Requiem for a dream - 2000
இவர் தான் டாரென் அரனோஃப்ஸ்கி. இவர் இயற்றிய ஒரு படத்தினை நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்தப்படம் black swan. இந்த படம் எனக்குள் ஏற்படுத்திய தாக்கத்தினால் மீள்பார்வை பார்க்கும் போது கூட ஒரு கட்டுரையினை எழுதினேன்(எக்ஸைலும் கறுப்பு அன்னமும்). நோலனுக்கு பிறகு என்னை கவர்ந்த இயக்குனர் என்றால் நான் இவரை தான் குறிப்பிடுவேன். இவர் படங்களில் அப்படி எது என்னை கவர்ந்தது ? ஒரு படத்தினை வைத்து எப்படி பிடித்தது என சொல்ல முடியும் ? இந்த கேள்வி தங்களுக்கு எழுந்தால் பதிலும் அதிலேயே இருக்கிறது. உலக சினிமாவிற்கான தேடல் எப்போதும் நாம் பார்க்க போகும் சினிமாவிலே தான் இருக்கிறது.
ஒரு படம் பார்க்கிறோம். அந்த படம் நாம் எதிர்பார்த்திருந்ததை விட நாம் அறிந்திருந்த முறைகளை விட சில புதிய விஷயங்களை தருகிறது. அப்படி கொடுப்பின் உடனே நாம் என்ன செய்வோம் ? இவரின் மற்ற படங்கள் எப்படி இருக்கும் என்னும் யூகத்தில் தேடலை ஆரம்பிப்போம். அப்படி அவர் விருதுகளை குவித்திருந்தால் அவருடைய சமகாலத்திய இயக்குனர்கள் அறிவிலிகளா என்னும் எகத்தாளத்துடன் அதனை தேடி செல்வோம். அப்போது நம் தேடல் மிக நீண்டதாய் சென்று கொண்டிருக்கும். நான் ஆரம்பித்த தேடலின் நீட்சியில் சிக்கியவர் தான் அரனோஃப்ஸ்கி.
ப்ளாக் ஸ்வான் படம் பற்றி எழுதிய போது அருண் என்னும் நண்பர் அரனோஃப்ஸ்கியா என வாயினை முதலில் பிளந்தார். அதன்பின் இந்த படத்தினை அவர் சிபாரிசு செய்தார்.
குட்டி இடைச்செருகல் - இந்த படம் தான் முதல் முறையாக என் கணினியில் நான் பதிவிறக்கம் செய்யும் திரைப்படம். என் கணினியில் இருக்கும் ஆன்ட்டி(வைரஸ்)யானது டாரெண்டின் இணையதளத்திற்கு சென்றாலே தன் வேலையினை சிறப்பாக செய்து எனக்கு அந்த இணையதளத்தினையே காண்பிக்காமல் இருந்துவிடுகிறது. அப்போது அறிமுகப்படுத்திய அதே அருண் கொஞ்சம் ஃபேஸ்புக் மூலம் செய்த உதவியினை கொண்டு இப்படத்தினை பதிவிறக்கம் செய்திருக்கிறேன்.
இப்போது கட்டுரை. அரனோஃப்ஸ்கியின் மேல் எனக்கு ஈடுபாடு ஏன் வந்தது ? இது நியாயமான கேள்வி. இங்கு இலக்கியத்தினை பற்றி நான் கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன். இலக்கியங்களில் ஒரு கதாபாத்திரத்தின் பன்முக உணர்ச்சிகளை நாம் சொல்ல முடியும். மனதளவில் இதனை நினைக்கிறான். கனவுகளில் அவன் ஆசைகளை காட்சியாக்குகிறான், நண்பர்களுடன் பேசும் போது தன் நிறைவேறா எண்ணங்களை பகிர்கிறான் என. இதனை எழுதும் போது அவனின் கருத்துகளையும் எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதையும் நாம் தெளிவாக சொல்லிவிடுகிறோம். இது திரையில் முடியுமா ?
அப்படியே காண்பிக்கிறோம் நண்பர்களுடன் பேசுவது கனவில் வருவது ஆனால் யதார்த்தத்தினை ஒத்தி இருக்கிறதா ? கனவில் காண்பிக்கப்படுகிறதெனில் நிச்சயம் திடிக்கிட்டு கனவு காண்பவர்கள் எழுந்து கொள்வார்கள். ஆளாளப்பட்ட நோலனே கனவுகளை மையமாக வைத்து எடுத்த இன்செப்ஷனில் இந்த காட்சியினை வைத்திருக்கிறார். அந்த படத்தினை நான் குறை சொல்ல விரும்பவில்லை ஏன் எனில் அங்கு தான் நான் சொல்ல வரும் விஷயமே இருக்கிறது. கனவுகளை நாம் அன்றாடம் காணும் போது அது கனவுகள் என்னும் பிரக்ஞையினை நாம் கொள்வதே இல்லை. அந்த நிலை வருவதற்கு நமக்கு சில நேரம் பிடிக்கிறது. இந்த விஷயத்தினை அவர் திரைக்கதையில் திணித்திருப்பார். எது எந்த கனவு என தெரியாமல் ஒரு ஆய்வினை போல எடுக்கப்பட்டது அப்படம். இந்த கனவுகள் நோலன் எனில் அவரை விட காத்திரமாக மனிதனின் ஆழ்மன உருவங்களை அரனோஃப்ஸ்கி கொண்டு வருகிறார். விஷயம் என்ன எனில் அவ்வுருவங்கள் கதையின் மாந்தர்களின் ஊடாகவே திரிவதால் பிரித்தறிதல் சற்று கடினமானது.
இது அரனோஃப்ஸ்கியின் இரண்டாவது படைப்பு. முதலில் இந்த படம் பெயரின் அர்த்தமே எனக்கு புரியவில்லை. என்ன என தேடி பார்த்தால் ரெக்விம் என்பதற்கு அமைதியினை அடைவதற்கான வழிபடுவதற்கான இசை என சொல்லப்படுகிறது. இதன் அர்த்தம் பொதுவாக மரணத்துடன் தான் கொள்ளப்படுகிறது. இங்கே அந்த இசையானது மரணத்தினை நோக்கியல்லாமல் கனவினை நோக்கி இருக்கிறது. கனவுகள் வெறியாகும் போது என கொள்ளலாம். கதைக்கும் அதுவே பொருந்தும்.
இந்த படத்தின் கதை என்ன எனில் நான்கு பேரின் கனவுகள். முதலில் சாரா கொல்ட்ஃபார்ப். இவள் வெறி வந்தவளாய் தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்வினை பார்ப்பவள். அவளுக்கு அதில் பங்கு கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. அப்போது தன்னுடைய அழகான சிவப்பு நிற ஆடையினை அணியபார்க்கிறாள். ஆனால் குண்டாக இருப்பதால் பத்தவில்லை. அதற்கு எடை குறைக்க வேண்டுமே என பல முறைகளை கையாள்கிறார். அதில் அவர் சில மாத்திரைகளுக்கு சென்று அடிமையாகிறார்.
மீதி மூவர் யாரெனில் ஹாரி சாராவின் மகன், மரியான் ஹாரியின் காதலி,டைரோன் ஹாரியின் நண்பன். மூவரும் போதைபொருளுக்கு அடிமையானவர்கள். அவர்கள் வேலையும் அதனை சார்ந்தே இருக்கிறது. அப்போது அந்த தொழிலில் ஒரு பிரச்சினை நிகழ்கிறது. இவர்களிடம் சரக்கே இல்லாத நிலை ஏற்படுகிறது. இதற்கு பின் இருப்பது அல்லது நடப்பது அனைத்தும் சொல்வொண்ணா வதைகள். இரண்டு ஆண்களும் பொருளுக்காக மியாமி வரை செல்வார்கள்.
அவள் பணமும் போதைப் பொருளும் வேண்டி கொஞ்சம் கொஞ்சமாக வேசியாக மாறுவாள். சாரா முழு அடிமையாகிவிடுவாள் அந்த மாத்திரைகளுக்கு, ஹாரி ஊசியின் மூலம் பொதைப்பொருட்களை ஏற்றிக் கொள்வதால் கைகளில் ஒருவித புண் உருவாக ஆரம்பிக்கும். அதன் வேதனை. டைரோனுக்கு போதைப்பொருளின் ஏக்கம் கண்முன்னே நண்பனின் சிதரவதை காதலியின் ஞாபகம் என ஒரு வித மீளமுடியாத நினைவு சிக்கல்.
இந்த நால்வரின் நிலையும் என்ன ஆகிரது என்பதே இக்கதையின் முடிவு. இப்படத்தின் ஆரம்பத்தில் படம் சூடுபிடிக்கவேயில்லை. காட்சிகள் நகர நகர மட்டுமே இயக்குனரின் திறமைகளை காண முடிகிறது. அப்படி என்ன திறமை எனில் கதை சொல்லப்பட்டிருக்கும் விதம். கோடை காலம் என கதை ஆரம்பித்து இலையுதிர் பின் குளிர் என செல்லும். அந்த கால நிலைக்கு ஏற்ற வாறு தான் கதை செல்லும். உதாரணம் இலையுதிர் காலத்தில் தான் மூவருக்கும் போதைப்பொருளில் பிரச்சினை வரும் சாராவிற்கோ போதை உட்கொள்ள ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
இதில் காமம் சார்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் சற்றும் நாம் யோசித்திருக்க மாட்டோம். ஒரு காட்சியினை சொல்கிறேன். ஒரு ஹோட்டல். அங்கு போதைப்பொருள் சார்பாக ஒருவரை காண செல்வாள். அவர் இவளின் தேவையினை புரிந்து கொண்டு அவளுடைய கையின் மேல் தன் கையினை வைப்பார். உடனே ஃபோர்க்கினை எடுத்து அவரின் புறங்கையில் குத்துவாள். கெட்ட வார்த்தையினையும் உச்சரிப்பாள். கேமிரா அவளிடமிருந்து திரும்பி அவனிடம் செல்லும் போது தான் பார்வையாளனுக்கு அது அவளுடைய கனவு என்பது தெரியும். காமம் சார்ந்து வரும் அனைத்து காட்சிகளிலும் அவளுடைய வசனமும் முகபாவனையும் தனிக்ககதைகளை சொல்லும் தன்மைகளை கொண்டிருக்கிறது.
நிர்பந்தத்தின் அடிப்படையில் நாம் நமக்காக சில அன்றாட விஷயங்களை நிராகரிக்கிறோம். ஆனால் அந்த விஷயங்கள் நம்மை ஏதோ ஒரு வகையில் துரத்திக் கொண்டே இருக்கிறது. இப்படத்தில் சாரா தன் உடல்நிலையினை குறைக்க சில சாப்பாட்டுகளை குறைக்கிறாள். சில விஷயங்களை நிராகரிக்கிராள். அப்போது அவளுக்குள் இருக்கும் உள்மன உறுத்தல்கள் அப்படியே காட்சியாக்கப்பட்டிருக்கிறது. இதனை எப்படி யோசித்திருப்பார் என்று மட்டுமே அந்த காட்சிகளில் பிரமித்து இருந்தேன். அப்படி காட்டப்படும் இடங்களில் இசை பெரும் பங்கினை வகிக்கிறது.
இசை. படம் பெயர் போடும் இடத்திலிருந்து கடைசி வரை இசையின் ஆதிக்கம் மிகுதியாய் இருக்கிறது. ஆனால் இதன் தலைப்பினை பொருத்தவரை இசை இப்படத்தின் கரு சார்ந்த ஒன்று அப்படியிருக்கையில் இசையானது திரைக்கதையுடன் ஒன்றியிருக்க வேண்டும். அது இப்படத்தில் மிஸ்ஸிங். இசை எப்படி திரைக்கதையுடன் சேரும் என கேட்பவர்கள் GLOOMY SUNDAY படத்தினை பாருங்கள் இசை மட்டுமே காட்சியின் ஆரம்பம் நிகழ்வு நீடிப்பு என அனைத்தினையும் சொல்லும். இங்கே இசை போதை உட்கொள்ளும் இடங்களில் அதகளம் செய்கிறது. இதனை ஒருவித mesmerizing இசை என சொல்ல நினைக்கிறேன். இது போன்ற இசையினை ஷெர்லாக் ஹோம்ஸ் இன்செப்ஷன் படங்களில் பார்க்க முடியும். நம்மை கூர்மையாக காட்சியினை விட்டு வெளியே செல்லவிடாமல் தடுக்கும் சிறை இந்த இசை.
இந்த இசையினை தாண்டி திரைக்கதையில் ஒரு புது விஷயத்தினையும் அறிந்து கொண்டேன். போதை உட்கொள்ளும் காட்சிகளில் வரும். அது கூட வீக்கிபீடியாவின் மூலமாக தான். திரையுலகில் fast cutting என்றொரு தன்மை இருக்கிறது. அது யாதெனில் ஒரு கதையினை போட்டோக்களாக மாற்றி டக் டக் டக்கென நொடிகளில் காண்பித்து காட்சிக்குள் செல்வது. இதனை ரன் லோலா ரன் திரைப்படத்தில் காண முடியும். அரனோஃப்ஸ்கி இந்த டெக்னிக்கிலிருந்து புதிதாய் ஒன்றினை கண்டுபித்திருக்கிறார். அது தான் - hip hop montage. சில ஆக்ஷன் இடங்களில் இதனை கொஞ்சம் ஓடவிட்டு இசையினையும் திணித்து அழகுற பொருத்தி சொல்வது.
http://www.youtube.com/watch?v=O-TnqxS1FFc - இந்த வீடியோவினை பாருங்கள். அரனோஃப்ஸ்கியின டெக்னிக்கினை அறிந்து கொள்ள முடியும்
இந்த படத்தில் எனக்கு ஒரே ஒரு குறை இருந்தது. அதற்கு ப்ளாக் ஸ்வானுடன் சின்ன ஒப்பீட்டினை கொண்டே ஆக வேண்டும். ப்ளாக் ஸ்வானில் எந்த கதாபாத்திரமும் தேவையில்லை என சொல்ல முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி தேவைகளே இருந்தது. இருப்பினும் அவை திரைக்கதையின் அமைப்பிலிருந்து கருவினை விட்டு வெளியிலும் போகாமல் அறுபட்டும் நிற்காமல் கதையினை கடைசி வரை இழுத்து செல்லும். இந்த படத்திலோ சாராவின் பாத்திரம் தனிக்கதையாக படத்தில் செல்கிறது. ஆரம்ப காட்சிகளில் காண்பிக்கப்படும் ஒற்று ஹாரி சாராவின் மகன். அதனை தாண்டி கதைக்குள் ஏன் இப்படி இருவேறு கதை ?
இக்குறையினை தவிர இப்படம் கொடுக்கும் மனோதத்துவ இம்பாக்ட் அட்டகாசம். எழுத்தில் நிச்சயம் எழுதமுடியாத அளவு இருக்கிறது. அவரின் அடுத்த படத்தினை எதிர்நோக்குகிறேன். ஒரு கனவு வெறியென மாறும் நிலையில் நமக்குள் ஏற்படுத்தும் உணர்வுசார் வதைகளை பார்க்கும் போது கனவுகளே வேண்டாமோ என நினைக்க தோன்றுகிறது.
இப்படிப்பட்ட படங்களை தான் நான் கலைப்படைப்பு என்கிறேன். கரு கொண்டிருக்கும் ஆதாரஸ்ருதியான உணர்வினை பார்வையாளானுக்கு அளிக்க வேண்டும். அது இங்கே முழுக்க அரங்கேறுகிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் வதைகளாலும் போதையினாலும் நனைந்திருக்கிறது. மனோதத்துவ பட விரும்பிகளுக்கு இது ஒரு ட்ரீட்.
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக