துச்சமா(க்)கும் மனிதர்கள்

இன்றினை போல் களைப்பினை நான் உணர்ந்ததே இல்லை. அம்மாவிற்கு நாளை பிறந்த நாள். நாளையோ எனக்கு கல்லூரி என சொல்லியிருக்கிறார்கள். அதனால் இன்று கோயிலுக்கு செல்லலாம் என நேற்றே முடிவு செய்திருந்தோம். நேற்று என் நாவல் சம்மந்தமாக திருச்சி சென்றிருந்தேன். இதற்கு பின் வருகிறேன்.

மாலையில் அப்பாவுடன் வெளியில் சென்று வீட்டிற்கு வந்தால் அதார் கார்டிற்காக மீண்டும் செல்ல வேண்டும் என சொல்லியிருக்கின்றனர் என அம்மா சொன்னார். கடவுளா கவர்மெண்டா என பட்டிமன்றம் நடந்து கவர்மெண்டே வென்றது. இதில் விஷயம் என்ன எனில் பத்து மணிக்கு வரும் அரசாங்க அதிகாரிகளுக்கு எட்டு மணிக்கே சென்று க்யூவில் நிற்க வேண்டும். எட்டு மணிக்கு செல்ல வேண்டுமே அதனால் நாவலில் இருக்கும் பிழை திருத்தங்களை பார்த்து தூங்கலாம் என ஒன்றரைக்கு தூங்கினேன். இரண்டிலிருந்து ஆறு மணி வரைக்கும் பவர் கட்!!!! காலையில் நானும் அப்பாவும் சென்றோம். நாங்கள் சென்றது எங்களுக்கு கையில் கொடுக்கப்பட்டிருந்த சீட்டில் போட்டிருந்த பி.ஆர் மெட்ரிகுலேஷன் என்னும் பள்ளிக்கு. இரண்டு இரண்டரை மணி நேரம் வெயிலில் நானும் அப்பாவும் எங்களை போல காலை உண்ணாமல் இந்த கருமத்தினை முடித்து ஞாயிற்று கிழமையினை வாழ்வோம் என ஏங்கியிருந்த சில மனிதர்களும். விஷயம் யாதெனில் அந்த வாயிற்காப்பாளன் கேட்டினை திறக்கவில்லை. அப்படி திறந்தால் உள்ளே நடக்கும் ஸ்பெஷன் க்ளாஸிற்கு இடைஞ்சலாக இருக்குமாம்! வெளியே இருக்கு நிலைமையினையும் சொல்கிறேன். மரம் இல்லை. பெண்கள் தார் ரோட்டில். சில வயதானவர்கள் கால்கடுக்க நின்று கொண்டிருந்தார்கள். மேலும் உள்ளே விடக்கூடாது என்பது அந்த அதிகாரிகளின் உத்தரவாம்! இரண்டரை மணி நேரத்திற்கு பின் மாணவர்களுக்கு மட்டும் என சொன்னார்கள். அப்பா எப்படி எப்படியோ பேசி அவருக்கும் எடுக்க சம்மதம் வாங்கினார். அம்மா ? அம்மாவினை அழைத்து பேசலாம் எனும் போது தான் அரசாங்கம் அசர முடியாத செய்தியினை சொன்னது. இந்த பள்ளியில் நடப்பது 59 ஆம் வார்டுக்கு என. அப்படியெனில் 60 ஆம் ? தாங்கள் நினைப்பது போல் மீண்டும் நீளமான க்யூ தான்!!!!! 
நீதி : கடவுளை அம்மாவும் மறந்து போனார்.

இந்த அனைத்தினையும் பார்க்கும் போது நேற்று பயணத்தின் போது நடந்த ஒரு சம்பவமும் என் தெருவில் அனுதினமும் நடக்கும் சம்பவமும் நினைவிற்கு வருகிறது.

திருச்சிக்கு பேருந்தில் செல்லும் போது இடையில் முசிறி தொட்டியம் நொச்சியம் நாமக்கல் மற்றும் திருச்சியின் ஆரம்பத்தில் டோல்கேட் என்னும் இடத்தில் பேருந்து நிறுத்தப்படும். அங்கு மல்லிகைப்பூ வாழைப்பழம் கோசாப்பழம் வெள்ளரி என கவரில் போட்டு வியாபாரம் செய்வர். இதனை சிலர் நிராகரித்தனர் சிலர் மதித்தனர். வேண்டாம் என சொல்பவர்களை வியாபாரியும் நச்சரிக்கவில்லை. தன் முகத்திற்கு முன் வந்து கத்துகிறானே என பயணிகள் கோபப்படவும் இல்லை.பேருந்து வெகு தூரம் நாமக்கல் தாண்டி சேலம் நோக்கி சென்று கொன்டிருந்தது. இராசிபுரம் பிரிவில் அது மாலை நேரம் என்பதால் போலீஸ் போக்குவரத்தினையும் மாணவர்களையும் சரியாக வழி வகுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஜன்னல் வழியே வெளியே பார்த்தேன். கார்களில் பயணம் செய்யும் போது சூரிய ஒளி நம் மேல் படாமல் இருக்க கண்ணாடியின் உள்பக்கம் ஒரு கறுப்பு நிறத்தில் ஒன்றினை வைப்பர். அதன் பெயர் தெரியவில்லை. அதனை ஒருத்தி விற்றுக் கொண்டிருந்தாள். அவள் கத்தக் கூட இல்லை. கைகளில் அதனை வைத்துக் கொண்டு வேண்டுமா என்பது போன்ற கையசைவுகளை கொண்டிருந்தாள். ஊமையாகக் கூட இருக்கலாம். 

பேருந்து அந்த இடத்தில் சரியாக நிற்கும் போது சில சீட்டுகளுக்கு முன்னிருந்தவன் வெளியில் காரி துப்பினான். அவளின் காலுக்கு மிக அருகில் வந்து விழுந்தது. அவளும் வெகு நேரம் அந்த சீட்டுக்காரனை முறைத்துக் கொண்டிருந்தாள். பின் அவள் மெல்ல நகர பேருந்து நகர்ந்தது. பாவம் அவளால் என்ன செய்ய முடியும் ? இந்த கேள்விக்குறியினை தாண்டி எழுத தெரியவில்லை.

இதைவிட அசிங்கமான விஷயம் என் தெருவில் நடந்து கொண்டிருக்கிறது. தினம் சாக்கடைகளை சுத்தம் செய்ய  அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி வருவாள். ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீட்டினை சுத்தம் செய்ய வரும் போது தண்ணீர் ஊற்றுவார்கள். அதுவும் சில வீடுகளில் மட்டும். அன்று என் வீட்டினை அம்மா தண்ணீரினை ஊற்ற சுத்தம் செய்து கடந்து சென்றுவிட்டாள். அம்மா குப்பைகளை பிரதான தொட்டியில் போட சென்றிருக்கிறாள். அம்மாவை பார்த்து அவள் கேட்ட கேள்வி - தண்ணி வேணும்மா ? தினம் அம்மா தான் அவளுக்கு தண்ணீர் தருவது. அம்மா உடனே பையன் வீட்டிலிருக்காம்மா என சொல்லியிருக்கிறாள். 

அதற்கு அவள் கேட்ட கேள்வி தான் நேற்று மற்றும் இன்று நடந்த, கண்ட சில விஷயங்களை பார்க்கும் போது நினைவிற்கு வருகிறது
"பையன் தருவானாம்மா ?"

எவ்வளவு கொடூரமாக இருக்கிறார்கள் என் தெருமக்கள்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக