தனிமை - இரவு - காதல்

கேள்வியுடன் இப்பதிவினை ஆரம்பிக்கலாமா என நினைக்கிறேன். அன்புக்குரியவர்களிடம் அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி சொல்ல முடியுமா ? காலங்காலமாக சொல்லப்படும் விஷயத்தினையே இங்கு சொல்கிறேன். காதலிக்கும் பெண்ணிடம் அஃதாவது நட்பாக பழகிக் கொண்டிருக்கும் பெண்ணிடம் போய் காதலினை சொல்ல முடியுமா ? அல்லது கல்யாண வயது ஆன போது அப்பாவிடம் போய் நான் ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என மறைக்காமல் சொல்ல முடியுமா ? இப்படி முடியுமா எனக் கேள்விகள் அன்புக்குரியவர்களிடத்தில் நிறைய இருக்கிறது. அதற்கு பதில் நிச்சயம் முடியாது என்பதே. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அப்படி சொல்கிறோம் என்றே வைத்துக் கொள்வோம். அதற்கு பின் என்ன நடக்கும் என எதிர்மறையாகவே எதிர்காலத்தினை நாமாக சித்தரிப்பது. அங்கும் நமக்கு கேள்விகள் மட்டுமே இருக்கிறது. எப்படி என பார்த்தால் காதலை சொன்ன பின் நிராகரித்துவிட்டால். . .? அப்பா சொன்ன பெண்ணை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என முடிவு செய்துவிட்டால். . .? ஆக ஒரு கேள்விக்குறிக்கான பதில் இன்னுமொரு கேள்விக்குறியாக முடிவே இல்லாமல் முடியாது என்னும் தளத்தில் இருக்கிறது. நான் இரண்டு காரணங்கள் என சொல்லியிருந்தேன். அந்த இரண்டாவது தான் ஈகோ. எனக்கான தகுதியினை விட்டுவிட்டு மற்றவர்களுக்காக இறங்கி செல்ல வேண்டுமா என்பதே அது. இங்கு அந்த மற்றவர்கள் யாரெனில் நான் குறிப்பிடும் அன்புக்குரியவர்கள். இந்த ஈகோ என்னும் விஷயத்தினை நாம் எடுக்கிறோம் எனில் அதில் நிச்சயம் ஒரு கொள்கைபிடிப்பு இருக்கத் தான் செய்யும். அப்படி இருக்கும் பட்சத்தில் தான் நாம் அதனை எதிர்த்து அன்பானவர்களாயினும் சில விஷயத்தினை செய்யாமல் இருப்போம். இந்த ஈகோ என்னும் விஷயம் நம்மிடம் இருக்கும் வரை அது அடுத்தவரை புண்படுத்திய வண்ணமே இருக்கும். இதுகூட நேரடியாக வெளிபடுத்துபவர்களிடத்தில். அதே இரகசியமாகவே விஷயங்களை மனதினுள் மறைப்பவர்களிடத்தில் நிச்சயம் ஈகோ ஒரு வியாதியாகவே மாறுகிறது. அப்போது அங்கே ஒரு உளவியல் பிரச்சினையும் சேருகிறது. அது கொள்கை சார்ந்தது. தன்னுடைய பிரச்சினை என்ன என அவர்களுக்கே தெரிந்து விடுகிறது. இருந்தும் அதன் காரணியாக இருக்கும் ஒரு கொள்கையினை விட முடியவில்லை. தன் மீதே ஒரு அசூயை அங்கே கிளம்ப ஆரம்பிக்கிறது. இவையனைத்தினையும் குறுகிய கதை மாந்தர்கள் இடம் கொண்டு எழுதப்பட்டிருக்கும் கதை தான் WHITE NIGHTS. எழுதியவர் தாஸ்தாயெவ்ஸ்கி.


இதனை சிறுகதை என்று தான் சொல்கின்றனர். பக்கமோ ஒரு ஐம்பது இருக்கும். அதனால் நான் இதனை குறுநாவல் என சொல்ல இருக்கிறேன். தாஸ்தாயெவ்ஸ்கியின் எந்த நூலினை எடுத்தாலும் அதன் பிரதானம் இரண்டு விஷயங்கள் தான். ஒன்று தனிமை மற்றொன்று உளவியல். இந்தக் கதையில் கதையின் நாயகன் ‘நான்’ என முன்னிலையிலேயே வருகிறான். இந்நாவல் நடக்கும் இடம் பீட்டர்ஸ்பர்க். அங்கு விடுமுறையினை கொண்டாட ஊரில் இருப்பவர்கள் வெளியூர் கிளம்புகிறார்கள். நாயகனுக்கோ எங்கு செல்வது எனத் தெரியவில்லை. அவனை எந்த சொந்தமும் அழைக்கவும் இல்லை. அப்போது அவனை அந்த ஊரே தனிமையில் ஆழ்த்துகிறதோ என ஐயம் கொள்கிறான். அந்த தெருக்களின் வழியே நடக்கிறான். இந்தப் பகுதிகள் முழுக்க கதையில் முதல் இரவாக வருகிறது. அந்த நேரம் பார்த்து அந்த தெருவில் ஒரு பெண் நிற்கிறாள்.

கதையின் நாயகன் தனிமையிலேயே உழன்றவன். நண்பர்கள் என யாரும் கிடையாது. பெண்களிடம் அதிகம் பேசியது கிடையாது. அப்போது அவளிடம் பேசலாம் என நினைக்கிறான். அவளே அவனை நோக்கி வருகிறாள். இருவருக்கும் பேச்சு ஆரம்பிக்கிறது. நாயகனோ கனவு காண்பவன். கனவுகளிலேயே வாழ்பவன். நேர் வாழ்க்கைக்கும் அவனுடைய கனவு வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. அவன் கனவில் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருக்கிறான். அவள் நில அதிகாரி. அவன் கனவில் வரும் பெண்ணிடம் கேட்பதெல்லாம் இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். தன்னிடம் பீடிக்கப்பட்டிருக்கு தனிமையினை போக்குவதற்கான இரண்டு வார்த்தைகள். இவன் சொல்வதையெல்லாம் கேட்பதற்கான பொறுமை அதற்கு பின் அந்த இரண்டு வார்த்தைகள். அதை சொன்னபின் அல்லது சந்தித்த பின் மீண்டும் அவர்களின் சந்திப்பு நிறைவேறாமல் கூட இருக்கலாம். அதுவரை அவனுக்கு நினைவுகளாக இருக்கப்போவது அந்த இரண்டு வார்த்தைகள் தான். இதையெல்லாம் பெயர் கூட கேட்டுக் கொள்ளாமல் அவளிடம் சொல்கிறான். கடைசியாக அவளிடம் உன்னால் நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்கிறான். அதுமட்டுமின்றி அடுத்த இரவும் இதே இடத்திற்கு வர முடியுமா என கேட்கிறான். ஆரம்பத்தில் அவன் கேட்டது இரண்டு வார்த்தைகள் என்பதை அவள் நினைவூட்டுகிறாள். அப்போது தான் அவன் சொல்கிறான் நீ வந்தாலும் வராவிட்டாலும் பீட்டர்ஸ்பர்கில் இது போல் என் நினைவுகள் புதைந்த நிறைய இடங்கள் இருக்கிறது. அங்கு போவது போல் நாளையும் இங்கு வருவேன்.உன்னுடன் பேசிய வார்த்தைகளின் மகிழ்ச்சியினை நினைத்து நினைத்து வாழ்வேன் என்கிறான். அவளோ வருவேன் என ஒப்புக்கொண்டாள் அதுவும் ஒப்பந்தத்தின் அடிப்படையில். எக்காரணம் கொண்டும் நாயகன் அவள் மேல் காதல் கொள்ளக் கூடாது என்பதே அது. இருவரும் ஒப்புக் கொண்டனர்.

இரண்டாவது இரவு. இரண்டாவது இரவில் தான் கதையின் நாயகி பெயர் நஸ்தென்கா என நாயகனுக்கும் வாசகனுக்கும் தெரிய வருகிறது. இரண்டாவது சந்திப்பில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வோம் என முடிவெடுக்கின்றனர். இவனோ கனவு காண்பவன். அது எப்படியெனில் தனக்கென இருக்கும் உலகம் என நம்புபவன். இருவருக்கு இடையில் இருக்கும் வாதங்கள் உரையாடல்கள் எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையினை தருகிறது. இருவரில் யாரேனும் ஒருவரின் மனதில். அதனால் முழு நடைமுறை உலகினையே வெறுத்து எப்போதும் தனிமையில் கனவுகளில் காதல் மக்கள் என உருவகம் செய்து கொண்டிருப்பதை அழகுற விளக்குகிறான் நாயகன். அதிலும் அவன் சொல்லும் விஷயம் கனவுகள் எப்போதும் சாதாரணமாக வருவது கிடையாது. நாயகனை பொறுத்தவரை நினைவுகளை கொணர்வதே கனவுகள். இதுவரை நாயகனோ தன் வாழ்வில் நடந்த கசப்பான உணர்வுகளை மட்டுமே கனவாக நினைத்து நினைத்து அதனை கொண்டாடிக் கொண்டிருந்தவன். இப்போதோ நஸ்தென்காவினால் இனிமையான சுவடுகளை நினைவுகளில் தேடப்போகிறான். எப்படி சென்றாலும் கடைசியாக உலகம் முடியும் இடம் ஒரு இனிமையான தனிமையில் என முடிக்கிறான். நஸ்தென்கா ஆச்சர்யத்தில் அப்படியே அவனை பார்க்கிறாள். அவளும் தன் கதையினை ஆரம்பிக்கிறாள். அவளுடைய கதை சற்று சுவாரசியமான கதை. அதை சொல்ல அவன் கேட்கிறான். அவளுக்கு ஒரு பாட்டி. எப்போதும் அவளை தன் ஆடையுடன் பின் போட்டு கூடவே அமரச் சொல்வாள். இவளுக்கோ எப்படியாவது போக வேண்டும் என ஆசை ஆனால் எங்கும் முடியாது. அவள் தங்கியிருந்து வீட்டிற்கு மேல் போர்ஷனில் ஒரு கிழவன் இருந்தான். அவன் இறந்த பின் அங்கே ஒரு இளைஞன் குடிவந்தான். அந்த இளைஞன் மேல் அவளுக்கு காதல் வந்தது. எப்போதாவது படிகட்டுகளின் வழியே மேலே போகும் போது நலம் விசாரிப்பது என சின்ன சின்ன உரையாடல்கள் தொடர்ந்தது. அதுவும் இவளாக போவது இல்லை. பாட்டி வேலை சொல்லி அனுப்பினால். அப்போது அவன் சில நாவல்களை இவளுக்கு அளித்து வாசிக்க சொல்கிறான். பாட்டியோ அதில் சில நாவல்களை மட்டுமே இவளுக்கு கொடுக்கிறாள். இவளை ஒரு முறை பாட்டியுடன் எப்படியோ பேசி சமாளித்து சினிமாவிற்கு அழைத்து செல்கிறான். சில நாட்களில் அவர்களிடையே பேச்சு குறைந்தது. சினிமா அந்த ஊரில் போடும் வரை மட்டுமே அந்த பேச்சு தொடர்ந்தது. இதில் ஒரு நாள் அவன் வீட்டினை காலி செய்தான். இவள் தன் காதலை சொல்லலாம் என சென்ற போது தான் அவன் சொல்கிறான் நான் மாஸ்கோவிற்கு செல்கிறேன். அங்கு சம்பாதித்து சரியாக ஒரு வருடம் கழித்து வருவேன். அப்போதும் காத்திருந்தால் நாம் மணம் செய்து கொள்வோம் என. அவனுக்காகத் தான் காத்திருக்கிறேன். அவன் இந்த ஊருக்கு வந்துவிட்டான் ஆனால் ஏன் இன்னும் என்னை பார்க்க வரவில்லை எனக்கு ஏதேனும் வழி சொல்லேன் என கேட்கிறாள். இவனோ கடிதம் எழுத சொல்கிறான். அவளும் எழுதி இவனிடமே கொடுத்து கொடுக்கச் சொல்கிறாள்.

மூன்றாவது இரவு. கதையின் நாயகனுக்கோ எப்போதோ அவள் மேல் காதல் வந்துவிட்டது. இருந்தும் அதனை மறைத்து அவள் சொன்னதை செய்தான். பதிலோ வரவில்லை என்றவுடன் இருவரும் பல யூகத்தினில் இருக்கின்றனர். அஃதாவது ஒன்று பதில் எழுதியிருக்க வேண்டும் அல்லது இந்த இடத்திற்கு வந்திருக்க வேண்டும் அல்லது கடிதம் அவனை சென்று சேராமல் இருந்திருக்க வேண்டும் அல்லது அவன் அவளை மறந்திருக்க வேண்டும். கடைசி தேர்வினை இருவரும் நிராகரிக்கின்றனர். அவனுக்காக காத்திருக்கின்றனர். அப்போது நாயகனை பார்த்து நீ சொல்வது போல் நீ இல்லையே என்கிறாள். அஃதாவது தனிமை வாழ்க்கை கனவுகள் போல. அப்போது தான் அவள் மேல் காதல் கொண்டுள்ளேன் என சொல்கிறான். அதுமட்டுமில்லாமல் இனிமேல் வரமாட்டேன் என்றெல்லாம் காதல் கசிய புலம்புகிறான். அப்போது அவள் சொல்கிறாள் அவனைவிட என்னை அதிகம் தெரிந்தவன் நீ தான் அவன் நீயாக இருக்கக்கூடாதோ என நினைக்கிறேன் என. என்ன என்னவோ சமாதானம் சொல்லி அவனை மாற்றி யாருக்காக காத்திருக்கிறோமோ அவன் நாளை வருவான் என நம்பி இருவரும் செல்கின்றனர்.

நான்காம் இரவு. நாயகன் நல்ல பதிலினை கொண்டு வருவான் என காத்திருக்கிறாள் நஸ்தென்கா. ஆனால் எந்த பதிலும் வரவில்லை. அப்போது கோவத்தில் என்ன என்னவோ கத்துகிறாள். நாயகன் இன்னுமொரு கடிதம் எழுதச் சொல்கிறான். மேலும் தானே சென்று அவனை பார்த்து ஏதாவது சொல்லி புரியவைக்கிறேன் என்கிறான். அவளோ நான் அவனை மறந்துவிடுகிறேன் என்கிறாள். நாயகன் அங்கிருந்து கிளம்புகிறேன் என யத்தனிக்கும் போது தடுத்து நாயகன் மேல் இருந்த காதலை சொகிறாள். அஃதாவது அவன் என்னை பார்க்கும் போது கூட சிரித்துக் கொண்டிதானிருந்தான் நான் வருத்தப்படும் நேரத்திலோ என் அருகில் இருந்தது நீதான். அவனை விட என்னை அதிகம் புரிந்து கொண்டது நீ மட்டுமே என காதலை சொல்கிறாள். நாயகனோ அதீத சந்தோஷத்தில் இருக்கிறான். உடனே அவர்கள் எதிர்காலத்தின் திட்டத்தினை போடுகிறார்கள். அஃதாவது கல்யாணம் செய்துகொள்பவரையே மேல் போர்ஷனில் குடி வைக்க வேண்டும் என பாட்டி சொல்வாள் அதனால் அங்கேயே தங்குவோம் அங்கு செல்வோம் இங்கு செல்வோம் என திட்டம் போடுகிறார்கள். அப்போது அந்த இருளில் அவர்களை கடக்கும் உருவம் நஸ்தென்கா என கூப்பிடுகிறது. அது யாரெனில் நஸ்தென்காவின் முன்னால் காதலன். நினைவுகள் முழுக்க கடந்த காலத்திற்கும் அவனை நினைத்து இருந்த ஓராண்டிற்கும் சென்று அவனை தழுவிக் கொள்கிறாள். நாயகன் மீண்டும் தனிமையில் தள்ளப்படுகிறான்.

கதையில் வரும் முதற் பகல். முதலில் அவன் இருப்பிடத்தின் சித்தரிப்பினை தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லியிருப்பார். அதனை இப்போதிருக்கும் தனிமைக்கேற்றவாரு இன்னும் அழுத்தி சொல்லி அவனின் தனிமையினை நன்கு வருணித்திருக்கிறார். அப்போது அவனுக்கு கடிதம் ஒன்று வருகிறது நஸ்தென்காவிடமிருந்து. மன்னிப்பு கேட்டு எழுதியிருக்கிறாள். அதில் ஒரு வாக்கியம் “அவனாக நீ இருந்தால் நான் உன்னையே மணந்திருப்பேன்.”  கடிதத்திலிருக்கும் வார்த்தைகளும் அவள் நேரில் சொன்ன வார்த்தைகளும் மாறி மாறி அவன் மனதில் ஓட மறுபடி மறுபடி அவன் அக்கடிதத்தினை வாசிக்கிறான். மனதிற்குள் ஒரு கேள்வி எழுகிறது. அத்துடன் கதை முடிகிறது - வாழ்வின் முழுமையிலும் மகிழ்ச்சி என்பது சிறு பங்கு தானா ?

தாஸ்தாயெவ்ஸ்கியின் poor folk நாவலினை பற்றி எழுதியிருந்த நிறைய விஷயங்கள் இதற்கும் பொருந்தும். கட்டமைத்தலும் கட்டுடைத்தலும். நாயகன் கட்டமைத்த விஷயங்கள் தான் தனிமை உலகம் அல்லது கற்பனை உலகம். நடைமுறை பிம்பங்களை எதிர்ப்பதே அவன் எண்ணம். ஆனால் அதனை அவனே எதிர்க்கிறான் அவளை காதலிப்பது மூலம்.  இந்த இடத்தில் தாஸ்தாயெவ்ஸ்கி சொல்லும் விஷயம் ஒரு விஷயத்தினை எதிர்க்கும்போது அதற்குள் நாமும் இருக்கிறோம். இதனை ஆதவன் சொல்லியிருந்ததாக நானே எழுதியிருக்கிறேன். ஆனால் ஆதவனுக்கு முன்பே poor folk இல் இவர் சொல்லியிருக்கிறார். அவளிடம் பேசும் போதெல்லாம் கனவு காண்பவன் கனவு காண்பவன் என சொல்லி சொல்லி நடைமுறையில் மட்டுமே அவன் மூழ்கியிருக்கிறான்.
நாயகன் தன் கனவுகளை பற்றி சொல்லும் போது தான் நடந்து கொண்டிருக்கும் நொடியினை மட்டுமே கணக்கில் கொள்பவன் என சொல்லி கடைசியில் அவளும் நான்காவது இரவில் காதலை சொன்னவுடன் எதிர்காலத்தினை பற்றி சிந்திப்பதும் அதில் தோற்று தன் நிகழ்கால தனிமைக்கே வருவதும் அருமையான கட்டமைத்தல். அழகான நடை.

இரவு சுமந்து வரும் எத்தனையோ விஷயங்களில் காதலும் தனிமையும் அடக்கம் என இருளின் மணத்துடன் கதையினை அமைத்திருக்கிறார் தாஸ்தாயெவ்ஸ்கி.

என் நண்பர்கள் சிலர் என்னை நிகோஸ் கஸான்சாகிஸ் எழுதிய ஸோர்பா தி க்ரீக் வாசிக்க சொல்கின்றனர். அவரின் எழுத்துகள் தாஸ்தாயெவ்ஸ்கிக்கு நேர் எதிராம். அஃதாவது கொண்டாட்டத்தினை எழுதுபவர். நிச்சயம் வாசித்து அதனையும் பகிர்கிறேன் ஆனால் எனக்கு ஏன் தாஸ்தாயெவ்ஸ்கியினை பிடித்திருக்கிறது என்பதையும் சொல்லி விடுகிறேன். அவர் துன்பவியலினை எழுதுபவர் தான். ஆனால் அவர் நாவலில் வரும் தனிமை பகடி அதை விட முக்கியம் கட்டமைத்தலும் அதை அதே நாவலில் கட்டுடைத்தலும் அருமையான நடையில் அமைந்திருக்கும். வாசித்துபாருங்கள் நான் சொல்வதை உணர முடியும். Some more pages will pass after them will come a gloomy solitude.

Share this:

CONVERSATION