the social network - 2010

நான் அதிகம் பொறாமை பட்ட ஒரு திரைப்படம் இப்போது பேச இருக்கும் the social network என்னும் படம் தான். இப்படம் ஆஸ்கரில் எட்டு நாமினேஷனுக்கு சென்று மூன்றினை பறித்தது. இந்த ஆஸ்கர் போன்றவற்றையெல்லாம் தாண்டி எனக்கு ஒரு வித பொறாமை இப்படத்தில் இருக்கிறது. அது என்ன என மேற்கொண்டு வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நமது நாட்டு சினிமாக்கள் இரண்டே வகை தான். ஒன்று மசாலா மற்றொன்று சீரியஸ். இந்த மசாலாக்குள்ளேயே தான் காதல், நகைச்சுவை என அனைத்தும் இருக்கும். இப்படி இருக்கையில் இந்த இரண்டு தரப்பிலும் வணிகம் சார்ந்து ஏதேனும் சினிமா இருக்கிறதா எனில் சொற்பமே. ஷங்கர் தன் படங்களில் இந்திய பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் ஏகப்பட்ட ஐடியாக்களை சொல்கிறார்! ஆனாலும் அவை மசாலாக்களாகவே போய் முடிகிறது.

என்னால் ஏற்றுக் கொள்ளக்கூடிய வணிகம் சார்ந்த அல்லது வணிகத்தினை பேசும் இந்தியப்படம் எனில் நான் ஹிந்தியில் அபிஷேக் பச்சனும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்த “குரு” படத்தினை சொல்வேன். அந்த படம் துணி என்னும் துறையில் இருக்கும் வணிகத்தினையும் அதிலிருக்கும் வஞ்சம் பொருளாதார சதிகள் என அழகுற மணிரத்னம் அப்படத்தினை செய்திருப்பார். ஆனாலும் அப்படத்தில் பெரியதொரு பின்னடைவு இருக்கிறது. அப்படத்தினை நம்மால் கொண்டாட முடியுமா ?

இதற்கான பதிலாக அதற்குதானே ஆரம்பத்தில் மல்லிகா ஷெராவத்தின் பாடல் இருக்கிறதே என சொல்லாதீர்கள். முழுக்க முழுக்க வணிகம் சார்ந்து எடுத்து அதில் காதல், கதாபாத்திரங்களின் குதூகலம் என வைத்திருந்தாலும் அதில் பார்வையாளன் எந்த குதூகலத்தினையும் அனுபவிக்க முடியாதது போல் தான் இருக்கிறது. அநேகம் மாணவர்கள் அப்படத்தினை ரொம்ப ஸ்லோ என ஒதுக்கிவிட்டனர்.

எனக்குள் வணிகம் சார்ந்து எது வந்தாலுமே இந்த வயதில் மொக்கைதானோ என்றும் சந்தேகம் வந்தது. அதற்கென தனியாக தொலைக்காட்சி சேனால்கள் இருக்கும் போதும் நாம் அதனை பார்க்காமல் ஒதுக்கி வைக்கிறோம். அல்லது பார்த்தால் தூங்கிப் போகிறோம். என் மனதில் தோன்றிய இந்த தேற்றத்தினை தகர்த்தெறிந்த திரைப்படம் இந்த the social network.


இந்தப்படம் என்னிடம் வெகுநாட்களாக இருக்கிறது. ஆரம்பம் மட்டுமே மூன்று முறை பார்த்திருந்தேன். அதன் பிறகு ஏனோ பார்க்க மனம் ஒவ்வாமல் விட்டுவிட்டேன். நேற்று இரவு என்ன ஆனாலும் இந்த படத்தினை பார்த்தே தீர வேண்டும் என முடிவு செய்தேன். ஆரம்பத்தில் நண்பனுக்கு குறுந்தகவல்கள் அனுப்பிக் கொண்டே பார்க்கலாம் என நினைத்தேன். அந்த வேலை இந்த இயக்குனரிடம் பலிக்கவில்லை. அது கொஞ்சம் சுவாரஸ்யமானது சொல்கிறேன்.

இப்படம் எதனை பேசுகிறது எனில் முகநூலினை(facebook) கண்டுபிடித்த மார்க் ஸுக்கர்பர்க் என்பவரின் வரலாற்றினை. இந்த உண்மையினை கொஞ்சம் மறந்து படமாக நான் சொல்கிறேன். அப்போது தான் எனக்கு திருப்தி அடைந்தாற்போல இருக்கும்.

எழுத்தில் நடை என்று சொல்வார்களே அதே போல் சினிமாக்களிலும் ஒன்று இருக்கிறது. அதனை எப்படி சொல்வது என தெரியவில்லை. உதாரணம் வேண்டுமெனில் சொல்கிறேன். தமிழ் இயக்குனர் கே.வி.ஆனந்தின் படக்களை எடுத்து கொண்டீர்களெனில் துரோகம் இருக்கும், கூட இருப்பவன் கெட்டவனாகத் தான் இருப்பான், ஃப்ளாஷ் பேக் காட்சிகள் காட்சிக்கு காட்சி இருக்கும். அதைத் தான் இங்கு சொல்ல விழைகிறேன். இப்படம் slumdog millionaire இன் வகையாக எனக்கு படுகிறது.

படத்தின் ஆரம்பத்தில் மார்க்கின் காதலி அவனை விட்டு போய் விடுகிறாள். அப்போது facemash என்னும் சமூக வலதளம் பிரபலமாக இருக்கிறது. அதில் தன் காதலியினை ஆபாசமாக எழுதுகிறான். அதனை ஹேக்கும் செய்கிறான். அதன் பின் ஹாவார்ட் என்னும் பள்ளியில் இருக்கும் மாணவர்கள் இருவர் இவனிடம் ஒரு சமூக வலைதளத்தினை ஆரம்பிக்கலாம் என்கின்றனர். இவன் சரி என சொல்லி “the facebook” என்ற ஒன்றினை ஆரம்பிக்கிறான். நாடுகளுக்கு பரவுகிறது. ஆனால் அதன் முதலாளியாக மார்க் ஆகிவிடுகிறான். தன்னை ஏமாற்றி தன் ஐடியாக்களை திருடிவிட்டான் என அவன் மீது அந்த ஹாவார்ட் பள்ளியின் இருவர் சட்டத்தினை நாடுகின்றனர். இந்த கேஸ் தான் முழுப்படமும்.

இதனை ஏன் slumdog millionaire உடன் ஒப்பிட்டேன் எனில் அதில் வருவது போல கோர்ட்டில் கேட்க்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் பதிலும் கடந்த காலமும் என மாறி மாறி நமக்கு காட்சியாக வருகிறது.

இப்படத்தில் நமக்கு பிரதானமாக தெரிவது வேகம். கதாபாத்திரங்கள் நடப்பதிலும் சரி காட்சிகள் ஓடுவதிலும் சரி. வசனங்களில் இருக்கும் வேகத்தினால் தான் என்னால் நண்பனுடன் உரையாடிக் கொண்டே படத்தினை பார்க்க முடியவில்லை. இதுவரை நான் பார்த்த சொற்ப ஆங்கில படங்களுள் இத்தனை வேகத்துடன் வசனங்களை நான் கேட்டதில்லை. பிரமித்தே போனேன்.

கதாநாயகனின் நடிப்பு உண்மையில் ஆச்சர்யத்தினை அளிக்கிறது. மை நேம் இஸ் கானில் ஷாருக்கான் வெளிக்கொணரும் அந்த வியாதிக்கார நடிப்பினை போல் மார்க் யதார்த்தமாக படு சுறுசுறுப்பாக நடித்து கலக்கியிருக்கிறார். முக்கியமாக சொல்ல வேண்டிய விஷயம் முழுக்கு முழுக்க இளமையினை இப்படம் சுமந்து செல்கிறது.

இளைய பணக்காரனை பற்றி படம் எடுக்கும் போது இளமையாகத் தானே இருக்க வேண்டும் என சொல்ல முடியாது. வணிகம் சார்ந்த படம் என்பதால் மக்களுக்கு சொல்ல வரும் விஷயம் அல்லது காட்சி சென்றடைய வேண்டும் அதனால் இயக்குனர்கள் காட்சிகளில் விளக்க ஆரம்பிப்பார்கள். இப்படத்திலோ அதற்கான எந்த தடயமும் இல்லை. இயக்குனர் தன் கொண்டாட்டத்திற்கு ஏற்ப படத்தினை வளைத்திருக்கிறார். அஃதாவது இந்த காட்சி மக்களுக்கு புரியுமா இந்த காட்சி மக்களுக்கு புரியுமா என்று சிறிதும் சிந்திக்காமல் எடுத்திருப்பது காட்சியில் உணரலாம்.

படத்தில் வரும் மார்க் என்னும் கதாபாத்திரம் உலகத்திலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க இந்த சமூக வலைதளத்தினை உருவாக்குகிறான். ஆனால் அவனை படம் முழுக்க ஒரு வித தனிமை மட்டுமே துரத்துவது போலவே காட்சி அமையபட்டிருக்கிறது.

இதன் இயக்குனர் யாரென பார்த்தேன். இவர் இயக்கிய இன்னுமொரு படத்தினையும் பார்த்திருக்கிறேன் - The Girl with the Dragon Tattoo. இந்தப்படம் அனைத்து விதத்திலேயும் the social network ஐ விட மாறு பட்டு இருக்கிறது. ஒன்று மட்டுமே தான் ஒற்றுமை. இரண்டிலும் வசனமே கதையினை கொண்டு செல்கிறது. இதனை டிராமா என்னும் வகையில் வைத்தாலும் எனக்கு ஒரு திகில் அனுபவத்தினை இப்படம் கொடுத்தது என்பதே உணமை.

விறுவிறுப்பாக செல்லும் படத்தில் திருஷ்டி பொட்டினை போல் அமைந்தது இதன் க்ளைமாக்ஸ். எனக்கு சாதாரணமாக முடித்தது போல் ஒரு சின்ன உணர்வும் வருத்தமும். மொத்தத்தில் the social network ஒரு இளமைக் கொண்டாட்டம்.

இந்த படத்தின் டிரைலரை க்ளிக்கி பார்க்கவும்

Share this:

CONVERSATION