எப்படி எழுதாமல் இருப்பது ?

இந்த பதிவிற்கு வாசகர்களுக்கு என்று தான் பெயர் வைக்க நினைத்தேன். பிறகு தான் இன்று நடந்த சம்பவம் ஒன்று என் நினைவிற்கு வந்தது. அதனை பின் சொல்கிறேன். இப்பதிவிற்கு முன்பு நான் “சிதைக்கப்படும் நான்” என்னும் பதிவினை இட்டிருந்தேன்.  மேலும் இந்த பதிவில் எனக்கு சில கமெண்ட்டுகளும் கிடைத்தது. இந்த கமெண்ட் என்னும் விஷயத்தில் நான் பெரிய தவறினை இழைத்திருக்கிறேன் என்றே நான் நினைக்கிறேன். இந்த பதிவுதளத்தினை நான் ஆரம்பிக்கும் முன் எனக்கு சில கனவுகள் இருந்தது. அதில் பிரதானமான ஒன்று என் பதிவுதளம் நூலினை போல் இருக்க வேண்டும் என்பதே. நூல் என பார்க்கும் போது நாம் எந்த நூலிலும் நமது கருத்தினை பதிய முடியாது. அப்படியிருக்கையில் இந்த பதிவுதளத்தில் கமெண்ட் என்னும் பதிவினை எப்படி வைப்பது ? அதனால் அதனை ஆரம்பத்திலிருந்து நீக்கினேன். இது நான் செய்த பிரதானமான தவறு. இதனை திருத்தச் சொல்லி பலர் என்னிடம் சொல்லினர். நான் செய்யாமல் காலம் தாழ்த்தி அதனை இப்போது தான் செய்தேன். காரணம் இணையதளம் என வரும் போது கமெண்ட் என்னும் விஷயம் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் எழுதும் பதிவர்கள் வாசகர்களின் எண்ணங்களை நிச்சயம் அறிந்து கொள்ள முடியும்.

அப்படி நான் கமெண்டினை வைத்தவுடன் எனக்கு சில நல்ல கமெண்டுகள் கிடைத்தது. சதீஷ் மேனன் என்பவர் சொல்லியிருக்கும் விஷயம் - அன்பு நண்பர் கிமு அவர்களே .தங்கள் படைப்புக்கள் மிக அருமைதான் அதில் எள்ளளவும் ஐயமில்லை , ஆனால் அதில் சாரு நிவேதிதா அவர்களது சாயல் அடிபடுகிறது . சாரு சாரு தான் .அவர் இந்த சமுதாயத்தில் எழுந்து வர மிகுந்த சிரமபட்டார் .30 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவருகிறார் .
அதுபோல் உங்கள் எழுத்து உங்களின் தனித்துவத்துடன் இருக்க வேண்டும் . இன்றைய காலத்தில் இது சாதாரணம் , நம்மை போல 20 ஆயிரம் எழுத்தாளர்கள் BLOG இல் எழுதுகிறார்கள் .அனைத்தும் வாசிக்கப்படுகிறதா? என்று யாருக்கும் தெரியாது. எனவே தொடர்ந்து எழுதுங்கள் சுய புராணம் தவிர்த்து .
வாழ்த்துக்கள்

இந்த பதிலினை நான் அதிகம் பேரிடம் கேட்டிருக்கிறேன். அதற்கு காரணத்தினையும் என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. நான் தோன்றும் போதும் ஏதேனும் நூலினை வாசித்துவிட்டும் அல்லது திரைப்படத்தினை பார்த்துவிட்டும் அதன் தாக்கத்தினால் எழுதுகிறேன். எனக்குள் தோன்றும் வார்த்தைகளை வைத்து தான் எழுதுகிறேனே தவிர அதற்குள் எப்படி சாருவின் வாசனை வருகிறது என்பது என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை. காலப்போக்கில் மாறினால் தான் உண்டு என நினைக்கிறேன். வேண்டுமெனில் நான் சாருவினை தினம் ஒரு பத்தியாவது வாசிக்கும் பழக்கத்தினை நிறுத்த வேண்டும். அதிலேயே மூழ்கி இருப்பதால் கூட இருக்கலாம். அது என்னால் முடியாதப்பா!

மேலும் அந்த நண்பர் சுயபுராணம் என சொல்லியிருக்கிறார். அந்த பதிவியினை நான் எழுதியதற்கு காரணத்தினையும் சொல்கிறேன். அப்போது அதனை நன்கு உணர்வீர்கள் என நினைக்கிறேன். நான் அந்த பதிவில் என்னை அதிகம் விவாதிப்பதில்லை என எழுதியிருந்தேன். இதனையும் முகநூலில் ஒருவர் எழுதியிருந்தார் நான் நீங்கள் பாசிடிவாக எடுத்துக் கொள்கிறேன் என. விவாதித்தலினை நான் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம் நான் சில புதுமயான விஷயங்களை சொல்கிறேன் என்பது என் எண்ணம். அந்த எண்ணம் அதிகம் பேரிடம் சென்று சேர வேண்டும் என்பது என் ஆசை.

