Following - 1998
இப்படத்தினை பற்றி எப்போதோ நான் எழுதியிருக்கிறேன். ஆனால் இது என் மீள்பார்வையில் நான் உணர்ந்த விஷயங்கள். இதுவரை நோலனின் சிறந்த படமாக என் மனதில் இருப்பது இந்த படம் தான். இனி கட்டுரைக்குள் செல்வோம். . .
இது தான் நோலன் எடுத்த முதல் முழு நீள திரைப்படம். இப்படம் 1998 -இல் வெளியானது. படம்
ஒரு மணி நேரம் தான். கதாபாத்திரங்கள் அதிகம் இல்லை, லொகேஷன் அதிகம் இல்லை, பட்ஜட்டும் அதிகம் இல்லை. படம்
முழுக்க இருப்பது திகில் மட்டுமே.
இதனையே தான் சென்ற படத்திற்கும் சொல்லியிருந்தேன் ஏன சொல்லலாம். இப்படி குறிப்பிட்டு சொல்வதற்கு காரணமும் இருக்கிறது.
யாதெனில் குறுகிய குழுவுடன் சிறந்த கலைப்படைப்பினை தருவது. இது அனைவராலும் நிச்சயம் முடியாது. மேலும் திகில்
என்றவுடன் அனைவருக்கும் சீட் நுனியில் அமர வைக்கும் திகில் திரைப்படங்கள் தான் நினைவிற்கு
வரும். நான் சொல்வதோ அது இல்லை. திரையினை
அமைக்கும் இடத்தில் இருக்கும் திகில். புரிகிறதா ? சற்று குழப்பமாக இருப்பின் அதுவே எனக்கு தேவை. இப்போது
எனது பார்வைக்குள் செல்வோம்.
எப்போதும் போலவே இங்கும் ஒரு வாக்கியத்தினை இட்டே ஆக வேண்டும். அது
நோலனின் முதல் படத்தினை போலவே இல்லை. கடைசியாக வெளிவந்த நோலனின் படத்தில் எவ்வளவு
திகிலினை உணர முடியுமோ அதே திகிலினை இப்படத்திலும் நன்கு உணரலாம்.
படத்தின் கதை என்ன எனில் பில் என்னும் இளைஞன் ஏழ்மையானவன். அவன் எழுத்தாளனாக நினைப்பவன்.
தன் எழுத்திற்காக மக்களை பின் தொடர்ந்து சென்று அவர்களின் நடவடிக்கைகள், செல்லும்
இடங்கள் என அனைத்தினையும் கவனித்து தன் குறிப்புகளில் தட்டச்சு செய்து கொள்கிறான்.
அதே போல் ஒருவனை தொடர்ந்து செல்கிறான். அவனோ ஒரு திருடன். அப்படி தொடர்ந்து செல்லும்
போது சந்தர்ப்பவசமாக அவனுடன் சேர்ந்து கொள்கிறான். அப்போது அவனுக்கு நடக்கும்
சம்பவங்களே இந்த ஒரு மணி நேர படம். இதில் திகில் என்ன இருக்கிறது என்பது
இந்நேரத்திற்கு உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம். அந்த திகிலுக்கான காரணங்களை நான்
சொல்கிறேன்.
முழு படத்தினை பார்த்தால் மட்டுமே படத்தின் கதையினை புரிந்து கொள்ள முடியும்.
படம் மூன்று பேரினை சுற்றி நடக்கும் கதை. ஒன்று இளைஞன் பில். இரண்டு திருடன் காப்.
