வாசிக்காமல் விமர்சனம் செய்யாதே!

சாரு தினமலரில் அண்மையில் ஒரு கட்டுரையினை எழுதினார். அதன் எதிரொலிகள் இணையதளத்தினை கலக்கிக் கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. அதில் முக்கால்வாசி எதிர்வினையாகவே இருக்கிறது. அவர் உதயகுமார் என்னும் போராளியினை சாடி எழுதியிருப்பதாக எழுதியிருக்கிறார். அதனொரு எதிர்வினையே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க். இதனை வாசித்து மேலே தொடராவும்.


இந்த வலைதளத்தினை எழுதுபவர் வா மணிகண்டன் என்பவர். இவரை எனக்கு அண்மைக்காலாமாகவே தெரியும். இவர் எனக்கு முகநூல் நண்பரும் கூட. என் வலைதளத்தினை எப்படியாவது அனைவரும் வாசிக்கும் வண்ணம் கொண்டு சேர்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது பதிவர்களை அணுகலாம் என இவரிடம் என்னுடையதை வாசித்திருக்கிறீர்களா எனக் கேட்டேன். வாசித்தேன் கட்டுரை எழுதிக் கொண்டு இருப்பதால் அதனை பின் கூறுகிறேன் என்றார். என் தவறு தான் எழுதும் போது இடையூறினை கொடுத்தது என என் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

அடுத்து சமீபகாலமாக இருக்கும் என்னை சொல்லியே ஆக வேண்டும். என்னை பார்த்து வெகு சிலர் நீ எழுதுகிறாய் என நீயே சொல்கிறாய் ஆனால் கொஞ்சம் கூட சமூகப்பார்வை இல்லையே என்றிருக்கிறார்கள் அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. உண்மையில் இப்போது எனக்கு சமூக மற்றும் அரசியல் பார்வையே இல்லை என்பது தான் உண்மை. அரசியல் பார்வை எனக்கு முன்பிருந்ததா எனில் கொஞ்சம் இருந்தது. எப்படி எங்கே போனது என்று தான் தெரியவில்லை.

இது போன்ற நேரத்தில் தான் சாரு எழுதிய கூடங்குளம் பற்றிய கட்டுரையினை வாசித்தேன். அவர் எக்ஸைல் வெளியீட்டு விழாவிலேயே நான் இனி அரசியல் சினிமா விமர்சனங்கள் எழுதப்போவதில்லை என சொல்லியிருந்தார். மேலும் அரசியல் விஷயங்களை எப்படி நாவலாக்கலாம் என்பதில் தான் என் சிந்தனைகள் இருக்கிறது என்றும் சொன்னார். மேலும் கேணியில் நடந்த சந்திப்பில் வந்திருந்த ஒரு பார்வையாளர் சாருவிடம் கூடங்குளம் பற்றி கேள்வி கேட்கப்பட்ட போது அவர் அது விஞ்ஞானிகளின் வேலை எழுத்தாளன் என்ன சொல்ல முடியும் என நிராகரித்து விட்டார். இது கூட சாருவின் கட்டுரையினை எதிர்க்க ஒரு வித்தாக இருக்கிறது. இன்னுமொரு விஷயம் கூடங்குளம் பிரச்சினைக்காக போராடும் உதயகுமார் என்பவரை அவர் சாடியிருக்கிறார் என்பதே.

அவரின் கட்டுரை - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=625329.

சாரு எழுதியதற்கு காராணம் அவரின் கட்டுரையிலேயே வருகிறது. உதயகுமாரை காந்தியுடன் ஒப்பிட்டதால் மட்டுமே இதனை எழுதியிருக்கிறார் என. மேலும் விஞ்ஞானிகள் இதனை எந்த பிரச்சினையும் இன்று நடத்தப்படலாம் எனவும் சொல்லி இருக்கின்றனர். இந்த நேரத்தில் எழுத்தாளர் இதனை எந்த ரீதியில் அல்லது விதத்தில் எதிர்க்க முடியும் ? ஜப்பானில் பூகம்பம் ஏற்பட போது அதன்காரணமாக எங்கு கூடங்குளத்தினை சுற்றியிருக்கும் இடத்திலும் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்னும் ஐயத்தில் அவர்கள் போராடுகின்றனார். இவர்களுக்கு இருக்கும் பயம் அரசாங்கத்திற்கு இல்லாமலா போய்விடும் ? அப்படி இவர்கள் சொல்லும்படியே வைத்துக் கொள்வோம், அப்படி இருப்பின் ஏன் விஞ்ஞானிகள் அங்கு சோதனை செய்ய வேண்டும், வேண்டுதலா ? இது விஞ்ஞானம் சார்ந்த பிரச்சினை. தெரிந்தால் தலையிடலாம் இல்லையெனில் தாராளமாக ஒதுங்கிவிடலாமே. அதைத் தான் சாருவும் செய்திருக்கிறார். அவர் அந்த கட்டுரையில் கூடங்குளத்தினை சார்ந்து எந்த ஒரு எண்ணத்தினையும் பதிவு செய்யவில்லை. அக்கட்டுரை முழுக்க தான் பார்த்து வந்திருக்கும் செய்தி துணுக்குகளுக்கும் உதயகுமாரை காந்தியுடன் ஒப்பிடுவதற்கும் சரியா என அவர் பார்வையில் வெளியிட்டிருக்கிறார். போராட்டம் என்னும் பெயரில் அல்லது போர்வையில் மக்களை ஏமாற்றும் அரசியல் சார்ந்த கட்டுரையே தவிர கூடங்குளத்தினை பற்றிய கட்டுரை அன்று. முதலில் அதனை புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது வா மணிகண்டன் சாடியிருக்கும் விஷயத்திற்கு வருகிறேன். அவர் சாருவினை எவ்வளவு தூரம் வாசித்திருக்கிறார் என்பதனை நான் அறிய ஆசைப்படுகிறேன். ஒரே வரியில் அவர் “உதயகுமார் எதிர்த்து சின்மயியினை ஆதரித்து நித்யானந்தாவினை ஆதரித்து” என எழுதியிருக்கிறார். இதற்கு நான் கேட்கும் கேள்வி நீங்கள் சாருவினை எவ்வளவு தூரம் வாசித்திருக்கிறீர்கள் என்பதே.

மேலும் இவர் மேல் சாட்டப்படும் குற்றங்கள் இவர் ஆவுன்னா வெளி நாடுகளுக்கு சென்றுவிடுகிறார் என. இந்த கட்டுரையிலும் கூட. பல நூல்களில் கருத்து சுதந்திரத்தினையும் தனி மனித சுதந்திரத்தினையும் ஆதரித்து எழுதி வந்திருக்கிறார். ஃப்ரெஞ்சு நாட்டில் குழந்தை அழுதால் பெற்றோர்களின் மேல் சந்தேகம் வரும் அல்லது குற்றம் சாரும் என சட்டம் அங்கிருக்கிறது. இங்கே அப்படியா ? குழந்தைகள் கொட்டடிமைகளை போல இருக்கிறார்கள். கல்வி இங்கே கற்றுத் தரப்படுவதில்லை திணிக்கப்படுகிறது. அப்படி இருக்கும் போது சுதந்திரத்தினை கொண்டாடும் நாடுகளை பார்த்து சந்தோஷப்படுவதில் என்னய்யா தவறு இருக்கிறது ? மேலும் இந்தியாவில் கட்டற்ற சுதந்திரம் கிடைக்கும் ஒரே இடம் சமூக வலைதளங்கள் மட்டுமே. காணாதததை கண்டதை போல காட்டப்படுவதால் நாம் காட்டுமிராண்டிகளாக மாறிவிடுகிறோம். இந்த நிலையினை மட்டுமே அவர் எழுதியிருக்கிறார்.

//கருத்துச் சுதந்திரத்தை மிகப் பெரிதும் மதிப்பவன் நான். ஆனால் நம்முடைய சுதந்திரம் என்பது மற்றவர்களின் மூக்கை உடைப்பதாக இருக்கக் கூடாது. நீங்கள் புகை பிடிப்பவராக இருக்கலாம். ஆனால் மற்றவரின் முன்னே புகை பிடிப்பது அவரைத் துன்புறுத்தும் செயல் அல்லவா? இவ்வளவு சின்ன விஷயத்துக்குக் கூட இத்தனை யோசிக்கும் நாம் கருத்துத் தளத்தில் எப்படி இருக்கிறோம்? ஒருவர் ஒரு கருத்தைச் சொன்னால் அதற்காக அவரை வாயில் வந்தபடியெல்லாம் ஏசுகிறார்கள். அதுவும் அவர் ஒரு பெண்ணாக இருந்தால் கதை கந்தல். மீனா கந்தசாமி விவகாரத்தில் நடந்தது நம் அனைவருக்கும் தெரியும். ”நடுத்தெருவில் வைத்து உன்னை ரேப் பண்ண வேண்டும்” என்றெல்லாம் சில பொறுக்கிகள் எழுதினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை.//

இன்று எத்தனை பெண்கள் தங்களுக்கு வரும் முகநூல் ரெக்வஸ்டுகள் சரியானவ்ர்களா எனவும் ஆபாசமாக பேசிவிடுவார்களா எனவும் பயமின்றி ஏற்றுக் கொள்கின்றனர். இது தான் நமது கட்டற்ற சுதந்திரத்தின் விளைவு.