இன்று கூட கலைஞர் தொலைக்காட்சியில் விஸ்வரூபம் உருவான விதம் என ஒரு பேட்டி ஓடிக் கொண்டிருந்தது. அது போன்ற ஒரு கேவலமான தொகுப்பாளரை நான் பார்த்ததில்லை. பாவம் கமல்ஹாசன் அவரே கேள்விகளை சித்தரித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அவளோ வெறும் சிரிப்பு ஜால்ரா! அதில் அவர் இயக்குனராக சொன்ன ஒரு பதில் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு இயக்குனரின் வெற்றி என்பது படம் ஏற்படுத்தும் அதிர்வலைகளை திரை என்பதனை தாண்டி பார்வையாளனின் தேகத்தில் கொண்டு சேர்க்க வேண்டும். ஆனால் இதற்கிடையே இருக்கும் தூரம் சாதாரணமான விஷயமன்று. மேலும் ஒரு படம் அது எந்த ரகமானாலும் செயற்கைத்தன்மையினை திணிக்கக்கூடாது. படம் என்பது இயற்கையினை போன்றதொரு பிம்பமாக ஆக்க வேண்டும். இது தான் இயக்குனரின் பிரதான வேலை என இன்னமும் விளக்கமாக சொன்னார். அதனை விஸ்வரூபத்தில் செய்திருக்காரா என தெரியவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயங்கள் அதி அற்புதம். கூர்ந்து கவனிக்க வேண்டியவை. இந்த பேட்டியினை அதிகம் பேர் பார்த்திருப்பார்களா ? அனைவராலும் அதனை புரிந்து கொண்டிருக்க முடியுமா ? எனக்கோ இதனை எழுத வேண்டும் என தோன்றுகிறது. பகிர வேண்டும் என ஆசையாக இருக்கிறது. இங்கோ அதற்கேற்றவாறு எனக்கு நண்பர்கள் கிடையாது. அதனால் தான் என சொந்த புராணங்களையும் எழுதுகிறேன்.

மேலும் இங்கு என் வாழ்க்கையிலும் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கிறது. அதை பகிர நினைக்கிறேன். நான் யாரையும் தாக்குவதாக நினைக்க வேண்டாம். முக்கியமாக சதீஷ் மேனன். இன்று நான் பேருந்தில் ஒரு கிழவியினை பார்த்தேன். அவளுக்கு கிடைத்த சுதந்திரம் நம் யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே என் எண்ணம். என்ன அதுவும் சீக்கிரத்திலேயே பறிக்கப்பட்டுவிட்டது. முகநூலில் அதைப்பற்றி குட்டி பத்தியினை எழுதியிருந்தேன் அந்தப்பதிவு,

இன்று பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மூதாட்டி. நான் ஏறியதிலிருந்து ஒரு கி.மீ வரை அமைதியாகவே பயணித்தாள். பின் என்ன ஆனதோ தெரியவில்லை நாட்டுப்புறப்பாடல், அந்த காலத்து சினிமாப்பாடல், வாய்க்கு வந்த பாடல், ரோட்டில் செல்பவரை பார்த்து “ஓரமாப்போ ஓரமாப்போ” என சொல்வது, ஆட்டோக்காரனுக்கும் மாட்டு வண்டி காரனுக்கும் இடையே நடு ரோட்டில் நடக்கும் சண்டையினை பார்த்து ஆட்டோக்காரனை “டேய் கேனைப்பு. . . .” என வசை பாடுவது, வேறு ஒரு மாட்டு வண்டிக்காரனை பார்த்து “பார்த்துப்போ பார்த்துப்போ” என சொல்வது இடையில் திரும்பி பின் சீட்டில் அமர்ந்திருந்த என்னைப்பார்த்து “நல்லா இருய்யா” என சொன்னதும் நடத்துனர் “ஏய் கிழவி சும்மா வர முடியாதா. . .” என இன்னமும் என்ன என்னவோ சொல்லி வாயினை அடைத்துவிட்டார். பின் மீண்டும் பேருந்தில் அமைதி. இந்த அமைதியின் போது எனக்கு தோன்றிய கேள்வி அந்த இடைப்பட்ட நேரத்தில் அந்த மூதாட்டி இருந்த நிலையினை என்னால் ஏன் யூகிக்க முடியவில்லை ?

இத்துடன் இப்பதிவினை முடித்துக் கொள்கிறேன்.

Share this:

CONVERSATION

0 கருத்திடுக. . .:

Post a comment

கருத்திடுக