MORGUE KEEPER

சாரு நிவேதிதா தற்போது அமேசான் இணையதளத்தில் கிண்டிலில் வாசிக்கும் வசதி கொண்ட ஈபுக்கினை வெளியிட்டிருக்கிறார். அதன் பெயர் தான் Morgue Keeper. இதனை வாங்க கிண்டில் என்னும் மென்பொருள் தங்களின் கணினியில் இருக்க வேண்டும் இல்லையெனில் இந்த லிங்கினை க்ளிக்கவும். 
சாருவின் புத்தகத்தினை வாங்க இந்த லிங்கினை க்ளிக்கவும். 

அமேசான் இணையதளத்தில் இந்நூலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் குட்டி முன்னுரையானது - 

Although ‘Morgue Keeper’ appertains to Meta Fiction genre, this Borgesian text is mesmerizing and the readers were taken on a Maze game. These stories are beyond boundaries of time, space, country and creed.

Some stories in this collection broke cultural and social shackles that were considered sacred, created a furor, when they were originally published in Tamil.

Themes handled are vast and complex that no two stories would present the same experience to the reader.

Charu Nivedita takes us through a magical and maddening trip with his ‘Morgue Keeper’.

மேலே சொன்ன அமேசானின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள்.

இந்த நூலில் இருப்பது அனைத்தும் சாரு நிவேதிதா ஏற்கனவே தமிழில் எழுதி சிலர் மட்டுமே வாசித்த தமிழ் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு. இந்த மொழிபெயர்ப்புகள் தேவையா என ஒரு கேள்வி எழலாம். நிச்சயம் என்னிடம் பதில் இருக்கிறது. உலகத்துடன் போட்டியிடுவதாயினும் சரி அல்லது உலகத்தின் பார்வையில் நாம் நமது படைப்பினை வைப்பதானாலும் சரி அது அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மீடியத்தில் இருத்தல் வேண்டும். சாரு நிவேதிதாவின் படைப்புகளோ தமிழ் மொழியில் தமிழர்களே அதிகம் நுகராத வார்த்தைகள். அந்த நிலையில் தான் தன் படைப்பினை உலகத்திற்கு எடுத்துச் செல்லலாம் என முடிவினை எடுத்திருப்பார். அதிலும் அவருக்கு ஆவணமாக இருப்பது இந்நூலும் ஸீரோ டிகிரியின் ஆங்கில மொழிபெயர்ப்பும் தான்.

இந்நூலினை வாசிக்கும் அனைவரும் இது ஆங்கிலத்தில் கொண்டு செல்ல வேண்டியவையே என சொல்வீர்கள் ஒரு இடத்தினை தவிர. அதை பின் சொல்கிறேன்.

முதலில் இந்நூலிற்கு beyond bounds என்று தான் தலைப்பிட்டார்கள். அதற்குபின் தான் இந்த தலைப்பு. சரி நூலிற்கு வருவோம். நான் சொல்லப்போவது இரண்டே விஷயங்களை பற்றித் தான். ஒன்று beyond bounds என்னும் சிறுகதை. உண்மையில் இது சிறுகதையே இல்லை. அவர் எழுதிய ராஸலீலா என்னும் நாவலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட ஒரு அத்தியாயம். இந்த விஷயம் கூட வாசிக்கும் வரை யாருக்கும் தெரியாது. நாவல் என்பது ஒரு மாபெரும் கட்டமைத்தல். அதிலிருந்து சிறு பகுதியினை எடுக்கிறோம் எனில் நிச்சயம் அறுபட்டு நிற்கும் தன்மை தெரியும்.

இங்கு இன்னுமொரு விஷயத்தினையும் சொல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறேன். சாருவின் நாவல்கள் சிதறுண்ட பகுதிகளை கொண்டது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில் ஒரு அத்தியாயத்திற்கும் அதற்கு அடுத்து வருவதற்கும் தொடர்பின்றி இருக்கும். ஒட்டு மொத்த நாவலும் இப்படி தொடர்பு இல்லாமல் தான் வருமா எனில் இல்லை. மேலே சொன்னது போல் அதன் மீதம் பகுதி சிதறுண்டு கிடக்கலாம் அல்லது வாசகனின் சித்தரிப்பில் விடப்படலாம். எப்படி பார்த்தாலும் கதாபாத்திரமாவது தொடர்புடன் இருக்கத் தானே செய்யும் அஃதாவது கதாபாத்திரத்தின் ஆரம்பம். அது எதுவும் தெரியாமல் சரியாக ஒரு பகுதியினை மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

இரண்டு விஷயங்களை சொல்லப்போகிறேன் என சொல்லியிருந்தேன் அல்லவா ஒன்றினை சொல்லிவிட்டேன் மற்றொன்றானது transition. எனக்கு சாருவினை அதிகம் பிடிக்கச் செய்யும் விஷயமும் இந்த transition தான். அது என்ன என்று சொல்ல நிச்சயம் நான் ஏதேனும் கதையினை கையில் எடுத்துக் கொண்டே ஆக வேண்டும். Message Bearers from the Stars and Necrophiles. இந்தக் கதைக்குள் செல்வதற்கு முன் இது சார்ந்து எனக்கு தெரிந்த விளக்கத்தினை சொல்லிவிடுகிறேன்.

சிறுகதையானாலும் நாவலானாலும் அதில் கட்டமைத்தல் என்ற ஒரு விஷயம் இருக்கிறது. அந்த கட்டமைத்தலுள் தான் கதாபாத்திரத்தின் அமைப்பும் கதையின் போக்கும் இருக்கிறது. முதலில் கதாபாத்திரத்தின் அமைப்பு. எத்தனை கதாபாத்திரத்தினை கொண்டுவந்தாலும் அது கதையினை விட்டு தனித்து நிற்கக் கூடாது. அப்படி நின்றால் அதுவே அந்த கதையின் பின்னடைவிற்கு காரணமாகிவிடும். இதற்கான எடுத்துக் காட்டு beyond bounds.

இந்தக் கதையில் பிரதானமாக வாசகனுக்கு தெரிவது ரேவதி மற்றும் பெருமாளின் காதல். பெருமாள் தினமும் இரயிலில் கக்கூஸின் அருகாமையிலேயே அமர்ந்து பயணம் செய்பவன். அவன் அப்போது தான் ரேவதியினை பார்க்கிறான். இதன்பின் அவர்களின் காதலில் நுழையும் கதாபாத்திரம் இரயில் துறை அமைச்சர் ஃபெர்னாண்டஸ். எப்படி எனில் சீசன் டிக்கெட்டினை வைத்து எக்ஸ்பிரஸில் பயணம் செய்பவர்களை மடக்க வேண்டும் என முடிவு செய்தார். அதன் விளைவு பெருமாள் மற்றும் ரேவதியின் சந்திப்பு.

சிலந்தி வலைப்போல கதை மாந்தர்கள் அனைவரும் பெருமாள்-ரேவதியின் காதல் அமைப்புக்குள் சிக்கியிருக்கிறார்கள். அழகுற அதன் வழியிலேயே சென்று ஒவ்வொரு கதாபாத்திரத்தினையும் அந்த அந்த இடத்தில் உலவவிட்டு பின் அவர்களை பிரதியிலிருந்து காணாமல் போகவைத்து விடுகிறார். வாசகனுக்கோ அவன் வந்ததும் தெரியாது போனதும் தெரியாது!

அடுத்து கதையின் போக்கு. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு Message Bearers from the Stars and Necrophiles. இந்தக்கதையின் மூலத்தினை வாசித்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. இப்போது வாசிக்கும் போது முழுதும் புதிதாக வாசிக்க ஆரம்பித்தேன். இந்நூலினையே அப்படி தான் ஆரம்பித்தேன். இந்தக் கதை என்னுள் பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. இக்கதையின் ஆரம்பம் கலிலியோவின் கண்டுபிடிப்பில் தொடங்குகிறது. இரண்டு பக்கம் அதில் போகும் போது தலித்தினை பற்றி சில வரிகள் வருகிறது. அங்கிருந்து நெக்ரோபீலிக் என்னும் உளவியல் பிரச்சினை பக்கங்களில் வருகிறது. நெக்ரோபீலிக் எனில் சவங்களின் மேல் ஏற்படும் ஈர்ப்பு. இதற்கு பின் எந்த வரிகளினை நோக்கி சென்றாலும் அது மரணத்தினை கொண்டாடும் வண்ணமே இருக்கும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமெனில் book of fuzoos பற்றிய பத்திகள். அது ஃபூசோ என்னும் இனத்தினை பற்றி டீடியர் எடுத்த குறிப்புகள். அதில் அந்த இன மக்கள் வதையினை அப்படியே காமத்தின் அடிநாதமாய் மாற்றுகிறார்கள். அந்தக் கதையினை ஒரு பத்து பன்னிரெண்டு பக்கம் என வைத்துக் கொள்ளுங்கள் அந்த அத்தனைப் பக்கங்களும் ஆச்சர்யத்தில் மட்டுமே இருப்போம். ஆனால் அந்த அனைத்து ஆச்சர்யத்தினையும் உடைத்தார் போல கதையின் இறுதியில் ஒரு பத்து பன்னிரெண்டு கேள்விகள் கேட்கப்படும். அந்த கேள்விகளே நம்மை மீள்வாசிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அடுத்து சொல்லப்போவது நேனோ என்னும் சிறுகதை. இக்கதை எவ்வித கட்டமைப்பும் இல்லாதது போல் தோற்றமளிக்கும். ஏனெனில் அதில் குறியீடுகள் இல்லை. வார்த்தை எங்கும் பிணைக்கப்படவில்லை காகிதத்தில் வார்த்தைகளும் எழுத்துகளும் ஓடுவது போலவே இருக்கும். பாதி கதையினை யார் என்றாலும் தைரியமாக வாசித்துவிடலாம். மீதியினை நாம் கொள்ளும் புரிதலில் தான் மொத்தக் கதையே இருக்கிறது. ஒட்டு மொத்த நூலிலும் சாருவினை எக்காலத்திற்கும் எடுத்துச் செல்லக்கூடிய கதை இந்த நேனோ ஒன்று தான்.

அப்படியெனில் எடுத்து செல்ல முடியாதபடி கதை இருக்கிறதா என்னும் விதண்டா வாதத்திற்கும் பதில் இருக்கிறது. Trilokpuri block no 27 என்னும் கதை. இக்கதை முழுக்க முழுக்க இந்தியாவில் நடந்த சீக்கிய படுகொலைகளை பிண்ணனியாக கொண்டுள்ளது. இக்கதையினை அப்படியே நிச்சயம் நம்மால் காலம் கடந்து எடுத்து செல்ல முடியாது. ஆனாலும் அதில் காட்டப்படும் உக்கிரம் வன்முறை இன்னமும் வெவ்வேறு காரணத்தினால் நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இது புனைவின் வடிவில் நம்மிடம் இருக்கும் ஒரு நல்ல ஆவணம் என்பது என் கருத்து.

இன்னும் இந்த நூலில் morgue keeper, thorn, stalking shadows என மூன்று கதைகள் இருக்கிறது. எந்தக் கதையும் ஒன்றுக் கொன்று சோடையில்லை என காண்பிக்கும். எனக்கு மொழிபெயர்ப்பில் கொஞ்சம் அலுப்புதட்டியது thorn மட்டுமே. அந்த கதையினை தமிழில் வாசியுங்கள் அதகளம் செய்யும். தமிழில் முள். ‘மதுமிதா சொன்ன பாம்பு கதைகள்’ என்னும் நூலில் இருக்கிறது.

ஒரு இடத்தினை தவிர என சொல்லியிருந்தேன் அல்லவா அது கடைசியில் திஷானி தோஷி சாரு நிவேதிதாவினை எடுக்கும் பேட்டியினைத் தான். ஏன் என்றும் சொல்கிறேன். ஏழு கதைகளில் சாரு தமிழ் நாட்டினை அழகுற வெளிக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் நாட்டில் ஆகஸ்டு மாதத்திற்கும் கோலா மீனிற்கும் இருக்கும் உறவினை சொல்வது, தமிழ் நாட்டின் அவல சூழ்நிலையினை சொல்வது, இங்கு மார்க்ஸீயத்தின் அது மட்டுமின்றி மற்ற கோட்பாடுகளால் சொந்த வாழ்க்கையில் இருக்கும் மாற்றங்களை சொல்வது, அந்த நெக்ரோபீலிக்கினையும் அத்வைதத்தினையும் இணைப்பது என ஓரான் பாமுக் தன் “என் பெயர் சிவப்பு” நாவலில் இஸ்தான்புல்லினை துயிலுரித்து உலகத்திற்கு காட்டியிருப்பது போல் தமிழகத்தினை காட்டியிருக்கிறார். இதில் தான் விஷயம் இருக்கிறது. என்னதான் அதனை காட்டினாலும் அதனை நம்ப வேண்டும் என்னும் நிலையில் நாம் நிச்சயம் இல்லை ஏனெனில் அது புனைவு. ஆனால் கடைசியில் அவரின் பேட்டி இருக்கிறதே அதனை உலக மக்கள் நிச்சயம் வாசிக்ககூடாது. அது வெளியிடுவதால் சாருவிற்கோ அவரின் வாசகர்களுக்கோ எந்த இழப்பும் கிடையாது.

நான் கொஞ்சம் அந்த வாசகன் என்னும் தளத்திலிருந்து வெளிவந்து ஜனரஞ்சக தன்மையில் அதனை வாசித்தால் தமிழக மக்களை இதைவிட அசிங்கப்படுத்த முடியாது என்றே கூறுவேன். ஒட்டு மொத்த தமிழகமே ஒரு philistine சமூகம் என சொல்லுகிறார். இதில் தவறு இருக்கிறதா எனில் நிச்சயம் இல்லை தான். நாம் இன்னமும் பண்டைய நூல்களை கட்டி பிடித்து அழுகிறோமே தவிர சமகாலத்திய எழுத்துகளை நுகர்வதே கிடையாது. ஆனால் இதை ஒட்டு மொத்த உலகத்திற்கே வெளிச்சம் போட்டு காட்டும் போது நாம் தலைகுனிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதிலிருந்து மீள வழியே இல்லையா என்றால் அதுவும் வளரும் தலைமுறையின் கையினில் தான் இருக்கிறது. இப்போதே இலக்கியத்தின் இடத்தினை மசாலா சினிமாக்கள் கையினில் எடுத்துவிட்டது இதில் இனி வரும் தலைமுறை. . .கற்பனைக்கு அப்பால் தான் இருக்கிறது. எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. ஒரு எழுத்தாளனோ கவிஞனோ இயக்குனரோ நிச்சயம் தனிமனிதன் கிடையாது. அவன் வாழும் சமூகத்தின் பிரதிநிதி. ஆனால் அந்த ஒருவன் தான் வாழும் சமூகத்திலிருந்து வேறு ஒரு சமூகத்திற்கு செல்கிறான் எனில் அதுவும் சொந்த இடத்தில் அங்கீகாரம் கிடைக்காமல் எனில் அதற்கு யார் காரணம் ???? கொஞ்சம் சிந்தியுங்கள்.

அந்த கட்டுரையினை உலகமே வாசிக்கிறது என நினைக்கும் போது சாருவின் வாசகன் என்பதைத் தாண்டி ஒரு சாமான்யனாக எனக்கு அசிங்கமாக இருக்கிறது. . .

Share this:

CONVERSATION