அடுத்து நித்யானந்தாவின் பிரச்சினை. அவரின் கட்டுரை தொகுப்புகள் அனைத்தினையும் வாசியுங்கள் அவர் செய்திருக்கும் பதிவுகள் அழகுற புரியும். அவர் இருக்கும் இருத்தலினை அப்படியே பதிவு செய்யும் பழக்கம் உடையவர். தொடர்ந்து வாசிக்கும் வாசகனாக தைரியமாக இதனை சொல்வேன். கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிகம் வித்தியாசம் அவரிடம் இருக்காது. அவர் நித்யானந்தாவினை பற்றி எழுய்தியிருக்கும் “சரசம் சல்லாபம் சாமியார்” நூல் கூட அவரின் அமைப்பு சார்ந்து நடக்கும் போலித் தனங்களை எதிர்வினையாற்றுமே அன்றி அவரின் நூல்களை குறை சொல்லாது. அவர் அதனை உயர்த்தியே சொல்லியிருப்பார். கைவசம் நூல் இல்லை இருந்தால் அவர் ஒரு குறிப்பிட்டு ஒரு நூலினை சொல்லி இதனை நித்யானந்தாவினை தவிர யாராலும் எழுத முடியாது என்றிருப்பதன் பெயரினை சொல்லியிருப்பேன். இதனையும் நீங்கள் ஜால்ரா என்பீர்கள்! அது ஒரு ஆன்மீக நூல்(நான் வாசித்ததில்லை). அப்படி ஒரு நூலினை விமர்சிக்க அல்ல சொல்ல வேண்டுமெனில் நிச்சயம் சொல்பவருக்கு ஆன்மீக அனுபவங்களும் பல ஆன்மீக நூல்களினை பற்றிய விஷயங்களும் அறிந்திருக்க வேண்டும். அதில் சாருவின் மதிப்பீடு என்ன என அளக்க விரும்பினால் “மலாவி என்றொரு தேசம்” என்னும் நூலினை வாங்கி வாசியுங்கள். “கடவுளும் நானும்” என்னும் நூலினை வாசியுங்கள். ஒரு கட்டுரையினை மதிப்பீடு செய்கிறேன் பேர்வழி என அதனை மட்டுமே சமூகத்துடன் ஒன்றி பார்க்கும் பழக்கத்தினை விடுங்கள். யாதொரு கட்டுரையாயினும் அது இலக்கியம் சார்ந்த பிரச்சினையும் கூட. அதை அவரின் முந்தைய படைப்புகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது அவர் ஒரு பிரச்சினையெனில் எதனை பற்றி எழுதுவார் என்பதனை ஊகிக்க முடியும். இவரை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் நான் சொல்லும் விஷயத்திற்கு சிறந்த உதாரணம் ஞாநியின் கட்டுரைகள். சாருவினை உணர அவரின் “ஆஸாதி ஆஸாதி ஆஸாதி” மற்றும் “அதிகாரம் அமைதி சுதந்திரம்” போன்ற நூல்களை தயவு செய்து வாசியுங்கள். என்னைப் பொருத்தவரை வா மணிகண்டன் என்ற நீங்களும் ஒரு எழுத்தாளர் தான். அதனால் விமர்சனத்திற்கு முன் வாசித்து விமர்சனம் செய்யுங்கள்.

சுய விளம்பரத்தினை தேடுபவர் சாரு என சொல்லியிருக்கிறீர்கள். சாருவின் நூல்களிலிருந்து நான் அறிந்து கொண்ட பல விஷயங்களில் பிரதானமானது கருத்தினை வெளிப்படுத்த யாருக்காகாவும் பயப்படாதே, உன்னை நீ முதலில் கொண்டாடு ஆகிய இரண்டும் தான். அவர் அதனை வெளிப்படையாக செய்கிறார் நம்மைப் போன்றோர் நூதனமாக செய்கிறோம். மேலும் எக்ஸைல் விழாவினன்று அவர் நான் இனி தமிழில் எழுதப்போவதில்லை என சொல்லியிருந்தார். வருத்தப்பட்டேன். இப்போது அது தான் சரியான முடிவு என நினைக்கிறேன்.

இதனை எழுதுவதால் என்னை இன்னும் சிலர் விசிலடிச்சான்குஞ்சு எனலாம். அவர்களுக்கு என் பதில் அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.

Share this:

CONVERSATION