அடியேன் செய்த பிழை
ஸீரோ டார்க் தெர்டி என்னும் ஆங்கில படத்தினை அண்மையில் எழுதியிருந்தேன். அதற்கு ஃபேஸ்புக்கில் சில பின்னூட்டங்கள் கிடைத்திருக்கிறது.
Nice
Review @ Mature ! // உதாரணம்
ஒன்று சொல்கிறேன். இப்படத்தில் அபு அஹமது என்பவனை தேட வேண்டும் என்பார்கள். அதற்கு
ஏற்கனவே பிடிக்கப்பட்ட தீவிரவாதியும் அபு அஹமது என்று தான் பெயரினை சொல்வான். உடனே
மாயா அபு அஹமது என்பது பெயர் கிடையாது அவனின் குடும்பப்பெயரினை சொல் என்பாள். அபு
எனில் அப்பா என்று ஒரு அர்த்தம் கூட சொல்வாள். கூர்ந்து கவனித்ததில், கவனித்தும் விழவில்லை. இங்கோ தேசியத்தினை காப்பாற்றுவதால் பெயர் கூட
மாற்றாமல் அப்படியே உளவு போகிறார் விஸாம் அஹமது கஷ்மிரி!!!!!// என்ன சொல்ல
வருகிறீர்கள் கி.மு. – செந்தில் முருகன்.
இதனை தொடர்ந்து நண்பர் ராஜராஜேந்திரன் எனக்கு ரா ஏஜெண்டுகளை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். நான் அப்போதும் எனக்கு ஏன் விஸ்வரூபம் பிடிக்கவில்லை என்பதை சொல்லிக் கொண்டிருந்தேன். அதனை பின் சொல்கிறேன். இப்போது அவரின் வார்த்தைகள் -
//ஒரு தவறு செய்து
விட்டேன். செந்தில் முருகன் கமெண்ட்டை படித்து பின்னூட்டமிட்டு விட்டேன்.
இப்போதுதான் உங்கள் லிங்கை படித்தேன். விஸ்வரூபம் படத்தை மட்டம் தட்ட உங்களுக்கு
ஒரு ஹாலிவுட் படம் தேவைப்பட்டிருக்கிறது. முதலில் முதல் முப்பது-நாற்பது
நிமிடங்கள் படம் மட்டுமே நன்றாக இருக்கிறது என்பதிலேயே கமலை படு பயங்கரமாக மட்டம்
தட்டி விட்டீர்கள். முதலும் கடைசியும் சராசரி சினிமா ரசிகர்களுக்கானது. ஆனால், அந்த ஆப்கன் பதிவுகள்தான் அற்புதம். கலைநயம். ஒரு தலைவன்
ஒவ்வொருவரையும் சந்தேகப் பட்டுக் கொண்டிருக்க முடியாது. அவருடைய நம்பிக்கையாளர்
கூறும் தகவலை அப்படியே ஏற்கத்தான் நேரமிருக்கும். அதேபோல ஒருவனை சந்தேகப்
பட்டுவிட்டால் விசாரித்துக் கொண்டுமிருக்க முடியாது. ஸ்பாட்டிலேயே தண்டனை. அதுதான்
தவ்பீக்குக்கு கிடைக்கும் தூக்கு. நீங்களும் ஒரு ஹாலிவுட் அடிவருடி. அதை தொடர்ந்து
ஆதரியுங்கள் தவறில்லை. ஒருமுறை கமல் படத்தை பார்த்தமாத்திரத்தில் மட்டம் தட்டுவதை
முடிந்தால் தவிருங்கள். அல்லது எளிதில் புகழ் பெற இது சிறந்த உத்தி என நினைத்தால்
எதிர் விமர்சனங்களை தாங்குங்கள், பதில் கூறுங்கள்.
படம் பற்றிய உங்கள்
பார்வையில் நான் என் கருத்தை வலிந்து திணிக்க முடியாது. நீங்கள் படத்தின் ஒரு
குறையைச் சுட்டிக் காட்டியிருந்தீர்கள். ஆனால் அது உங்கள் புரிதலின் குறைபாடு
என்பதைத்தான் விளக்கினேன். நீங்கள் நினைப்பது போல் ராவில் இருந்து நேராக
தீவிரவாதிகள் கூடத்துக்கு விஸாம் வரவில்லை. அவர் அம்மாவால் தமிழர். ஆனால் அப்பாவால்
ஒரு காஷ்மீரி. காஷ்மீரில் பல தாக்குதல்களை இந்திய ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டு
இருக்கிறார்(ஓர் உளவாளி தன்னுடைய ஆட்களைக் கூட சிலநேரம் கொல்வார்கள் தன்னை
தீவிரவாதிதான் என அடையாளப்படுத்த) அதனால் அவர் தலைக்கு ஐந்து லட்சத்தை இந்திய அரசு
நிர்ணயிக்கிறது. இதை இப்படித்தான் நீங்கள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர்
நேரிடையாக போஸ்டர் கொண்டுவந்து சேர்ந்தார் என நீங்கள் நம்பினால்..................? நல்லவேளை நான் அதிகமாக ஹாலிவுட் படம் பார்ப்பதில்லை.
குருதிப்புனலில்
அர்ஜூன் நக்ஸல்களிடம் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும்
அவரால் நியமிக்கப்பட்ட உளவாளி வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருப்பான்
அதேபோல்
பார்வையாளனுக்கு இந்தப் படம் சலிப்பினை கொடுத்தது என்பதையும் என்னால் முழுமையாய்
ஏற்க முடியாததன் காரணம் உங்களைப் போல அந்நிய நாட்டுப் படங்களை அதிகமாக பார்க்கும்
என் நண்பர்கள் பலரும் இந்தப் படத்தை பல முறை பார்த்து வெறி கொண்டு ரசிப்பதை
கண்கூடாக காண்கிறேன். அவர்களை ஜஸ்ட் முட்டாள்கள் என்று சொல்வது போன்ற
குற்றச்சாட்டாகத்தான் 'சலிப்பு' என்பதை பார்க்கிறேன்.//
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஏற்கும் இடத்தில் தான் நான் நின்று கொண்டிருக்கிறேன். விஸ்வரூபம் படத்தினை பற்றி நான் இதுவரை எழுதவே இல்லை. காரணம் எனக்கு அந்த படம் பிடிக்கவில்லை என்பதே உண்மை. மேலே ராஜ ராஜேந்திரன் சொல்லியிருக்கும் அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஏன் எனில் இதுவரை தமிழ் சினிமாவில் தீவிரவாதம் சார்ந்த படங்களெனில் அது ஒரு குழுவிற்கும் மக்களுக்கும் இடையில் நடக்கும் வன்முறையினை ஒருவன் தட்டி கேட்பதை போன்றோ அல்லது அதன் பிண்ணனியில் நடக்கும் சம்பவங்களை போன்றோ தான் அமையும். இந்தப்படமோ முற்றிலும் வேறுபட்டு ஜிஹாத் என்னும் தீவிரவாத அமைப்பிற்குள் நடக்கும் வதைகளை சொல்கிறது. இந்த பிண்ணனியினை இரு கதாபாத்திரத்தின் வாயிலாக சொல்லியிருக்கிறார் கமல். படத்தின் திரைக்கதை அமைப்பு எப்படி இருக்கிறது எனில் கமல்ஹாசன் படத்தில் யார் என்னும் புதிரினை நமக்கு வைப்பதை போல் இருக்கிறது. அவர் தீவிரவாத அமைப்பினில் இருந்திருக்கிறார். கதைப்படி இப்போது கதக் நடன வாத்தியாராக இருக்கிறார். ஏற்கனவே அந்த அமைப்பில் இருந்தவர்கள் கமலை பிடிக்க முயற்சிக்கிறார்கள். அப்படியெனில் கமல் யார் என்னும் கேள்விக்கான பதிலினை திரைக்கதை சொல்ல வேண்டும் என நினைத்திருக்கிறார். ஆனால் அது திரைக்கதையில் எந்த எடுப்பும் தரவில்லை. அடுத்தவர்களை சொல்வதைவிட எனக்கு எந்த ஆச்சர்யத்தினையும் அல்லது பிரமிப்பினையும் தரவில்லை.
இதனை தான் சொல்லியிருக்கிறேன். மேலும் நான் எந்த படத்தினையும் கதை சார்ந்து எழுதுவதே இல்லை. அதற்கு சிறு காரணமும் இருக்கிறது. எழுத வேண்டும் என எனக்கு ஆசை வருவதற்கு முன் இயக்குனராக வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன். அதற்கு ஏகப்பட்ட கதைக்ளை யோசித்தும் வைத்திருந்தேன். எந்த ஒரு கதையாகினும் நாம் எந்த கதை சொல்லல் முறையினை கையாள்கிறோம் என்பதில் தான் விஷயம் இருக்கிறது என்னும் புரிதலினை கொண்டிருந்தேன். அஃதாவது கதைக்குள் திருப்பங்களை வைத்து வெறும் கதை என்னும் தளத்திலேயே பார்வையாளனுக்கு கொடுப்பதை விட நம்மால் முடிந்தவரை பார்வையாளனுக்கு குழப்பங்களை(பார்வையாளனுடன் திருப்பங்களை) அல்லது இப்படி சொல்லலாம் அழகுடன் சுற்றி வளைத்து மூக்கினை தொடுவது போன்ற முறைகளை கையாள்வது. தமிழில் இது போன்ற படங்களை காண்பது அரிதாக இருக்கிறது. சமீபத்தில் அப்படி கண்டது கடல் படம். அதனால் தான் ஆங்கிலபடங்களை மட்டும் எழுதி வருகிறேன். அதற்கு விசேஷ காரணங்களெல்லாம் ஏதும் இல்லை. மேலும் தமிழ்ப்படங்களை அநேகம் பேர் பார்த்து விடுகிறார்கள். அறிமுகப்படுத்தினாலும் பதுவாக மட்டுமே இருக்கும்.
மேலும் அந்த காரணம் யாதெனில் கதை சார்ந்து விஸ்வரூபத்தினை எழுதுகிறேன் என்றே வைத்துக் கொள்ளலாம் எனக்கு தாலிபான் அல் கொய்தா ஆஃப்கன் தீவிரவாதம் அமேரிக்கா-ஆஃப்கன் பிரச்சினை போன்ற எதுவும் தெரியாது. பின் எப்படி எழுதுவது ? ஒரு சமூக பிம்பத்திற்காக எழுதியிருந்தால் நிச்சயம் புருடாக்களை விட்டு அல்லது வீக்கிபீடியாவில் வாசித்து விஸ்வரூபத்தினை புகழ்ந்திருப்பேன். நானோ ஒரு கட்டமைப்பியல் பைத்தியக்காரன். அதனால் தான் என்னால் இப்படத்தினை அதிகம் ரசிக்க முடியவில்லை. அதனை மனதிற்குள் வைக்காமல் வெளியே சொல்லிவிட்டேன். அதுவும் பகிரங்கமாக.
ராஜ ராஜேந்திரனைப் போல் யாரையாவது அந்தப் பதிவு புண்படுத்தியிருந்தால் அடியேன் செய்த பிழையினை மன்னித்தருளுங்கள். . .
0 கருத்திடுக. . .:
Post a comment
கருத்திடுக