க.நா.சு வின் தெய்வம்

ஏற்கனவே இவரின் இரண்டு நாவல்களை நான் சிலாகித்திருக்கிறேன். இன்னும் அவரின் நாவல்கள் இருக்கிறதா என தேடி கடைகளுக்கு சென்றால் கொஞ்சம் அழுக்குடன் ஒரே ஒரு பிரதி இருந்தது. அந்த நாவலினை தான் இங்கே சிலாகிக்க இருக்கிறேன். இது அவரின் சிறந்த நாவலாக கருதப்படுகிறது.

இதன்பின்னும் அந்த கடைகளில் அவரின் படைப்புகள் இல்லை. இந்நாவலுக்குள் போவதற்கு முன் இக்கதை எதனை வழிநடத்தி சொல்கிறது என பார்ப்போம்.

ஒரே விஷயத்தினை மட்டும் தான் இந்நாவல் சொல்வதாக என் எண்ணம். அது யாதெனில் ஆசை. மனிதனாக இருப்பவன் அனைவருக்கும் ஆசை இருப்பது சகஜம் அல்லது இயல்பான ஒன்று. ஆனால் ஆசையே ஒரு பிறவியினை மனிதன் என நிர்ணயிக்கிறது என்கிறது இந்த நாவல். ஆசை என்னும் உணர்வினை மனித உருவாக க.நா.சு சித்தரித்திருக்கிறார்.

ஆசை என்று வரும் போது நிச்சயம் ஒரே ஆசையினை நாம் கொண்டிருக்க மாட்டோம். நாளுக்கு நாள் நிமிடத்திற்கு நிமிடம் நமது ஆசைகள் மாறிக்கொண்டே பரிணமித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி மாறும் போதோ பரிணமிக்கும் போதோ பழைய ஆசைகளின் நிலை என்ன ? அவைகள் உயிர் பெறுகிறதா ? இங்கு உயிர் என்பதன் அர்த்தம் ஆசைகள் நிறைவேறுவது. நிறைவேறாமல் ஆசைகள் போவதற்கு காரணம் ? நம்மின் முயற்சியின்மை மட்டுமே தானா ? அல்லது முயற்சி செய்தும் நம்மை முன்னேற விடாமல் நம் சூழல் தடுக்கிறதா ? இந்த அனைத்திற்கும் பதில் நாவலில் கதையின் உருவில் இருக்கிறது.

இந்நாவல் இதனை மட்டும் தான் சித்தரிக்கிறதா எனில் கதையின் போக்கில் nostalgic உணர்வினை வித்தியாசமாக சொல்லியிருக்கிறது. அது என்ன nostalgic எனில் பூர்வ நிலைகளின் பிரதி பிம்பம். நாம் நம் சொந்த ஊருக்கு சென்றபின் நமது சொந்த ஊரின் நினைவுகள் வருகிறதே அது தான் nostalgic உணர்வு. இங்கு கதையில் ஒருவன் ஊரில் வாழ்கிறான் எனில் அந்த ஊரும் அவனுடன் ஏதோ ஒரு வகையில் எப்படியும் உறவாக இருக்கிறது என்பது போல் சொல்லப்படுகிறது. உதாரணத்திற்கு தூரத்து சொந்தங்கள் என சொல்வதுண்டு. அநேகம் பேர் அவர்களை பார்த்திருக்க கூட மாட்டார்கள். ஆனாலும் சொந்த என்னும் பிணைப்பில் இருப்பர். அதே போல் தான் நாம் வாழ்ந்த ஊரும் புறக்கணிக்க முடியாத ஒன்று என்பது ஆசிரியரின் வாதம்.


இந்நாவல் எனக்கு திருப்தியளிக்கவில்லை என்பதே நான் நேர்மையாக சொல்ல வேண்டிய கருத்து. ஏற்கனவே இவர் எழுதிய வாழ்ந்தவர் கெட்டால் மற்றும் அசுரகணம் ஏற்படுத்திய தாக்கத்தினை இது நிறைவு செய்யவில்லை. இதன் கரு எனக்கு ஆகப் பிடித்திருந்தது ஆனால் அதனை கொண்டு சென்ற நடை மிகவும் மெதுவாக இருக்கிறது. இது நான் அதீதம் இந்நாவலினை எதிர்பார்த்ததனால் கூட இருக்கலாம். ஒன்று உண்மை க.நா.சு வின் படைப்புகளில் முதலில் இதனை வாசித்திருந்தால் அதிகம் சிலாகித்திருப்பேன்.

இதன் கதை என சொல்ல வேண்டுமெனில் அது ஒரு தனிமனிதனின் வரலாறு. சோமு என்பவனின் முழு வரலாற்றினையும் இக்கதை சொல்லுகிறது. அவன் மூலமாக க.நா.சு தனக்குள் இருக்கும் தெய்வம் என்னும் வார்த்தையின் பொருளினை தேட முனைந்திருக்கிறார்.

நாவலின் அமைப்பினை சொல்ல வேண்டுமெனில் மூன்று பகுதிகளாக பிரிக்க பட்டிருகிறது. இதற்கிடையில் உப பகுதிகளும் உள்ளது. அது மிக முக்கியம். அதனை தனியாக சொல்கிறேன்.

முதல் பகுதியில் சோமுவின் பதினோரு வயது வரை வருகிறது. இந்த பகுதி முழுக்க குறும்புகள் ஏக்கங்கள் அங்கு அவனுக்கிருக்கும் ஆசைகள் இதைத் தாண்டி கதைக்கென வைத்திருக்கும் அல்லது வைத்திருப்பது போல வரும் வீர தீர சாகசங்கள். அடுத்து முப்பது வயதில் அவன் எப்படி சோமசுந்தர முதலியார் ஆகிறான் என்பதையும் அதை நிலைநாட்ட அவன் செய்யும் வேலைகள் அந்த பருவத்து ஆசைகள் என இரண்டாம் பகுதி. மூன்றாவதோ சின்ன பகுதி. சோமசுந்தர முதலியார் எப்படி சோமசுந்தர பண்டாரம் ஆகிறார். இந்தப்பகுதி நான் என்ன என்னவோ யோசித்தேன். அதெப்படி யோசிக்க முடியுமெனில் நாவல் ஆரம்பிப்பதற்கு முன்பே ஒரு கட்டுரை வருகிறது. அதில் இருந்தது. நான் யோசித்த அனைத்தினையும் எதிர்த்து கொஞ்சம் தத்துவ சாறுகளுடன் பண்டாரமாக்கியிருக்கிறார் க.நா.சு.

உப பகுதி என சொல்லியிருந்தேன். அது என்ன எனில் நாவலில் வரும் இரண்டு இடைவேளைகள். நாவலில் இடைவேளையா என உள்ளடக்கத்தினை பார்த்த போது அது எப்படி சாத்தியம் என ஆச்சர்யப்பட்டேன். ஆனால் சரியாக அதனை கொண்டு வந்திருக்கிறார். கதை சோமு - முதலியார் - பண்டாரம் என செல்கிறது. ஆனால் இம்மூன்றிற்கும் இடையில் ஒரு காலவெளி இருக்கிறது. அதனை நிரப்புவது தான் இந்த இடைவேளை. fast forward செய்வது போல் சோமனின் வாழ்க்கையினை ஓட்டியிருக்கிறார். ஆச்சர்யகர விஷயம் யாதெனில் நாவலில் சோமனின் அகம் புறம் இரண்டும் அழகுற சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னுமொரு விஷயத்தினையும் நான் சொல்லியே ஆக வேண்டும். நமக்கு ஒரு தெய்வம் போதாது. அதைத் தாண்டி ஒரு தெய்வம் கிடையாது. அது எப்படி என சிந்திப்பதில் தான் க.நா.சு வின் தத்துவ போக்கே வருகிறது. அவர் ஆசைகளை தெய்வங்களாக்குகிறார். நிமிடத்திற்கு ஒரு தெய்வம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஒரு தெய்வத்தினை உண்மையாகக் காட்ட மற்றொரு தெய்வத்தினை பொய்யாக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறோம். இந்த தத்துவத்தினை ஆசையிலிருந்து கதாபாத்திரத்தின் வழிய்ர்க மருவி சொல்லியிருக்கிறார்.

இந்நாவலினை நான் எனக்கு அவ்வளவு தூரம் பிடிக்கவில்லை என்று சொன்னேனே தவிர மோசம் என்று சொல்லவில்லை. இந்நாவலின் கடைசியில் சி.சு.செல்லப்பா எழுதிய விமர்சனம் ஒன்று வருகிறது.நாவல் 1946 இல் வெளியானது. இந்த விமர்சனமோ 1966 இல் வெளியானது. விமர்சனத்தில் நாம் வாசித்த நாவலினையே நமக்கு புது கோணத்தில் காண்பிக்கிறார்.

இந்த இடைவேளை என்னும் விஷயம் இந்த நாவலின் புது திறன் என நினைத்திருந்தேன். ஆனால் செல்லப்பாவோ இந்த இடைவெளி என்னும் விஷயம் எப்படியும் அனைத்து நாவலிலும் வருகிறது என்பது போல் சிலாகிக்கிறார்.

கால அளவை இடைவெளி அவகாசத்தை வைத்துக் கதை நிகழ்ச்சி இல்லை. அறுந்த வினாடிகளுக்கு இடையேயும் அறாத பொருளின், கருத்துப் போக்கினை கொடுத்துவிட்டுத் தெரியாதிருக்கச் செய்து கதையின் ஒருமைப்பாட்டைச் சாதித்து காட்டுவதில் தான் கலைஞனின் திறமை இருக்கிறது.

செல்லப்பா சொல்லும் இன்னுமொரு விஷயமும் என்னை சிலிர்த்தது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு நாவல் கோட்பாடு இருக்கிறது. அதனால் இந்நாவலினை அதனுடன் சமன் செய்து பார்க்க விரும்பவில்லை. இது தமிழின் சிறந்த இலக்கியம் என்கிறார்.

இன்னும் அந்த குறிப்பிட்ட கட்டுரையில் செல்லப்பா சொல்லும் விஷயங்கள் நிறைய இருக்கிறது. ஒரு நாவல் யதார்த்தத்தினை பிரதிபலிக்க வேண்டுமா ? அல்லது அதில் வரும் கதாபாத்திரம் யதார்த்தத்திலும் அல்லது யதார்த்தத்தினை ஒத்தது போன்று இருக்க வேண்டுமா ? போன்ற கேள்விகளுக்கு அருமையாக பதில் சொல்லியிருக்கிறார். என்ன அவை அனைத்தும் என் புரிதலுக்கு அப்பால் இருக்கிறது. அதனை மீள்வாசிப்பு செய்ய இருக்கிறேன். அதற்காகவே இந்நூலினை வாங்க வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

இந்நாவல் தனிமனிதனின் வாழ்க்கையின் மூலம் ஏகப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறது. ஆழ்ந்து வாசியுங்கள் என்பது அடியேனின் சின்ன அறிவுரை.

Share this:

CONVERSATION