரும் அதனையே மறுபடியும் செய்து ஷாக்கினை அனுபவிப்பார். சென்றமுறை அறிந்து கொண்டதை அவர் மறந்துவிட்டார். இதனை காட்சியிருக்கும் விதம் அருமை. முந்தைய கதையில் நாயகனுக்கு பத்து நிமிடங்களெனில் இவருக்கு இரண்டு!

இந்த ஒட்டு மொத்த கதையில் பிரதானமாக இருப்பது Anterograde amnesia என்னும் வியாதி. இரண்டாவது கதை உபகதை தான். அதனால் பத்து நிமிடமே பிரதான வியாதி நேரம். இதனை அழகுற கதையில் சொருக்கியிருக்கிறார். முதல் கதை கடைசியில் ஆரம்பித்து முதல் காட்சியினை நோக்கி செல்கிறது என சொல்லியிருந்தேன். அதில் ஒவ்வொரு காட்சியும் கதைக்குள் பத்து நிமிடத்திற்குள் நடப்பதினையே காண்பித்திருக்கிறார்.

அஃதாவது முதல் காட்சி பத்தோ பதினைந்து நிமிடமோ நீள்கிறது. அது பார்வையாளனுக்கு. கதைக்குள் அது அவனுடைய வியாதி நேரம். அந்த நேரம் முடியும் போது காட்சி ஏதோ சந்தேகத்தினை பார்வையாளனுக்குள் விதைத்துவிட்டு அறுபடுகிறது. அப்ப்போது கறுப்பு வெள்ளை காட்சி காண்பிக்கப்படுகிறது. இது பார்வையாளனை அழகுற குழப்புவதற்கான ஒரு முயற்சி. அதில் அவர் வெற்றியும் கண்டுவிட்டார் என்றே சொல்ல ஆசைப்படுகிறேன்.

இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் இந்த நிமிடங்களை பொருத்தே அமையபெற்றிருக்கிறது. ஒரு காட்சியினை நான் திருப்பி திருப்பி பார்த்து ரசித்தேன். அந்த காட்சியினை சொல்கிறேன். நடாலீ என்னும் பாத்திரம். அவள் கதையின் நாயகனுக்கு உதவுவது போல் வருகிறது. முக்கிய விஷயம் இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நாயகனை உபயோகப்படுத்த பார்க்கிறது.

அந்த காட்சிநடாலீ வீட்டினுள் கோபத்துடன் நுழைகிறாள். தன் கணவன் ஏதோ பிரச்சினையில் இருக்கிறான். அவனுக்கு பிரச்சினை விளைவிப்பவன் இவன் என ஒருவனை பற்றி சொல்கிறாள். அப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கிருக்கும் பேனா காகிதம் அனைத்தினையும் எடுத்து ஒளித்து வைக்கிறாள். மேலும் அந்த ஒருவனை போய் அடி என சொல்கிறாள். இவன் சிந்திக்க தொடங்கியவுடன் உன் மனைவிக்காக மட்டும் தான் பழிவாங்குவாயா என மனைவியினை அசிங்கம் அசிங்கமாக திட்டுகிறாள். கோபம் தலைக்கேறி அவளை அடித்துவிடுகிறான். அவள் சிரித்துக் கொண்டே உதட்டில் ஏற்பட்ட காயத்துடன் வெளியேறுகிறாள். இவன் உடனே பேனாவினை தேடுகிறான். எங்கும் இல்லை. அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான். எதையும் மறந்துவிடாதே என ஜபித்துக் கொண்டே. சரியாக சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அவள் வீட்டினுள் அழுது கொண்டே நுழைகிறாள். தன்னை அவன் அடித்துவிட்ட்டான் என சொல்கிறாள். இந்த அவன் யாரெனில் சற்று முன் தன் கணவனின் அவமானத்திற்குரியவன் என சொல்லப்பட்டவன். உடனே இவன் அவனை அடிக்க கிளம்புகிறான். இந்த கடைசி வரி சரியில்லை. கருத்துப்பிழை நிறந்து உள்ளது. எனக்கு சரியாக எழுத தெரியவில்லை என நினைக்கிறேன். ஆனால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் இதுவரை எழுதியிருப்பதிலேயே இருக்கிறது.

இக்கட்டுரையின் ஆரம்பத்தில் நான் என்னும் விஷயத்தினை சொல்லியிருந்தேன். அது இப்படத்தில் எப்படி இருக்கிறது எனப் பார்த்தால் முதல் பாதி கதையில் மட்டும் காண முடிகிறது. காரணம் கதை சொல்லி தான் நாயகன். மேலே சொல்லியிருப்பது போல் குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த நான் படத்தில் உபயோகம் செய்யப்பட்டுள்ளது.

நோலன் தன் பேட்டியில் சொல்லியிருக்கும் விஷயம் இந்தப்படம் நான்-லீனியரே கிடையாது என்பது. இந்த வாக்கியம் சற்று நுண்ணுணர்வு சார்ந்தது. எப்படியெனில் லீனியரான கதை எங்கும் அறுபடாமல் ரிவர்ஸ் ஆர்டரில் கொடுக்கப்பட்டுள்ளது. அது எப்படி நான்-லீனியராகும் ? மேலும் இரண்டாவது கதையும் முதல் கதையுடன் ஓரிடத்தில் இணைகிறது. இப்போது இந்த படத்தினையும் Following படத்தினையும் ஒப்பிட்டு பாருங்கள் அவர் சொல்ல வருவது புரியும். உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே இதனை உணர முடியும் என்பதால் தான் நானும் இதனை ஆரம்பத்தில் சொல்லவில்லை. எனக்கு இது நான்-லீனியரின் புது முயற்சி. ஏன் என்றால் அடைக்கப்பட்ட கதையினை தொடர்ச்சியற்று சில உட்கதைகளாலும் சொல்லப்பட்டதால். மேலும் ஏன் ஃப்ளாஷ் பேக்கினை பற்றி நான் சொல்ல வேண்டும் என சிந்திப்பீர்கள். அதற்கான பதில் ஏதோ ஒரு பத்தியில் இருக்கிறது(ஹி ஹி ஹி)!

நோலன் Following படத்தின் பேட்டியேலேயே சொல்லியிருந்தார். அஃதாவது அவரின் முக்கிய குறிக்கோள் முதல் முறை ஒரு பார்வையாளன் பார்க்கும் போது அது அவனுக்கு புரியக்கூடாது ஆனால் பிடித்திருக்க வேண்டும். புரியக்கூடாது எனில் கதை என்ன என்பதை மட்டுமே அவனால் புரிந்து கொள்ள முடியும் காட்சிகளை அல்ல. படம் முடிந்தவுடன் மீண்டும் இதனை பார்க்க வேண்டும் என்னும் எண்ணத்தினையே அப்படம் அவனுள் விதைக்க வேண்டும். இதனை செய்யக்கூடியது காட்சியமைப்பு மட்டுமே என்பது தான் அவர் தன் படைப்புகளில் முன்வைப்பது. இப்படம் அதனை அழகுற செய்கிறது. அதனை செய்யாமலும் நோலனின் படங்கள் இருக்கிறதோ ?

நோலனின் படைப்பினை சிலாகிக்கும் போது சாதாரணமாக இருந்தால் நிச்சயம் நன்றாக இருக்காது. அதனால் கடைசி கிக்
கதையின் நாயகன் படத்தின் ஆரம்ப காட்சியிலும் தன் மனைவியினை கொன்ற காரணத்தினை வைத்துக் கொண்டு ஒருவனை கொல்கிறான். இறுதி காட்சியிலும் அதே காரனத்தினை வைத்து வேறு ஒருவனை கொல்கிறான். அப்படியெனில் மனைவியினை கொன்றது யார் ?

குட்டி குறிப்பு : இது என் 150 வது கட்டுரை.

Share this:

CONVERSATION

1 கருத்திடுக. . .:

Kimupakkangal said...

இந்திரஜித் என்னும் நண்பருக்கு மிக்க நன்றி. நான் பெரும் பெரும் பிழையினை செய்துவிட்டேன். அவன் போனில் பேசுவது யாரென்றே தெரியாத ஒருவனிடம். அதில் தான் ஒரு பெண்ணிடம் உரையாடியதை சொல்கிறான். மேலும் அவள் சாமி ஜன்கின்ஸின் மனைவியே தவிர அவள் சாமிஜன்கின்ஸ் அல்ல. இந்த பிழையினை மன்னித்தருளவும்.

Post a comment

கருத்திடுக