Les Misérables - 2012

சிறுவயதில் சிவகவி என்றொரு படம் பார்த்திருக்கிறேன். அது பி.யு சின்னப்பா நடித்த படம். அந்தப்படத்தில் நாற்பதிற்கும் மேற்பட்ட பாடல்கள் இருக்கிறது. ஏன் படமே பாடல்களால் நிறைந்தது எனவும் சொல்லலாம். அது கட்டாயத்தின் காரணமாக நான் பார்த்தது. இன்று நான் பார்த்த Les Misérables நான் ஆசைப்பட்ட அப்படியொரு திரைப்படம்.

இந்த படத்தினை பார்க்க நண்பனை அழைத்து அவன் வெளியே செல்லும் வேலை என்று சொல்லி அதன்பின் மறுபடியும் அவன் படத்திற்கு வந்தான். எனக்கும் அவனுக்கும் தனித்தனி இடங்களில் தான் சீட்டுகள் கிடைத்தது. முக்கால் தியேட்டர் நிரம்பியது. அவனுக்கருகில் ஒரு ஜோடி. மேலும் படத்திற்கு டிக்கெட் கொடுக்கும் போது பதினெட்டுக்கு உட்பட்டவர்கள் இப்படத்தினை பார்க்கக் கூடாது எனப் போட்டிருந்தனர். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது நான் தமிழ்நாட்டில் தான் இருக்கிறேனா என்று. படம் ஆரம்பித்த பிறகு தான் எனக்குள் ஆச்சர்யமும் பலருக்கு வெறுப்பும் ஏற்பட தொடங்கியது. ஒரு படத்திற்கு செல்கிறேன் எனில் அது மற்ற படங்களை காட்டிலும் கருவினை தவிர்த்து எடுக்கப்பட்ட விதத்தில் எப்படி மாற்றத்தினை கொண்டிருக்கிறது என்பதையே கவனிப்பேன். அந்த வகையில் இது முற்றிலும் மாறுபட்ட திரைப்படம். அது என்ன எனில் இப்படத்தில் வசனம் கிடையாது. முழுக்க முழுக்க பாடல்கள் மட்டுமே. பேசும் போது பாடிக் கொண்டே தான் தங்கள் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.

பலருடைய வெறுப்பினை இப்படம் சம்பாதிக்க காரணமும் அது தான். காரணம் முக்கால்வாசி பேர் அதனை காதல் படம் என போஸ்டரில் போட்டிருக்கிறதே என வந்திருந்தனர். படம் பார்க்காமல் அழைத்து வந்திருந்த ஆளிடம் கடலை போடும் போது கேட்டது. இது ஒரு பிரச்சினையாக இருந்தது ஏனெனில் படம் முழுக்க முழுக்க பாட்டு என்பதினால் தியேட்டரில் படத்தினை பிடிக்காமல் அநேகம் பேர் பேச ஆரம்பித்துவிட்டனர். எனக்கோ ஆங்கிலம் அரைகுறை இதில் அருகிலேயே ஒருவன் சத்தமாக பேசிக் கொண்டிருந்தால் நான் எப்படியையா படாம் பார்ப்பது ? இருந்தும் எப்படியோ கவனித்தேன். ஆரம்பத்தில் சிவகவி படத்தினை குறிப்பிட்டிருந்தேன். சின்னப்பா கிட்டபா காலத்தில் நாடக சினிமா திரை சினிமாவாக பரிணாமத்தினை கண்டுகொண்டிருந்தது. அப்போது அவர்கள் அதிகம் பயன்படுத்தியது பாடல்களை தான். அதன்பின் தான் வசனங்கள் அதில் புகுந்து பின் பாடல்கள் வசனங்களுக்கிடையில் புகுந்து இப்போது தமிழ்ச் சினிமாவில் பாடல்கள் வசனங்களுக்கிடையில் செத்துக் கொண்டிருக்கிறது. இதனை இங்கு ஏன் சொல்கிறேன் எனில் தமிழில் இப்படியெனில் ஆங்கிலத்தில் அல்லது தமிழினை தவிர இருக்கும் மொழிப்படங்களில் இந்த புரட்சி சற்று முன்னமேயே நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. இவையனைத்தும் என் யூகம் மட்டுமே. ஏனனில் இணையத்தினில் எதனையும் தேடாமல் படம் பார்த்து வந்து சாப்பிட்டு இந்த கட்டுரையினை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.


இது தான் நான் தியேட்டரில் கண்ட முதல் அவார்ட் ஜெயித்த உலக சினிமா. உன்னதமான அனுபவத்தினை எனக்கு கொடுத்தது இப்படம். இது இரண்டு விஷயங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். ஒன்று இதே பெயரினை கொண்டுள்ள விக்தோர் யூகோ எழுதிய நாவல். அது மிகப்பெரிய நாவல். அடுத்து அதே பெயரில் இருக்கும் ஒரு இசை. ஆக இதன் இயக்குனருக்கு இரண்டு மூலத்தினை சிதைக்கக் கூடாது என்பது போல பெருங் கடமை சுமத்தப்பட்டிருக்கிறது.

கதை என சொல்ல வேண்டுமெனில் அது மிக நீண்டது. பதினெட்டாம் நூற்றாண்டில் ஆரம்பித்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் வழியே கதை செல்கிறது. ஷான் என்பவன் அடிமையாய் இருக்கிறான். அவனுக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அப்படி செல்பவன் ஒரு இடத்தில் திருடுகிறான். அப்போது அவனுக்கு அன்பினை பற்றி உபதேசம் அளிக்கப்படுகிறது. அதனால் மனமுடைந்தவன் திருந்தி வாழ்கிறேன் என பரோல் கடிதத்தினை கிழிக்கிறான். புது வாழ்க்கையினை தொடங்குகிறான். ஆனால் அவனை எப்படியாவது பிடிக்க வேண்டும் என ஜாவர்ட் என்னும் போலீஸ் துரத்துகிறார். இது ஒரு கதை. மற்றொன்று அப்படி தப்பி சென்று பதினெட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வெட்டர் நெய்யும் ஒரு இடத்தில் முதலாளியாக இருக்கிறான். அங்கிருந்து ஒரு பெண் சில சூழ்ச்சிகளால் வெளியே அனுப்பப்படுகிறாள். அவள் தவறான வழிமுறைகளால் வதைகளை அனுபவித்து பணம் சம்பாதிக்கும் போது ஷான் அவளை காப்பாற்றுகிறான். அவளோ தன் குழந்தை கோசட்டினை காப்பாற்று என சொல்லி இறக்கிறாள். அவளின் குழந்தை திருட்டு தம்பதிகளின் வீட்டில் வேலைக் காரியாய் இருக்கிறது. அந்த குழந்தையினை காப்பாற்றி அவன் வளர்க்கிறான். அவளுக்கு ஒரு காதல் ஏற்படுகிறது. அந்த காதலன் அடிமைகளை காப்பாற்ற போராடும் புரட்சியாளன். இந்த சிக்கல்களெல்லாம் முடியும் இடத்தில் இக்கதையும் முடிந்துவிடுகிறது.

இந்த படம் முடிந்து வரும் போது சமீபமாக கருந்தேள் எழுதியிருந்த பாலுமகேந்திராவின் “வீடு” பற்றிய கட்டுரையில் ஒரு விஷயத்தினை குறிப்பிட்டிருந்தார் அது தான் நினைவிற்கு வந்தது. விருதுகளை வாங்கும் அநேக படங்கள் அழுகை படங்களாக இருக்கிறது என. அதே தான் இங்கு. முழுக்க முழுக்க ஒரு சோகக் காவியம் தான் இப்படம். ஆனால் அப்படி சோகக் காவியத்தினை எடுப்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது.

சோகக் கதைகளின் வெற்றியேபார்வையாளன் கண்களிலிருந்து கண்ணீரினை வரவைப்பது தான். அதற்கு பார்வையாளனை படத்தினுள் கொண்டு செல்ல வேண்டும். இந்த படமோ அதனை தலைப்பிலிருந்தே தொடர்கிறது. மிஸரெபிள் எனில் சிறு துக்கங்கள். ஆக கரு சோகம் என தெரிந்து விட்டது. அந்த சோகம் கூட ஏக்கம் என்னும் வடிவில் தான் இப்படத்தில் இருக்கிறது. ஏற்கனவே நான் சொல்லியிருப்பது போல் ஒரு கதை வெற்றியடைவது அனைத்தும் அதன் கட்டமைத்தலில் தான் இருக்கிறது. கரு எதுவோ அதை நோக்கிய பயணம் தான் திரைப்படைப்பு. இந்த படத்தில் அதனை அழகாக இயக்குனர் செய்திருக்கிறார். எந்த கதாபாத்திரம் எடுத்துக் கொண்டாலும் அது ஏக்கத்தினை தன்னுள் கொண்டு புழுங்கிய வண்ணமே இருக்கிறது. இது நிச்சயம் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு திறன்.

மேலும் இப்படம் நடப்பது வேறு ஒரு நூற்றாண்டில் அதன் அமைத்தலை திரையில் காட்டியிருக்கும் விதம் மட்டும் எனக்கு சற்று முரணாக படுகிறது. அநேக இடங்களில் இது உண்மையல்ல செட் தான் என சாமான்யனே யூகிக்கும் வண்ணம் இருக்கிறது. இது மட்டுமே எனக்கு தெரிந்து இருக்கும் குறைபாடு.

