Run Lola Run - 1998

ரன் லோலா ரன் என தலைப்பில் சொல்லியிருக்கும் திரைப்படம் ஜெர்மானிய திரைப்படம். 1998இல் வெளியானது. இந்தப்பட்த்தினை எந்த வகைபடுத்துவது என்றே தெரியவில்லை. எப்படி என சொல்கிறேன். நமக்கு தெரிந்த வரை திரைப்படங்களில் சஸ்பென்ஸ் த்ரில்லர் ட்விஸ்ட் என மூன்று மும்முர வகை இருக்கிறது. இது மூன்றுக்கும் வித்தியாசம் இருக்கிறதா எனில் நிச்சயம் உண்டு.


சஸ்பென்ஸ் படங்களினை எப்படி வகைப்படுத்தலாம் எனில் கதாபாத்திரங்கள் ஏன் வருகிறது எதற்காக இந்த சம்பவம் நடக்கிறது மேலும் நகரும் காட்சிகளின் அர்த்தம் புரியாமலேயே செல்லும். இது போன்ற படங்கள் அனைவருக்கும் பிடிக்குமா என்பது எனக்கு தெரியவில்லை. மெமெண்டோ எனும் படம். அதனை காப்பியடித்து மொக்கையாக எடுத்தது தான் கஜினி. அந்த மூலப்படத்தினை பார்த்தீர்களெனில் படம் க்ளைமாக்ஸில் ஆரம்பித்து முதல் காட்சியில் முடியும். அது மட்டுமில்லை இடையிடையில் ஓட்டத்தினை தடை செய்தவாறு சம்மந்தமே இல்லாமல் காட்சிகளும் செல்லும். இதை பார்க்கும் போது அனைத்து காட்சிகளுமே ஏன் நடக்கிறது என்னும் கேள்வியில் பயணிப்போம்.

அதே த்ரில்லர் படமெனில் ஒரு கொலையோ கொள்ளையோ நடக்கும். அதற்கு காரணமானவன் படத்தின் ஆரம்பத்திலிருந்து திரையில்வந்து கொண்டுதான் இருப்பான். கடைசியில் படத்தில் ஹீரோ துப்பறிந்து கண்டறியும் போது நமக்கு பிரம்மிப்பினை கொடுக்கும்.

ட்விஸ்டிற்கும் த்ரில்லருக்கும் அதிகம் வித்தியாசமில்லை. இந்த ட்விஸ்ட் என்னும் விஷயத்தில் பார்வையாளனும் படத்தினில் பங்கேற்கிறான். எப்படி என பார்த்தால் ஒரு சுவாரசியமான படத்தினை பார்க்கும் போது நாம் சில விஷயங்களை அவதானிப்போம். காட்சியோ அதற்கு மாறாக முற்றிலும் வித்தியாசமாக அமையும். இது சில படங்களில் மொக்கையாகாவும் அமைய வாய்ப்புகள் இருக்கிறது.
இவையனைத்தும் இதுவரை நான் கொண்ட அவதானிப்பு.
இந்த படத்தினை இந்த மூன்று வகையினிலும் வைக்க முடியவில்லை. 


we shall not cease from exploration and the end of all our exploring will be to arrive where we started and know the place for first time - T.S.Eliot
இது படம் ஆரம்பிப்பதற்கு முன் காண்பிக்கப்படுகிறது. இதனை அஃதாவது இவ்வாக்கியத்தினை கதையின் மூன்று முக்கிய பகுதியில் அழகுற செய்திருக்கிறார் இயக்குனர். முதல் காட்சியே மக்கள் கூட்டம் அதில் சிலரை மட்டும் நிறுத்தி காண்பிக்கிறார்கள். திரைக்கு பின் ஒரு குரல் கதை சொல்வதை போல் பின் வருவதை சொல்கிறது “மனிதன் என்னும் மர்ம பிறவியில் எண்ணற்ற கேள்விகள் அடங்கியுள்ளது அதற்கெல்லாம் பதிலினை கண்டறியும் போது அடுத்த கேள்வி ஆரம்பிக்கிறது.” இதனுடன் இன்னுமொரு வாக்கியமும் சொல்லப்படுகிறது-மனிதன் ஏன் எதையும் நம்புகிறான் ? எனக்கென்னவோ இது தான் கதையோ என தோன்றுகிறது.

சரி படத்திற்கு செல்வோம். லோலா கதையின் நாயகி. அவளின் காதலன் மணி(manni). இருவரும் ரோனி என்பவனிடம் வேலை பார்ப்பவர்கள். இவர்கள் ஒரு வகையில் குற்றவாளிகளே. இம்முறை மணியிடம் கொடுக்கப்பட்ட வேலை சில வைரங்களை ஒருவனிடம் கொடுத்து பணத்தினை வாங்கி வர வேண்டும். அதன் படி இவனையும் அந்த இடத்தில் இறக்கி விட்டனர். அவன் பணம் வாங்கி வரும் போது லோலா அங்கே வருவாள் இருவரும் சேர்ந்து பணத்தினை ரோனியிடம் கொடுத்து விடுவர். இம்முறை லோலா வரவில்லை. ஏனெனில் அவளுடைய மொபட்டினை ஒருவன் திருடிவிட்டான். அவள் வராததால் இரயில் வழியே செல்லலாம் என முடிவு செய்தான். இரயிலில் ஒரு பிச்சைக்காரனை சந்திக்கிறான். அவன் கீழே விழுகிறான். இவன் எழுப்பி விடுகிறான். அப்போது அங்கே போலீஸ் வருகிறது. போலீஸினை யதேச்சையாக பார்த்தவுடன் மணி ஏதோ பயத்தில் அங்கிருந்து செல்கிறான். அதுவும் பையினை விட்டுவிட்டு. போலீஸ் சந்தேகத்தில் அவனை பிடிக்கின்றனர்.இரயில் கிளம்பி விடுகிறது. பிச்சைக்கார அந்தப்பையினை எடுத்து விடுகிறான். அடுத்த இரயில் நிலையத்தில் பிடித்து விடலாம் என்பதற்குள் அவன் சென்று விடுகிறான். இது முழுக்க நடந்த விஷயங்கள்.கதையின் நிகழ்காலத்தில் நேரம் 11:40. அந்த பையில் இருந்த தொகை 100,000. இன்னும் இருபது நிமிடத்தில் அந்த தொகையினை ரோனியிடம் கொடுக்கவில்லையெனில் ரோனி மணியினை கொன்றுவிடுவான்.

உடனே லோலா வீட்டிலிருந்து ஓட ஆரம்பிக்கிறாள். நேரே அப்பாவிடம் சென்று பணம் கேட்கலாம் என. வழியில் குழந்தையினை வைத்திருக்கும் பெண்மணியினை இடித்து வசை வாங்குகிறாள். அந்த பெண்மணியின் வரலாற்றினை வேகமாக போட்டோக்களாக காண்பிக்கிறார் இயக்குநர். அவள் ஒரு குழந்தை திருடி. அவள் ஓடும் போது அந்த பிச்சைக்காரனையும் தாண்டி செல்கிறாள். அப்பாவின் அலுவலகத்தில் அவர் வேறு ஒரு பெண்ணுடன் காதல் பேசிக் கொண்டிருக்கிறார். அவள் நாம் இருவரும் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா என்பதற்கு சரி என்கிறார். அப்போது லோலா அங்கே வருகிறாள். ஏன் என்றதற்கு விஷயத்தினை மணியினை பற்றியும் சொல்கிறாள். அவரோ இனி உன்னையும் உன் அம்மாவினையும் பார்க்க வரப்போவதில்லை நான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போகிறேன் என்கிறார். மேலும் உன் மூலம் அப்பனானவன் நீ பிறப்பதை பார்த்திருக்கமாட்டான் என பஞ்ச் ஒன்றினை கொடுத்து வெளியே அனுப்புகிறார். முன்னர் செய்த போன் காலிலேயே மணி அந்த போன் பூத்திற்கு எதிரில் இருக்கும் சூப்பர் மார்க்கெடினை கொள்ளையடிக்கலாம் என்கிறான். இவளோ நான் வரும் வரை காத்திரு என்கிறாள். இடையில் இவள் பார்ப்பவள் இன்னும் சில பேர் இருக்கிறார்கள். ஓடும் போது ஒருவன் சைக்கிளில் வண்டி வேண்டுமா ஐம்பது மார்க் தான் என்கிறான் இவள் வேண்டாம் என ஓடுகிறாள். மிஸ்டர்.மேயர் என்பவர் காரினை ஒரு இடத்திலிருந்து வெளியே கொண்டு வருகிறார். அப்போது வேகமாக அந்த காருக்கு முன் லோலா ஓடுகிறாள். எங்கே என அவளை பார்த்துக் கொண்டே வந்து கொண்டிருக்கும் காரின் முன் பக்கத்தினை இடித்து விடுகிறார். இவள் ஓடும் போது ஒரு ஆம்புலன்ஸ் இவள் அருகில் வருகிறது. இவளது ஓட்டமும் ஆம்புலன்ஸின் வேகமும் சிலர் ஒரு பெரிய கண்ணாடியினை எடுத்துச் செல்வதால் தடைப்படுகிறது. அதன் பின் அவள் அங்கே செல்கிறாள். அதற்குள் அவன் கொள்ளையில் இறங்கி விடுகிறான். இவளும் உடன் சேர்ந்து கொள்ளையில் பணத்தினை எடுத்துக் கொண்டு ஓடுகின்றனர். போலீஸ் பிடித்து பணத்தினை கேட்கின்றனர். பணத்தினை மேலே மூட்டையுடன் எறிகிறான். அப்போது அந்த மூட்டையினை பார்த்துக் கொண்டே ஒரு போலீஸின் விரல் ட்ரிக்கரினை அமுக்கிவிடுகிறது. தோட்டா லோலாவின் மார்பில். கடந்த காலத்திற்கு திரை நகர்கிறது. அங்கே லோலா மணியினை கேட்கிறாள் என்னை நீ எவ்வளவு தூரம் காதலிக்கிறாய் ? நான் உலகத்திலேயே சிறந்த பெண் என்பதை எப்படி சொல்கிறாய் ? இதற்கெல்லாம் அவன் வார்த்தை போகிற போக்கில் சொல்கிறேன் என்கிறான். நீ எதையுமே நிச்சயமின்மையுடன் சொல்கிறாய் என்கிறாள். என்னை விட்டு போகப் போகிறாயா என்னும் கேள்விக்கு இனிமே முடிவு செய்ய வேண்டும் என்கிறாள். நிகழ் காலத்திற்கு வருகிறது. அங்கே அவள் சொல்கிறாள் நான் போக விரும்பவில்லை இங்கே கதை மறுபடியும் ஆரம்பிக்கிறது. அஃதாவது மீண்டும் முதல் போன் காட்சியில்.

மீண்டும் அதே ஓட்டம். இம்முறை அப்பெண்மணியினை இடிக்கும் போது அவள் ஜாக்பாட்டினை ஜெயிப்பதாக போட்டோக்களில் காண்பிக்கப்படுகிறது. உண்மையில் பணத்தினை திருடிய பிச்சைக்காரனையும் இடிக்கிறாள். இம்முறை அப்பாவினை சந்திக்கும் போது அவரின் கள்ளக் காதலி என் வயிற்றில் வளரும் குழந்தை வேறு ஒருவனுடையது என்கிறாள். அதற்கான வாதம் அங்கே போகும் போது தான் லோலா அங்கே நுழைகிறாள். இவளை அப்போதே வெளியே அப்பா அனுப்புகிறார். வாசலில் நிற்கும் செக்யூரிடியின் துப்பாக்கியினை எடுத்துக் கொண்டு அவர் வேலை செய்யும் வங்கியிலேயே 100,000 கொள்ளையடிக்கிறாள். வெளியே ஜெர்மன் போலீஸ். இவள் வெளியே வந்தவுடன் பணயக் கைதி என நினைத்து தப்பிக்க வைக்கிறார்கள். மீண்டும் ஓட்டம். அதே ஆம்புலன்ஸ். இம்முறை லிப்ட் கேட்கிறாள். அவர்கள் மறுத்தது மட்டுமல்லாமல் அந்த கண்ணாடியினையும் உடத்து விடுகிறார்கள். அவன் கொள்ளையடிக்க செல்வதற்குள் இவள் போய் அவனை அழைத்து விடுகிறாள். அவன் திரும்பி வரும் போது அதே ஆம்புலன்ஸ் அவனை இடித்து விடுகிறது. மீண்டும் கடந்த காலம். இப்போது மணி லோலாவினை கேட்கிறான் நான் இறந்தால் என்ன செய்வாய் என. அவள் விடமாட்டேன் என்கிறாள். அங்கே தமிழ்ப் படங்களை போல் நீ அழக் கூடாது தைரியமான பெண் என ஊரார் பேச வேண்டும் என்கிறான். அப்போது லோலா நீ இன்னும் சாகவில்லையே என்கிறாள். திரை நிகழ்காலாத்திற்கு வந்து கதை மீண்டும் ஆரம்பிக்கிறது.

இம்முறை யாரையும் இடிக்கவில்லை. நேரே அப்பாவினை பார்ப்பதற்குள் அவர் சென்றுவிடுகிறார். அப்போது விதியினை நினைத்து கண்ணை மூடி ஓடுகிறாள் நேரே கேசினோவின் வாசலில் நிற்கிறாள். கம்மி பந்தயத்தில் ஆரம்பித்து முதல் ஆட்டத்தில் ஜெயிக்கிறாள். இரண்டாம் ஆட்டத்தில் ஜெயிக்க வேண்டும் என்னும் நம்பிக்கையில் கத்த ஆரம்பிக்கிறாள். அதன் அதிர்வலைகள் கண்ணாடிகளினை உடைக்கும் அளவு இருக்கிறது. அந்த அதிர்வலைகள் மூலமாகத் தான் ஜெயிப்பதாக காட்சிகள் அமைந்திருக்கிறது. இப்போது மணி ஒரு குருடியினால் அந்த பிச்சைக்காரனை மீண்டும் பார்க்கிறான். அவனைதுரத்தி கொண்டு சென்று பணத்தினை பெற்று அவன் கேட்டான் என்பதற்காக கையில் இருக்கும் துப்பாக்கியினை அவனிடம் கொடுத்து விடுகிறான். இங்கே ஜெயித்த பணத்துடன் லோலா வருகிறாள் அவன் தன் பாஸிடம் கொடுக்க வேண்டியதை கொடுத்து தைரியமாக திரும்புகிறான். இருவரும் கை கோர்த்து நடக்கிறார்கள். பையில் என்ன இருக்கிறது என கேட்கிறான். லோலா சிரிக்கிறாள். இத்துடன் படம் முடிகிறது.

இது முழுக்க தெரிவுகள் விதிகள் நிச்சயத்தன்மையினை சார்ந்துஇருத்தல் போன்ற தத்துவ பின்புலங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். பார்வையாளனாக எனக்கு பட்டது என்னவெனில் இப்படத்தில் பார்வையாளனும் பங்கேற்கிறான். எப்படி எனப் பார்த்தால் மூன்று விதமாக களங்கள் கதையில் இருக்கிறது. மூன்றினையும் அது அது நடக்கும் போது நம்புகிறோம். கடைசியில் ஒன்றினை முடிவென காண்பிக்கிறார். மூன்றிலும் மையமாக இருப்பது கொள்ளை. முதலில் ஒரு சூப்பர் மார்க்கெட் அடுத்து வங்கி மூன்றாவது சூதாட்டம். நாம் ஒன்று நினைக்க இயக்குனர் இன்று நினைக்கிறார் என்பது இப்படத்தின் ஆதார சுருதியாக இருக்கலாம். நிறைய தமிழ்ப்படங்களை பார்ப்பதால் துப்பாக்கியினை கொடுத்தவுடன் அதனை வைத்து பிச்சைக்காரன் சுடுவான் என எதிர்பார்த்தது போன்று.

படத்தின் அமைப்பு தான் என்னை மிகவும் கவர்ந்த விஷயம். பிரச்சினை என்னவெனில் இரண்டாம் ஓட்டத்தில் ஜெர்மன் போலீஸினை ஏன் கிறுக்கர்களை போல் காண்பிக்க வேண்டும் ? என்பது புரியவில்லை. இந்தப்படம் பல புதிர்களை மட்டுமே எழுப்புகிறது. அதனை விடுவிப்பது நாம் மட்டுமே. சில புதிர்களை சொல்கிறேன். முதல் ஓட்டத்தினில் லோலாவிற்கு துப்பாக்கியினை இயக்க சொல்லித் தருவதே மணிதான். இரண்டாவதிலோ துப்பாக்கியினை அவளே இயக்குகிறாள் அப்படியெனில் எது உண்மை ? இடையிடையில் போட்டோக்களின் மூலமாக சொல்லப்படும் வேகக் கதை எதற்கு ? மூன்றாவது கதையினில் தான் தெளிவாக சொல்லி கதையினை முடிக்கிறாரே என சமாதானம் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன். அதற்கு ஏன் இரண்டு கதையினை முதலில் சொல்ல வேண்டும் ? எழுத்தில் பிரதிக்குள் பிரதி என ஒரு வகையினை சொல்வார்கள். அதன்படி இது கதைக்குள் கதை. ஒரே காட்சிகளினை கொண்டே வெவ்வேறு கதை. அதில் எந்தக் கதை உண்மை என நாம் தேடிக் கொண்டே இருப்போம். ஆனால் ஒன்று மட்டுமே நிதர்சனமான உணமை. லோலா மற்றும் மணி கொள்ளையடித்திருக்கிறார்கள்.
ரன் லோலா ரன் - டிரைலர் க்ளிக்கி செய்து பார்க்கவும்

இந்தப்படத்தினை எப்படி அறிந்து கொண்டேன் என சொல்ல வேண்டுமல்லவ நான் நோலனோமேனியா என்றொரு கட்டுரையினை எழுதினேன். அதன் லிங்கினை முகநூலில் இட்டேன். அப்பதிவில் following என்னும் படத்தினை பற்றியும் சிலாகித்து எழுதியிருந்தேன். அதன் பின்னூட்டமாக ரன் லோலா ரன் படத்தினை ஒருவர் பார்க்கச் சொன்னார். அவர் சொன்னதால் இப்போது இரண்டு படத்தினையும் சமன் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். நோலன் மக்களின் முட்டாள்தனத்தினை நன்கு பயன் படுத்த தெரிந்தவர். ஒரே கதையில் காட்சிகளை மாற்றிப் போடும் போது சென்ற காட்சியின் தொடர்ச்சியினை மக்கள் மறந்திருப்பர் என்னும் தத்துவத்தினை மையமாக வைத்து எடுத்தார். ரன் லோலா ரன் படத்திலோ களம் ஒன்று கதாபாத்திரங்கள் ஒன்று ஆனால் காட்சி முன்பை விட சற்று வேறுபட்டடுது. கதை வேறு. மொத்தத்தில் அருமையான படம். எனக்குள் நடந்த போட்டியிலோ நோலனே வென்றார்.

பி.கு-1: இந்தப்படத்தினை பற்றி வீக்கிபீடியாவில் அறிந்து கொள்ளலாம் என சென்றேன். நிறைய விஷயங்கள் என்னை குழப்பியது. மூன்று முறை பார்த்து இக்கட்டுரையினை எழுதுகிறேன். The ball is round, the game lasts 90 minutes, everything else is pure theory  என ஒரு வாக்கியம் வருகிறது. அதற்கு விசேஷ அர்த்தம் இருக்கிறதா எனவும் தெரியவில்லை. ஜெர்மனாக பிறந்து பார்த்தால் புரியுமோ??????
பி.கு-2: படத்தில் இசை அருமையாக அமைந்திருக்கிறது. அதுவும் கடைசியில் மூன்றாவது கதையில் ஒரு குரல் மட்டும் கேட்கிறது. அது நமது சங்கீதத்தினை போலவே இருக்கிறது. வீட்டில் அப்பா அடிக்கடி சங்கீதம் கேட்பதால் ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது. படத்தினை பார்த்தவர்கள் அந்த இசையின் பெயரினை முடிந்தால் சொல்லுங்கள்.
பி.கு-3: இப்போது ஒரு ட்விஸ்ட். இவ்வள்வு நேரம் வாசித்தீர்களே இந்தப்படம் வெறும் 75 நிமிடங்களே!!!!!

Share this:

CONVERSATION