மூன்று ஒரு பெண் ப்ளாண்ட். ஆரம்பத்தில் இப்படத்தினை பார்க்க ஆரம்பித்த போது
ஒன்றுமே எனக்கு விளங்கவில்லை. ஐந்து நிமிடம் சீராக சென்று கொண்டிருக்கிறது எனில்
திடிரென திரை இருளாகி முந்தைய காட்சிக்கு சம்பந்தமே இல்லாத காட்சி ஒன்று
ஓடும். அதனை தொடரும் போது அதற்கு
சம்பந்தமே இல்லாத காட்சி திடிரென ஓட ஆரம்பிக்கும். இது எதற்கு என யோசிக்கும் நேரத்தில் சில இடங்களில் விடுபட்ட
இடத்திற்கே நோலன் கொண்டு வருகிறார்.
அதே சில இடங்களில் வேறு புது காட்சியினை திணிக்கிறார். இவையெல்லாம் எதற்கு எதற்கு
என யோசிப்பதற்குள் படம் முடிந்து விடுகிறது. அப்படி முடியும் போது
பார்ப்பவர்களுக்கு கதை என்ன என்பது தெரியும் ஆனால் காட்சிகளின் அமைப்பினை மீண்டும் பார்க்க தோன்றும்.
மொத்தத்தில் இது non-linear வகையறா
திரைப்படம். அது என்ன non-linear வகையறா ?
இது போன்ற படங்களை யதேச்சையாக பார்த்திருக்கிறேன். பெயர் எதுவும்
நினைவிற்கு வரமறுக்கிறது. ஆனால் அது போன்ற படங்களிலெல்லாம் அப்படிப்பட்ட ஓட்டம்
பாதியிலேயே அறுபட்டு நேர்கோட்டு கதைகளாக செல்ல ஆரம்பித்துவிடும். ஒரு படத்தினை தவிர.
அது ஜெர்மானிய திரைப்படம். பெயர்
RUN LOLA RUN. இப்படம் சற்று நான்
லீனியர் தன்மையினை திரைக்கதையில் கொண்டிருக்கிறது. அஃதாவது ஒரே சம்பவம் முப்பரிமாணங்களில் இப்படத்தில் காட்டப்படும். இதிலும் மூன்று இடங்களில் மட்டுமே நான் லீனியர் தன்மைகளினை இயக்குனர்
வைத்திருக்கிறார். அதே
இந்த கதையில் திரைக்கதையானது கலைத்து போடப்பட்டு கடைசிவரை நம்மை சிந்திக்கவிட்டு
கடைசியில் முடிவினையும் சொல்லாமல், சொல்லாமல் என்பது சரியா என
தெரியவில்லை ஆனால் முடிவிற்கான இடத்தினை நெருங்கும் போது end card போடப்படுகிறது. பல்ப் ஃபிக்ஷனும் இந்த படமும் எங்கு வித்தியாசப்படுகிறது என்பதனை நம்மால் இங்கு அறிந்து கொள்ளப்படும். நான் லீனியரின் முக்கிய விஷயம் சில காட்சிகளை அல்லது இரு காட்சிகளுக்கு இடையே இருக்கும் நீட்சிகளை மறைமுகமாக வைப்பது. அது இப்படத்தில் நன்கு கையாளபட்டுள்ளது.
இந்த சிந்தித்தல் கூட முரணான வார்த்தையே. ஏனெனில் ஒரு திரைப்படம் அது ஒரு கொலையினை பிரதானமாக
வைத்து நகரப்படும் படம் என்றே வைத்துக் கொள்வோம். அதில்
துப்பறியும் காட்சிகள் தொடர்ந்து நடக்கிறது எனில் பார்வையாளன் அந்த துப்பறிவாளனினை
போலவே தடயங்களை வைத்து சிந்திக்க தொடங்குவான். இங்கோ அந்த
தொடர்ச்சி இல்லை என்பதால் பார்வையாளன் ரசிக்கக் கூடிய புதைகுழியில் விழுகிறான்.
மொத்தத்தில் கதை சொல்லல் முறை அற்புதமாக இருந்தது.
இது போன்ற படங்கள் இது தான் எனக்கு முதல் முறை.