அடுத்து இப்படம் சிறந்த இசை சார்ந்த திரைப்படம் என விருதினை கோல்டன் குளோபினில் வாங்கியது. இப்படத்தின் ஆணிவேரும் இசைதான். ஆனால் நான் குறிப்பிடுவது வசனம் இசை போல வருகிறதே அதை அல்ல. இதை சற்று விரிவாகவே சொல்ல வேண்டும். இப்படம் இரண்டு மூலத்தினை அனைவரிடமும் எடுத்து செல்கிறது. ஒன்று உள்மன சோகங்கள் அல்லது உணர்ச்சிகள் மற்றொன்று இசை. இந்த இசையினை அமைப்பது பொதுவாக காட்சிக்கு ஏற்றவாறு பார்வையாளனை உறங்க வைக்காத வண்ணம் ஏற்றி இறக்கி வைப்பர். சில சினிமாக்களை கூர்ந்து கவனித்தீர்களெனில் காட்சியில் ஒன்றுமே இருக்காது ஆனால் இசையின் தாக்கத்தினால் சீட் நுனியில் சென்று அமர்ந்திருப்போம். இந்தப்படமோ முழுக்க இசையினை வடிப்பது. அப்படி இருக்கையில் எப்படி இருக்க வேண்டும் ?

இந்தப்படம் ஆரம்பித்த முதல் இருபது நிமிடங்கள் எனக்கு இசை சுத்தமாக புரியவில்லை ஏன் இப்படி இருக்கிறது என யூகித்தேன். பிறகு தான் தெரிந்தது இப்படத்தில் போடப்பட்டிருக்கும் இசையானது முழுக்க முழுக்க கதாபாத்திரங்களின் மன உணர்ச்சிகளின் அதிர்வலைகளாய் இருக்கிறது. உதாரணம் புரட்சியாளர்கள் குட்டி போர் போல ஒன்றினை அரங்கேற்றுவார்கள் அப்போது போடப்படும் இசை போர்க்காக வேகமாக ஓடுகிறது என நினைத்தால் அதற்கேற்றாற் போல மன உணர்ச்சியினை ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தினில் இயக்குனர் வைக்கிறார். டக்கென இசையின் சொந்தக்காரனாக அந்த கதாபாத்திரம் உருவெடுக்கிறது. சரியாக சொல்லியிருக்கிறேனா என தெரியவில்லை ஆனால் இசை அவ்வளவு அற்புதமாக இருக்கும்.

அடுத்து ஹ்யூக் ஜாக்மேன். இப்படத்தின் கதாநாயகன். நடிப்புத் திறமையினை அப்படி வெளிக்கொணர்ந்திருக்கிறார் என்றே சொல்லுவேன். இவர் மட்டுமல்ல இப்படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பில் அதீத சிரமத்தினை உணர்ந்திருப்பார்கள். ஏனெனில் அவர்கள் நிச்சயம் வேறு படங்களில் நடித்திருப்பர். அதில் யதார்த்த வாழ்க்கையினை போல வசனங்கள் பேசி முகபாவங்களை காட்டுவர். அதே இசை எனில் அதற்கான பாவங்கள் ரசிப்பதை போல இருக்கும். இங்கே இரண்டும் கலந்து இருக்கிறது. பாவனைகள் அனைத்தும் யதார்த்தமாகவும் வசனங்கள் அனைத்தும் பாடல்களாகவும் கொள்ளப்பட்டிருக்கும் விதம் மெய் சிலிர்க்க வைக்கிறது. எப்படி இவ்விரண்டினையும் சேர்த்திருப்பர் என்பதே என் சிந்தனையாக இருக்கிறது. இவரை தவிர சிறந்த துணை நடிகையாக ஆன் ஹாதவே விருதினை வென்றார். அவர் தான் ஷானின் கடையிலிருந்து வெளியே அனுப்பப்படும் பெண். அவளின் குழந்தையினை தேடியே அவர் செல்கிறார். இவரின் நடிப்பினை காட்டிலும் என்னை கவர்ந்தது அமாண்டா சேஃப்ரைடின் நடிப்பே.

இவர் படத்தில் கோசட் அடிமையாய் இருக்கும் திருடர்களின் வாரிசு. அவள் பெரியவளாகும் போது ஒருவனை காதலிக்கிறாள். அவனோ கோசட்டினை காதலிக்கிறான். அவளும் அவன் காதலினை ஏற்கிறாள். அப்போது இவள் கொடுத்திருக்கும் நடிப்பு மீண்டும் அந்த காட்சிகள் காண்பிக்கபட மாட்டாதா என்பது போல் என்னை ஏங்க வைத்தது.

பொதுவாக திரைப்படத்தினை பற்றி எழுதும் போது அதில் இருக்கும் திறன்களை எழுதுவேன் இப்படத்திலோ புகழ்ந்தே தள்ளிக் கொண்டிருக்கிறேன் என நினைக்க வேண்டாம். இப்படம் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை புது முயற்சிகளை அதன் உச்சி வரை சென்று தருகிறது. அதுவும் இசை அதனை என்னால் எழுத முடியவில்லை. அப்படி ஒரு மென்மை.

இப்படத்தின் டிரைலரை க்ளிக்கி பார்க்கவும்.

இதைத் தவிர கோல்டன் குளோப்பில் நாமினேட் ஆன அல்லது வென்ற திரைப்படங்களை நான் பார்க்கவில்லை. இது ஒன்றே எனக்கு உன்னத அனுபவத்தினை கொடுத்திருக்கிறது என்றே சொல்ல நினைக்கிறேன். மொத்தத்தில் Les Misérables - an orgasmic melancholy.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக