jai bhim comrade - ஆவணம் திணிக்கும் அவமானம்

இன்று துப்பாக்கியின் முப்பது நொடி வெள்ளோட்டம் வெளியாகியிருக்கிறது அது எப்படி இருக்கிறது என எழுதலாம் அல்லது சில மாதங்களாக மீடியாக்களிலும் இணையதளங்களிலும் பரவலாக பேசப்படும் மாற்றான் stuck on you படத்தின் காப்பியா என எழுதலாம் அல்லது தாண்டவம் பற்றி எழுந்த திருட்டு கதை விவகாரம் உண்மையா என குருட்டு விசாரணை செய்யலாம் இப்படி சினிமா உலகத்தில் சிலாகிக்க ஏகப்பட்ட விஷயங்கள் குவிந்து கிடக்கிறது. ஆனால் என்னை ஒரு வகையில் இப்பதிவின் தலைப்பில் எழுதிருக்கும் jai bhim comrade என்னும் பெயரினை கொண்ட ஆவணப்படம் ஒன்று பாதித்ததால் அதை பற்றி எழுதுகிறேன். இப்படம் நிச்சயம் எனக்கிருக்கும் வாசகர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்.
இணையதளங்களில் நிறைய புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது. அஃதாவது ஒரு நாவலினை பற்றி அல்லது திரைப்படத்தினை பற்றி எழுதுகிறோம் எனில் அதனை இணையதளங்களில் சுட்டு எழுதுகிறார்கள் என்கின்றனர். முன்னரே சொல்லிவிடுகிறேன் இந்த படத்தினை பார்த்த கையோடு இந்த புகைபடத்தினை மட்டும் இணையதளத்திலிருந்து இறக்கி இப்பதிவினை எழுதுகிறேன்.

இந்த படம் எனக்கு எப்படி தெரிய வந்ததெனில் மறுபடியும் சாரு நிவேதிதா தான். அவர் தன் இணையதளத்தில் தன் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் இப்படத்தினை பார்க்க சொன்னார். அதற்கு ஒரு மாத காலம் அவகாசமும் தந்தார். அப்படி பார்க்கவில்லை என்றால் அவர்களுடன் பேசமாட்டேஎன் என அன்பு கட்டளையினையும் அதிலேயே பிறப்பித்தார். அதற்கு இணங்கி தான் இப்படத்தினை விலை கொடுத்து வாங்கி பார்த்தேன். மராட்டிய திரைப்படம் தமிழ் subtitle உடன் இருக்கிறது. சாரு இதனை பற்றி கருத்தினையும் தெரிவித்திருந்தார் அதனையும் இப்பதிவில் கூறுகிறேன்.

இப்படத்தினை இயக்கியவர் அனந்த் பட்டவர்த்தன். ஆவணப்படத்தினை கதையினை எதிர்பார்த்து நிச்சயம் பார்க்க முடியாது. எனக்கு இது தான் முதல் ஆவணப்படம். இப்படத்திற்குள் செல்வதற்கு முன் எனக்குள் ஏற்படுத்திய உணர்வலைகளை எழுத வேண்டும். அந்த உணர்வலைகள் அவமானம் மட்டுமே. இப்போதிருக்கும் அனைத்து இந்தியர்களும் அவமானப்பட வேண்டும் என்பதற்காகவே கடந்த காலத்திலிருந்து இப்போது வரை நிகழும் அவலங்களை அடுக்கு அடுக்காக அடுக்கி ஆவணமாக நமக்கு அளித்திருக்கிறார். இதில் அவமானப்பட என்ன இருக்கிறது எனில் நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் தன்மை தான். அந்த முட்டாள் கூட்டத்தில் நானும் ஒருவன். என்னையே சமாதனப்படுத்திக்கொள்ளக் கூடிய விஷயம் என்னவெனில் அவ்வப்போது செய்திகளை வாசிப்பேன். இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் என்னை அவமானப்படுத்துகிறது. எப்படி எனக் சொல்கிறேன்.

1997 - இல் மும்பை ரமாபாய் காலனியில் இருக்கும் அம்பேத்கர் சிலையில் யாரோ செருப்பு மாலை அணிவிக்கிறார்கள். அடுத்த நாளே போலீஸ்காரர்கள் அங்கே குவிந்து அனைவரையும் சுட ஆரம்பிக்கின்றனர். பத்து பதினைந்து பேர் உயிரிழக்கின்றனர். இந்த விஷயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த வருடத்தில் எனக்கு வயது மூன்று அல்லது நான்கு தான் இருக்கும் அதனால் தெரிந்திருக்கவில்லை என சமாதானம் செய்ய முயற்சித்தாலும் உண்மை எங்கிருக்கிறது எனில் அந்த பிரச்சினை 2010இனையும் தாண்டி நடந்து கொண்டிருக்கிறது!

இந்த ரமாபாய் காலனியில் நடந்த துப்பாக்கி சூட்டின் அவலங்களை கண்டு பொறுக்க முடியாமல் இறுதி வாக்குமூலத்தினை தன் வீட்டின் சுவற்றிலேயே எழுதிவிட்டு இறந்து விடுகிறார் விலாஸ் கோக்ரே என்னும் தலித் பாடகர். கிட்டத்தட்ட இதனை வைத்து தான் படம் துப்பறியும் படமாக நகர்கிறது. பட்டவர்த்தன் சொல்லவரும் கதை இது தானா என யூகிக்கவும் முடியாது. ஏனெனில் படத்தின் ஆரம்பத்தில் விலாஸ் கோக்ரேவின் மரணத்தினை தொடர்ந்து நடக்கும் விசாரணையும் மறுபக்கம் ரமாபாய் காலனியில் எதற்காக துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என இரு வேறு கதைகள் இணைந்து நகரும். சிறிது நேரத்திலேயே கதையின் தடம் மாறிவிடும். தலித்.

அம்பேத்கரின் கொள்கைகளையே வேதவாக்காக நம்பி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ரமாபாய் காலனியின் மக்கள். அங்கு எந்த அரசியல் கட்சியின் வார்த்தையும் செல்லாது போலவே காட்சிகள் செல்லும். அங்குள்ள மக்களின் வேலை என்னவெனில், நான் அனைவரையும் குறிப்பிடவில்லை குப்பை அள்ளுதல், மலம் அள்ளுதல், ஆட்டோ ஓட்டுதல் என. படம் மராட்டிய பாடல்களின் ஊடாக பயணித்து கொண்டிருக்கும் போது அந்த துப்பாக்கி சூட்டில் இறந்த ஆட்டோ ஓட்டும் ஒருவனின் அம்மாவின் பேட்டி வருகிறது. அதனை தொடர்ந்து குப்பை மற்றும் மலம் அள்ளுதலின் தொழில்கள் காண்பிக்கப்படுகிறது. இதனை human scavenging என சொல்வர். இதனை தடுக்க இந்தியாவில் சட்டம் 1993-லேயே பிறப்பிக்கப்பட்டது. இன்னும் நடை முறை படுத்தப்படவில்லை. அதில் ஒருவனுடன் நடக்கும் சம்பாஷனை யாராக இருந்தாலும் மனதினை உருக்கும். அது “ஒரு நாளுக்கு 12-13 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் 73 ரூபாய் சம்பளம் கிடைக்கும். மனிதர்களின் மலத்தினையும் சாக்கடை தண்ணீரையும் சுமக்கும் போது சில நேரம் கை தவறி எங்கள் உடல் முழுதும் விழுந்துவிடுகிறது. குப்பை அள்ளுவதால் துர்நாற்றத்தினை தடுக்க முகமூடி, மலத்தினையும் சில நேரங்களில் கண்ணாடித் துண்டுகளை மிதிப்பதால் செருப்பு ஒன்று, உடல் மேல் குப்பைகள் விழாமல் இருக்க ரெயின்கோட் ஒன்று மாநகராட்சி கொடுத்திருக்கலாம். ஒப்பந்தக் காரர்கள் கொடுக்கவில்லை என்றால் மாநகராட்சி கொடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்று வழக்குகளை வழக்கறிஞர்களுக்கு 65000 ரூபாய் கொடுத்து வழக்கினை தொடர்ந்தனர். அதற்கு செல்வழிக்கும் அவர்களால் எங்களின் தேவையினை பூர்த்தி செய்ய முடியவில்லை. மேலும் எங்களுக்கு குடிக்க தண்ணீர் கிடைக்காது, நாற்றம் அடிப்பதால் பேருந்தில் இடம் கிடையாது .  . .” இந்த குறிப்பிட்ட காட்சியினை மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். கருப்பு நிற கழிவு நீர் சகதியில் ஒரு லாரி சிக்கிக் கொண்டிருக்கும் அதனை சிலர் தள்ள முயற்சிப்பர். அப்போது இந்த குப்பை அள்ளுபவர்களின் கால்கள் அந்த சகதியில் புதைந்து இருக்கும் அதே வெள்ளை வேட்டி சட்டை போட்டவர்களின் கால்கள் கரை படாமல் தோதாக தள்ளிக் கொண்டிருக்கும்!

தலித்கள் தங்களின் விடுதலைக்காக இதைத் தவிர எனக்கு வேறு வார்த்தை எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் நினைத்து பாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் செப்டிக் டேங்கினுள் ஏதோ அடைப்பு ஏற்பட்டு கக்கூஸில் தண்ணீர் உள்ளே போகாமல் மேலேயே நிற்கிறது. அந்த நீரில் மலமும் மிதக்கிறது. அதனை பார்த்தால் அருவருப்பில் மலம் கழிப்பதையே அது சரியாகும் வரை நிறுத்தி வைப்பீர்கள். அல்லது இதற்காக அடுத்த வீட்டு கக்கூஸினை கடன் வாங்குவீர்கள். என் வீட்டிலும் இது தான் நடந்தது. அசிங்கப்படுகிறேன் அவ்வளவு கேவலமாக இருந்ததற்காக. அப்போது நான் கொண்ட அருவருப்பு என்னை இப்போது அசிங்கப்படுத்துகிறது. மேலே குறிப்பிட்ட அதே காட்சியில் அவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் பன்னிரெண்டு ஆண்டுகள் இந்த வேலையினை செய்து கொண்டிருக்கிறோம் என. அப்படியெனில் அவர்களுக்கு தேவை விடுதலை தான். அவர்களின் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அவர்களின் ஒரே தெய்வம் அம்பேத்கர்.

சரஸ்வதி பன்சாடே என்பவரின் பேட்டி இப்படத்தில் வருகிறது. சற்று வயதான தோற்றம். அவரின் இளமை காலத்திலிருந்து குப்பை அள்ளுதல் தொழிலினை செய்து வருகிறார். அதில் சிரிப்புடன் சொல்லும் விஷயங்களை அனைத்தும் தற்கொலை காரணங்களுக்கு தோதானவை. அவர் சொல்கிறார் அவருக்கு தண்ணீர் வேண்டுமெனில் சற்று உயரத்திலிருந்து அதனை ஊற்றுவார்களாம். அதனை பிடித்து குடிக்க வேண்டும். அவர்களை தீண்டக் கூடாது. அதனால் அவர்கள் ஒதுங்கி ஓடுவார்களாம். ஆனால் விளையாட்டுக்கென்றே தீண்டிவிட்டு இவர்கள் ஓடிவிடுவார்கள் என நிறைய கோடுகள் விழுந்த கன்னத்தில் சிரிப்பினை அடக்கி கூறியிருப்பார். அம்பேத்கர் தீண்டாமை போன்றவற்றை கூறுவதால் இவை அம்பேத்கரின் காலத்தில் நடந்தவை என நினைக்க வேண்டாம். சுதந்திர இந்தியாவில் நடந்த விஷயத்தினையே ஆவணமாக பட்டவர்த்தன் இதில் கூறுகிறார்.

இவர்கள் அம்பேத்கரின் பிறந்த நாளன்று ஒன்று கூடி கொண்டாடுகிறார்கள். அதனை பற்றி சமூகம் மதிப்பிடும் மேல்தட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள் என பேட்டி எடுக்கும் போது ஒருத்தி(அவளின் பதிலினால் என் பதிவில் மரியாதை இழக்கிறாள்) சொன்ன பதில் வருகிற அனைவரும் எஸ்.சி என்று. உடனே அனந்த் அவர்கள் எஸ்.சியாக இருப்பதால் தான் அசிங்கமாக இருக்கிறார்கள் என நம்புகிறீர்களா என்னும் கேள்விக்கு சற்றும் யோசிக்காமல் ஆம் என்கிறாள். இவளை டார்ச்சர் செய்வது போல் படம் எடுத்தால் கூட அதில் தப்பில்லை.
சங்காரே என்னும் தலித் பேச்சாளனின் மரணத்துடன் இப்படத்தின் பகுதி ஒன்று நிறைவடைகிறது. அவரின் பேச்சு அட்டகாசம். பகடி புகுந்து விளையாடும்.

படத்தின் இரண்டாம் பகுதி சற்று உக்கிரமானது. தலித்துகளின் வன்கொடுமைகள். அவர்களிடம் நேரில் சென்று கேட்கிறார். அவர்கள் அளிக்கும் பதிலெல்லாம் எப்பவுமே நடக்கறது தான் எங்க வீட்ல நடக்கும்ணு எதிர்பார்க்கல போன்று தான் இருக்கிறது. இந்த இரண்டாம் பகுதி தான் சொந்த நாட்டினை பற்றியே அறிந்திராமல் இருக்கிறோமே என்னும் அவமானத்தினை அதிகமாக ஏற்படுத்தியது. கயர்லாஞ்சியில் நடந்த வன்புணர்ச்சி மற்றும் வன்கொடுமைகள் கணக்கில் சேர்க்கப்படவில்லை. முக்கால்வாசி இப்படி சேர்க்கப்படாமல் இருப்பதற்கு இருக்கும் ஒரே காரணம் தலித். புகைப்படங்களுடன் காண்பிக்கப்படும் அனைத்தினையும் என்ன தான் வதை திரைப்படங்களை ரசித்தாலும் இதனை ரசிக்க முடியவில்லை. ஏனெனில் இது ஒரு நாடே அதிகாரத்தினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. அதிலும் தலித்துகளின் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த இரண்டாம் பகுதியில் தான் பால் தாக்கரே மற்றும் நரேந்திர மோடியின் இந்துத்துவவாத கொள்கை தெரிகிறது. அதனையும் தாண்டி தலித்துகளின் போராட்டம். அதில் ஒரு குழு தான் கபீர் கலா மஞ்ச். இந்த குழுவில் ஒரு பெண்மணி இருக்கிறார். அவர் வீட்டிற்கு அவள் இது போன்ற கலைக்குழுவில் இருப்பது பயமாகத் தெரிகிறது. ஆனாலும் அவள் பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக தங்கள் சேவையினை தொடர்கின்றனர். இடையில் சொல்ல வேண்டிய விஷயம் என்னவெனில் இப்படம் 14 வருடங்களாக எடுக்கப்பட்ட படம். பதினான்கு வருடங்களில் ரமாபாய் காலனியின் குடிசைகள் காங்க்ரீட்டாக மாறியிருந்தது. அந்த துப்பாக்கி சூட்டிற்கு ஆணை பிறப்பித்த மனோகர் கதம் என்பவர் சினிமாக்களில் சொல்லப்படுவது போல் ஆயுள் தண்டணை பெற்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டு பெயிலில் உல்லாசப் பறவையானார். ரமாபாய் காலனிக்குள்ளும் மகாராஷ்டிரத்தின் அரசியல் ஊடுருவ ஆரம்பிக்கிறது. கடைசியில் கபீர் கலா மஞ்ச் என்னும் குழு நக்சலைட் என்று இந்தியாவில் நிறுவப்படுகிறது போல் படம் முடிகிறது. பதினான்கு வருடங்கள் தலித் மக்களின் போராட்டங்கள் அட்டகாசமான முறையில் ஆவணப்படமாக்கியிருக்கும் அனந்த் பட்டவர்த்தனுக்கு நன்றி.

சாரு நிவேதிதாவின் கருத்துகளை சொல்கிறேன் என்றிருந்தேன். அவர் விண் டிவியில் அளித்த பேட்டியின் லிங்கினை இங்கே கொடுக்கிறேன். http://www.youtube.com/watch?v=xb9xIzzn4mc
அவர் முக்கியமாக சொன்ன ஒரு விஷயம் இப்படத்தினை பார்ப்பது ஒவ்வொருவரின் வரலாற்று கடமை என்று. உண்மையில் வரலாற்று கடமையே. நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் தலைப்பினையும் அப்படியே இட்டுள்ளேன். என்னை எனக்கே அவமானமாக இப்படம் காட்டுகிறது. இதில் சொல்லப்படும் அம்பேத்காரின் எந்த விஷயமும் எனக்கு தெரியவில்லை. சிவ சேனாவின் கொடுமைகள், கயர்லாஞ்சியின் கொடுமைகள், தலித் என்பவர்கள் படும் இன்னல்கள் ஆனால் அவை அனைத்தும் என்னுடன் நான் வாழும் சமூகத்தில் தான் இருக்கிறது. பள்ளிப்பருவத்திலெல்லாம் திங்கட்கிழமை ஆனால் உறுதிமொழி எடுக்கச் சொல்வார்கள் India is my country. I love my country. All Indians are my brothers and. . . இப்போது நினைத்து பார்க்கிறேன் அது வெறும் கற்பிதம்.

கடைசியாக ஒன்றினை சொல்கிறேன். இப்படத்தில் தலித்துகளை விவரிக்குமாறு வரும் காட்சிகள் உங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதெனில் நீங்களும் அதிகாரவர்க்கத்திலிருந்து கொண்டு சக மக்களை இழிவுபடுத்துகிறீர்கள் என்று தான் அர்த்தம்.

Share this:

CONVERSATION