இந்த படத்தின் ஒட்டு மொத்த பட்ஜட் 6000 டாலர்கள்.
படம் 16mm திரையில் எடுக்கப்பட்ட கறுப்பு வெள்ளை திரைப்படம். 16mm திரையெனில் அது பொதுவாக திரையிடப்படுவதற்காக எடுப்பது அல்ல. திரை
அல்லாத கல்வி சார்ந்த விஷயங்களுக்கே இந்த திரையினை உபயோகப்படுத்துவார்கள். இந்த
படத்தினை எடுத்து முடிக்க நோலனுக்கு ஒரு வருடம் ஆனது. அந்த ஒரு வருடத்தில் படம்
எடுக்கப்பட்ட நாட்கள் வெறும் இருபத்தி இரண்டு நாட்களே. அவ்வப்போது சிறிது சிறிது எடுத்திருக்கின்றனர்.
ஏனெனில் நோலன் மற்றும் அதில் நடித்திருந்த அனைவரும் முழுநேர வேலைகளில்
இருந்தவர்கள். அதனால் வாரம் முழுக்க வேலைக்கு சென்று சனிக்கிழமைகளில் மட்டும்
படத்தினை எடுத்திருக்கின்றனர். மேலும் நடிகர்களுக்கான சம்பளத்தினையும் தன்
சம்பாத்தியத்திலிருந்தே நோலன் கொடுத்திருக்கிறார். தன்னிடம் பணம் இல்லாத போது படத்தினை ஒரு மாத
காலமோ இரண்டு மாத காலமோ நிறுத்தியும்
வைத்திருக்கிறார்.
மேலும் இந்த படத்தின் அந்த பிரதியினை தன் ஒரு வித ஆராய்ச்சி என்றே
நோலன் சொல்கிறார். நோலன் அந்த திரைக்கதையின் non-linear நுட்பத்தினை பற்றி ஒரு பேட்டியில் - ‘முதலில் ஒரு
காட்சியினை காண்பித்துவிட்டு பின் வேறு காலநேரத்தில் நிகழும் காட்சியினை
காண்பிக்கிறேன். பார்வையாளனுக்கு மீண்டும் விடுபட்ட காட்சியின் தொடர்ச்சியினை
காண்பிக்கும் போது அது முழுமையான தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று எந்த
அவசியமும் இல்லை. பார்வையாளனின் கவனமும் அவ்வளவு கூர்மையாக இருக்காது’ என்கிறார்.
இது உண்மைதான். காட்சிகள்
தொடர்ச்சிகளின்றி வெவ்வேறு காலநேரத்தில் நிகழ்வது நம்முன் தோன்றும் போது நாம் அதன்
மையக்கருவினை மட்டுமே கொண்டு செல்வோம். ஆக அதன் சரியான தொடர்ச்சி வரவில்லை
என்றாலும் நம் மனம் தனக்குள் கொண்டிருக்கும் மையக்கருவினை வைத்து தொடர்ச்சியினை
கட்டமைத்துக் கொள்ளும். மேலும் படத்தில் காண்பிக்கப்படும் இடம் முழுக்க
நண்பர்களின் வீடும் நோலன் பெற்றோர்களின் வீடும் தான்.
உலகின் ultra low
பட்ஜட் படங்கள் வரிசையில் இப்படம் இருக்கிறது.
இருந்தும் இப்படம் நல்ல திகிலினை ஊட்டக்கூடியது. கறுப்பு வெள்ளை படமாச்சே என
நிராகரிக்காதீர்கள் இப்போது இருக்கும் கலர் குப்பைகளில் இல்லாத கதை சொல்லல் முறை
இதில் இருக்கிறது. அலாதியான அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.
திரைக்கதையில் நான்-லீனியரினை ஆராய்ச்சி என சொல்லியிருக்கிறார். அப்படியெனில் ஒரே படத்துடன் அதனை நிறுத்தியிருப்பாரா ?
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக