A Serbian Film - 2010
முதலிலேயே ஒரு விஷயத்தினை சொல்லிவிடுகிறேன். இது பதினெட்டு வயதிற்கு மேற்பட்டோருக்கான திரைப்படம்.
இப்படம் உலகம் முழுக்க தடையும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படம் பற்றியும் அந்த தடை பற்றியும் நான் கருந்தேளின் விமர்சனத்தில் வாசித்திருந்தேன். அதன் பின்னுட்டத்தில் பலர் இப்படத்தினை பார்த்து தூக்கமின்றி இரவுகளை கழித்தேன் என்றெல்லாம் எழுதியிருந்தனர். எனக்கு புரியாத விஷயமும் இது தான் ஒரு படத்தினால் நம் தூக்கத்தினை கெடுக்கும் அளவு தாக்கத்தினை எப்படி கொடுக்க முடிகிறது ?
இந்த தாக்கம் அதிகம் பேய் படங்களில் காண முடியும். திடிர் திடிரென உருவங்கள் தோன்றுவதாலும் பிண்ணனி இசை மற்றும் இருள். இவையினை வைத்து பேய்ப்படங்களினை பயம் கொள்ளும் ஹாரர் படங்களாக எடுக்கிறார்கள். இதில் அதிகம் ஆதிக்கம் செய்ய வேண்டியது இசை என்பது தான் என் எண்ணம். காரணம் பேய்ப்படங்களில் மௌனம் பெரும் பங்கு வகிக்கும்.
சரி இப்படத்திற்கு வருவோம். என் யூகத்தின் படி இப்படம் ஏன் கொடூரமான படமாக சித்தரிக்கபடுகிறதெனில் சராசரி மனிதனின் தின வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களில் இரத்தத்தால் தோய்க்கப்பட்ட வதையினை புகுத்தினால் என்ன ஆகும் ? தனி மனிதனின் மனதில் அது எப்படிப்பட்ட தாக்கத்தினை கொடுக்கும் ? சின்ன உதாரணம். குழந்தைகளிடம் நாய் செல்லப்பிராணி வாலாட்டும் என சொல்லிக் கொடுக்கிறோம். தினம் குழந்தையும் நாயுடன் விளையாடுகிறது சாப்பாடு ஊட்டி விடுகிறது. அப்போது ஏதேனும் சினிமாவில் வெறிபிடித்த நாய் மனிதனை கடிப்பது போல் வருவதை அக்குழந்தை பார்த்தால் என்ன ஆகும் ? நாயுடன் பழக முடியுமா ? ஏதோ ஒரு வித பயம் அக்குழந்தையின் மனதில் அந்த வெறி நாய் விதைக்கிறது.
வெறி எனும் போது இப்படம் அதீதமாக நினைவிற்கு வருகிறது. இப்படத்தில் ஆதார ஸ்ருதியே வெறி தான். ஒரு உணர்வு அது சிரிப்பு அழுகை கோபம் சோகம் காமம் எதுவாகட்டும் அது அளவிற்கு அதிகமாக போய்க் கொண்டே இருக்கும் போது அது வெறியாகிறது. அந்த வெறி என்னும் நிலையில் நாம் என்ன செய்கிறோம் என்னவாக ஆகிறோம் என்பது நமக்கே தெரியாது. சட்டென கோபம் கொள்கிறவர்களிடம் இந்த குணத்தினை அதிகம் காண முடியும். இந்த வெறி ஒரு மனிதனை மிருகமாக்குகிறது. இந்த மிருகத்தன்மையினை சுயநலத்திற்காக ஒரு பக்கமும் சுய தேவைக்காக மறுபக்கமும் செயற்கையாக ஏற்றுக் கொள்ளும் நிலையில் அவனின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதை காட்டுகிறது - A Serbian Film. செர்பிய மொழி திரைப்படம்.
மனிதன் உணர்வுகளினால் மிருகமாகிறான் என சொல்லியிருந்தேன் அல்லவா இந்த படத்தில் எடுக்கப்பட்டிருக்கும் உணர்வு காமம்.
சாரு அடிக்கடி தன் எழுத்துகளில் சொல்லுவார் கலை என வரும் போது காமம் இருவகையாக பிளவு கொள்கிறது என. ஒன்று கமர்ஷியல் மற்றொன்று கலைத்துவமாக்கும் ஒன்று என. இதே தான் இங்கும். படத்தின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு காட்சியும் சுய கிளர்ச்சிக்கு ஏற்றவாறு காட்சிகளை அமைத்திருந்தாலும் இப்படத்தில் எழுதபட்டிருக்கும் வசனங்கள் அந்த தன்மையினை உடைத்தெறிகிறது. அதுவும் படம் போக போக காமம் என்பது முழுக்க மறைந்து திகில் மற்றும் வதை மட்டுமே நமக்கு கிடைக்கிறது.
முதலில் கதை. மிலாஸ் என்பவன் ஒரு போர்ன் நடிகன். அவனுடைய படங்களை அவனுடைய மகன் பார்த்துக் கொண்டிருக்கிறான். மகனை பள்ளிக்கு அனுப்ப பணம் தேவை. ஆனால் வேலை இல்லை. அப்போதென பார்த்து அவனுக்கு செர்பியாவில் நடக்கும் ஒரு போர்ன் பட வாய்ப்பு கிடைக்கிறது. கொடுப்பவன் யாரெனில் வுக்மிர் எனும் ஒருவன். மிலாசின் சகோதரனுக்கு மிலாஸின் மனைவியின் மீது ஒரு பார்வை. இது தனிக்கதை. வுக்மிர் மிலாசிடம் எத்தனையோ தத்துவங்களை சொல்கிறான். காமம் தான் இந்த உலகத்தின் இருத்தலை குறிக்கும் விஷயம் என்பது போன்று. அந்த பேச்சுகளுக்கெல்லாம் மயங்கி அவனும் ஒப்பந்தத்தில் கையொப்பமிடுகிறான். ஆரம்பத்தில் அவன் முன்பு நடித்த காமத்துவ படங்களை போலவே இருந்தாலும் போகப் போகவே அவனுக்கு தெரியவருகிறது இவர்கள் படம் என்னும் பெயரில் காமத்தினையும் வதையினையும் ஒன்றாக இணைப்பவர்கள் என. எப்படியெனில் ஒரு பெண்ணை அடித்து உதைத்து இரத்தம் சிந்த வைத்து பின் கிளர்ச்சியாகி புணர்வது. சில காட்சிகளுக்கு பிறகு இப்படிப்பட்ட புணர்ச்சிகளை தன்னால் செய்ய முடியாது என விலகுகிறான். அப்போது தேதி பதினேழு. பதினெட்டாம் தேதி ஏதோ ஒரு வேலையினை மனைவி சொல்கிறாள். காரில் போய்க் கொண்டிருக்கும் போது. அதே நேரத்தில் அவனுக்கு ஒரு வித போதையினை போல் தலை சுற்றுகிறது. ஒரு பெண் அவனை மயக்குகிறாள். இருவரும் எங்கோ செல்கிறார்கள். மயக்கம் ஆகிறான். கண் திறக்கும் போது தேதி 21. மூன்று நாட்கள் என்ன ஆனது ? மனைவி குழந்தையினை காணவில்லை. அவர்கள் எங்கே ? என தேடுவதே கதை.
இப்படத்தின் கடைசி காட்சி மனதை உருக்கும் வண்ணம் வதைகளாலும் சோகத்தாலும் நிரம்பி இருக்கும். சோகம் இப்படத்தில் நிரம்பி வழியும் அளவு நிறைய காட்சிகளில் இருந்தாலும் அந்த இடங்களிலெல்லாம் வதைகளின் ஆதிக்கம் தழைத்தோங்கிவிடுகிறது. காமத்தாலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட் என நினைக்கிறேன்.
இந்த படம் வதையினை மட்டும் தான் பேசுகிறதா எனில் இல்லை. போர்ன் ஸ்டாரான மிலாஸ் புணர்ச்சியினை பாகுபடுத்தும் விதம் திரையில் அழகுற காண்பிக்கப்பட்டிருக்கிறது. அஃதாவது தேவைக்காக புணர்வதற்கும் காதலுடன் புணர்வதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம்.
இப்படத்தில் என்னை அதிகம் ஈர்த்தத்து குறிப்பாக இரண்டு விஷயங்கள். ஒன்று வசனம். மற்றொன்று இசை. வசனங்கள் ஏனெனில் குழந்தைக்கும் அப்பாவிற்கும் இடையே காமம் சார்ந்து நடக்கும் உரையாடல். அடுத்து வுக்மிருக்கும் மிலாசிற்கும் இடையே நடக்கும் காமம் சார்ந்த உரையாடல். இந்த இரண்டும் இரு வேறு துருவங்களில் நிற்கிறது என்பது என் எண்ணம். இரண்டும் அவனுக்குள் குழம்பியும் விடுகிறது. அதை காட்சியாக இயக்குனர் காண்பிக்கிறார்.
அதுவும் வுக்மிராக நடித்தவரின் நடிப்பு என்னை அசர வைத்தது. வுக்மிரின் முக்கிய குறிக்கோள் நடிப்பவருக்கு என்ன நடக்கிறது என்பதன் பிரக்ஞை இருக்கக் கூடாது. மிலாசோ அதனை கேட்டுக் கொண்டே இருக்கிறான். அவனை சமாளிக்க உலகியலையும் காமத்தினையும் இருத்தலையும் இணைத்து வுக்மிர் சொல்லும் ஒவ்வொரு வசனமும் கிரங்க அடிக்கிறது.
இப்படத்தின் இசை பிடித்திருந்தது என சொல்லியிருந்தேன். ஏன் எனில் இந்த படத்தினை திகில் படமாக மாற்றும் ஒரே ஒரு விஷயம் இந்த இசை தான். படத்திற்குள் படம் எடுப்பது போல் வருகிறது. அங்கு காட்டப்படும் கேமிரா அனைத்தும் கதாபாத்திரமாக இந்த இசையினால் மாற்றப்படுகிறது. மேலும் படத்தில் கடைசி முக்கால் மணி நேரம் ஃபாஸ்ட் கட்டிங் காட்சிகள் இடம் பெறும். அதனை தொடர்ந்து அறுபட்டு அறுபட்டு காட்சிகள் காண்பிக்கப்படும். அந்த அறுபட்ட இடங்களை இசை அழகாக நிரப்புகிறது. இன்னமும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் எப்படி நாயகனுக்கு கதைக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாதோ அதே போல் இந்த இசையால் அவனின் உணர்வினை நாம் உணர்கிறோம். குறிப்பாக ஆச்சர்ய உணர்வுகளை.
மேலும் இப்படத்தினை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் அப்படியில்லையெனில் பாதி மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இக்கதை மிக சிக்கலான கதைக்குள் கதை என்பது போல் எழுதப்பட்டிருக்கிறது. எப்படி சொல்லலாம் எனில் பிரதான கதை மிலாசின் தேவை எனில் வுக்மிரின் படம் தனிக்கதையாக இருக்கிறது. அடுத்து அந்த கதைக்குள் நடக்கும் மர்மமான விஷயங்கள் ஒரு கதையினை தருகிறது. இதனால் தான் பின்னப்பட்ட திரைக்கதை என சொல்லியிருந்தேன். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது அருமையாக எடிடிங் செய்து தனிப்பட்ட கதைகளை தெரியாமல் செய்திருக்கிறார் இயக்குனர். இப்படத்தில் இருப்பவர்கள் குறுகிய மக்கள் எனினும் அனைவருக்கும் ஒரு கதை அல்லது உருக்கும் காட்சி இருக்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒரு கதையினை பார்வையாளனுக்கு ஒப்பித்துக் கொண்டே இருக்கிறது. படத்தினை ஒரே வரியில் சொல்ல வேண்டுமெனில் - அருவருப்பு அழகியல். எனக்கு இப்படத்தினை அறிமுகபடுத்திய கருந்தேளுக்கு என் நன்றிகள்.
3 கருத்திடுக. . .:
அருமையான விமர்சனம். இப்படத்தை எனக்கு அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி.
ஆனந்த விகடனில் வெளிவந்த 'உலக சினிமா' பட்டியல் உங்களிடம் உள்ளதா?
இல்லை நண்பா. ஏன் ?
Post a comment
கருத்திடுக